அயன் - மேலும் சில‌...

சுபா என்று பரவலாய் அறியப்படும் எழுத்தாள இரட்டையர்கள் சுரேஷ் ‍- பாலாவின் அழுத்தமான முத்திரை அயன் திரைப்படத்தில் தெரிகிறது - நிறைய காட்சிகளில் "அட!" போட வைக்கிறார்கள். ஹாலிவுட் திரைப்படங்களின் திரைக்கதைகளில் எழுத்தாளர்கள் வகிக்கும் அதே இடத்தை இவர்கள் அயன் திரைப்படத்தில் வகித்திருக்கிறார்கள் - இதுவே தமிழ் சினிமாவுக்கு புதிது.

சுஜாதா வசனமெழுதிய படங்களில் கூட இயக்குநரின் ஆக்ரமிப்பு தான் அதிகமிருந்திருக்கிற‌து. ஆனால் அயன் திரைப்படத்தில் சுபா கட்டற்ற சுதந்திரத்துடன் செயல்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இதை - அதாவது எழுத்தாளர்களுக்கான இந்த சுதந்திரத்தை - சாத்தியப்படுத்தியதில் இயக்குநர் K.V.ஆனந்தின் பங்கும் நிச்சயம் இருக்கிறது என நினைக்கிறேன்.

தமிழ் சினிமாவில் எழுத்தாளனின் பங்கு மற்றும் சுத‌ந்திரம் என்கிற நோக்கில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாக எனக்குத் தோன்றுகிறது. சினிமாவில் ஏற்கனவே எழுதி வரும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கு இத்தகைய சுதந்திரம் கிடைத்தால் மேலும் நல்ல திரைப்படைப்புகள் உருவாகும். சுபாவை மிக்க வாஞ்சையுடனும், எதிர்பார்ப்புடனும் வரவேற்கிறேன்.

Hats Off சுரேஷ்‍ -பாலா!

1 comment:

தங்கவேல் மாணிக்கம் said...

அன்பு சரண், கேவி ஆனந்த் முன்பு சுபா எழுதிய நாவல்களின் அட்டைப் படத்திற்கு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். தூண்டில் கயிறு என்ற துப்பறியும் நாவலுக்கு அவரின் புகைப்படம் மகுடமாய் இருந்தது. என் சிறு வயதில் நான் சுபாவின் ரசிகன். கேவி ஆனந்த், சுபா, எஸ்பி ராமு, பட்டுக்கோட்டை பிரபாகர் அனைவரும் நண்பர்கள். அந்த நட்புக்கு கிடைத்த அடையாளமாகவே சுபா / கேவி ஆனந்த் காம்பினேஷன் உருவானது என்று நம்புகிறேன்.

மேலும் சுபாவின் தங்கக்கொலுசு நாவல் தற்போதைய தமிழ் சினிமாவிற்கு மிகச் சிறந்த ஒரு காதல் படைப்பாக உருவாகும் சாத்தியம் இருக்கிறது. காதலை இன்றைய தமிழ் சினிமாவில் காட்டும் அளவுக்கு செதுக்கி இருப்பார்கள் சுபா.

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலிருக்கும். ஆச்சர்யமான நட்பும் நண்பர்களும். மேலும் சுபா - நட்புக்கு ஓர் இலக்கணம். அதன் பலன் : சுபாவின் வசனம் அயனில்.

வாழ்க கேவி ஆனந்த் / சுபா நட்பு...