சுதந்திரம் பற்றி ஸக்கரியா - 4

"Rediff"ல் வெளியான‌ மலையாள எழுத்தாளர் பால் ஸக்கரியாவுடனான நேர்காணலின் நான்காம் பகுதியின் தமிழாக்கம் இது.

############

பி.ஜே.பி. ஒரு வெடிகுண்டின் மேல்
அமர்ந்திருக்கிறது; வெடிக்கும் போது அதுவும் அழியும்


இன்றைய அரசியல் தலைவர்கள் தெளிவான பார்வையும், ச‌முதாய அக்கறையும் இல்லாதவர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

ஆம். கிட்டத்தட்ட முழுமையாக.


இதற்கு அர்த்தம் அரசியல் நேர்மை நலிவடைந்து வருகிறது, சமுதாயத்தில் நாம் எல்லோருமே சுயந‌லவாதிகளாக ஆகி விட்டோம் என்பதைப் பிரதிபலிக்கிறதா இது?

இது சமுதாயத்தின் பிரதிபலிப்பே. ஆனால் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே. நடுத்தர வர்க்கத்தினர் அதிக அளவில் அடிப்படைவாதிகளாக மாறி வருகிறார்கள் என்பதும் இதற்கு காரணம். அடிப்படைவாதம் தான் ஒரே தீர்வு என அவர்கள் நினைக்கின்றனர். மற்றொரு காரணம் நடுத்தர வர்க்கத்திலிருக்கும் கணிசமான புத்திசாலிகளும் - விஞ்ஞானிகள். பொறியாளர்கள், மருத்துவர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் அது போன்றவர்கள் - நடுத்தர வர்க்கத்துக்கு உய‌ர்ந்து கொண்டிருக்கும் கீழ்வர்க்கத்தினரும் அரசியலிலிருந்து விலகியே இருக்கின்றனர். குமாஸ்தாக்களாக இருந்து பெற்ற காலனியாதிக்க பயிற்சியின் காரணமாக இந்திய நடுத்தர வர்க்கம் வேலையின் பத்திரத்தன்மை மற்றும் குறைந்த‌ வேலை, நிறைந்த கூலி மனோபாவ‌ம் இவற்றை சார்ந்து இயங்குகிறது. அதனால் அரசியலின் சவால்களை சந்திப்பதை விட எங்காவது வேலை செய்து சம்பளம் வாங்கவே விரும்புகிறார்கள்.

அரசியலுக்கு சாகசத்தன்மையும், அதீதமான கடின உழைப்பும், அதனோடு மன மற்றும் உடற் கஷ்டங்களை சந்திக்கும் மனோபலமும் தேவை. மன விழிப்புணர்வும், மக்களை ஏற்றுக்கொள்ளவைத்து ஒரு குறிப்பிட்ட திசைக்குத் திருப்பும் பேச்சும் தேவை. சில மோச‌மான அரசியல்வாதிகளிடமும் இந்த குணங்கள் அனைத்தும் இருக்கின்றன. கருணாகரன் போன்றவர்களே சூப்பர்மேன் தான்.

இன்று நீங்கள் சிதம்பரத்தை அதிபுத்திசாலி என்று சித்தரிக்கிறீர்கள். ஆனால் ச‌முதாயத்தில் தேடிப்பார்த்தால் குறைந்தபட்சம் ‌5000 பேர் அல்லது அத‌ற்கு மேற்பட்டோர் அவருடைய அளவுக்கு இருப்பார்கள். ஆனால் ஒரு சிதம்பரம் தான் அரசியலில் நுழைய முடிவு செய்து, மக்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.


பி.ஜே.பி பற்றிய விமர்சன‌ங்களில் மட்டும் உங்கள் குரல் க‌டுமையானதாக ஒலிக்கிறது. அந்த‌க்கட்சிக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததற்கான காரணம் என்ன?

நான் ராஜகுருக்களின் ஆட்சிக்கு எதிரானவன். பொதுப்பிரச்சனைகளில் மதம் நுழைய முயல்வதை எதிர்ப்பவன். ஒழுங்குபடுத்தப்பட்ட‌ மதம் என்பத‌ன் இருத்தலுக்கு எப்போதும், எந்தக்காரணமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நீங்கள் ஒரு கடவுள் நம்பிக்கையாளராக இருந்து, கடவுளும் ஒரு வேளை இருந்து விட்டால், அது கடவுளுக்கும் உங்களுக்கும் இடையேயான தனிப்பட்ட விஷயம். அந்த முட்டாள்தனமான நம்பிக்கையை நீங்கள் பல்லாயிரக்கணக்கான மக்களின் மேல் திணித்து, நான் நம்பிவதை நீயும் நம்பு என்று சொல்ல முடியாது. அது முற்றிலும் மோசமானது.

கடவுளைப் பற்றிய சில சாமியார்களின் கருத்துக்களையும் வைத்துக்கொண்டு தேசத்தை கட்டமைக்க முயல்வது வடிக்கட்டின முட்டாள்தனம்; குற்றமும் கூட. எல்லா அடிப்படைவாதங்களுமே - அரசியலோ மதமோ - குறுகிய எண்ணமும், ஃபாஸிச மனப்பான்மையும் கொண்டது. இந்தியச்சமூகம் முழுமையும் மிகவும் புராதன நம்பிக்கைகளும், பழமைவாத கொள்கைகளும் உடையது. இந்திரா காந்தி நிரூபித்ததைப் போல இந்தியாவுக்குள் ஃபாஸிசத்தை நுழைப்பது எளிதானது.

என்னைப்பொறுத்தவரை, பி.ஜே.பி. ஒரு மத அடிப்படைவாத, ஃபாஸிச, குறைந்தபட்சம் கொஞ்ச காலம் முன்பு வரையிலாவது, இஸ்லாம் மற்றும் பிற சிறுபான்மையினரை வெறுத்த, கிறித்துவம் போன்ற பிற மதங்களை வெறுத்த கட்சி. இந்தியாவிற்கு ஒரே ஒரு கடந்த காலம் தான் இருந்தது என்பது போல, இந்தியாவிற்கு ஒரே ஒரு எதிர் காலம் தான் இருக்கிற‌து என்பது போல, இந்தியாவின் மொத்த‌ கலாசார அடையாளமே இந்து அடையாளம் தான் என்பது போல இந்திய சரித்திரத்தை மிகவும் சிதைந்த முறையில் நோக்கும் மனச்சார்பு அதற்கு இருக்கிறது. மக்களை ஒரே தோற்றத்துள் அடைக்க முயலும் எந்த முயற்சிக்கும் நான் முழுமையாக எதிரானவன்.


பி.ஜே.பி.க்கு பன்மைத்துவத்தில் நம்பிக்கையில்லை என்று சொல்கிறீர்களா?

ஆம். பன்மைத்துவம் தான் இயங்க முடிந்த ஒரே விஷயம். மதச்சார்பின்மை எல்லா அரசியல் கட்சிகளாலும் தவறாக பயன்படுத்தப்பட்டுவிட்டது. மதத்தை வீட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது போல குறைத்து மதிப்பிடுவதாய் அதற்கு அர்த்தமல்ல.

நியோ-தேசியவாதிகள் அனைத்து இந்து அடையாளங்களை நிஜ தேசியம் எனவும், இந்துவல்லாத சிறுபான்மையினரை உள்ளுக்குள் இருக்கும் எதிரிகள் எனவும் சித்தரிக்கின்றனர். ஆனால் அவர்கள் மற்றொரு விதமான எதிரிகளையும் உருவாக்கியுள்ளனர். அது 'அவர்கள்' இந்துவுக்கு எதிராய் நிற்கும் 'நாம்' இந்து.


பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் இந்திய சமூகத்துக்கு நிறையத் தீங்கு செய்வார்கள் என நினைக்கிறீர்களா?

அவர்கள் சமூகத்துக்கு எந்தத் தீங்கும் செய்யாம‌லிருக்கலாம். ஆனால் அவர்கள் உட்கார்ந்திருப்பது ஒரு வெடிகுண்டின் மேல் என்பதால் அது வெடிக்கும் போது அவர்களை அவர்களே அழித்துக்கொள்வார்கள்.


அவர்கள் தீங்கு செய்யமாட்டார்களெனில், ஏன் இந்த அளவுக்கு பி.ஜே.பி.யை எதிர்க்கிறீர்கள்?

நான் சிந்தனையாளன். ஒரு ஃபாஸிசப் போக்கு உருவாகிற போது அதைப் பார்த்துக்கொண்டு நான் மௌனமாய் இருக்க முடியாது. அவர்களிடம் மற்றவர்களை அழிக்கும் போக்கு தெரிவதால் நான் பேச வேண்டியிருக்கிறது. அப்படியில்லையென்றால் நான் நடுத்தர வர்க்கம் போல் இருந்திருப்பேன்.


அவர்கள் சமூகத்துக்கும் தீமை செய்யவில்லை, தங்களுக்குத் தாங்களே தவிர வேறு யாருக்கும் தீமை செய்யவில்லையெனில் அவர்களை அவர்களே அழித்துக்கொள்ள ஏன் விடக்கூடாது?

அந்த மூல‌க்கருத்தே (அவர்களை அவர்களே அழித்துக்கொள்வது) சமூகத்துக்கு தீங்கானது. அவர்கள் இருப்பதே இந்த இடத்தில் தீமையானது. அவர்களால் பொது ஸ்தாபன‌ங்களை அடிப்படைவாத மக்களைக் கொண்டு நிரப்ப முடியும். அவர்களால் இராணுவத்தைக்கூட அடிப்படைவாதிகளைக் கொண்டு நிரப்ப முடியும். அது மிகவும் ஆபத்தானது. அவர்கள் உட்கார்ந்திருப்பது ஒரு வெடிகுண்டின் மேல், அது வெடிக்கும் போது அவர்களும் அழிவார்கள் என்று நான் சொன்னேன்; வேறு சில விஷயங்களும் அதோடு அழிந்து போகும்.


ஏன் எல்லோரும் பி.ஜே.பி.யை மட்டும் மத‌வாதத்திற்காக சாடுகிறார்கள்? சாதியை அடித்தளமாகக் கொண்டுள்ள கட்சிகளைப்பற்றிய கருத்து என்ன? அவர்கள் அந்த அளவுக்கு சமூகத்துக்கு தீமை செய்யவில்லையா?

அது எல்லாமே கடவுளின் பெயரை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உங்கள் கருத்தை நிரூபிக்க கடவுளின் பெயரை உபயோகிக்கும் கணம், நீங்கள் ஆபத்தான விளையாட்டில் இறங்குகிறீர்கள். நீங்கள் உபயோகிப்பது இராமர், இயேசு, முகமது. கடவுளை துருப்புச்சீட்டாய் பயன்படுத்துபவர் யாராயிருந்தாலும் அவர் ஆபத்தானவர் என்றே நினைக்கிறேன். பி.ஜே.பி. தான் முதலில் இந்தியாவில் மதத்தை துருப்புச்சீட்டாய் பயன்படுத்தியது. மற்ற கட்சிகள், இந்தியாவில் உருவாகி வளர்ந்த‌ முறையான சாதியுடன் மட்டும் விளையாடுகின்றன; அதுவும் மாற்றப்பட வேண்டியது தான்.

ஆனால் அடிப்படைவாதத்துக்கும் மதவெறுப்புக்கும் ஆதரவாய் மிகவும் உரக்கப் பேசி வெளிப்பட்ட‌ ஒரே ஆள் யார்? எல்லா முஸ்லிம்களும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும், எல்லா முஸ்லிம்களும் கெட்டவர்கள், எல்லா முஸ்லிம்களும் துரோகிகள் என்று சொல்லி முன்னுக்கு வந்தது யார்?

குறியீடாகவோ வேறு எதுவாகவோ, இங்கு உள்ள மக்கள் ஒரு மசூதியை இடித்தவர்கள். அப்படி இடித்ததால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொன்னவர்கள். இது சர்வாதிகரத்திற்கு அழைத்துச்செல்லும் கவர்ச்சியான, ஆபத்தான பாதை. நீங்கள் சரித்திரத்தை கவனித்தால், இது போன்ற வெறித்தனத்தால் சிதறுண்ட பல தேசங்களை பார்க்கலாம்.

பி.ஜே.பி. பெரும்பான்மை சமுதாயத்தின் மனநிலை சார்ந்து இயங்கிறது. அது இன்ன‌மும் ஆபத்தானது. துணைக்கக்ண்டத்தின் முற்றிலும் வேறுபட்ட கலாசார, அரசியல் குழுக்களை மதமெனும் துருப்புச்சீட்டால் ஒன்றிணைக்கலாம் என நம்புகின்றனர். இது மீண்டும்ம் மீண்டும் தவறென்று நிரூபிக்கப்பட்டு வரும் மதத்தின் மிகப்பெரிய பிழைத்தர்க்கம். இன்றும் இஸ்லாம் வளைகுடாவில் யாரையும் ஒன்றிணைக்கவில்லை; கிறித்துவம் ஐரோப்பாவை ஒன்றிணைக்கவில்லை. அவர்கள் எல்லோரும் கிறித்துவர்கள்; எனினும் ஒரு ஜெர்மானியன் ஜெர்மானியனாகவே இருப்பான்; ஒரு இத்தாலியன் இத்தாலியனாகவே இருப்பான்; ஒரு ஃபெரெஞ்சுக்காரன் ஃபெரெஞ்சுக்காரனாகவே இருப்பான். மத்தால் இயங்கும் ஒற்றை தேசம் என்பது சாத்தியமில்லை.


வாஜ்பேயியின் தலைமையினால் பி.ஜே.பி.க்குள்ளிருக்கும் தீவிரவாதம் பின் தள்ள‌ப்படுகிறது என நினைக்கிறீர்களா?

நான் வாஜ்பேயியை அத்வானி மற்றும் கட்சியின் பிற தலைவர்களிலிருந்து வேறுபட்டவர் என்க்கருதவில்லை. அது ராஜீவ் காந்தி மிக நல்ல மனிதர் என்று சொல்வதைபோல. நீங்கள் ஒரு முறை ஆர்.எஸ்.எஸ்.காரன் ஆனால், உங்கள் வாழ்க்கை முழுமைக்கும் நீங்கள் ஆர்.எஸ்.எஸ்.காரன் தான். நீங்கள் ஒரு முறை பாதிரியாராய்ப் பயின்றால், நீங்கள் எப்போதும் பாதிரியார் தான் என்பதைப் போன்றது அது.


பி.ஜே.பி.யைத் தாக்கியது போல, முஸ்லிம்களை ஆதரித்தும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். உங்களை அந்த நிலைப்பாடு எடுக்க வைத்தது எது?

ஏனெனில் முஸ்லிம்களிடம் எந்தத் தவறும் இல்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளில் தேசத்துக்கு தீங்கு நேருமாறு அவர்கள் எதுவுமே செய்யவில்லை. அவர்கள் தேசத்தின் எதிரிகளாக காட்டப்படுகிறார்கள். மேற்கால் அவர்கள் உலகத்தின் எதிரிகளாக காட்டப்படுகிறார்கள். மற்ற மதங்களைப்போல அந்த மதத்திலும் வெறியர்களின் கூட்டங்கள் உண்டு என்பதால் தான் இவை எல்லாம்.

கிறித்துவம் கிட்டத்தட்ட இடண்டாயிரம் ஆண்டுகளாய் இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருந்த ஒரு கண்டத்தில் நுழையுமளவுக்கு கிறித்துவத்துக்கு அதிர்ஷ்டம் இருந்தது. அதனால் அது உலகின் தலைமைப்பீடம் ஏறியது - ஆனால் பல கொடூரங்கள், படுகொலைகள், அநீதிகள் வழியாக‌.

இஸ்லாம் தன் மத்திம வயதை நெருங்குகிறது. கிறித்துவத்தின் மத்திம வய‌து, அதன் இருத்தலில் இரத்தவெறி கொண்ட, கொடூரமான, மனிதத்தன்மையற்ற படிநிலையாக இருந்தது. இஸ்லாமின் தற்போதைய மத்திம வயது வன்முறையில் அதன் ரோமத்தைக் கூடத் தொட முடிய‌வில்லை.

நான் இஸ்லாமை சில மூர்க்கத்தனமான ப‌ழக்கவழக்கங்களை உடைய ஒரு குழந்தை என்று சொல்வேன். உண்மையில் அது சில முல்லாக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பிடியில் இருக்கிறது. இந்தியாவில் இஸ்லாம் ஆட்சி செய்திருந்த போதிலும், முஸ்லிம்கள் கவனித்துக் கொள்ள‌ப்படவில்லை. அதனால் இஸ்லாம் என்பது இன்றைய சராசரி இந்து இந்தியன் பேசுவதைப் போலவோ, ஒரு சராசரி மேற்கத்திய ஊடகம் பேசுவதைப் போலவோ இல்லை. அது எல்லோருக்குமே தெரியும்.

ஆம். அல்ஜீரியாவில் சில வெறியர்கள் உண்டு; ஆஃப்கானிஸ்தானில் சில வெறியர்கள் உண்டு... ஆனால் அமெரிக்கா என்கிற கிறித்துவ நாடு, ஒரு கிறித்துவ நெறியுடன் வியட்நாமில் செய்த‌து என்ன? க‌ம்போடியா என்கிற பௌத்த தேசத்தில் நிகழ்ந்த மனித்தன்மையற்ற செயல்களின் அளவு என்ன? இலங்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? இவையெல்லாம் இஸ்லாமிய தேசங்கள் அல்ல. போஸ்னியாவில் கிறித்துவர்களால் முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.

இஸ்லாம் என்பது இப்போது கொஞ்ச காலமாக எல்லோரும் உபயோகப்படுத்தும் விளம்பர வார்த்தை. சல்மான் ருஷ்டி அவையனைத்தின் குறியீடு. மேற்கு ஈரானை இழந்தது அதன் துவக்கப்புள்ளி. அவர்களுக்கு இஸ்லாம் இரு வகையானது. ஒன்று அவர்களுடைய ரத்தபந்தங்களான சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.யி. மற்றது சாத்தன் வகையறா. இஸ்லாம் என்பது எங்கும் செல்லவில்லை; எந்த பிற‌ மதங்களைப் போலவும் அது சிதைந்த நிலையில் உள்ளது என நினைக்கிறேன்.

(முற்றும்)

Comments

The translation of the whole interview is fairly good.
நவீன் said…
தங்களின் தமிழாக்கத்திற்கு நன்றி!

அருமையான பயனுள்ள செவ்வி!
அருமையான கட்டுரை. மூடி மூடி, தெளிவில்லாமல் பேசும் பலரிடையே, அரசியலின் உண்மை நிலையை சொல்லியிருக்கிறார் பால் ஸக்கரியா

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்