ஏழாம் உலகம்

தசாவதாரத்திற்குப்பிறகு அதற்கு இணையாய் நான் எதிர்பார்த்திருந்த படங்கள் இரண்டு - ஒன்று ரோபோ; மற்றது நான் கடவுள். இரண்டு கதாநாயகர்கள், மூன்று கதாநாயகிகள், நான்கு தயாரிப்பாளர்கள், ஐந்து வருடங்கள் மாறியதால் ஏற்பட்டதல்ல அது - பாலா என்ற ஒற்றை சொல்லுக்காக‌ உண்டானது. காசி அகோரிகள், Cannibalism, அஹம் ப்ரம்மாஸ்மி போன்றவை இன்ன பிற.


பதினான்கு ஆண்டுகள் முன்பு, ஜாதக தோஷத்தால், சிறுவனாய் காசியில் விட்டுச் செல்லப்பட்ட ருத்ரனை (ஆர்யா) அவன் தந்தையும், தங்கையும் தேடி காசிக்கு வருவதில் தொடங்குகிறது படம். ஆசை, அச்சம், அருவருப்பு அறுத்த ஓர் அகோரியாய் இருக்கும் ருத்ரன், குருவின் கட்டளைப்படி உறவுகளையும் அறுத்து மீண்டு வர தன் ஊருக்குத் திரும்புகிறான்.

அந்த ஊரில் ஊனமுற்றோரை வைத்து பிச்சையெடுக்கும் தொழில் செய்யும் தாண்டவன், கண்ணில்லாமல் பாடிப்பிழைக்கும் அமிர்தவல்லியை (பூஜா) போலீஸ் உதவியுடன் பிச்சையெடுக்க இழுத்து வந்து விடுகிறான். எவரும் புணர விரும்பா அகோர முகம் கொண்ட ஒருவனின் இச்சைக்கு இரையாகவிருந்த‌ அவளை ருத்ரன் காப்பாற்றினானா என்பது மீதிக்கதை.

படத்தின் அடிநாதம் பிச்சைக்காரர்கள் பற்றிய காட்சிகளே. ஜெயமோகன் "நான் ஏழாம் உலகம் நாவலில் மிதமாய்ச்சொல்லியிருந்த‌தை பாலா நான் கடவுள் படத்தில் மிக உக்கிரமாகக் காட்டியிருக்கிறார்" என்று ஒரு பேட்டியில் சொன்னதை வைத்து அக்காட்சிகள் குறித்து மிக எதிர்பார்த்துச் சென்றதில், ஏமாற்றமே மிஞ்சியது (ஏழாம் உலகம் படித்தவர்களுக்கு இது புரியும்).

இந்திய சினிமாவுக்கே இது போன்றதொரு களம் புதிது. பிச்சைக்காரர்களை இவ்வளவு நிஜமாய், நுட்பமாய் காட்ட மணிரத்னம் உட்பட எந்த ஒரு சிறந்த இயக்குநராலும் முடிந்திருக்குமா என்பது சந்தேகமே (இதை நன்கு யோசித்தே எழுதுகிறேன்). அக்காட்சிகளின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் தமிழ் சினிமாவில் ஓர் உச்சம் எனத் தயக்கமின்றி சொல்லலாம்.

ஆனாலும் பாலா போன்ற ஒரு இயக்குநரிடம் இக்காட்சிகளில் நான் இன்னும் நிறைய எதிர்பார்த்திருந்தேன். ஜெயமோகன் குறிப்பிட்ட அந்த உக்கிரம் இக்காட்சிகளில் நிகழவேயில்லை. உதாரணமாய் ஏழாம் உலகம் நாவலில் ஒரு பிச்சைக்காரன் தன் சீழ் வடியும் புண்ணை நோண்டி ஒளித்து வைத்திருக்கும் நாணயத்தை எடுப்பான் - அது போன்றவைகளை சொல்கிறேன்.

அடுத்து முக்கியமானது படத்தின் முதன்மைப்பாத்திரப் படைப்பு. காசியில் கங்கை நதியோரமாய் இருக்கும் சுடுகாட்டில் சாம்பலைப்பூசிக்கொண்டு, தலைகீழாய் நின்று கொண்டு அல்லது பிணங்களின் மேல் அமர்ந்து கொண்டு தவம் செய்யும், இறந்தவர்களுக்கு பிறப்பறுக்கும் சக்தி இருப்பதாய் நம்பப்படும், தன்னைத்தானே கடவுள் என அழைத்துக்கொள்ளும் ஓர் அகோரி.


அடர்த்தியான தாடியும், செம்பட்டை முடியும், ரத்தச்சிவப்ப்புக்கண்களும் கொண்ட ருத்ரன் கஞ்சா பிடிக்கத் தொடங்கும் முன்பு "ஜெய் பூத‌நாத்" என்று கத்துகிறான்; அடிப்பதற்கு முன் ஒரு சமஸ்கிருத மந்திரம் சொல்கிறான்; "தூமைனா என்னன்னு தெரியுமா?" என்று தன் தாயைக்கேட்கிறான்; அடிக்கடி "நான் கடவுள்" என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்கிறான்.

கடைசியாய் முக்கியமானது அகோரிகளின் பிணம் தின்னும் பழக்கம். அது படத்தில் வருகிறதா என்றால், ஆம்-இல்லை எனலாம். இறந்தவர்களை ருத்ரன் என்ன செய்கிறான் என்பதை காட்டாமல் விடுவதாலேயே அவர்களை தின்று விடுகிறான் என்கிற சித்திரத்தை ஏற்படுத்த முயல்வதாய்த் தெரிகிறது. தவிர‌ படம் முழுக்க ருத்ரன் கஞ்சா தவிற வேறு எதுவுமே உண்பதில்லை.

ஆர்யாவுக்கும், பூஜாவுக்கும் பிதாமகன் விக்ரம் போலவோ, பருத்தி வீரன் பிரியா மணி போலவோ நடிக்க அவ்வளவு வாய்ப்பில்லை. ஆனாலும் ஆர்யா நடிக்கும் காட்சிகள் யாவும் மிகத்தீவரமாகவே அமைந்திருக்கின்றன. பூஜாவும் கொடுத்த வேலையைக் குறைவின்றி செய்திருக்கிறார். மற்றபடி அவர்கள் பேட்டிகளில் சொல்வது போல் நடிப்பிற்கு தேசிய விருதெல்லாம் கிடைக்காது.

கவிஞர் விக்கிரமாதித்ய‌ன் இதில் ஒரு பிச்சைக்காரனாக நடித்திருக்கிறார். அறிமுக‌ மொட்டை வில்லன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மற்றபடி படம் முழுக்க உடல் ஊனமுற்றோர், மன நலம் குன்றியவர்கள் ராஜ்ஜியம் தான்; உடன் ஒரு திருநங்கையும். மணிரத்னம் ஏன் தன்னை பாலாவின் ரசிகன் என்று சொல்கிறார் என்பது மிகச்சுலபமாகப் புரிகிறது.

பாலா ஒரு மிகத்திறமையான இயக்குநர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நான் கடவுளும் அதை உறுதிபடுத்தியிருக்கிறது. ஆனால் அவர் தன்னுடைய திறமையை அடாசு திரைக்கதைகளுக்கு வீணடிக்கிறார் என்பதே பிரச்சனை. இதன் அடிப்படைத்திரைக்கதையும் முதன்மைப்பாத்திரப்படைப்பும் அவரது முந்தைய படமான பிதாமகனின் பிரதிகளே.

அவருக்குப் பின்னும், அவரைப்பின்பற்றியும் வந்த சேரன், அமீர், பாலாஜி சக்திவேல், சசி குமார், ராம், வசந்தபாலன், சசி போன்றோரெல்லாம் நிஜ வாழ்க்கையின் யாதார்த்தக்கதைகளை நேர்த்தியான‌ திரைக்கதையின் வாயிலாகச் சொல்லி், தமிழ் சினிமாவை உலகத்தரம் என்கிற‌ ஓர் இராஜபாட்டையில் அழைத்துச் செல்கையில், அதைப்பலவந்தமாய் ஐந்து வருடங்கள் பின்னுக்கு இழுத்திருக்கிறார் பாலா.


சில அனாவசிய நீளக்காட்சிகள் கொட்டாவி வரவழைக்கின்றன ‌(உதாரணம்: போலீஸ் ஸ்டேஷனில் கூத்தாடிகள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி போல் நடித்துக்காட்டுவது, எதற்கெடுத்தாலும் அமிர்தவல்லி பழைய சினிமாப் பாடல்களைப்பாடுவது) ஜெயமோகனின் வசன‌ங்கள் காட்சிகளுக்கு மிக்க பக்கபலமாய் அமைந்திருக்கின்றன - குறிப்பாய் பிச்சைக்காரர்கள் பேசும் வசனங்கள் ("கடவுள் புளுத்தறான் தேவிடியா மகன்" என்பது உச்சம்).

ஏழாம் உலகம் தான் நான் கடவுளா என்றால் இல்லை. ஏழாம் உலகத்தில் காட்டப்பட்ட பாத்திரங்கள் இதில் பின்புலமாகக் கையாளாப்பட்டுள்ளன. அவ்வளவே. ஏழாம் உலகத்தில் கடவுள் நுழைவது தான் நான் கடவுள் என்பேன். மற்றபடி மாங்காண்டி சாமி (பெயர் மட்டும்), உருப்படிகளின் விவரணை, நிறைய வசனங்கள், சில காட்சிகள் போன்றவை ஏழாம் உலகத்தின் எச்சங்கள்.

பாடல்களில் கோட்டை விட்டிருந்த (ஓம் சிவோகம் தவிர - அதன் தொடக்கத்தில் வரும் "ருத்ராய" மந்திரம் தான் என் செல்பேசியின் த‌ற்போதைய ஹலோ ட்யூன்) இளைய‌ராஜா பின்னணி இசையில் கோட்டை கட்டியிருக்கிறார். ஆர்த்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவில் சில காட்சிகளில் புதிய உயரங்களை தொட்டிருக்கிறார். படம் நெடுக கிருஷ்ணமூர்த்தியின் கலை அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது.

இயக்கம், பின்னணி இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், வசனம் போன்றவை மிக மிக அற்புதமாக அமைந்திருந்தாலும் திரைக்கதையின் பலவீனம் காரணமாக படம் தன் தரத்தைக் குறைத்துக்கொள்கிறது. ஆனாலும் பாலா தவிர வேறு யாராலும் இந்த உலகத்துக்குள் நுழைந்திருக்கவே முடியாது என்பதாலேயே எல்லாவற்றையும் எவ்விதக் கேள்வியுமின்றி மன்னிக்கலாம்.

படம் முடிந்து திரும்புகையில் "பாலா நான் கடவுள் படத்தால தமிழ் சினிமாவ அடுத்த‌ லெவலுக்கு கொண்டு போய்ட்டார்னு எல்லாரும் சொல்றாங்களே, அது ஹையர் லெவலா இல்ல லோயர் லெவலா?" என்று என் மனைவி கேட்டாள். என்னிடம் பதில் இல்லை. ஆனால் என் போன்ற பாலா ரசிகர்களுக்கு படம் முடிகையில் ஏற்படும் எண்ணங்களின் சாரம் அக்கேள்வி தான்.

பாலா எய்தத்தவறிய உச்சம் நான் கடவுள்.

Comments

Karthik said…
amarkalamaana review... aana onnu sir.. neenga edhir paartha ukiram ellam CENSOR BOARD oda ukkirathaala pari poi vithadhu!!! Idhavadhu kidaithade ena sandosa padha vendiyaadhu thaan!!!

Padam mudinji veliya varum podhu oru feeling: INDHA PADATHA EDHUKKAVA 3 varusham aachi???
Chandran Rama said…
a well balanced criticism.. very much similar to mine..
Having said all, one thing is certain and that is.. Bala's faith in his creation..
I truly admire his uncompromising
attitude..
The creation is creators baby..
we can only admire and we have no right to comment over it...
This is only my humble opinion ..
santhosh said…
Your site is very Attractive wordings & stories very usefull for me , Keep Development Your self ,Tamilan enru solada thalai nimirthu nillada

Thanks

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்