பழையன புகுதலும் - 7

ஒரு கிராமத்துக்கவிஞனின் கடைசிக்கவிதை

என்மனசுக்குள்ள மழையடிச்சு முளைவிட்ட ரஞ்சிதமே
உன்னழகக்கவியெழுத பூமியில பாஷையில்ல - பொத்திவெச்ச‌
ரத்தினமே பொன்மேனிச்சித்திரமே உன்னப்பாக்கற நேரமெல்லாம்
ரத்தமெல்லாந்தீபுடிச்சு புத்தியெல்லாம் பூப்பூக்குதே.

ஒத்தப்பார்வையில உயிருருக வெச்சவளே - நீ
குத்தவெச்சநேரத்தில பக்கத்தில பாத்திருந்தா மேளதாள‌
சத்தத்தோட பரிசம்போட்டிருப்பேன் கழுத்தோரம் மீசகுத்த‌
முத்தமொண்ணு வெச்சிருப்ப்பேன் கொடுத்துவெக்கலியே.

நீவர்ற பாதையில கால்கடுக்க காத்திருந்தேன்
காவக்காரன் போலஉன் காலடியில் பூத்திருந்தேன்
வெச்சகண்ணுவாங்காம உன்னையே பாத்திருந்தேன் - நீ
மிச்சமீதிவெச்சதெல்லம் பொக்கிஷமா சேகரிச்சேன்.

நெஞ்சுக்குள்ளே பூத்தவளே நெனப்புக்குள்ள நெற‌ஞ்சவளே
தஞ்சமுன்னு தேடிப்போக தரணியில ஆரிருக்கா?
கொஞ்சிப்பேசிப் போனவளே குத்தங்குறை இன்னதுன்னு
கொஞ்சம்போல சொல்லிப்போடி ஒத்தநாடிஉடம்புக்காரி.

வலைவீசுற கண்ணுக்கு அணைபோட்ட அஞ்சுகமே
அலைபாயிற மனசுக்கு அணைபோட மறந்தியே
கல்லானநெஞ்சுகுள்ள காதலுன்னு தெச்சமுள்ளு - நீ
சொல்லாமபோனாலும் இல்லாம ஆகாது.

இத்தனையும் சொன்னதெல்லாம் எப்படியோபோகட்டும் - ஆனா
ஒத்தையில படுக்கையில என்நெனப்பு வந்ததில்லன்னு
வெத்தலையில் காசுவெச்சு கையடிச்சு சொல்லுபுள்ள‌
செத்துப்போயிடறேன் அத்தனையும் விட்டுப்புட்டு.

குறிப்பு: 2005ம் ஆண்டு காதலர் தினத்தன்று எழுதியது

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்