படித்தது / பிடித்தது - 12

செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்துக் கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடி வாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசையிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று.

-சுகிர்தராணி

நன்றி: "இரவு மிருகம்" தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம்

குறிப்பு: இதே தொகுப்பிலுள்ள சுகிர்தராணியின் மற்றொரு கவிதையின் சில வரிகளும் என்னை மிக‌க் கவர்ந்தவை.

மயிர்கள் சிரைக்காத என் நிர்வாணம்
அழிக்கப்படாத காடுகளைப் போல
கம்பீரம் வீசுகிறது

உன்னோடு பகிரவென்றே
செதுக்கப்பட்டிருக்கிறது
என் கற்படுக்கை என்றாலுங்கூட
வளர்ந்துகொண்டுதானிருக்கின்றன
என் யோனி மயிர்கள்

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்