துரோகத்தின் வீச்சம்

"இதய வயிற்றுள்
துக்கம் ஜெரித்துப்

பிறந்தது

வேதனை அமிர்தம்.
"


இது தான் சுப்ரமணியபுரம். பிரமிளின் "ரஸவாதம்" என்ற கவிதையின் இறுதி வரிகள் இவை. 1978ம் ஆண்டு கொல்லிப்பாவை
இதழில் வெளியானது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் என்கிற கிராமத்தில் நிகழும் குற்றங்களின் குருதி நதியில் ஒளிரும் துரோகமும் அதனால் அடியோடு திசை மாறும் ஐந்து நண்பர்களின் வாழ்க்கையும் தான் இத்திரைப்படத்தின் அடிநாதம்.

துரோகத்தின் வீச்சத்தை இத்தனை வீரியமாய் இதுவரை யாரும் தமிழ் திரைப்படத்தில் பதிவு செய்ததில்லை. ரத்தம் வழியும் காட்சிகள் அனைத்திலும் துரோகத்தின் குரூரம் கலையின் கலவையாய் பீறிட்டுப் பளபளக்கிறது. பாலாஜி சக்திவேலின் "காதல்" அமீரின் "பருத்திவீரன்" வசந்தபாலனின் "வெயில்" ஆகிய படங்களுடன் தயக்கமின்றி சசி குமாரின் "சுப்ரமணியபுரம்" படத்த்தையும் இணை வைக்கலாம்.



கதை? முன்னாள் கவுன்சிலர் சோமு என்கிற பணக்கார அரசியல்வாதியின் மகளான துளசியை (ஸ்வாதி), தன் நண்பன் பரமனுடன் (சசிகுமார்) சேர்ந்து வட்டார அடிதடி செய்து கொண்டிருக்கும் அழகர் (ஜெய்) என்கிற ஏழை இளைஞன் காதலிக்கிறான். சில்லறை வேலைகளுக்கு அவர்களை பயன்படுத்தி வந்த துளசியின் சிற்ற‌ப்பன் கனகு (சமுத்திரக்கனி), ஒரு அரசியல் கொலையில் அவர்களை பலிகடாவாக்குகிறான்.

கனகு தன் அண்ணன் மகள் காதலை அறிய வரும் போது அவளையே பகடைக்காயாக்கி அழகரைக் கொல்கிறான். வெகுண்ட நண்பன் பரமன் கனகுவைக் கழுத்தறுக்கிறான் (துளசியையும் கொடூரமாய்க் கொல்வதாய் காட்சி வைத்து பிறகு படத்தின் வெற்றி கருதி நீக்கியதாய்க் கேள்விப்பட்டேன் -‍ வைத்திருந்தால் இன்னமும் நன்றாயிருந்திருக்கும் என்பது என் அபிப்ராயம்). துளசியின் தந்தை, பரமனை அவன் நண்பன் காசியை (கஞ்சா கருப்பு) வைத்தே கொல்கிறான். இதற்காக மற் றொரு நண்பன் டும்கூன் முப்பது வருடம் கழித்து சிறை மீளும் காசியைக் கொல்வதோடு நிறைவடைகிறது கதை.

கதை முக்கியமில்லை. அதன் ஒவ்வொரு கட்டத்திலும் உயிரை வாங்குமளவு வெறித்தனமாய்த்தெறிக்கும் துரோகம் தான் பிராதானம். பழக்கம் என்ற ஒரே காரணத்துக்காக‌ கொலை கூட‌ செய்யும் மனித‌ர்கள் வாழும் அதே ஊரில் தான் காதல், நட்பு போன்ற பரிசுத்தங்கள் மறந்து துரோகம் செய்யும் மனித‌ர்களும் வாழ்கிறார்கள் என்பது தான் படத்தின் சாராம்சம். அவ்வகையில் ஒவ்வொரு ஊருமே சுப்ரமணியபுரம் தான்.


இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பிற தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருமே புதுமுகம். நமக்கு தெரிந்த ஒரே முகம் கஞ்சா கருப்பு. இது போன்றதொரு கதைக்கு இப்படிபட்ட தேர்வு தான் சரியானது (மற்ற‌ உதாரணங்கள்: காதல், விருமாண்டி). சசிகுமார், ஜெய், சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு என எல்லோருமே மிக மிக இயல்பாக மிகையின்றி வெளிப்படுகின்றனர்.


கதாநாயகி ஸ்வாதி அழகாய் சிரிக்கிறார்; அழகாய் பார்க்கிறார்; அழகாய் இருக்கிறார். நடிப்பில் மட்டும் கொஞ்ச‌மாய் கஞ்சத்தனம். மற்றபடி தமிழ் சினிமாவில் ஜெயக்க இந்த உடம்பு தாங்காது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்க வேண்டிய படம். ஜேம்ஸ் வசந்தனும் குறை வைக்கவில்லை ("கண்கள் இரண்டால்..." பாடலில் அவர‌து இசையும், தாமரையின் வரிகளும், ஸ்வாதியின் கண்களும் போட்டி போடுகின்றன).

குறிப்பிடத்தகுந்த மற்ற விஷயங்கள் ‍ ஒளிப்பதிவும் கலை இயக்கமும். ஒளிப்பதிவாளர் கதிருக்கு இது தான் முதல் படம் (ஆனால் சற்றுபின் ஒளிப்பதிவு செய்த "கற்றது தமிழ்" படம் முன்னாலேயே வெளியாகி விட்டது). மிக அற்புதமான ஒளிக்கோர்வையாக அமைந்திருக்கிறது இப்படம். பருத்தி வீரனைப்போல் இதிலும் கிராமம் நிஜமாய்த்தெரிகிறது. ரெம்போனின் கலை இயக்கமும் ஆடை அலங்காரமும் பக்கபலமாய் நிற்கிறது.

எல்லாவற்றையும் தூக்கி நிறுத்துவது சசிகுமாரின் திரைக்கதை. மிகத்துல்லியமாய்த் திட்டமிடப்பட்ட காட்சிநுட்பங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன (கனகுவின் வீட்டுப்பெண்கள் கோபப்படும் காட்சி, காசி திருட முயற்சித்து மாட்டிக் கொள்ளுமிடம் என‌ பல உதாரணங்கள் சொல்லலாம்). ஆனாலும் ஆங்காங்கே பிற பழைய படங்களின்
(பிதாமகன், வெயில், பட்டியல்) நினைவு வராமலில்லை. வேறு வழியில்லை.

தமிழ் நாடு என்ற‌ எருமைத்தோல் சுரணையுணர்வு தேசத்தில் இது போன்ற நிஜமான படைப்புகள் வருவதும் அவை ஜெயிப்பதும் சந்தோஷமான விஷயமே. எதோ ஒரு நல்வழி மாற்றம் மெதுவாய் ரசனை தள‌த்தில் நிகழ்ந்துவருவதாகவே இதை எடுத்துக்கொள்கிறேன். ஆனால் வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே வரும் பருவ மழை போல குறைந்த எண்ணிக்கையில் இவை உருவாக்கப்படுவது தான் சோகம்.


பேருந்து வழித்தடத்தில் முதல் நிறுத்தத்தில் ஏறி கடைசி நிறுத்தத்தில் இறங்கும் பயணியைப்போல் அனைத்தையும் கவனித்தபடி மெள‌னித்து நிற்கின்றன‌‌ நீளும் காலமும் சுப்ரமணியபுரமும். யோசித்துப்பார்த்தால் பல்லாயிரம் ஆண்டுகளாய் நம்முள் உறைந்திருக்கும் துரோக குண‌த்தின் வாக்குமூலமே சுப்ரமணியபுரம் படமும் அதன் மாபெரும் வெற்றியும்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்