புத்தகங்களின் சுயம்வரம்

ஊர் பழையன கழித்துக் கொண்டிருந்த நேரத்தில் நான் புதியன புகுத்திக் கொண்டிருந்தேன்.

ஆம். நேற்றுத்தான் நான் சென்னைப் புத்தகக்காட்சிக்குச் சென்று வந்தேன். போகி விடுறையாதலால் கூட்டம் கணிசமாய் இருந்தது. சொன்னது போல் சென்ற வார இறுதியில் சென்னை போக முடியாத படிக்கு பல கழுத்து நெரிப்பு அலுவல்கள். அதனால் ஒரே நாளைக்குப் பயணத்திட்டத்தைச் சுருக்கி நேற்று வந்து விட்டு நேற்றே திரும்ப வேண்டியதாயிற்று. சென்ற முறை போலவே இம்முறையும் எடையே பிரதானப் பிரச்சனையாயிற்று.

மொத்தம் பத்துப் பாதைகள் கொண்ட புத்தகக்காட்சி அரங்கில் ஆறு பாதைகள் பார்த்து முடித்திருந்த போதே புத்தகப்பை அதீத எடையால் தொங்கிப் போய், மனமும் உற்சாகழந்து சொங்கிப் போய் "முடியல" என்ற நிலைமைக்கு வந்து விட்டேன். காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, கிழக்கு, காவ்யா, க்ரியா, வம்சி, ஆழி, கவிதா, விகடன் ஆகிய முக்கியப் பதிப்பகங்களை அப்போது கடந்திருந்தது மட்டும் தான் ஆறுதல். பிற்பாடு மற்றைய நான்கு பாதைகளை browse மற்றும் செய்து விட்டு குறைந்த கொடுக்கல் வாங்கல்களுடன் வெறியேறினேன்.

ஆழி பப்ளிஷர்ஸ் ஸ்டாலில் இருந்தவர்கள் பேயோன் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் பில்லுக்கு புத்தகங்களை நீட்டியதும் "நீங்கள் தான் பேயோனா?" என சந்தேகமாகக் கேட்டனர். ஒருவேளை பேயோனின் புத்தகப் பின்னட்டையில் போட்டிருக்கும் புகைப்படம் அடியேனைப் போலவே இருப்பதாக அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். அவர்களின் கேள்வியை பாராட்டாக எழுத்துக் கொள்வதா, வசையாக எடுத்துக் கொள்வதா எனத் தெரியவில்லை. இதைப் பற்றி நேற்றிரவு ட்விட்டரில் பேயோனிடம் சொன்னதற்கு அவர் "உங்களுக்கென ஒரு பலத்த அடையாளம் இருந்தால் ஏன் உங்களை இப்படி கேவலப்படுத்தப்போகிறார்கள்?" என்று சொல்லி விட்டார். அதுவும் சரி தான்.

நிறையப் புத்தகம் வாங்கினால் தமிழினியில் தோல்ப்பை கணக்காய் ஒன்று தருகிறார்கள். கொஞ்சம் பழைய மோஸ்தர் எனினும் புத்தகம் வாங்குதற்கு மிக உகந்ததான பை அது. க்ரியாவில் பூமணியின் அஞ்ஞாடி வாங்கினால் ஒரு நோட்டுப் புத்தகத்தில் பெயரையும் மின்னஞ்சலையும் எழுதி வாங்கி வைத்துக் கொள்கிறார்கள் ("சிக்கினான்டா ஒரு அடிமை"). எனக்கு முன்னால் ஒரே ஒரு பெயர் இருந்தது. நானும் எழுதி விட்டு நகர்ந்தேன்.

எப்போதும் எனக்கு இருக்கும் ஓர் உணர்வு - கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு போன்ற பதிப்பகங்களில் புத்தகங்களின் விலை அதிகமெனத் தோன்றினாலும் ஒட்டுமொத்த தமிழ் பதிப்பகங்களிலும் க்ரியா தான் காஸ்ட்லி என்று. அஞ்ஞாடி ஆயிரத்து சொச்சம் பக்கங்கள் தொள்ளாயிரத்துச் சில்லறை ரூபாய்கள். கிட்டதட்ட பக்கத்துக்கு ஒரு ரூபாய். தமிழில் முதல் வரலாற்று நாவல் என்று புத்தகப் பின்னட்டை சொல்கிற‌து. அதைப் பற்றி நாவலைப் படித்து விட்டுத் தான் சொல்ல முடியும். மற்றபடி இப்போதைக்கு தமிழ் நாவல் வரலாற்றிலேயே விலையில் முதலாவது இது தான். ஒருவேளை வரவிருக்கும் ஜெயமோகனின் அசோகவனம் இதை முறியடிக்கக் கூடும்.

அவ்வளவாய் எழுத்தாள‌ர்களை நேற்று காண இயலவில்லை. காவ்யா ஷண்முகசுந்தரம் ஸ்டாலில் அமர்ந்திருந்தார். மனுஷ்ய‌புத்திரனைப் பார்த்தேன், பேசவில்லை (நிச்சயம் உண்மைத்தமிழனின் சமீபத்திய கட்டுரை காரணமில்லை).

வெளியே ஃபுட்கோர்ட்டில் சரஸ்வதி கேட்டரிங் சர்வீஸ் என்ற பெயரில் சந்திர சேகரர் பிரம்மாண்ட உருவச்சிலையை சாட்சி வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கிறார்கள். எது எடுத்தாலும் ஐம்பது அல்லது எழுப‌த்தைந்து. அடுத்த முறை கான்ட்ராக்ட் எடுத்து தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஒரு கிரவுண்ட் நிலத்தை வாங்கி விட உத்தேசித்துள்ளேன்.

உயிர்மையில் கடந்த இரு வருடங்களாகவே இந்தா அந்தா என்று சொல்லப்பட்ட சுஜாதா நேர்காணல்கள் தொகுப்பு இன்னமும் வந்தபாடில்லை. தமிழினியில் காவல் கோட்டம் புத்தகத்துக்கு தனி பில் அச்சடித்துத் தயாராக‌ வைத்திருக்கிறார்கள். முன்றில் அரங்கில் நிறைய நல்ல புத்தகங்கள் சல்லிசாகக் கிடைக்க, அள்ளிக் கொண்டேன். கவிதாவில் அசோகமித்திரன் சிறுகதைகள் காலவாரியாக தனித்தனி தொகுதிகளாகக் கிடைக்கிறது. முந்தாநாள் விகடன் வெளியிட்ட நாஞ்சில் நாடன் சிபாரிசித்த புத்தகங்களில் இரண்டை வாங்கினேன். அப்புறம் உயிர்மை விருது பெற்ற இரண்டு நூல்கள். ஒவ்வொரு வருடமும் எடுத்துப் பார்த்து விட்டு வைத்து வந்த வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தை இம்முறை வாங்கி விட்டேன். அதே போல் சுயசுரிதைகளில் சிலாகிக்கப்படும் டாக்டர் உ.வே.சா., நாமக்கல் கவிஞர் இருவருடையதையும் சேர்த்துக் கொண்டேன். மலிவுப் பதிப்புகளான‌ ஜெயமோகனின் அண்ணா ஹசாரேயும், அ.முத்துக்கிருஷ்ணனின் கூடங்குளம் விழித்தெழும் உண்மைகளும் அதிகம் விற்பனையாகின்றன.

2003ம் ஆண்டு முதல் சென்னைப் புத்தகக்காட்சிக்கு விடாது போய் வருகிறேன். இது பத்தாவது ஆண்டு. ஆனால் எந்த சுஜாதா புத்தகமும் வாங்காமல் விட்ட முதல் புத்தகக்காட்சி இது தான்.

இவ்வருட புத்தகக்காட்சியில் வாங்கின நூல்களின் பட்டியல் இது.
  1. அஞ்ஞாடி - பூமணி (க்ரியா)
  2. கலங்கிய நதி - பி.ஏ.கிருஷ்ணன் (காலச்சுவடு)
  3. பயணக்கதை - யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு)
  4. நிழலின் தனிமை - தேவிபாரதி (காலச்சுவடு)
  5. கால்கள் - ஆர்.அபிலாஷ் (உயிர்மை)
  6. நீர்த்துளி - சுப்ரபாரதி மணியன் (உயிர்மை)
  7. மங்கலத்து தேவதைகள் - வா.மு.கோமு (உயிர்மை)
  8. எட்றா வண்டியெ - வா.மு.கோமு (உயிர்மை)
  9. ஆண்பால் பெண்பால் - தமிழ்மகன் (உயிர்மை)
  10. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன் (கவிதா பப்ளிகேஷன்)
  11. குற்றப்பரம்பரை - வேல ராமமூர்த்தி (காவ்யா)
  12. ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ் (தமிழினி)
  13. அஞ்சலை - கண்மணி குணசேகரன் (தமிழினி)
  14. வீரபாண்டியன் மனைவி (மூன்று பாகங்கள்) - அரு.ராமநாதன் (பிரேமா பிரசுரம்)
  15. வாக்குமூலம் - நகுலன் (முன்றில்)
  16. பறளியாற்று மாந்தர் - மா.அரங்கநாதன் (முன்றில்)
  17. ஒரிஜினல் நியூஸ் ரீல் சிறுகதைகள் - பா.வெங்கடேசன் (முன்றில்)
  18. இன்னும் சில வீடுகள் - பா.வெங்கடேசன் (முன்றில்)
  19. வீழ்ந்தவர்கள் - காசியபன் (முன்றில்)
  20. புதுக்கவிதைகள் - க.நா.சுப்ரமண்யம் (ஜனச்சேரி)
  21. குரோட்டன்களோடு கொஞ்ச நேரம் - பழமலய் (ரிஷபம் பதிப்பகம்)
  22. மாஜி கடவுள்கள் - பேரறிஞர் அண்ணா (பூம்புகார் பதிப்பகம்)
  23. லார்ட் க்ளைவ் சரித்திரம் - ஜே.ஏ.கதிரவேலுப் பிள்ளை (நிலா முற்றம்)
  24. கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் - அ.முத்துக்கிருஷ்ணன் (உயிர்மை)
  25. மூங்கில் மூச்சு - சுகா (விகடன் பிரசுரம்)
  26. அண்ணா ஹசாரே - ஜெயமோகன் (கிழக்கு பதிப்பகம்)
  27. தாயார் சன்னதி - சுகா (சொல்வனம்)
  28. வெள்ளம் - நீல.பத்மநாபன் (காவ்யா)
  29. ப்ரியா கல்யாணராமன் சிறுகதைகள் (குமுதம்)
  30. வேழாம்பல் குறிப்புகள் - சுகுமாரன் (அந்திமழை)
  31. குற்றியலுலகம் - பா.ராகவன் (மதி நிலையம்)
  32. பாம்புத்தைலம் - பேயோன் (ஆழி பப்ளிஷர்ஸ்)
  33. முடியலத்துவம் - செல்வேந்திரன் (பட்டாம்பூச்சி பதிப்பகம்)
  34. அணிலாடும் முன்றில் - நா.முத்துக்குமார் (விகடன் பிரசுரம்)
  35. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியன் (தமிழ்ப் புத்தகாலயம்)
  36. ஓடும் நதி - கலாப்ரியா (அந்திமழை)
  37. உருள் பெருந்தேர் - கலாப்ரியா (சந்தியா பதிப்பகம்)
  38. ஏரிக்கரையில் வசிப்பவன் - ஸ்ரீநேசன் (ஆழி பப்ளிஷர்ஸ்)
  39. உமா வரதராஜன் கதைகள் (காலச்சுவடு)
  40. நகரத்திற்கு வெளியே - விஜய் மகேந்திரன் (உயிர்மை)
  41. ஒரு தாத்தாவும் எருமையும் - பாமா (விடியல்)
  42. ஒரு துளி துயரம் - சு.வேணுகோபால் (தமிழினி)
  43. கன்னிவாடி - க.சீ.சிவகுமார் (தமிழினி)
  44. அம்மாவோடு ஒரு நாள் - அசோகமித்திரன் (கவிதா பப்ளிகேஷன்)
  45. உயிர் - அசோகமித்திரன் (கவிதா பப்ளிகேஷன்)
  46. பறவை வேட்டை - அசோகமித்திரன் (கவிதா பப்ளிகேஷன்)
  47. மாற்று நாணயம் - அசோகமித்திரன் (கவிதா பப்ளிகேஷன்)
  48. குழந்தைகள் - அசோகமித்திரன் (கவிதா பப்ளிகேஷன்)
  49. என் சரித்திரம் - உ.வே.சாமிநாதய்யர் (டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம்)
  50. என் கதை - நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் (குயிலோசை)
இவை தவிர உயிர்மை மற்றும் காலச்சுவடு இதழ்கள். எக்ஸைல் முன்பே வாங்கினபடியால் பட்டியலில் சேர்க்கவில்லை.

வாங்கும் திட்டத்துடன் போன கீழ்க்கண்ட நூல்களை எடை, மறதி போன்ற காரணங்களால் வாங்கவில்லை:
  1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா
  2. மரங்கொத்திச் சிரிப்பு - ச.முத்துவேல்
  3. இந்தியா : காந்திக்குப் பிறகு (இரு பாகங்கள்) - ராமச்சந்திர குகா
  4. உடையும் இந்தியா? - ராஜிவ் மல்ஹோத்ரா & அரவிந்தன் நீலகண்டன்
  5. திராவிட இயக்க வரலாறு (இரு பாகங்கள்) - ஆர்.முத்துக்குமார்
  6. பசித்த பொழுது - மனுஷ்யபுத்திரன்
  7. அவ்வுலகம் - வெ.இறையன்பு
  8. கமல் : நம் காலத்து நாயகன் - மணா
  9. கடவுளின் நண்பர்கள் - கோகுலக்கண்ணன்
  10. துருவ நட்சத்திரம் - லலிதாராம்
  11. அறம் - ஜெயமோகன்
  12. பெருமாள்முருகனின் புதிய புத்தகம் கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள்முருகன்
ஆன்லைன் வழி கிட்டதட்ட எல்லாப் புத்தகங்களும் வீடு தேடி வரும் சொகுசு வந்து விட்ட காலகட்டத்தில் அடுத்த புத்தகக்காட்சியில் சும்மா window shopping மட்டும் செய்து விட்டு வரலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.‌

எனது புதிய புத்தகமான தேவதை புராணம் சில எதிர்பாராத அதனால் தவிர்க்கவியலாத தொழில்நுட்பப் பிரச்சனைகளால் இந்தப் புத்தகக் காட்சியில் வெளியாகவில்லை. புத்தகம் வெளியாக எப்படியும் இன்னும் ஓரிரு வாரங்களேனும் ஆகும் எனத் தெரிகிறது. கிழக்கில் சந்திரயானும் ஸ்டாக் இல்லை எனத் தெரிகிற‌து.

அரங்கின் வெளியே மணிமேகலைப் பிரசுரத்தின் 25 நூல்கள் வெளியீட்டு விழா நடந்து கொண்டிருந்தது. டி.ராஜேந்தர், ரோகிணி வந்திருந்தார்கள். லேனா தமிழ்வாணன், அவரது மகன், மூன்று வயதுப் பேத்தி என மூன்று தலைமுறையினர் மேடையேறி மொக்கை போட்டுக் கொண்டிருந்தார்கள். நான் போகையில் மாலன் ஒரு பக்கக் கட்டுரைகள் எழுதுவதன் சிரமங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். நான் அவற்றைப் படிப்பதன் சிரமங்களை நினைத்துக் கொண்டேன்.

இந்த வருடத்தை நாவல்களின் ஆண்டாகக் கொண்டாடலாம் என உத்தேசித்துள்ளேன். வாங்கி வைத்துப் படிக்காத நாவல்கள், படிக்கத் தொடங்கி பாதியில் நிற்கும் நாவல்கள் நிறைய கைவசம் இருக்கின்றன. இவை தவிர புதிதாக வாங்கியுள்ளவை. குறைந்தபட்சம் வாரம் ஒன்று வீதம் ஓராண்டில் ஐம்பது நாவல்கள் திட்டம். பார்க்கலாம்.

ஒவ்வொரு முறையும் பாடும் அதே பல்லவி தான். இம்முறையும் சமையல், ஜோதிடம், குழந்தைகளுக்கானவை இவை தாம் அதிகம் விற்பனையாகின்றன என்பதை புத்தகக்காட்சி அரங்குகளை ஒருமுறை வலம் வந்தாலே தெரிந்து போகிறது. அதாவது எதோவொரு வகையில் லௌகீகப் பயனும் பலனும் எதிர்பார்த்து வாங்கப்படும் புத்தகங்கள். உண்மையில் அவர்களைப் பொறுத்தவரை அரிசி, பருப்பு போல் புத்தகங்களை ஒரு பண்டமாகவே பாவித்து வாங்குகின்றனர்.

நான் அடிக்கடி சொல்வது போல் ஒவ்வொருவரும் தம் ஆண்டு வருமானத்தில் குறைந்தபட்சம் ஒரு சதவிகித்தை புத்தகக்காட்சிக்கென மட்டும் ஒதுக்கி வைத்து புத்தகங்கள் வாங்க வேண்டும். அதாவது ஆண்டு சம்பளம் ஒரு லட்சம் வைத்திருப்பவன் ஆயிரம் ரூபாய்க்கேனும் புத்தகம் வாங்க வேண்டும். அவையும் மேற்குறிப்புட்ட பலனெதிர்பார்க்கும் வகைப்பண்டங்களாக அல்லாமல் இலக்கியம், தத்துவம், வரலாறு, அறிவியல், அரசியல் என்று சிந்தனைக்கு உணவாக இருப்பவைகளாக இருக்க வேண்டும். அது தான் புத்தகக்காட்சிக்கு மக்கள் தரும் நிஜமான மரியாதை ஆகும்.

மற்ற‍ப‌டி, இப்போது பப்பாஸிக்காரர்கள் நடத்துவது பெரும்பாலும் ஒரு பிரம்மாண்ட ரேஷன் கடை.

Comments

||மற்ற‍ப‌டி, இப்போது பப்பாஸிக்காரர்கள் நடத்துவது பெரும்பாலும் ஒரு பிரம்மாண்ட ரேஷன் கடை.||

பொருட்காட்சின்னு சொல்லிருந்தா பொருத்தமா இருந்திருக்குமோ?
அ.மி. சிறுகதைகள் காலவாரியாக இரு பெரு தொகுப்புகளாக கிடைக்கும் கவிதாவில் . (கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகள் தவிர்த்த கதைகள்) .
பெருமாள்முருகனின் புதிய புத்தகம் இந்த வருடம் வந்துள்ளதா (மாதொருபாகனுக்கு பிறகு?)
@WordsBeyondBorders

//அ.மி. சிறுகதைகள் காலவாரியாக இரு பெரு தொகுப்புகளாக கிடைக்கும் கவிதாவில்// இப்போது அவை ஸ்டாக் இல்லை. அதற்கு பதிலாகத் தான் இப்படி தனித்தனிப் புத்தகங்களாக பிரித்துப் பதிப்பித்து விற்கிறார்கள் என்பதாகச் சொன்னார்கள். ஆனால் அந்தப் பெருந்தொகுதிகளும் மீண்டும் வரும் என்கிறார்கள்.

//பெருமாள்முருகனின் புதிய புத்தகம் இந்த வருடம் வந்துள்ளதா (மாதொருபாகனுக்கு பிறகு?)// ஆம். நாவலா என்பது உறுதியாகத் தெரியவில்லை. பதிப்பகமும் வழக்கமான காலச்சுவடு அல்ல.
Anonymous said…
கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள் முருகன் கலப்பை பதிப்பகம்
@Anonymous
ஆம். அதே தான். தகவலுக்கு நன்றி. கட்டுரையில் திருத்தி விட்டேன். (ஒரு சிறிய சந்தேகம். இந்த உதவியைச் செய்ய‌ Anonymous ஆக வரவேண்டியதன் அவசியம் என்ன?)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்