ஓராண்டின் முடிவில்...
#OKK (ஒரு கோடி காலடிகள்) #day365 சென்ற விநாயக சதுர்த்தியில் தீர்மானித்து ஆகஸ்ட் 24, 2020 அன்று தொடங்கியது. ஒரு நாளும் தவறாமல் தொடர்ந்து முழு ஓராண்டு தினம் 10,000 காலடிகள் நடந்திருக்கிறேன். சென்ற ஆண்டு இப்படி நான் ஒழுக்கம் பேணுவேன் என எவரும் சொல்லியிருந்தால் நானே நம்பியிருக்க மாட்டேன். ஏனெனில் பத்தாண்டுகளுக்கு மேலாக பல முறை ஜிம், யோகா, க்ளப் எனக் காசை வியர்வையாக்க முயன்று விரயமாக்கியிருக்கிறேன். சும்மா பூங்காவில் அல்லது நெரிசலற்ற சாலைகளில் கூடப் போகலாம். பெங்களூர் என்பதால் இரண்டுக்குமே பஞ்சமில்லை. ஆனால் காசு கட்டியதற்காகவேனும் விடாது போவேன் என்ற நப்பாசை. ஆனால் நடந்தது என்னவென்றால் அதிகபட்சம் ஒரு மாதம் போவேன், அப்புறம் சோம்பல் புகுந்து விடும், அல்லது ஏதேனும் காரணம் சிக்கி விடும். அதை முடித்த பின் என ஒரு நாள் குறிப்பேன். அந்நாள் வரவே வராது. அந்தப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும் போது எனக்கே இதில் பெருமிதம்தான். 🙂 இந்த ஓராண்டுத் தொடர்ச்சியைக் குலைக்க ஏராளம் சந்தர்ப்பங்கள் வந்தன. பயணம் அதில் முதலாவது, தொற்றுச்சூழல் இரண்டாவது, உடல் நலம் மூன்றாவது. சென்னை, கோவை, ஈரோடு, மைசூர், கொல்லிமலை என