சைக்கோ: பேரன்பெனும் பாசாங்கு
“We all go a little mad sometimes.” - Psycho (1960) படத்தில் வரும் வசனம் சைக்கோ (Psycho) என்பது சைக்கோபாத் (Psychopath) என்ற சொல்லின் பேச்சு வழக்கு. கேம்ப்ரிட்ஜ் அகராதி அச்சொல்லுக்கு இப்படி விளக்கம் அளிக்கிறது: “a person who has no feeling for other people, does not think about the future, and does not feel bad about anything they have done in the past”. அதாவது எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ இறந்த காலம் பற்றிய குற்றவுணர்வோ அற்ற ஆள். பொதுவாக சைக்கோ பாத்திரத்தை மையமிட்டு புனையப்படும் எழுத்துக்களோ, திரைப்படங்களோ இந்த அர்த்தப்படுத்தலை அசைத்துப் பார்க்க முனைவன. அதாவது அவை சைக்கோக்கள் ஏன் சைக்கோக்கள் ஆனார்கள் என அடிக்கோடிட முனைகின்றன. மிஷ்கினின் சைக்கோ அம்முனைப்பின் உச்சம். தமிழ் சினிமாவுக்கு சைக்கோபாத் படங்கள் புதியவை அல்ல. பன்னெடுங்காலமாக எடுக்கிறோம். பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் (1978) படத்தை இதன் தொடக்கம் எனலாம். பிறகு பாலு மகேந்திராவின் மூடுபனி (1980) ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் Psycho பாதிப்பில் எடுக்கப்பட்டது. அருமையான இவ்விரு படங்களின் துவக்கத்துக்குப் பிறகு 1986ல் திரைப்படக...