ஜெயமோகன் எனும் ஞானபீடம்
ஃபேஸ்புக் தீவிர விஷயங்களைப் பேச உகந்த இடமில்லை. ஆனால் தீவிரங்களை எளிய போர்வையில் எழுதிப் பார்க்கலாம். அப்படிச் சில தினம் முன் நான் எழுதிய குறிப்பு இது: "தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்" என்ற பிரயோகம் சமகாலச் சூழலில் இரு விதமாகப் பயன்படுத்தப்படுகிறது: 1) ஜெயமோகனைக் குறிக்க 2) ஜெயமோகனைச் சீண்ட.” பகடியாகவோ புகழுரையாகவோ தெரிந்தாலும் கவனமான ப்ரக்ஞையுடன் எழுதியதே! என் கால் நூற்றாண்டு வாசிப்பின் சிற்றெல்லைக்குள் நின்றபடி பேசும் போது தமிழில் உருவான நவீன எழுத்தாளர்களுள் ஜெயமோகனே முதன்மையானவராகத் தெரிகிறார். என் போல் இங்கே பலர் உணர்ந்திருந்தாலும் இலக்கிய முன்னோடிகளைக் குறைத்துப் பேசலாகாது என்ற தயக்கத்திலும் அவருக்கு வயதேறட்டும் என்றெண்ணியும் அமைதி காக்கலாம். நரையும் திரையுமே அங்கீகார அளவுகோல் என்பதுதானே நம் பண்பாடு! ஒட்டுமொத்த நவீனத் தமிழிலக்கியப் பரப்பிற்குமாக இந்த இடத்தை ஜெயமோகனுக்கு அளிப்பதில் சிலருக்குத் தயக்கமிருந்தாலும் இன்று வாழ்கின்ற தமிழ் எழுத்தாளர்களுள் அவரே முதன்மை ஸ்தானம் என்பதை எவரும் மானசீகமானவேனும் ஒப்புக் கொள்வர். (ஆனால் அதை வெளியே சொல்வதற்கு பழம்பகை, அரசியல் சார்