எடை பார்த்தல்


உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்று இருப்பவர்கள் அவ்வப்போது எடை பார்த்துக் கொள்வது என்ன முன்னேற்றம் எனப் புரிந்து கொள்ளவும், அதன் வழி மேலும் ஊக்குவிப்பு பெறவும், மாற்றங்கள் செய்யவும் உதவும். ஆனால் இதற்கும் சில விதிகளை வைத்துக் கொள்வது நல்லது. அது நம் மனநிலையை, செயல்களைப் பாதிக்க வல்லது என்பதால் அந்த எடை எண்ணின் துல்லியம் முக்கியமல்லவா!

1) முதலில் சொந்தமாய் ஒரு எடை பார்க்கும் இயந்திரம் வாங்கிக் கொள்வது நல்லது. உலகில் எல்லா இயந்திரங்களும் மிகச் சிறிய அளவிலேனும் பிழை கொண்டவையே. ஒரே இயந்திரத்தைப் பயன்படுத்தும் போது அப்பிழை எல்லா முறையும் இருக்கும். அதை ignore செய்து விடலாம். என்வரையில் ஒரு வீட்டில் இது ஓர் அவசியமான investment. இன்று தெர்மாமீட்டர், ஆக்ஸிமீட்டர் எல்லாம் நடுத்தர வர்க்க வீடுகளில் சகஜமாகி விட்டன. இதுவும் ஒரு வீட்டில் மாற்றி மாற்றி யாரோ ஒருவருக்கேனும் எப்போதும் பயன்பட்டுக் கொண்டே இருக்கும். அமேஸானில் இன்று ரூ.500 முதல் எடை இயந்திரங்கள் கிடைக்கின்றன. ரூ.1000க்கு நல்லதாக ஒன்று வாங்கலாம். வாங்க முடியாதோர் அல்லது விரும்பாதோர் எப்போதும் ஒரே இயந்திரத்தில் எடை பார்க்க பக்கத்து வீட்டில் / கடையில் / மருத்துவமனையில் ஓர் இயந்திரத்தை ஏற்பாடு செய்யலாம் (ஆனால் கீழே உள்ள 3வது பாயிண்ட் இந்த முறையில் சாத்தியமில்லை.)

2) தினம் தினம் எடையைப் பார்ப்பது ஓர் ஆர்வக்கோளாறுத்தனம். தினமும் இரவு புணர்ந்து விட்டு மறுநாள் காலை ப்ரக்னன்ஸி டெஸ்ட் கிட் வாங்கி வந்து பரிசோதிப்பது போன்றது. What's the point? அதீதமான தகவல் என்பது சுமை. அது குழப்பங்களையும் அளிக்கும். தினசரி ஏற்றத்தாழ்வுகள் (fluctuations) இருக்கவே செய்யும் உடல் எடையில் - அத்தனை complex architecture கொண்டது மனித உடல். சும்மா லாரி எடை போல் அல்ல. என் தனிப்பட்ட அனுபவம் வாரம் ஒரு முறை பார்க்கலாம். அதுவும் குறிப்பிட்ட ஒரே நாளில் என வைத்துக் கொள்ளலாம் (ஃபோனில் ரிமைண்டர் வைக்கலாம்). உதாரணமாய் நான் திங்கட்கிழமைகளில் பார்ப்பேன். அப்போது கடந்த தினங்களின் பழக்க வழக்கங்கள் என்ன, அதன் விளைவாய் எடையில் என்ன மாற்றம் என ஒப்பிடுவதற்கும் இம்முறை வசதி. (பொதுவாய் ஒரு புதிய உடற்பயிற்சி அல்லது உணவுப் பழக்கத்தின் மாற்றம் உடல் எடையில் பிரதிபலிக்கத் தொடங்க குறைந்தது 3 நாட்கள் எடுக்கும் என்பது என் தனிப்பட்ட அனுபவம்.)

3) துல்லியமாய் எப்படி எடை பார்ப்பது? நம்மில் நிறையப் பேர் வாட்ச், பர்ஸ், ஃபோன், வாகனச் சாவி, பெல்ட் எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு எடை பார்ப்பதைச் செய்வோம். உடைகளின் எடை வித்தியாசம்? ஜீன்ஸ் பேண்ட்டும் ட்ராக்ஸ் பேண்ட்டும் ஒரே மாதிரி எடையா? உடலில் உள்ள உணவுகளின், கழிவுகளின் எடை? வயிறு முட்டச் சாப்பிட்டுப் பார்ப்பதும் கடும் பசியில் இருக்கையில் பார்ப்பதும் ஒன்றா என்ன? ஆக, நான் 'தூய உடல் எடை' (Pure Body Weight) என்று ஒரு விஷயம் யோசித்திருக்கிறேன். காலையில் எழுந்து சுத்தமாய் மல ஜலம் கழித்து, பல் துலக்கி, குளிக்காமல், பச்சைத் தண்ணீரும் பல்லில் படாமல், கதவடைத்து உட்தாழிட்டு, பூரண நிர்வணமாய் (தாலிக் கொடி கூடக் கூடாது; அரைஞாண் கொடி பரவாயில்லை) எடை இயந்திரத்தின் மீதேறி நின்று பார்ப்பது.

4) எடை இயந்திரம் ஒரே சமயத்தில் கூட வெவ்வேறு எடை காட்டுகின்றதே? ஆம். எல்லா இயந்திரங்களிலும் margin of error இருக்கத்தான் செய்யும். After all it's a machine. ஆனால் அதன் துல்லியத்தை முடிந்த அளவுக்குக் கூட்டலாம். அ) எடை இயந்திரத்தை ஆன் செய்தவுடன் முதல் முறை காட்டும் எடையை நிராகரித்து விடுங்கள். அது பொதுவாய்ப் பல இயந்திரங்களில் கூடுதலாகவோ குறைவாகவோ தவறாகவே இருக்கிறது. ஆ) நல்ல சம தளத்தில், காற்று வேகமாக வீசாத இடத்தில் எடை இயந்திரத்தை வைத்துத்தான் எடை பார்க்க வேண்டும். பௌதீக விதிகள் எடையைப் பாதிக்கும் என்பதால். எப்போதும் அதே இடத்தில் வைத்துப் பார்க்கலாம். இ) அவசரப்படாமல் இயந்திரத்தின் மீதேறி நின்று பத்து விநாடி ராணுவ வீரன் போல் நிதானமாக நேரே பார்த்து விட்டு பின் மெல்லக் குனிந்து எடை பார்க்க வேண்டும். அப்போதுதான் இயந்திரம் stabilise ஆகி எடையைக் காட்டும். ஈ) மூன்று முறை எடை எடுங்கள். அதன் சராசரியைக் கணக்கிட்டு உங்கள் அசல் எடை எனக் கொள்ளுங்கள்.

5) கடைசியாக அப்படிப் பார்க்கும் எடையைத் தேதி போட்டுக் குறித்து வையுங்கள். Trend எப்படி என்பதைத் திரும்பிப் பார்க்க உதவும். எதில் அதிகம் எடை குறைந்தது, அதிகரித்தது போன்ற விவரங்களுடன் கோர்த்துப் பார்த்தால் எதைச் செய்யலாம் / கூடாது என்ற புரிதல் வரும். இந்த retrospective செய்தல் மிக முக்கியமானது.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்