அமேஸான் போட்டி: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


அமேஸான் Pen to Publish - 2019 போட்டி தொடர்பாய் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் சில:

1) நான் முன்பு வலைப்பூவில் எழுதிய சில பதிவுகளை ரத்து செய்து விட்டு கிண்டிலில் வெளியிட்டால் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படுமா?

2) முன்பு என் நாவலின் சில அத்தியாயங்கள் ஓர் அச்சிதழில் சில அத்தியாயங்கள் வெளியாகின. பின் சில காரணங்களால் நின்றது. அதை முடித்து மின்னூலாக்கி போட்டிக்கு அனுப்பலாமா?

3) எனது ஃபேஸ்புக் பதிவுகளைச் சேர்த்துப் புத்தகமாக்கினால் ஏற்றுக்கொள்ளப்படுமா?

மூன்றுக்கும் பதில் "கூடாது" என்பதே.

போட்டிக்கு அனுப்படும் படைப்பின் எந்தவொரு பகுதியும் அச்சு, மின் என எந்த வடிவிலும் ஏற்கனவே வெளியாகி இருக்கக் கூடாது. அப்படியானவை நிராகரிப்புக்கு உள்ளாகும். இன்றைய தேதியின் தேடல் தொழில்நுட்பத்தில் அதைக் கண்டறிவது சிரமமல்ல. அதனால் பரிசுத்தமான புத்தம் புதிய படைப்புகளை மட்டுமே போட்டிக்கு அனுப்புவீர்.

*

அமேஸான் Pen to Publish 2019 போட்டி பற்றி வரும் இன்னொரு பரவலான கேள்வி: "நான் எழுதி அதை மின்னூலாய்ப் பதிப்பித்து விடுவேன். ஆனால் அது பரவலாக வாசிக்கப்படவும், மதிப்பிடப்படவும் வேண்டும் என்பது போட்டி விதி. அதை எப்படிச் செய்வது?" (தரமாய் எழுதுபவர்கள் கூட கிண்டிலில் சறுக்குமிடம் இதுவே என்பது என் அபிப்பிராயம்.)

மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பது தான் சுருக்கமான பதில். ரொம்ப தூரம் அலையாமல் உங்கள் சமூக வலைதளச் செல்வாக்கை எப்படி இதற்குப் பயன்படுத்திக் கொள்வது என பாரா ஓர் அற்புதமான பதிவை எழுதி இருக்கிறார்: https://www.facebook.com/raghavan.pa/posts/2425271901133744

போட்டித் தேதிகளை நினைவிற்கொள்வது எளிது. போட்டி ஆசிரியர் தினத்தன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது; பேரறிஞர் தினத்திலிருந்து மின்னூல்களைப் பதிப்பிக்கத் துவங்கலாம்.

*

அமேஸான் Pen to Publish போட்டி பற்றிய இன்னொரு முக்கிய விளக்கம்:

ஏற்கனவே அச்சிதழிலோ, மின்னிதழிலோ, வலைப்பூவிலோ, ஃபேஸ்புக்கிலோ வெளியான படைப்புகளைப் போட்டிக்கு அனுப்பலாமா எனக் கேட்கிறார்கள். கூடாது என்று சொல்லி இருந்தேன். போட்டிக்கு அனுப்பப்படும் மின்னூலின் மொத்தமும் எங்கும் வெளியாகாததாக, பொத்தி வைத்ததாக‌ இருக்க வேண்டும் என்பதை அழுத்தி இருந்தேன்.

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் இது போட்டிக்கான கட்டுப்பாடு மட்டுமே. போட்டியில் பங்கு பெறாமல் குறிப்பிட்ட போட்டித் தேதிகளோ, வேறெப்போதுமோ அந்த ஏற்கனவே வெளியான படைப்புகளைக் கிண்டிலில் நூலாக வெளியிட எந்தத் தடையும் இல்லை.

*

அமேஸான் Pen to Publish - 2019 போட்டி - மேலும் சில கேள்விகள்.

1) வேறு மொழிகளில் (உதா: ஆங்கிலம்) ஏற்கனவே பிரசுரமானவற்றை (அச்சு, மின் ஏதேனும்) தமிழில் மொழிபெயர்த்துப் போட்டிக்கு அனுப்பலாமா?

கூடாது. படைப்பு அல்லது அதன் பகுதி எந்த மொழியிலும் வெளியாகி இருக்கக்கூடாது.

2) பொதுவெளியில் ஆற்றிய ஓர் உரையை நூலாக்கிப் போட்டிக்கு அனுப்பலாமா?

அனுப்பலாம். வரையறை எழுத்து வடிவுக்கு மட்டும் தான்.

3) நாடகங்களைப் போட்டிக்கு அனுப்பலாமா?

அனுப்பலாம். எந்த வகைப் படைப்பும் ஏற்கப்படும்.

4) குறுவடிவில் ஒரு சிறுகதை இருக்க வேண்டும்; நீள்வடிவில் பல சிறுகதைகள் இருக்க வேண்டும். சரியா?

அப்படியெல்லாம் எந்த வரையறையும் கிடையாது. இதில் சொல்லப்பட்டதற்கு நேர்மாறாக‌ குறுவடிவ நூல் பல சிறுகதைகள் சேர்ந்ததாக இருக்கலாம்; நீள்வடிவ நூல் ஒரே நீண்ட‌ சிறுகதையாக இருக்கலாம். சொற்களின் எண்ணிக்கை மட்டுமே கணக்கு. மற்றக் கட்டுப்பாடுகள் இல்லை.

5) போட்டிக்கு அனுப்பப்படுவது இறுதியில் ப்ரைம் வீடியோவாக எடுக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டுமா?

இல்லை. எழுத்தாளரின் சம்மதத்துக்குப் பின்பே ஒப்பந்தம் எழுதுவார்கள். அப்போது மறுக்கலாம்.

*

அமேஸான் Pen to Publish - 2019 போட்டிக்கு அனுப்பப்பட்ட மின்னூல்களை அச்சு நூலாக ஆக்குவது தொடர்பாகப் பல கேள்விகளை எதிர்கொள்கிறேன். அதற்கு ஒரே பதிலாகச் சொல்லி விடுவது எல்லாவற்றையும் தெளிவாக்கும்.

போட்டிக்கு அனுப்பிய மின்னூலை குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் அச்சு நூலாகப் பதிப்பிக்கக்கூடாது. வரும் ஜனவரியில் இறுதிச்சுற்றுப் பட்டியல் அறிவிக்கப்படும். அதில் உங்கள் நூல் இல்லையெனில் அப்போது முதல் எப்போது வேண்டுமானாலும் அதை அச்சு நூலாக நீங்கள் விரும்பும் பதிப்பகத்தில் பதிப்பிக்கலாம். இறுதிச் சுற்றுக்குத் தேர்வானோர் மட்டும் மீண்டும் காத்திருக்க வேண்டும். ஃபிப்ரவரியில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்ட பின் அவர்களும் இதையே செய்யலாம். (ஒருவேளை வெற்றியாளர் ப்ரைம் வீடியோவாக ஆக்க பிற்பாடு தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரும் சம்மதித்தால் அதற்கான ஒப்பந்தம் தனி.)

அதனால் இப்போது கிண்டிலில் போட்டு போட்டியில் கலந்து கொண்டு விட்டு வரும் ஜனவரி சென்னை புத்தகக் காட்சிக்கு அச்சு நூலாகக் கொண்டு வரலாம் எனத் திட்டமிட வேண்டாம். அப்படி அச்சு நூலாக வந்த பின் அது போட்டியிலிருந்து தகுதி இழக்கும்.

போட்டியில் பங்குபெறாத கிண்டில் நூல்களை அச்சு நூலாக்க எப்போதும் எந்தத் தடையும் இல்லை.

*

நினைவூட்டல்.

அமேஸான் கிண்டில் Pen to Publish - 2019க்கு இன்று முதல் படைப்புகளை அனுப்பத் தொடங்கலாம். சரியாய் 90 நாட்கள் அவகாசம் இருக்கிறது. இந்த இடைவெளியில் ஒரு நாவலைக் கூட புதிதாய்த் தொடங்கி எழுதி முடிக்க முடியும் என்பதே என் அனுபவம். எழுத்தாளர்கள், எழுதுவர்கள், எழுதும் இச்சை கொண்டோர், முன்னொரு காலத்தில் எழுதியோர் என அனைவரும் இப்போட்டியைச் சாக்கிட்டுத் தம் மனதிலிருக்கும் ஒரு படைப்பை எழுதி முடிக்கலாம். 'நேரமே இல்லங்க' எனச் சுயசமாதானம் செய்து கொள்வோருக்கான ஒரு நல்லுந்துதல் இது.

இதில் தகுதியான ஒரு படைப்பு ரூ. 12 லட்சம் (மற்றும் கூடுதல் தொகை) பரிசு கூட வெல்லும் வாய்ப்பிருக்கிறது என்பதை நினைவூட்டுகிறேன். அவ்வகையில் நடுவர் போட்டியாளர்களைக் கண்டு பொறாமையுறும் போட்டி உலகிலேயே இது ஒன்றாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரையும் பங்கேற்க அழைக்கிறேன்.

***

தொடர்புடைய பதிவுகள்:
http://www.writercsk.com/2019/09/pen-to-publish-2019.html
http://www.writercsk.com/2019/09/blog-post_15.html
http://www.writercsk.com/2019/09/pen-to-publish.html

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்