என் புத்தகங்கள்: IAQs


அடிக்கடி இல்லை என்றாலும் எப்போதாவது நான் எதிர்கொள்ளும் கேள்விகள் இவை. IAQs - Infrequently Asked Questions!

1) நீங்கள் புத்தகம் ஏதும் எழுதி இருக்கிறீர்களா?
2) உங்கள் புத்தகங்களை எங்கே, எப்படி வாங்கலாம்?
3) உங்கள் நூல்களை ஆன்லைனில் வாங்க முடியுமா?
4)  உங்கள் நூல்கள் மின்னூல்களாகக் கிடைக்கின்றனவா?
5) உங்கள் புத்தக‌ பிடிஎஃப் எங்கே டவுன்லோட் செய்யலாம்?


அவ்வப்போது பதில் சொல்லியும் வந்திருக்கிறேன். வாசகர்கள் மற்றும் என் வசதிக்காக இங்கு தொகுத்துக் கொள்ளலாம். 

1) நீங்கள் புத்தகம் ஏதும் எழுதி இருக்கிறீர்களா?

துரதிர்ஷ்டவசமாக, ஆம். ஒரு நடிகரிடமோ ஓர் இயக்குநரிடமோ போய் ஏதும் படம் செய்திருக்கிறாயா? என்று யாரும் கேட்பதில்லை. ஆனால் ஓர் எழுத்தாளனிடம் மிக எளிதாக என்ன எழுதியிருக்கிறாய் எனக் கேட்டு விட முடியும். மொத்தம் என் 9 நூல்கள் அச்சில் வந்திருக்கின்றன. ஒரு நாவல், ஒரு சிறுகதைத் தொகுதி, இரண்டு கவிதைத் தொகுதிகள், ஒரு கட்டுரைத் தொகுதி, நான்கு அபுனைவு நூல்கள். உயிர்மை, கிழக்கு, சூரியன், சிக்ஸ்த் சென்ஸ், கற்பகம் புத்தகாலயம், அம்ருதா, அகநாழிகை என வெவ்வேறு பதிப்பகங்கள். இது போக மூன்று மின்னூல்களும் வெளியாகி இருக்கின்றன.

என் புத்தகங்களின் மொத்தப் பட்டியலையும் இங்கே காணலாம்: http://www.writercsk.com/p/blog-page_19.html


2) உங்கள் புத்தகங்களை எங்கே, எப்படி வாங்கலாம்?

சென்னையில் நியூ புக்லேண்ட்ஸ், டிஸ்கவரி புக் பேலஸ் கடைகளில் சில நூல்கள் கிடைக்கும். பிற ஊர்களிலும் தமிழ் புத்தகங்கள் விற்கும் பிரபல / பெரிய கடைகளில் கிடைக்கக்கூடும் (உதாரணம் கோவை விஜயா புக்ஸ்). இவை போக, நூல்களை வெளியிட்ட அந்தந்தப் பதிப்பகங்களின் அலுவலகங்கள் / விற்பனை மையங்களில் கிடைக்கும். இப்போது அச்சு நூல்களில் 'பரத்தை கூற்று' தவிர மற்ற‌ எல்லா நூல்களும் கிடைக்கின்றன என்பதே என் புரிதல். ஏதேனும் நூல் எங்கும் கிடைக்கவில்லையெனில் என்னை ஃபேஸ்புக் சாட்டிலோ (https://www.facebook.com/saravanakarthikeyanc) மின்னஞ்சலிலோ (c.saravanakarthikeyan@gmail.com) தொடர்பு கொள்ளலாம். நான் மார்க்கம் காட்ட முடியும். அல்லது அனுப்ப முயல்வேன். 

3) உங்கள் நூல்களை ஆன்லைனில் வாங்க முடியுமா?

ஆம். கிட்டத்தட்ட எல்லாமே ஆன்லைனில் கிடைக்கின்றன. முன்பை விட இப்போது அதிகமான ஆன்லைன் விற்பனைத் தளங்களில் கிடைக்கின்றன. மேற்கண்ட என் புத்தகப் பட்டியல் பக்கத்தில் ஒவ்வொரு நூலும் எந்தெந்தத் தளங்களில் கிடைக்கிறது என்ற சுட்டிகளையும் தந்திருக்கிறேன். அவற்றில் எது உங்களுக்கு வசதியானதோ அதைப் பயன்படுத்தலாம். 

4)  உங்கள் நூல்கள் மின்னூல்களாகக் கிடைக்கின்றனவா?

அச்சு நூல்கள் பற்றிச் சொல்லும் போது மின்னூல் உண்டா என்று கேட்பதும், மின்னூல் பற்றிச் சொல்லும் போது அச்சில் கிடைகுமா எனக் கேட்பதும் இப்போது ஒரு ஃபேஷனாகி வருகிறது. மேலே சொன்னது போல் அச்சு நூல்கள் போக எனது 3 மின்னூல்கள் வெளியாகி இருக்கின்றன. அச்சு நூல்களில்  பரத்தை கூற்று, தேவதை புராணம், குஜராத் 2002 கலவரம் ஆகிய மூன்றும் வெவ்வேறு தளங்களில் மின்வடிவிலும் கிடைக்கின்றன. ஆக, எனது 6 நூல்கள் மின்னூல் வடிவில் கிட்டுகின்றன. அவற்றை வாங்கும் சுட்டிகளும் மேற்சொன்ன புத்தகப் பட்டியல் பக்கத்திலேயே தரப்பட்டிருக்கிறது. (மேலும் சில நூல்களை அமேஸான் கிண்டிலில் வெளியிடும் முயற்சியில் இருக்கிறேன். வந்த பின் இதே பக்கத்தில் அத்தகவலும் கிட்டும்.) 

5) உங்கள் புத்தக‌ பிடிஎஃப் எங்கே டவுன்லோட் செய்யலாம்?

நடிகர் விஷாலிடம் போய் ஒருவர் உங்கள் படத்தின் கள்ளப் பிரதி எங்கே கிடைக்கும் எனக் கேட்டுவிட முடியுமா! ஆனால் எழுத்தாளன் என்றால் எளிதில் சூத்தடிக்கலாம்! அப்படியான ஒரு கேள்வி தான் இது. என் மின்னூல்களில் ஒன்றை (ச்சீய்...) இலவச பிடிஎஃப் ஆக வெளியிட்டிருக்கிறேன். அது போக மற்ற எதுவும் இலவசமாக தரவிற‌க்க முடியாது. அப்படித் தரவிறக்க முடிகிறதெனில் தயை கூர்ந்து என்னிடம் தெரியப்படுத்தவும். அது தண்டனைக்குரிய குற்றம். தமிழில் பெரும்பாலும் எந்த எழுத்தாளனும் புத்தக ராயல்டியை நம்பி இல்லை. ஆனால் திருட்டுப் பிரதிகள் பதிப்பகங்களை அழிக்கும் வல்லமை வாய்ந்தவை. அதை ஒருபோதும் ஆதரிக்காதீர். (கள்ள பிடிஎஃப் தரவிறக்கம் செய்ப‌வர்கள் ஒருபோதும் அதைப் படிக்கப் போவதில்லை என்பது வேறு விஷயம். ஆனாலும் எதற்கு சில எம்பி டேட்டாவை வீணாக்குவானேன்!)

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்