பரத்தை கூற்று (மின்னூல்)


பரத்தை கூற்று என் முதல் கவிதைத் தொகுப்பு. 2010ல் அதை எழுத்தாளர் சாரு நிவேதிதா டிஸ்கவரி புக் பேலஸில் வைத்து வெளியிட்டார். நூலை அன்று கடுமையாக அவர் நிராகரித்துப் பேசினார். அக்கவிதைகளின் தரம் என்ன என்று அன்றே எனக்குத் தெரியும். (அப்போதே அதை வெளிப்படையாக எழுதியும் இருக்கிறேன்.) அதற்கு நவீன இலக்கியத்தில் யாதொரு இடமும் இல்லை. அவை எளிமையானவை, நேரடியானவை, கச்சாவானவை. ஒரு மாதிரி எண்பதுகளின் தொன்னூறுகளின் வெகுஜனப் புதுக்கவிதைப் பாணி. மீரா தொடங்கி மு.மேத்தா, வாலி, ந.முத்துக்குமார், தாமரை முதலானோர் குறைந்தபட்சம் தலா ஒரு தொகுப்பு இவ்வகைமையில் எழுதி இருக்கிறார்கள். வைரமுத்து நிறையவே எழுதி இருக்கிறார். (புத்தகத்தைக் கூட அவருக்கே சமர்ப்பணம் செய்திருந்தேன், என்னை அறிமுகம் செய்ததற்காக‌.)


அப்படி இருந்தும் சாருவை வைத்துத் தான் அந்நூலை வெளியிட வேண்டும் என நான் பிடிவாதமாய் இருந்ததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அதன் பாடுபொருள். பாலியல் தொழிலாளிகளின் உலகம் பற்றி காமத்தின் அரசியலை தமிழில் அதிகம் எழுதியவர் வெளியிடுவது சாலப் பொருத்தம் என எண்ணினேன். அடுத்தது இலக்கிய ஸ்தானம் தாண்டி அந்த எழுத்தின் பின்னிருந்த பாலியல் தொழிலாளிகளின் மீதான என் அப்பழுக்கற்ற அக்கறை. அந்த நேர்மையின் ஒளிக்கு சாரு நிவேதிதா போன்றவர் தகுதியானவர் என நம்பினேன். அவரது பிரபலமும் காரணம் எனச் சொல்ல வேண்டியதில்லை.

அதனால் வெளியீட்டு விழாவில் நூலின் இலக்கிய இடத்தை முன்வைத்து சாரு நிவேதிதா விமர்சித்துப் பேசியது எனக்கு எந்த ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அளிக்கவில்லை. இதை அவரிடமே அன்றைய நிகழ்வின் முடிவில் குறிப்பிட்டேன். ஆனால் இடையில் அதனாலேயே அவர் மீது வன்மம் கொண்டு எக்ஸைல் நாவல் பற்றி எதிர்மறையாக எழுதியதாக‌ நினைத்துக் கொண்டார். இன்று வரையிலும் அவர் அப்படியே நம்பிக் கொண்டிருக்கக்கூடும். இருக்கட்டும். ஆனால் அன்று சாரு என் நூலை வெளியிட்டதன் மூலமாக அதற்கு மிக மிகப் பிரம்மாண்டமான‌ அறிமுகம் கிட்டியது. அதற்காக என்றும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இத்தருணத்தில் அவருக்கு மறுபடியும் எனது பேர‌ன்பினைப் பதிகிறேன்.

இன்று ஆறாண்டுகளுக்குப் பின் பரத்தை கூற்று தொகுப்பின் கவிதைகளை வாசித்துப் பார்க்கையில் அவற்றில் சில சமூக வலைதளப் பாணியிலான குறும்பதிவுகள் போலக் கூடத் தோன்றுகின்றன. ஆனால் இவை யாவற்றையும் கடந்து சில இடங்களில் நிஜத்தின், நிதர்சனத்தின், யதார்த்தத்தின் தரிசனக் கீற்று மின்னுவதாக எண்ணுகிறேன். இன்னொரு விஷயம் இக்கவிதைகளில் பயின்றிருக்கும் எனக்கே பிடித்தமான செறிவானதொரு மொழி நடை. இத்தொகுப்புக்கு நான் எழுதிய நீண்ட‌ முன்னுரை என் முக்கியமான கட்டுரைகளில் ஒன்று. (அதை இங்கே வாசிக்கலாம்.) ந.முருகேச பாண்டியன் தொகுப்பு குறித்து உயிர்மையில் சிறுவிமர்சனக் கட்டுரை ஒன்று எழுதினார். சுகன்யா தேவி என்பவர் கோவை பாரதியார் பல்கலைக்கழத்தில் சமகாலக் கவிதைகளில் சமூகக் கருத்துக்கள் என்பது குறித்த முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நூல்களில் இதுவும் ஒன்று. இவை எனக்கு இப்போதும் இத்தொகுப்பு குறித்து மகிழ்ச்சியையே அளிக்கிறது.

இன்று இத்தொகுப்பு மின்னூலாக வெளியாகிறது. கபாலி வெளியாகும் நாளில் இதை வெளியிட்டால் கவனிக்கப்படாமல் காணாமல் போகும் என்றார் நண்பர். காணாமல் போக‌ நல்ல காரணமேனும் கிடைத்ததே என நினைத்துக் கொள்கிறேன்.

நூலினை வாங்க‌: http://leemeer.com/parathai-kootru

அகநாழிகை பதிப்பகம் மூலம் அன்று இதை நம்பிக்கையுடன் வெளியிட்ட நண்பர் பொன்.வாசுதேவன் அவர்களுக்கும் இன்று Leemer Publishers மூலம் மின்வடிவில் வெளியிடும் நண்பர் செல்லமுத்து குப்புசாமி அவர்களுக்கும் என் நன்றி.

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்