தமிழ் மின்னிதழ்

நியாயமாய் இக்குறிப்பை சுமார் ஒன்றரை மாதம் முன்பே எழுதியிருக்க வேண்டும். சமயம் அமையவில்லை. ஆனால் நம்மூரில் குழந்தை பிறந்ததைச் சொல்லத் தவறி விட்டு காதுகுத்துக்கு அழைப்பதில்லையா, அது போல் பாவிக்கவும்.

தமிழ் என்ற இலவச காலாண்டு மின்னதழை கடந்த பொங்கலிருந்து துவக்கி இருக்கிறேன். அது பற்றியதே இப்பதிவு.

தமிழ் பொங்கல் 2015 இதழ் - http://tamizmagazine.blogspot.in/2015/01/blog-post.html


இதழ் தொடங்கியது ஏன் என்பது பற்றி முதல் இதழின் தலையங்கத்தில் சுமாராய்க் குறிப்பிட்டிருக்கிறேன். சிரமம் பாராது வாசித்து விடவும். அதில் அடங்காத சில விஷயங்களை மட்டும் இங்கே பேசுகிறேன். அப்புறம் அதற்கான எதிர்வினைகள்.

ஏன் மின்னிதழ்? இரண்டு காரணங்கள். ஒன்று அதுவே எனக்கு வசதி. இரண்டு அது தான் எனக்கு சாத்தியம். பத்திரிக்கை அச்சிட்டு விற்றுத் தீர்க்க ஆசை தான். ஆனால் அதற்கான பொருளாதரம், அறிவு, ஆதரவு தற்சமயம் எனக்கில்லை. நான் இணையத்தில் புழங்குபவன். அதனால் மின்னிதழாகக் கொண்டு வருகிறேன். இதன் வீச்சு குறுகியதே. கணிப்பொறியோ, ஸ்மார்ட்ஃபோனோ வைத்திருப்பவர் மட்டுமே இன்று என் இதழை வாசிக்கவியலும். ஆனால் வேறு வழியில்லை. நிதம் வளர்ந்து வரும் கூட்டம் இது என்பது இதில் தென்படும் தூரத்தொளி. சூழல்க‌ள் மாறுகையில் இது அச்சு இதழாகலாம்.

இதன் உட்கேள்வி ஒன்று. ஏன் பிடிஎஃப்? இவ்வடிவில் ஐஃபோன், ஐபேட், ஆன்ட்ராய்ட்ஃபோன், டேப்லட், கிண்டில் போன்ற கருவிகளில் வாசித்தல் சிரமம் ஆயிற்றே? நிஜம் தான். பிரக்ஞைப்பூர்வமாகவே அப்படி வைத்திருக்கிறேன். உருவம் தவிர‌ தமிழ் மின்னிதழை ஓர் அச்சிதழாகவே பாவிக்கிறேன். இன்னும் சரியாகச் சொன்னால் ஓர் அச்சிதழின் மின்வடிவம். அது ஒன்றே ஒன்று தான். வாசிக்கும் கருவிக்கேற்றாற் போல் இதழின் தோற்றத்தை உடைத்து மாற்ற விரும்பவில்லை.

ஆனால் இதை ஒரு கவலையாய் நிறையப் பேர் குறிப்பிட்டததை ஒட்டி தமிழ் மின்னிதழை Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License-ல் வெளியிட்டிருக்கிறேன். அதாவது யார் வேண்டுமானாலும் வியாபார நோக்கின்றி, இதழின் உள்ளடக்கத்தை மாற்றாமல், மூல நூல் விவரங்களைக் குறிப்பிட்டு எந்த வடிவத்திலும் பகிரலாம். உதாரணமாய் http://freetamilebooks.com தளத்தில் பல நூல்களுக்கு பிடிஎஃப் தவிர மேற்சொன்ன கருவிகளில் வாசிக்கும் முறையில் ePub, mobi, 6-inch PDF ஆகிய வடிவங்களில் வெளியிடுகிறார்கள். அதன் வழி நம்மிதழும் வரும் வாய்ப்புண்டு.

இன்னொரு விஷயம் - அச்சிதழில் ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டித்தான் குறிப்பிட்ட படைப்பை அடைவோம். ஒருவேளை உள்ளடக்கம் கொடுக்கப்பட்டிருந்தால் அதன் மூலம் பக்க எண்ணை அறிந்து கொண்டு குறிப்பிட்ட படைப்புக்குத் தாவலாம். இது வரை தமிழ் இதழிலும் சாத்தியம். உள்ளடக்கம் கண்டு, பக்க எண் அறிந்து, நீங்கள் பயன்படுத்தும் PDF reader-ல் பக்க எண் கொடுத்தால் அழைத்துச் சென்று விடும். ஹைப்பர்லிங்க் கிடையாது! (சேர்ப்பது சுலபமெனினும் தவிர்த்தேன்.)

சுருங்கச் சொன்னால் ஓர் அச்சு இதழை நீங்கள் எப்படிக் கையாள முடியுமோ அப்படியே இதையும் கையாள வேண்டும்.

ஏன் இலவச இதழ்? மின்னிதழ் என்பதால் என் சிந்தனை, உழைப்பு மற்றும் நேரம் தாண்டி எனக்கு இதில் தயாரிப்பு அல்லது விநியோகச் செலவுகள் ஏதும் இல்லை. அதனால் இலவசமாகத் தர‌ முடியும். அது பிரதானக் காரணம். ஒரு கலாசாரக் காரணமும் உண்டு. நேரடியாகவே சொல்லி விடுகிறேன். தமிழர்களின் மனப்பாங்கு. காசுள்ளவரோ இல்லையோ இங்கே காசு கொடுத்து புத்தகம் / பத்திரிக்கை வாங்க 99% பேருக்கு முடை. வாங்கிப் படிப்பதால் த‌னக்கு என்ன லௌகீக லாபம் என்ற கேள்விக்கு வலுவான பதில் தேவைப்படுகிறது அவர்களுக்கு. ரூ.100 கொடுத்து அடாசு சினிமா பார்க்க யாருக்கும் தயக்கமில்லை. ஆனால் எழுத்துக்கு செலவழிக்க வலிக்கும். ஒருவேளை விலை வைத்தாலும் மின்னிதழ் என்பதால் கள்ளப்பிரதிகள் உருவாகும் வாய்ப்புண்டு. இதை எல்லாம் தாண்டி நான் குறைகூறும் இதே தமிழர்களிடம் போய்ச்சேர விரும்புகிறேன். இங்கே இருக்கும் சில திறமைகள் வெளிச்சத்துக்கு வர விரும்புகிறேன். அதனால் தான் இலவசம்.

இதழ் இலவசம் என்பதால் இதில் பங்கேற்ற படைப்பாளிகள் எவருக்கும் எந்தவிதமான‌ சன்மானமும் அளிக்கவில்லை. இலவசம் என்பதால் ஓர் அனுகூலம் எந்த விளம்பரத்தையும், புரவலரையும் அனுமதிக்க வேண்டி இருக்கவில்லை.

ஏன் காலாண்டிதழ்? ஆரம்பத்தில் மாத இதழாய்க் கொண்டு வருவதாய்த் தான் திட்டம். முதல் இதழுக்கு படைப்புகள் கேட்டு அனுப்பிய மின்னஞ்சலிலும் அதையே குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இதழ் வேலைகள் தொடங்கிய பிறகு தான் அதன் பளு உறைத்தது. என் பிரதான முகம் பத்திரிக்கையாளன் என்பதல்ல. இந்தப் பத்திரிக்கை ஒரு கனவு. சொந்த வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை, எழுத்து வாழ்க்கை இவற்றோடு பத்திரிக்கையும் நடத்த வேண்டும் என்பதே நோக்கம். மாத இதழ் என்பது அதற்குச் சரிபட்டு வராது எனத் தோன்றியது. அதனால் தான் காலாண்டிதழ் ஆக்க முடிவெடுத்தேன்.

இதழுக்கான‌ inspiration என ட்விட்டரில் கட்டதொர என்பவர் நடத்தி வந்த கட்டவிளக்கமாறு என்ற இதழைச் சொல்வேன்.

*

இதழின் பெரும்பான்மை என் உழைப்பில் உருவானது. படைப்புகளைத் தேர்ந்தெடுத்தது, எடிட் செய்தது, ப்ரூஃப் பார்த்தது, லே அவுட் (மிக எளிமையானது தான் என்றாலும்) எல்லாமே நானே செய்தேன் (இறுதி நேர அவசர ப்ரூஃப் பார்த்தலின் பலனாக முதல் இதழில் சில எழுத்துப் பிழைகள் இருக்கக்கூடும்). எனக்கு அடுத்து இதழின் ஆக்கத்தில் பங்கு வகித்தவர் என மீனம்மா கயலைச் சொல்லலாம். இதழின் லோகோ, அட்டை ஓவியத்தின் மீதான டிசைன், இதழுக்கான டீஸர் எல்லாம் அவர் தான் வடிவமைத்தார். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் நான் அவற்றை விளக்க அதிகம் மெனக்கெட வேண்டி இருக்கவில்லை. திறமைக்காரி. இலவசம் எனினும் எந்தச் சுணக்கமும் இன்றி செய்து கொடுத்தார். அவருக்கு என் அன்பு. அழகான‌ அட்டை ஓவியத்தை வரைந்தளித்த மாற்றுத் திறனாளி பிரசன்ன குமாருக்கும் நன்றிக‌ள்.

இதழ் பற்றி நான் அதிகம் விவாதித்தது இரண்டு பேரிடம். ஒன்று என் மனைவி. அடுத்து என் நெருங்கிய சினேகிதன் இரா. இராஜராஜன். அவர்களை ஆலோசனைக்குழு என இதழில் குறிப்பிட்டிருந்தேன். அடுத்து இணையப் பெரும்பான்மையின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அரட்டைகேர்ள் சௌம்யாவையும், தோட்டா ஜெகனையும் இதழுக்கு ஆலோசனைகள் வழங்கும்படி கேட்டுக் கொண்டேன். அவர்களின் விமர்சனக் கருத்துக்கள் இதழைச் சீராக்க உதவும் என நம்புகிறேன். இன்னொரு புறம் பிரபல்யத்தின் காரணமாக‌ இதழின் ப்ராண்ட் அம்பாஸ்டர்களாக அவர்களை எடுத்துக் கொள்ளலாம்.

*

அடுத்து இதழ் பற்றி வந்த எதிர்வினைகள். பெரும்பாலும் நேர்மறையான கருத்துக்கள். குறிப்பாய் ஜெயமோகனின் நீண்ட நேர்காணல் பற்றிச் சிலாகித்தவை. ஜெயமோகனின் பதிவு, எஸ்.ராமகிருஷ்ணனின் மின்னஞ்சல், பேயோனின் கருத்து எல்லாமே இதழின் பின் இருந்த உழைப்பைச் சிலாகித்திருந்தன. முதல் இதழை வெளியிட்ட‌ ஞாநியின் வாழ்த்துரையை முக்கியமானதாய்க் கருதுகிறேன். தனிப்பேச்சில் இதழின் உள்ளடக்கத் தரத்தைக் கடுமையாக விமர்சித்த அன்பருக்கு நன்றி. அது ஒரு திறப்பு. அராத்துவும் இது குறித்து எழுதி இருந்தார். வா. மணிகண்டனும் இதழ் குறித்து அறிமுகம் செய்திருந்தார். அஷோக் எழுதிய ஒரு விரிவான விமர்சனக் கடிதம் முழுமையான பார்வை. இராதாகிருஷ்ணன் மற்றும் இதழில் எழுதிய‌வர்களும் கருத்து பதிந்திருந்தனர். UTV தனஞ்செயன் அச்சிதழாகக் கொண்டு வரலாம் எனக் குறிப்பிட்டார்.

தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டால் முதல் இதழ் குறிப்பிடத்தகுந்த குறைகள் கொண்டிருந்தாலும் நிறைவாகவே இருந்தது. ஆனால் அதே சமயம் இதழ் பெரும்பாலும் தடுப்பாட்டமாகவே இருந்தது என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.

தொடங்குகையில் என் நோக்கம் என்னளவு அல்லது என்னுடையதை விடத் தரமான‌ எழுத்துக்களை மட்டுமே இதழில் சேர்ப்பது என்பது தான். ஆனால் முதல் இதழில் அது முழுமையாய்ச் சாத்தியப்படவில்லை. இதழில் இடம் பெற்ற படைப்புகள் எல்லாமே நான் கேட்டு வாங்கியவை என்பதால் எதையும் தர அடிப்படையில் நிராகரிக்கவில்லை (சிலர் ஒன்றிற்கும் மேற்பட்ட படைப்புகள் அனுப்பியதில் தேர்ந்தெடுத்தது தவிர). ஏற்கனவே மின் அல்லது அச்சு ஊடகங்களில் பிரசுரம் கண்ட படைப்புகளை மட்டும் ஏற்பதில்லை என்பதில் பிடிவாதமாய் இருந்தேன். பலவீனமான படைப்புகளையும் இரண்டாம் முறை திருத்தி எழுதச் செய்து அல்லது எடிட்டிங்கில் செப்பனிட்டு சேர்த்துக் கொண்டேன். அது முறையா பிழையா என்பது தாண்டி சாதக பாதகமறிந்து தெரிந்தே செய்தேன் என்பதை மட்டும் சொல்ல விழைகிறேன். இனி வரும் இதழ்களில் அப்படித் தரச் சமரசம் செய்யும் உத்தேசமில்லை என்பதையும் அழுந்தக் குறிப்பிட விரும்புகிறேன்.

அன்பர்களுக்கு நான் மீண்டும் நினைவூட்ட விரும்புவது ஒன்றைத் தான். தற்போதைக்கு தமிழ் தீவிர இலக்கிய இதழ் அல்ல; போலவே வெகுஜன இதழும் அல்ல. இடைப்பட்டது. ஆனால் இதன் எதிர்காலப் பயணம் தீவிர இலக்கிய இதழ் என்பதை நோக்கியதாகவே இருக்கும். அதுவரை கசியவிருக்கும் சுஜாதாத்தனங்களை தீவிரர்கள் பொறுத்தருளலாம்.

*

இதழின் நீளம் குறித்த விமர்சனங்கள் கண்டேன். மாத இதழ் திட்டமிருந்த போது 64 பக்கங்கள் என நினைத்திருந்தேன். காலாண்டிதழாகும் போது நியாயப்படி மூன்று மடங்காகி 192 பக்கங்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் 138 பக்கங்கள் தான் வந்திருக்கிறது (அதிலும் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் ஜெயமோகன் நேர்காணல்). அதனால் உண்மையில் இது குறைவு தான். அதிகப்பக்கங்கள் அலுப்பூட்டும் என்ற காரணத்தை மறுதலிக்கிறேன். அலுப்பூட்டினால் அவ்விடத்தில் நிறுத்தி விடுங்கள் என்பதே என் கேஎஸ் ரவிக்குமார்தனமான பதிலாக இருக்க முடியும். சீரியஸாகச் சொன்னால் நல்ல வாசகனைப் படைப்பின் அளவு பயமுறுத்தாது. மற்றபடி அதிக பக்கங்களின் காரணமாக‌ இதழின் தரம் dilute ஆக‌ வாய்ப்புண்டு என்ற அடிப்படையில் அடுத்த இதழை சுமார் 100 பக்கங்களுக்குள் அடைக்க முயலப் போகிறேன்.

இதழில் எனக்கு மிக மனநிறைவு அளித்தது ஜெயமோகனின் நீண்ட நேர்காணல் தான். அதற்கு அவரளித்த ஒத்துழைப்பு முக்கியக் காரணம். அதற்கு என் மரியாதையைப் பதிவு செய்கிறேன். அட்டைப்படத்தில் ஜெயமோகனின் முழு வண்ண ஓவியம் இடம் பெற்றதைப் பற்றிய கேலிகளையும் எதிர்மறைக் கருத்துக்களையும் ("இது கொஞ்சம் ஓவர் தான்!") எதிர்கொண்டேன். ஜெயமோகன் வரை அது போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதை அவர் பதிவின் வாயிலாக அறிகிறேன்.

சஞ்சிகைகளின் அட்டையில் நடிகர்களும், அரசியல்வாதிகளும், விளையாட்டு வீரர்களும், தொழிலதிபர்களும் இடம் பெறும் போது ஓர் எழுத்தாளன் ஏன் இடம்பெறக்கூடாது? யோசித்துப் பார்த்தால் மேற்குறிப்பிட்ட எவரை விடவும் அவனே மானுட குலத்துக்கு முக்கியமானவன். சிற்றிதழ்களில் கூட எழுத்தாளனுக்கு அஞ்சலிக் குறிப்பு எழுதும் வேளையில் தான் அட்டைப்பட இடம் வாய்க்கிறது. அல்லது அவன் ஏதாவது பெரும் சர்ச்சையில் மாட்ட வேண்டும். அட்டைப்படத்தில் இடம் பெற சாகும் வரை எழுத்தாளன் காத்திருக்க வேண்டிய சூழலை மறுக்கும் நோக்கில் தான் இதழின் அட்டையில் தொடர்ந்து எழுத்தாளர்கள் இடம் பெற வேண்டும் என முடிவு செய்தேன். அது நல்ல‌ எழுத்தாளர்களுக்கு என்னாலான மரியாதை. என் கடமையும் கூட. அந்த அடிப்படையில் தான் சமகாலத் தமிழ் எழுத்துலகில் முதன்மையானவராக நான் கருதும் ஜெயமோகன் முதல் இதழின் அட்டையில் இடம் பெற்றார். இது அடுத்தடுத்த இதழ்களிலும் தொடரும்.

இதழில் நான் எழுதப் போவதில்லை என்பது ஏற்கனவே முடிவெடுத்தது தான். எல்லா இதழ்களிலும் தலையங்கமும், நேர்காணலும் மட்டும் என் பங்களிப்பாக அமையும். மற்றபடி இதழ் முழுக்க முழுக்க என் ரசனையின் பதிவு மட்டுமே.

*

விஷயத்துக்கு வருகிறேன். தமிழ் அடுத்த இதழ் 2015 தமிழ் புத்தாண்டை ஒட்டி வெளியாகும். விரும்புபவர்கள் அதற்கு படைப்புளை அனுப்பலாம். அவர்கள் அறிய விதிமுறைகள் சில உண்டு. எளிமையான, நேரடியான நிபந்தனைகள்:

1. இலவச இதழ் என்பதால் பிரசுரமாகும் எந்தப் படைப்பிற்கும் சன்மானம் தருவதற்கில்லை.

2. படைப்புகள் வேறெந்த அச்சு மற்றும் மின் இதழ்களில் வெளியாகாதவையாக இருக்க வேண்டும்.

3. படைப்புகளுக்கு பக்க வரையறை ஏதுமில்லை. அவசியமெனில் பகுதிகளாகப் பிரித்து வெளியிடுவேன்.

4. படைப்பு கவிதை, கதை, கட்டுரை, பத்தி, நாடகம், திரைக்கதை, மொழிபெயர்ப்பு, ஓவியம், புகைப்படம், கார்ட்டூன் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். இலக்கியம், திரைப்படம், அரசியல், வரலாறு, விஞ்ஞானம், அனுபவம் போல் எந்த வகைமைக்குள்ளும் அமையலாம். சமையல், ஜோதிடம், செக்ஸ் குறிப்புகளுக்கு மட்டும் அனுமதி இல்லை.

5. படைப்பை வெட்டவோ, ஒட்டவோ, திருத்தவோ இதழின் ஆசிரியர் என்ற முறையில் எனக்கு உரிமை உண்டு. பெரிய அளவிலான மாற்றம் எனில் மட்டும் முன்கூட்டியே படைப்பாளிக்குத் தகவல் தெரிவித்து அனுமதி பெறுவேன்.

6. படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டதா என நானே தகவல் அனுப்பி விடுவேன். தேவைப்பட்டால் நினைவுறுத்தல் மடல் அனுப்பி விசாரிக்கலாம். அனுப்பிய பின் வெளியாகும் முதல் இதழில் அப்படைப்பு வெளியாகவில்லை, என்னிடமிருந்தும் எந்தத் தகவலும் இல்லை எனில் பிரசுரத்துக்குத் தேர்வாகவில்லை என எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

7. இதழ் வெளியான ஒரு மாத காலத்திற்கு படைப்பை வலைப்பூ, ஃபேஸ்புக், ட்வீட்லாங்கர் என எதிலும் வெளியிடலாகா. இடையே படைப்பைப் பகிர விரும்பினால் இதழின் சுட்டியைப் பகிர்ந்து படைப்பு வெளியாகி இருக்கும் பக்க எண்ணைக் குறிப்பிடலாம். ஒரு மாதத்திற்குப் பின் எதில் வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளலாம். புத்தகமாக்கல் உள்ளிட்ட எல்லா உரிமையும் படைப்பாளிக்குரியது. ஒரு மாதத் தடை இதழின் முக்கியத்துவம் மங்கக்கூடாது என்பதற்காகவே.

8. இதழ் பெரும்பாலும் என் உழைப்பில் மட்டுமே வெளியாகப் போகிறது என்பதால் லேஅவுட் எளிமையானதாகவே அமையும். படைப்பிற்குப் பொருத்தமான‌ ஓவியம், புகைப்படம் சேர்த்திருக்கலாம் எனக் குறைப்பட வேண்டாம்.

படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:  c.saravanakarthikeyan@gmail.com
படைப்புகளை அனுப்பக் கடைசித் தேதி: 31 மார்ச் 2015 இந்திய நேரப்படி நள்ளிரவு 12:00 மணி

அடுத்த இதழிலிருந்து வெளியாகும் படைப்புகளுள் ஒரு முத்திரைப் படைப்பை அடையாளங் காட்டலாம் எனத் திட்டம். ரெஸ்டாரண்ட் மெனுக்களில் Chef's Recommendation என்று சில இருக்குமே, அது போல பத்திரிக்கையில் இது Editor's Choice!  (முதல் இதழில் இதைச் செய்யவில்லை. செய்திருந்தால் மத்யமன் எழுதிய 0° F சிறுகதைக்குக் கொடுத்திருப்பேன்).

*

முதல் இதழுக்கு இணைய நண்பர்கள் (குறிப்பாய் ட்விட்டர்வாசிகள்) அளித்த வரவேற்பும், ஆதரவும் நெகிழ்ச்சியானது. அது தொடரும் என நம்புகிறேன். மற்றபடி, அன்பர்கள் அடுத்த இதழின் அட்டையில் யார் என யோசிக்கத் தொடங்கலாம்.

Comments

Unknown said…
Blog layout is simple and good and readable also
வேற யாரு.. எஸ்.ரா. தான் ;)
Pandiyan said…
சார் நானும் கடந்த இரண்டு வருடமாக மின் இதழ் துவங்க முயற்சி செய்கிறேன் அதற்கு வழிகாட்டுங்கள்
Pandiyan said…
சார் மின் இதழ் துவங்குவது எப்படி

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்