கவிதாயினி : IN THE MAKING


எமக்கு என்று
சொற்கள் இல்லை.
மொழி எம்மை
இணைத்துக் கொள்வதுமில்லை.
உமது கதைகளில்
யாம் இல்லை,
எனக்கென்று சரித்திரமில்லை.
நீங்கள் கற்றுத் தந்ததே நான்
வார்த்ததுத் தந்ததே நிஜம்.
எனக்கென்று கண்களோ
செவிகளோ, கால்களோ
இல்லை.
அவ்வப்போது நீ இரவலாய்
தருவதைத் தவிர.


- கனிமொழி [கருவறை வாசனை தொகுப்பிலிருந்து]

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வெளியான கனிமொழியின் முதல் கவிதைத் தொகுப்பு நூலின் முதல் கவிதை இது. பெண் எழுத்து என்று குறிப்பிடத்தகுந்த ஏதும் இல்லை என்கிற ஆதங்கமே இக்கவிதை. இன்று பல பெண்கள் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தாலும் அவை எல்லாமே நவீன தளத்திலானவை. அடர்த்தியான விஷயங்களை அல்லது சிக்கலான பிரச்சனைகளை எடுத்துத் தீவிரமாய்ப் பேசுபவை. அவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் பெண்ணெழுத்தில் ஒரு வெற்றிடம் உண்டு. வெற்றிடம் என்பதை விட ஒரு குறிப்பிட்ட வகைமையில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்புகள் இல்லை எனலாம்.

வைரமுத்து பாணி வெகுஜனக் கவிதைகளுக்கும், பசுவய்யா பாணி சீரியஸ் கவிதைகளுக்கும் இடைப்பட்ட ஒன்றுண்டு. இடைநிலைக் கவிதைகள் என இதனை அழைக்க விரும்புகிறேன். இது புதுக்கவிதைக்கு மேல்; நவீனக் கவிதைக்குக் கீழ். கடந்த ஐந்தாண்டுகளாக‌ ப்ரக்ஞையின்றி அதனை வார்த்தெடுத்ததில் ஆனந்த விகடன் சொல்வனம் பகுதிக்கு முக்கியப் பங்கிருக்கிறது. முன்பொரு முறை இது குறித்துப் பேசி இருக்கிறேன்: http://www.writercsk.com/2012/01/blog-post_08.html

என் எழுத்துலக நண்பர்கள் சிலரது எழுத்துக்களை இவ்வகை தான் எனக் குறிப்பிட்டால் கோபிக்கிறார்கள். நவீனப் படைப்பு என்பது தவிர்த்த வேறெந்த லேபிளுக்கும் அவர்கள் இறங்கி வரத் தயாரில்லை. சரி, அதை விடுங்கள். விஷயத்துக்கு வருகிறேன். பெண்கள் யாருமே அந்த வகைமையில் குறிப்பிட்ட பங்களிப்பை நிகழ்த்தவில்லை. நானறிந்து இருவர் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கார்த்திகா ரஞ்சன்; இன்னொருவர் லக்ஷ்மி சாஹம்பரி. இருவருமே இப்போது எழுதுவதாய்த் தெரியவில்லை. அதைத் தான் மேலே வெற்றிடம் எனக் குறித்தேன்.

அந்த இடத்தைக் கச்சிதமாய் நிரப்பத் தான் ஒருவர் வந்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. அவரைப் பற்றித் தான் இப்பதிவு.


ஒருவர் இணையத்தில் எழுத முடிவெடுத்து விட்ட பிறகு ஃபேஸ்புக், ட்விட்லாங்கர், கூகுள் ப்ளஸ் உள்ளிட்ட‌ சமூக வலைதளங்களில் படைப்புகளை வெளியிடுவதில் எனக்கு ஒருபோதும் உவப்பில்லை. வலைப்பூ அல்லது வலைதளம் தொடங்குவது தான் சரியான வழிமுறை. சமூக வலைதளங்களைப் பொதுவாய் அவசரத்தில் மேய்ந்து கடக்கும் பொழுதுபோக்கு வஸ்துவாகவே பார்க்கிறார்கள். அதில் விழும் like-கள் பெரும்பாலும் பதில் மொய் சம்பிரதாயம் தான். அல்லது நட்பிலக்கணம் எழுதி விடுகிற‌ ஆர்வம். இதை விடக் கொடூரம் ஐந்து ஏ4 சைஸ் தாள்கள் நீளத்திற்கு கட்டுரை எழுதிப் பகிர்ந்தால் பத்தாவது நொடி like விழுகிறது. இத்தகைய‌ சமூக வலைதளங்களில் புழங்குபவர்கள் பெரும்பாலும் (கவனிக்கவும், 'பெரும்பாலும்' தான் 'எல்லோரும்' அல்ல) ஆழமற்றவர்கள் என்பதே என் அனுபவம். அதில் வரும் பெரும்பான்மை புகழுரைகளுக்கு மதிப்பில்லை. குருடர்களிடம் பாராட்டுப் பெற்ற ஓவியக்காரன் போலத் தான்.

மாறாக இணையதளம் ஓர் ஒழுக்கத்தை எதிர்பார்க்கிறது. வாசகனிடம் கொஞ்சம் உழைப்பைக் கோருகிறது. அதை விட முக்கியமாய் எழுதும் படைப்புகளைத் தொகுத்தலையும், தேடுதலையும் சுலபப்படுத்துகிறது. ஜெயமோகன் எந்த சமூக வலைதளத்திலும் வராது இணையதளத்தில் மட்டுமே எழுதுவதை இதற்கு ஒரு முக்கியச் சான்றாகக் கொள்ளலாம்.

தனக்கென ஒரு பிரத்யேக வலைதளம் தொடங்கி இருக்கிறார் ட்விட்டரில் @arattaigirl என்ற பெயரில் எழுதி வரும் சௌம்யா. 140 எழுத்துக்கள் என்ற எல்லைக்குள் நிகழ்த்தும் மொழி விளையாட்டுக்களோடு காணாமல் போகாமல் கவிதை, கட்டுரை, புனைவு என அசல் இலக்கியத்துள் நுழைய விரும்பும் ஒரு முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன்.


அவர் எழுத்தைப் போலவே அவரது வலைதளமும் மிக அழகானதாகவும் எளிமையானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது (blogger template தான் எனினும்). பதிவுகளுக்கான புகைப்படத் தேர்வும் அப்படியே. கச்சிதமான, ரசனையான தேர்வுகள்.

கடந்த ஓராண்டாக‌ ஃபேஸ்புக்கிலும், ட்விட்லாங்கரிலும் அவ்வப்போது எழுதி வந்த படைப்புகளைத் தொகுத்திருக்கிறார். சுமார் 35 பதிவுகள். அதில் பெரும்பான்மை கவிதைகள். அவரெழுத்து பற்றி வந்த எதிர்வினைகளையும் சேர்த்திருக்கிறார்.

கர்ப்பவதியாய்
மெல்ல நகர்கிறது பேருந்து
காத்திருக்கிறேன்
எனது ஜனனத்திற்காய்.


என்கிற அவரது குறுங்கவிதை என்னை மிகக் கவர்ந்த ஒன்று. அந்தக் காட்சி மிகத் துல்லியமாய் வந்து கண்ணிலமர்ந்து கொள்கிறது! ஒரு குழந்தையின் பார்வையிலிருந்து ஒரு தினசரி சம்பவத்தைக் காண முயலும் இக்கவிதையும் அழகு.

தலைவாரிவிடும் பெண் குழந்தை
கேட்டுக் கொண்டே இருக்கிறது
'வலிக்குதா வலிக்குதா' என்று
அந்தப் பெண் பொம்மையிடம் -
தன் அம்மாவைப் போலன்றி!


அவரது வலைதளத்தில் இதுவரை வெளியானவற்றுள் எனக்குப் பிடித்த பத்து படைப்புகளை இங்கே பட்டியலிடுகிறேன்:
  1. கிடா - http://www.arattaigirl.com/2014/10/blog-post.html
  2. மகள் - http://www.arattaigirl.com/2014/10/blog-post_3.html
  3. முத்தம் - http://www.arattaigirl.com/2014/10/blog-post_46.html
  4. பருவம் - http://www.arattaigirl.com/2014/10/blog-post_18.html
  5. ஞானம் - http://www.arattaigirl.com/2014/10/blog-post_12.html
  6. மரப்பாச்சி - http://www.arattaigirl.com/2014/10/blog-post_84.html
  7. மோகமுள் - http://www.arattaigirl.com/2014/10/blog-post_74.html
  8. வான்சிறப்பு - http://www.arattaigirl.com/2014/10/blog-post_6.html
  9. உறக்கம் - http://www.arattaigirl.com/2014/10/blog-post_56.html
  10. கண்ணீர் - http://www.arattaigirl.com/2014/10/blog-post_4.html
ஓராண் தன் காதலைப் பேசுவதாய் அமைந்த குறுங்கவிதைகளைக் கொண்ட 'ஸ்வீட்டான்' (http://www.arattaigirl.com/2014/11/1.html) என்ற தொடர் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார் (தொடர் தானே?). அதுவும் கவனிக்கத்தகுந்த முயற்சி.

ஆங்காங்கே கவித்துவத்தின் தீற்றல்கள் தென்பட்டாலும் உணர்ச்சிவசப்படாமல் விமர்சனம் சொன்னால் இவற்றில் கணிசமான படைப்புகள் பலவீனமானவை. இன்னும் சில முறையான திருத்தத்திற்கு உட்பட்டால் இன்னும் நல்ல படைப்புகளாக‌ வந்திருக்க வேண்டியவை. மேலும் சில‌ ட்வீட்டுக்கும் கவிதைக்குமான கலப்புக் குழந்தைகள்.

கவிதைகளின் பாடுபொருள் குறிப்பிட்ட விஷயங்களைச் சுற்றியே இருக்கின்றன. அறியாமையோ அலட்சியமோ மிகச் சாதாரணமாய்த் தவிர்த்திருக்கக்கூடிய‌ எழுத்துப்பிழைகள் தென்படுகின்றன. சில இடங்களின் சொற்களின் தேர்வு பிசிறடிக்கிறது. சில க்ளீஷேவான பயன்பாடுகள் உறுத்துகின்றன. மேலும் சிலவற்றில் கவிதை முடிந்த பிற்பாடும் இரண்டு வரிகள் எழுதுகிறார். கவிதைக்கும் உரைநடைக்கும் குழப்பம் இருக்கிறது. வரிகளை எங்கே உடைப்பது என்பதில் தீவிரவாதம் செய்கிறார். இப்படி நிறைய விடய‌ங்களில் மாற்றமும் முன்னேற்றமும் கட்டாயம் தேவைப்படுகிறது.

கூத்தாடி என்பவர் ஏற்கனவே சொன்னது போல் (http://www.twitlonger.com/show/n_1seb1m4) சௌம்யாவின் ட்வீட்களோடு ஒப்பீடு செய்தால் இன்றைய தேதிக்கு அவரது கவிதைகள் உள்ளிட்ட பிற படைப்புகள் சற்று பின்தங்கியவை தாம்.

இது ஓர் ஆரம்பம் தான். சௌம்யா கடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. அதைக் கடக்கக்கூடிய திராணி - potential - அவருக்கு இருக்கிறது என்பதற்கு அவரது தற்போதைய‌ எழுத்துக்கள் சாட்சி சொல்கின்றன. இடைப்பட்டு தடை நிற்பது ஆர்வமும் அக்கறையும், உழைப்பும், சிரத்தையும் மட்டும் தான். இனி முடிவெடுக்க வேண்டியது அவர் தான்.

இப்போதைக்கு இணையதளம் என்கிற இந்த எளிய‌ ஆரம்பத்துக்கு அழுத்தமான வரவேற்பும் அன்பார்ந்த வாழ்த்துக்களும்!

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்