மரண தண்டனை - விவாதம் தொடர்கிறது

மரண தண்டனை குறித்து ராஜன் குறை எழுப்பியிருந்த கேள்விகளுக்கு நான் சென்ற பதிவில் பதிலளித்திருந்தேன். அது குறித்த த‌ன்னுடைய விரிவான மறுப்பினை "பொறுமையான உரையாடலுக்கு நன்றி" என்ற குறிப்புடன் ராஜ‌ன் குறை ஃபேஸ்புக்கில் ஒரு தனி note-ஆக பதிவு செய்துள்ளார். நம் தள நண்பர்களின் வசதிக்காக அதை இங்கே மறுபதிகிறேன்.

https://www.facebook.com/note.php?&note_id=276747989004372

*******

மரண தண்டனை குறித்து சரவண கார்த்திகேயனுக்கு விரிவான மறுப்பு

by Rajan Kurai Krishnan on Wednesday, September 7, 2011 at 1:22am

என்னுடைய எதிர்வினைக்கான தன்னுடைய விளக்கங்களை சரவணகார்த்திகேயன் (CSK) அவருடைய வலைப்பதிவில் இட்டுள்ளார் http://www.writercsk.com/2011/09/blog-post_06.html. அவர் முதலில் எழுதிய மரண தண்டனை ஆதரவுக் குறிப்புகளைவிட ஆபத்தான புரிதல்கள் இதில் காணப்படுவதால் அவருக்கு மீண்டும் ஒரு விரிவான மறுப்பை எழுத விரும்புகிறேன். இந்தக் குறிப்புகள் மரண தண்டனை குறித்து விவாதத்தில் ஈடுபட்டு வரும் பிற நண்பர்களுக்கும் உதவியாக இருக்கலாம் என்று நம்புகிறேன்.

தவறான புரிதல் ஒன்று: மரண தண்டனை கொலைகளை குறைத்துள்ளது

CSK தன்னுடைய முதல் குறிப்பில் மரண தண்டனை ஒரு deterrent என்ற வழமையான வாதத்தை வைத்தார். நான் ஒரு நூற்றாண்டுக்காலமாவது நவீன இந்தியாவில் நீதிமன்றங்கள் மரண தண்டனை வழங்கி வருகின்றன. அதனால் (கொலைக்) குற்றங்கள் நடப்பது நிற்கவில்லையே என்று எழுதியிருந்தேன். குற்றம் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தாலும் மரண தண்டனை என்பது பெரும்பாலும் உயிர்சேதம் நடந்தால் மட்டுமே வழங்கப்படுவதால் கொலைக்குற்றம் என்றே இனி குறிப்பிடலாம். CSK இதற்கு வழமையான ஒரு மாற்று விளக்கத்தை தந்துள்ளார். அது என்னவென்றால் “ஆமாம் இப்போதும் கொலைகள் நடக்கத்தான் செய்கின்றன. மரண தண்டனை இருப்பதால் குறைவாக நடக்கின்றன. இல்லாவிட்டால் இன்னம் அதிகமாக நடக்கும்” என்று சொல்லியுள்ளார். இதில் உள்ள தர்க்க ரீதியான பிழை என்னவென்று பார்ப்போம்.

ஒரு செயல் இயற்கையின் பொதுவான கதியில் நடக்கிறதா அல்லது இயற்கையின் பிறழ்வான தருணத்தில் நடக்கிறதா என்பதைப் பொறுத்தே அதனை மட்டுப்படுத்துவதற்கான மனித யத்தனத்தை பரிசீலிக்கவேண்டும். இதை இரண்டு உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.

உதாரணம் ஒன்று: குளிர்காற்று உடம்பில் பட்டால் குளிரும். ஒருவர் அறையின் ஜன்னலை சாத்துகிறார். இன்னொருவர் கம்பளியைப் போர்த்திக்கொள்கிறார். அப்போதும் குளிரத்தான் செய்கிறது. உடனே மற்றவர் “எப்படியும் குளிரத்தான் செய்கிறது. ஜன்னலை அடைப்பதோ, கம்பளியைப் போர்த்திக்கொள்வதோ பயனற்றது. சட்டையில்லாமல் மாடியில் போய் நிற்கலாம்” என்று சொன்னால் அது தர்க்கரீதியாக

பிழையானது. ஏனெனில் மூடிய ஜன்னலும், கம்பளியும் குளிரை குறைத்துள்ளன.

உதாரணம் இரண்டு: ஒருவருக்கு கடுமையான வயிற்றுவலி. மருத்துவரிடம் சென்று வலி நீங்க மருந்துகளை வாங்கி சாப்பிட்டார். ஒரு வாரமாகியும் வலி குறையவில்லை. மருத்தவரிடம் சென்று “ஐயா, மருந்து பலன் தரவில்லை. வேறு ஏதாவது மருந்து கொடுங்கள்” என்று சொல்கிறார். மருத்துவர் “இந்த மருந்தை தின்றதனால்தான் வலி இந்தமட்டோடு இருக்கிறது. இல்லாவிட்டால் இன்னமும் அதிகமாயிருக்கும்” என்று சொல்கிறார். இது தர்க்க ரீதியாக பிழையானது. மருந்து என்பது வலியைக் குறைத்திருக்க வேண்டும். இல்லாதபோது அதை தொடர்ந்து உட்கொள்வதில் பயனில்லை. ( நான் இங்கே அலோபதி உதாரணத்தைத்தான் தருகிறேன். கருத்தாக்க அளவில் எடுத்துக் கொள்ளவும்).

இந்த இரண்டு உதாரணங்களில் தூக்குதண்டனை/ கொலைக்குற்றம் எதனுடன் ஒப்பிடத்தகுந்தது? சமூக வாழ்வு என்பதை ஏற்றுக்கொள்ளும் உயிரினம் எதுவும் தனிநபர் கொலைகளை ஏற்க முடியாது. மனிதனுக்கு மட்டுமே அந்தப் பிரச்சினை. பிற உயிரினங்கள் தங்கள் இனத்திற்குள்ளேயே கொல்வது இல்லை என்றுதான் நினைக்கிறேன். எனவே கொலை என்பது குளிர்காற்று உடம்பில் பட்டால் குளிர்வது போன்று இயற்கைசார்ந்த நிகழ்வு இல்லை. அது ஒரு நோய்க்கூறான தருணம். பண்பாடும், நாகரீகமும் வளர, வளர கொலைக்கான உந்துதல்கள் குறையவேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறில்லை. எனவே ஒரு மானுடப் பிறழ்வான கொலைகாரத்தானம் என்பது மரணதண்டனை என்ற மருந்தினால் குணமடைந்துள்ளதா என்று கேட்டால், இல்லை இந்த மருந்து இல்லாவிட்டால் நோய் இன்னம் அதிகமாயிருக்கும் என்று பதில் சொல்வது பொருந்தாது. தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொல்வதைப் படிக்கிறோம். இதில் ஏன் மரண தண்டனை பயம் வேலை செய்யவில்லை? ஏனெனில், கொலை செய்யும் மனநிலை பிறழ்வானது. அந்த நிலையில் அது மரண தண்டனையின் சாத்தியத்தையெல்லாம் யோசித்துக் கொண்டிருக்காது. அரசியல் இலட்சியம், தனிமனித வன்மம் போன்றவற்றிற்காக கொல்பவர்கள் மரணத்தை அவர்களே எதிர்கொள்ளத் துணிந்தவர்கள்தான். மனித வெடிகுண்டுகள் போல. இதில் எப்படி அச்சம் என்பது செயல்படும்? மரண தண்டனை ஒரு deterrent என்ற வாதம் தவறானது என்பதை கொஞ்சம் ஆழமாக யோசித்தால் புரிந்துகொள்ள முடியும்.

தவறான புரிதல் இரண்டு: மரண தண்டனையும் பிற கொலைகளும் ஒரே வகையிலானவை

மனிதனை மனிதன் கொல்லக்கூடாது என்றால் ராணுவத்தை முதலில் ஒழிக்கவேண்டும் என்கிறார் CSK. எனக்கு ராணுவம், போலீஸ் எல்லாவற்றையும் ஒழிப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அதெல்லாம் நடக்கும் வரை மரண தண்டனையை அனுமதிக்கச் சொன்னால் முடியாது. ஏனெனில் மரண தண்டனை என்பது பிற கொலைகளைப் போன்றதல்ல. அது “மனிதனை” “மனிதன்” கொல்வதுமல்ல. அரசு என்ற, சட்டம் என்ற அருவ சக்தி மனிதனை கொல்வதுதான் மரண தண்டனை.

ராணுவம் போரில் எதிரிகளைக் கொல்கிறது. ராணுவத்தினரும் போரில் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் உயிரை பணயம் வைத்துதான் எதிரிகளை கொல்கிறார்கள். ஒண்டிக்கு ஓண்டி சண்டை போடுபவர்கள் (ஐரோப்பாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை duel பிரசித்தமானது) இருவரில் யாரும் மரணமடையலாம் என்ற நிலையில் மோதுகிறார்கள். ஆதிவாசிக் குழுக்களில் ஒரு குழுவினைச் சேர்ந்தவரை இன்னொரு குழு உறுப்பினர் கொன்றுவிட்டால் இவர்கள் பதிலுக்கு ரத்தத்திற்கு ரத்தம் கேட்பார்கள். எதிர்க்குழுவினர் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அங்கும்கூட பாதிக்கப்பட்டவர்கள்தான் அந்த நஷ்ட ஈட்டைக் கோருவார்கள்.

மரணதண்டனை அப்படி நிகழ்வதில்லை. பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் கூட இங்கு முக்கியமில்லை. சட்டம் குற்றவாளி எனத் தீர்மானித்த பிறகு, குற்றவாளிக்கு சம்பந்தமேயில்லாத மனிதர்களெல்லாம் சேர்ந்து அவனை நீதியின் பெயரால் கொல்கிறார்கள். எந்தக் கொலையை குற்றம் என்று சட்டம் சொல்கிறதோ அதே குற்றத்தை அது செய்கிறது. அதுவும் அந்த சட்டத்திற்கு கட்டுப்பட்ட குடிமக்களாகிய நம் பெயரால் செய்கிறது.

எனவேதான் மரண தண்டனை பிற கொலைகளைவிட கொடூரமானது. முழுக்க, முழுக்க பகுத்தறிவின் பெயரால், நீதியின் பெயரால் எந்த உணர்ச்சியுமின்றி உறைந்துபோன தர்க்கத்தினால் கொலை நிகழ்கிறது. ஒருவன் வித, விதமாக பத்துபேரைக் கொல்லலாம். அது அவனுடைய உளவியல் பிரச்சினை. ஆனால் அவனை சட்டம் தூக்கிலிடுவது அவன் செய்த கொலைகளையெல்லாம் விட கொடூரமானது.

இந்த தத்துவப் பிரச்சினையை CSK புரிந்துகொள்ளாததால்தான் “அவர் நாகரீகம் அடைந்ததாக காட்டிக்கொள்வது” என்கிறார். பிரச்சினை என்னவென்றால நாகரீகம் என்பதன் வரையறை எப்படி வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் ஒரு ஒட்டமொத்த சமூகம் நீதியின் பெயரால் கொல்வது நாகரீகமாக இருக்க முடியாது. “காட்டிக்கொள்வதற்கல்ல”; நாகரீகத்தை சாத்தியமாக்கவே மரண தண்டனையை எதிர்க்க வேண்டும்.

பாதுகாப்பாக இருப்பது முக்கியம் என்கிறார் CSK. மரண தண்டனையை நீக்கியவுடன் எல்லோரும் கொலைவெறி பிடித்து அலைவார்கள் என்று நினைக்கிறார் போலிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருக்குறள் எழுதிய சமூகம், பெளத்த சங்கங்களை உருவாக்கிய சமூகம், ஜைனர்களின் கொல்லாமை நெறியை உருவாக்கிய சமூகம் எந்த நீதிமன்றத்தையும், மரண தண்டனையையும் நம்பி வாழ்ந்தது? அப்போதெல்லாம் அரசர்களோ, பிறரோ குற்றம் செய்தவரை தண்டிப்பதற்காக கொன்றிருக்கலாம் (பசுவின் கன்றை கொன்ற தன் மகனையே தேரை ஏற்றி கொன்றான் மனுநீதிச் சோழன் என்பது கதை). அதெல்லாம் நவீன நீதிமன்றத்தின் அருவமான சட்டம் அல்ல. அரசன் என்ற மனிதனின் தீர்மானம். அவனது வீரம், காருண்யம் சார்ந்தது. அது மனிதனை மனிதன் கொல்வது. நவீன அரசு என்பது மனிதன் கிடையாது, அது ஒரு அருவம். மீண்டும் சொல்கிறேன். தூக்கு தண்டனை என்பது மனிதனை மனிதன் கொல்வதல்லை. மனிதனை அருவமான நீதி, சட்டம் கொல்வது. அதனால்தான் வெறெந்த கொலையையும் விட அது அருவருப்பானது.

தவறான புரிதல் மூன்று: கண்காணிப்பு குற்றத்தை தடுக்கிறது

மக்கள்தொகை அதிகமாக இருந்தால் கண்காணிக்க முடியாது. போலீஸ், மக்கள் விகிதாசாரம் குறைந்தால் குற்றம் அதிகமாகும் என்று நினைக்கிறார் CSK. நியூயார்க் நகரில் நான் அறிந்த பகுதியில் வீதிகளிலெல்லாம் வீடியோ கேமராக்கள் இருக்கும். தொடர்ந்து போலீஸ் ரோந்து வரும். ஆனால் வாரம் ஒருமுறை mugging என்ற வழிப்பறியும், சில சமயம் கத்திக்குத்தும் நடக்கும். காமிராக்களில் குற்றவாளிகள் பதிவாகத்தான் செய்வார்கள். பிரச்சினையே ஒருவன் குற்றவாளியாக ஜெயிலுக்கு சென்றுவந்த பின், குற்றமே அவன் வாழ்க்கையாக மாற நேர்வதுதான். ஏற்றத்தாழ்வு கடுமையாக உள்ள சமூகத்தில் இருப்பவனிடமிருந்து இல்லாதவன் பறிப்பதை எத்தனை காமிராக்கள் வைத்தாலும், எத்தனை போலீஸ் சுற்றி வந்தாலும் தடுத்துவிட முடியுமா? CSK தயவுசெய்து குற்றத்தின் மூலங்களை யோசிக்கவேண்டும். “திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவன் திருந்தவேண்டுமென்றால் திருடுவதற்கான தேவை நீங்கவேண்டும். கொலை என்பது சில சமயம் திருட்டின் தொடர்ச்சியாக இருந்தாலும், பல சமயங்களில் வேறு விநோதமான காரணங்களால் நடக்கிறது. அமெரிக்காவில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மனம் பிறழ்ந்த மாணவர்கள் கூட்டம் கூட்டமாக பிறரைக் கொல்வதைப் படித்திருப்பீர்கள். நார்வேயில் ஒரு முப்பத்திரண்டு வயது இளைஞன் ப்ரெவிக் வலதுசாரி அரசியல் கருத்துக்களுக்காக சோஷலிஸ்ட் இளைஞர் முகாமில் புகுந்து சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளியதை படித்திருப்பீர்கள். இதெல்லாம் மக்கள் தொகை அதிகமாகி கண்காணிப்பு சாத்தியமில்லாத நாடுகளில் நடப்பதில்லை. CSK தன் அச்சங்களை சுயபரிசீலனை செய்துகொள்ள விட்டால் அவர் ப்ரெவிக்குகளை உருவாக்கிவிட வாய்ப்பிருக்கிறது. மக்களை நேசிக்கவும், அவர்களின் ஆழ்ந்த பண்பாட்டு நெறியை உணரவும் செய்யாவிட்டால் ஜான் அப்ரஹாமின் செரியச்சன் போல் பயப்பிராந்தியில்தான் வாழவேண்டும். ஒரு எழுத்தாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர் என் வாதங்களை ஏற்காவிட்டாலும் தொடர்ந்து இது குறித்து சிந்திக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

*******

பிறிதொரு சமயம் நேரம் வாய்க்கும் போது ராஜன் குறை அவர்களுக்கு விரித்துப் பதிலளிக்க விருப்பம். பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்