அயலகத் தமிழ்ச் சகோதரர்களுக்கு! ஐயன்மீர்! ஈழத்திலுள்ள உங்கள் சகோதரத் தமிழர்களுக்காக நீங்கள் துடிக்கும் துடிப்பும், வெறும் இனஅபிமானத்தால் குறுகியிராத உங்கள் இதயம் மானுட அவலம் கண்டே விம்மிக் கண்ணீர் உகுப்பதைக் காட்ட உங்களுக்குள் நடக்கும் போட்டா போட்டியும் கண்டு நெகிழ்கிறேன். நான் குறிப்பிடுவது அரசியல்வாதிகளை அல்ல. கவிதை எழுதியும், கட்டுரைகளில் இனவுணர்வாய்க் கரைந்துருகியும், களச்செயற்பாட்டின் தேவையுணர்ந்து ஒன்றுகூடிப் பொங்கியும் கவலையை வெளியிட்டுக் கொண்டிருக்கும் கலைஞர்கள், இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்களைச் சொல்கிறேன். இந்த நாட்டில் தமிழ்மக்கள் மீண்டும் ஒரு பேரழிவுக்குச் சென்றுவிடாதிருக்க நீங்களும்தான் எங்கள் நம்பிக்கை. போரில் வெல்வதை விட போரைத் தவிர்ப்பதே மானுட அவலத்தை நிறுத்தும் வழி என்பதை உங்களுக்கு யாரும் சொல்லிக்காட்ட வேண்டியதில்லை. உங்கள் சகோதரத் தமிழர்கள் படும் கஷ்டங்கள் குறித்து நீங்கள் பரிதவிப்பதும், துயரின் எல்லையில் எதிரிகளைப் பஸ்மமாக்கிவிட முடியாதா என்று ஆவேசமுறுவதும், வரலாற்றின் தொடர் குரூரம் குறித்து வருந்துவதும், ஈழச் சகோதரர்களுக்கு ஏதாவது செய்யமுடியாதா என்று ஏங்குவதும், த...