வானும் மண்ணும்

சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது பற்றி ஏதும் எழுதக்கூடாது என்றுதான் இருந்தேன். ஓர் இளம் எழுத்தாள நண்பர் அது குறித்து நான் ஏதும் சொல்லவில்லையே எனக் கேட்ட போது "சங்கடம் தவிர்க்கிறேன்" என்றேன். ஆனால் அது கள்ள மௌனமாகத் தொனிக்கும் சங்கடமும் இருப்பதாக மறுயோசனையில் தோன்றிய‌தால் இக்குறிப்பினை எழுதப் புகுந்தேன். தவிர, என் நோக்கைப் புரிந்து கொள்ளாமல் போகுமளவு இருவரும் இருக்க மாட்டர் என்பதால் சங்கடத்துக்கும் இடமில்லை என்றே தோன்றுகிறது.

முதலில் சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் பற்றிய என் ஒட்டுமொத்த மதிப்பீடு சுருக்கமாக:

எனக்கு இந்தப் பிறழ்வெழுத்து அல்லது Transgressive Writing பற்றி சர்வதேசிய அறிமுகம் ஏதும் கிடையாது. நான் அதை 'மீறல் எழுத்து' என்று வரையறை செய்வேன். வழமையான சமூக விழுமிய‌ங்களை உடைத்து வேறொன்றை முன்வைக்கும் எழுத்து. அதற்கு அதிர்ச்சி மதிப்பீடு உண்டு, ஆனால் அது நோக்கம் கிடையாது. பேசாப் பொருளைப் பேசத் துணிதல். பொதுவாக அது பாலியலாகவே இருக்கும். தமிழில் இதற்கு முன்னோடிகள் ஜி.நாகராஜன் மற்றும் தஞ்சை பிரகாஷ். சாரு அதிலேயே non-liner எழுத்தை முன்வைத்தார். அவர் தன் புனைவுகளில் பேசிய பாலியலின் அரசியல் தனித்துவமான ஒன்று. அவ்வகையில்தான் ராஸ லீலா அவரது முக்கியமான படைப்பு. இதே திசையிலான‌ ஸீரோ டிகிரி, தேகம், காமரூபக் கதைகள் அவற்றை சுமாரான நாவல்கள் என்றே மதிப்பிடுவேன். எக்ஸைல் (முதல் வடிவம்), எக்ஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவல்கள் எனக்குப் பிடிக்கவில்லை. நேனோ தொகுப்பில் சில நல்ல சிறுகதைகள் உண்டு. இந்த மீறல் எழுத்தில் அவருக்குப் பின் லக்‌ஷ்மி சரவண குமார், கணேசகுமாரன், அராத்து என அவரது பாதிப்பு கொண்ட எழுத்தாளர்கள் சிலர் உண்டு.

அபுனைவில் அவரது கட்டுரைகள் பெரும்பாலும் வெகுஜனப் பத்திரிக்கைகளின் பத்தி எழுத்து வகைமையைச் சார்ந்தவை. பூச்சுகளற்ற நேரடி உரையாடல் தொனியைக் கொண்ட நடை, நிறைய‌ மெனக்கிடல்களற்ற சுவாரஸ்யமான உள்ளடக்கம் ஆகியன இவற்றின் சாரம். அதில் அவர் முக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கிறார். உதாரணம் கோணல் பக்கங்கள் மூன்று தொகுதிகளும். அது வெகுஜன எழுத்துக்கும் தீவிர எழுத்துக்கும் இடையே நிற்கும் ஒரு விஷயம். அவரது பெரும்பான்மையான வாசகர்கள் அவரது பத்தி எழுத்துக்கள் வழியே தொடங்கி இருப்பார்கள். அவர் சர்வதேச எழுத்தாளர்களையும், சினிமாக்களையும், இசையையும் அறிமுகம் செய்து எழுதிய நூல்கள் எதையும் நான் வாசித்தவன் அல்லன் - அந்த விஷயங்களில் ஆர்வம் இல்லாதவன் என்பதால்.

இது வரை சொன்னவை ஒரு வாசகனாக. நான் ஓர் எழுத்தாளன் என்ற அடிப்படையிலும் அவருடன் அணுக்கம் உண்டு. என் ஆரம்ப கால உரைநடையில் இருவரின் வலுவான தாக்கம் இருந்தது - ஒருவர் சுஜாதா; இன்னொருவர் சாரு. சகா - சில குறிப்புகள் என்ற தொடரை என் வலைதளத்தில் எழுத அவரது காமரூபக் கதைகளே உந்துதல். அதன் நிமித்தம் அக்கதை இடம்பெற்ற என் 'மியாவ்' சிறுகதைத் தொகுப்பை அவருக்கே சமர்ப்பணம் செய்தேன். என் முதல் சிறுகதைத் தொகுதி 'இறுதி இரவு' வந்த போது அவர் தின மலருக்கு அளித்த நேர்காணலில் அதைச் சிபாரிசு செய்திருந்தார். மீறல் எழுத்தை முன்வைத்தவர், பாலியலின் அரசியலைப் பேசியவர் என்ற அடிப்படையில் 'பரத்தை கூற்று' என்ற‌ என் முதல் கவிதை நூலை அவரைக் கொண்டு வெளியிட்டேன். அவரது தூண்டுதலில் தான் என் முதல் மொழிபெயர்ப்பைச் செய்தேன் (பால் ஸக்கரியாவின் நேர்காணல் ஒன்று). அந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து கடிதங்கள் எழுதி அவரது தளத்தில் விவாதித்திருக்கிறேன். இதெல்லாம் பத்து, பதினைந்து ஆண்டுகள் முன். அப்படிப் பல வகையில் என் அன்பிற்கும் நன்றிக்கும் உரியவர் சாரு.

ஆனால் ஒட்டுமொத்தமாக யோசித்தால் அவருக்கு எதிர்முனையில் நின்று பேசும் முரண் சூழலே பெரும்பாலும் வாய்த்திருக்கிறது. இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம் எனப் பல தளங்ளிலும் அவரது கருத்துக்கள் பலவற்றோடு ஒத்துப் போக என்னால் முடிந்ததில்லை. அவற்றில் சில உணர்ச்சிவசப்பட்ட‌, தடாலடிக் கருத்துக்கள் என்றும் கருதி வந்திருக்கிறேன். அதை அவ்வப்போது கேலியாகவும் சீரியஸாகவும் பதிவு செய்திருக்கிறேன். அதற்காக அவர் என்னுடன் பிணக்குக் கொண்டதுண்டு. நான் தனிப்பட்ட காழ்ப்பில் எழுதுகிறேன் என்று ஓரிரு முறை பிழைபடப் புரிந்து கொண்டதும் உண்டு. பிறகு சரியாகி இருக்கிறது. இன்று நல்ல சினேகத்தில்தான் இருக்கிறோம்.

ஆக, என் வாசிப்பு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், அல்லாதவைகளை ஒதுக்கிப் பார்த்தாலும் சாரு நிவேதிதாவின் இலக்கியப் பங்களிப்பு தமிழ்ச் சூழலில் மதிக்கத்தக்கதே. ஏறத்தாழ நாற்பதாண்டுகளாகத் தொடர்ந்து இடைவெளியின்றி எழுதி வரும் சாரு நிவேதிதாவுக்கு ஓர் இலக்கிய விருது தரக்கூடாது என்று சொல்ல முடியாது. தமிழில் சாஹித்ய அகாதமி வாங்கிய எத்தனையோ பேரை விட சாரு நிவேதிதா அவ்விருதுக்கு நிச்சயம் தகுதி பெற்றவரே. ஆனால் விஷ்ணுபுரம் விருது என்று வரும் போதுதான் ஒரு நெருடல் வருகிறது. இதன் பொருள் விஷ்ணுபுரம் விருது சாஹித்ய அகாதமியை விட உசத்தி என்பதோ சாரு அதற்குத் தகுதியற்றவர் என்பதோ அல்ல. பிறகு?

சொல்கிறேன்.

*

விஷ்ணுபுரம் விருது என் புரிதலில் முழுக்க முழுக்க ஜெயமோகனின் தனிப்பட்ட ரசனையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது - purely at his discretion. அங்கே ஒரு நடுவர் குழு இருக்கிறது என்பது போலோ பலரின் கருத்து கோரப்பட்டு இறுதி முடிவு collaborative-ஆக‌ எடுக்கப்படுகிறது என்பதோ போலோ எங்கும் முன்வைக்கப் பட்டதில்லை. அதிகபட்சம் ஆரம்பத்தில் யாருக்குக் கொடுக்கலாம் என்ற ஒரு rough survey முக்கிய உள்வட்டத்தில் இருக்கலாம், பிறகு இறுதி முடிவை ஜெயமோகன் எடுத்த பின் மறுபடி முக்கிய அங்கத்தினரிடம் மேலோட்டமாக pulse பார்க்கும் நோக்கில் கருத்து கேட்கப்படலாம். இதுதான் விஷ்ணுபுரம் விருது பற்றிய என் பிம்பம். ஜெயமோகன் மிகப் பரந்துபட்ட வாசிப்பு உடையவர் என்பதால் இந்தச் சர்வாதிகாரம் பற்றி எனக்கு விமர்சனம் இல்லை. இன்னொரு வகையில் நடுவர் குழு ஒன்று வைத்து சாஹித்ய அகாதமி உள்ளிட்ட பல விருதுகள் செய்யும் அக்கப்போர்களைப் பார்க்கும் போது இது பிடித்தும் இருக்கிறது.

ஆனால் இம்முறை சாருவைத் தேர்ந்தெடுத்ததில் ஜெயமோகனின் அந்தத் தனிப்பட்ட ரசனை கறாராகக் கடைபிடிக்கப் பட்டிருக்கிறதா என்பதே இம்முறை எழுந்திருக்கும் விமர்சனங்களின் மையப்புள்ளி. விருது பற்றி ஜெயமோகன் எழுதியிருக்கும் குறிப்பில் இருக்கும் இந்த வரி உண்மையாகவே என்னவென எனக்குப் புரியவில்லை: "தன் வரலாற்றையும் தன்னையும் புனைந்து புனைந்து அழித்துக்கொள்ளும் இவ்வகை எழுத்து தமிழுக்கு அனைத்துவகையிலும் புதியது."

ஜெயமோகன் சாருவைப் பற்றி முன்பு என்ன எழுதி இருக்கிறார்? கீழே இருப்பது 2008ல் ஜெயமோகன் ஒரு வாசகர் கடிதத்துக்கு எழுதிய பதிலில் இருந்து (https://www.jeyamohan.in/230):

சாருநிவேதிதா ஒரு சுவாரஸியமான பத்தி எழுத்தாளர் [காலம்னிஸ்ட்] மட்டுமே. பத்தி எழுத்தாளர்கள் எப்போதும் பெருவாரியான வாசகர்களின் பொதுவான ரசனைக்காக எழுதும் திறன் கொண்டவர்கள். அவர்களுடைய மனஅரிப்புகளையும், பாசாங்குகளையும் நோக்கிப் பேசுபவர்கள். பத்தி எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் வருவதே அவர்கள் உண்மைகளை அஞ்சாமல் சொல்லும்போது மட்டும்தான். குல்தீப் நய்யார் என் முன்னுதாரணம். ஆனால் சாரு நிவேதிதா நேர்ப்பேச்சில் கூட தொண்ணூறு சதவீதம் பொய்தான் பேசுவார் என இருபது வருடங்களாக அவரை அறிந்த நான் கண்டிருக்கிறேன். உண்மையில் விதவிதமான பாசாங்குகள் வழியாக சென்றபடியே இருக்கும் அவரால் உண்மையை அவரே நினைத்தால் கூட பேச முடியாது.

சாரு நிவேதிதா அடிப்படையில் கற்பனையோ நுண்ணோக்கும் திறனோ இல்லாத மிக மேலோட்டமான எழுத்தாளர். அவரிடமிருக்கும் கற்பனை என்பது தன்னைப்பற்றி அவர் சொல்லும் அபத்தமான பொய்களில் மட்டுமே. அதேசமயம் ஒருபோதும் அவரை முற்றாக புறக்கணிக்க இயலாது. அதற்குக் காரணம் அவரது மொழி சார் நுண்ணுணர்வு. அவரது நடை ஒரு குறிப்பிட்ட வகையில் தமிழில் சுஜாதாவின் நடைக்குப்பின் முக்கியமான ஒன்று. ஆழத்தை அது அடைய இயலாது, ஆனால் மேல்தளத்தில் சுழிப்புகளும், பாய்ச்சல்களுமாக பலவிதமான தோற்றங்களைக் காட்டுகிறது. இது ஒரு முக்கியமான பின் நவீனத்துவ இயல்பு.

சாரு நிவேதிதாவின் இலக்கிய ரசனை, வாசிப்பு, இசை ரசனை,திரை ரசனை எல்லாவற்றின் மேலும் எனக்கு ஆழமான அவநம்பிக்கை உண்டு. அதற்குக் காரணம் காலம்தோறும் அவர் எழுதிவரும் கட்டுரைகளேதான். இலக்கியத்தின் அடிப்படைகளான பேரிலக்கியங்களில் வாசிப்போ, எளிய அறிமுகமோ இருப்பதை அவர் வெளிப்படுத்தியதில்லை. அவர் வாசிக்கும் படைப்புகள் பெரும்பாலும் ‘பரபரப்பு’ நூல்கள். அவற்றில்கூட அவர் நுண்மைகளைத் தொடுவதேயில்லை. பெருவெட்டாகச் சொல்லப்பட்ட விஷயங்கள், அதுவும் நேரடியான வன்முறை மற்றும் காமச் சித்தரிப்புகளும் மிகையுணர்ச்சிகளும் மட்டுமே , அவர் கண்களுக்குப் படுகின்றன.அவ்வளவுதான் அவரது எல்லையே.

கோட்பாடு சார்ந்து அவர் எதுசொன்னாலும் அது பிழையான செவிவழிப்புரிதலாகவே இருக்கும். சென்ற காலங்களில் பின் நவீனத்துவம், அமைப்பியல் பற்றி அவர் சொன்னவற்றை நினைத்து பிற்பாடு நானே படிக்க ஆரம்பித்தபோது வாய்விட்டுச் சிரித்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து எந்த சீரிய வாசகரும் அவரை ஓர் எல்லைக்குமேல் பொருட்படுத்துவதில்லை. மேலோட்டமான வாசகர்கள் சில காலம்வரை அவரது சரளமான எழுத்து நடையையும், நக்கல்களையும் ரசிப்பார்கள்.

சாரு நிவேதிதா எழுதும் வடிவம் அவர் தெரிவு செய்து கொண்ட பின்நவீனத்துவ வடிவம் அல்ல. அவரால் முடிந்ததே அதுதான். கற்பனை இல்லாத எழுத்தாளர் என்ற வகையில் அவர் கண்டது கேட்டது ஆகியவற்றை மட்டுமே அவரால் எழுத முடியும். அதுவும் ‘அப்படியே’. பெயர்களைக்கூட மூலப்பெயருக்கு நெருக்கமாக அமைத்து கிசுகிசுத்தன்மையை உருவாக்குவது அவரது வழக்கம். உண்மையான வாழ்க்கையை எழுதும்போது அதில் ஒருமையை, மையத்தை கொண்டுவருவது கஷ்டம்– காரணம் வாழ்க்கைக்கு அப்படி ஒரு ஒருமையும் மையமும் இல்லை. ஆகவேதான் சாரு நிவேதிதாவின் ஆக்கங்கள் சிதறுண்டிருக்கின்றன.

பின்நவீனத்துவ வடிவங்களில் மூலநூல்களை மறு ஆக்கம்செய்தல், போலிசெய்தல், எழுதுவதைப் பற்றிய எழுத்து, தனக்குள் செயல்பட்டு தன்னை கழித்துக் கொள்ளுதல், எல்லா தரப்பையும் ஒலிக்க வைத்து மாபெரும் விவாதத்தன்மையை உருவாக்குதல், தர்க்க ஒழுங்கை மொழியின் அராஜகம் மூலம் மீறி உன்னதத்தை [sublime] தொடுதல், வரலாற்றுக்குச் சமானமான புனைவுவரலாற்றை உருவாக்குதல் போன்ற முக்கியச் சாத்தியங்கள் எதையும் சாரு நிவேதிதா தொடக்கூட முடியாது. ஏன் அவர் அவற்றை வாசித்துக்கூட உள்வாங்கிக் கொள்ள முடியாது. இன்றுவரை அதற்கான தடையத்தை அவர் வெளிப்படுத்தியதில்லை

அதேசமயம் உண்மையான வாழ்க்கையை எழுதியிருக்கிறார் என்ற மதிப்பு அவற்றுக்கு உண்டா என்றால் அதுவும் இல்லை. காரணம் நடுநிலைமையில் நின்று தன் வாழ்க்கைச்சூழலை எழுதுவதும், தன்னையே விமரிசனக் கண்ணோட்டத்துடன் நோக்குவதும் எளிதல்ல. சாதாரணமாக நாம் நம் வாழ்க்கையைப்பற்றி பேசும்போதுகூட நம் விருப்பக் கற்பனைகள், நமது காழ்ப்புகள், தன்னிரக்கங்கள், தற்பெருமைகள் ஆகியவை நமது சித்தரிப்பில் கலந்து வரும். அதை வெல்வது பெரும் கலைத்திறனோ, அழுத்தமான நேர்மையோ உள்ளவர்களுக்கே சாத்தியம். சாரு நிவேதிதாவின் நாவல்கள் அவரது மனமாச்சரியங்களின், பாவனைகளின் வெளிப்பாடுகள் மட்டுமே. சாரு நிவேதிதா எழுதுவது பெரும்பாலும் அவரது காழ்ப்புகளால் திரிக்கப்பட்ட கிசிகிசுக்களை.

ஸீரோ டிகிரி அவரால் எழுதப்படச் சாத்தியமான இலக்கியம். அதன் நடையில் உள்ள கிண்டலும் விளையாட்டுகளும் பல்வேறு வகையான கிசுகிசுக்களும் கலந்து அதை ஒரு குறிப்பிடத்தக்க ஆக்கமாக மாற்றுகின்றன. தமிழ்ச் சூழலுக்கு அது ஒரு முக்கியமான ஆக்கம் என்று எண்ணுகிறேன். ஆனால் அவ்வளவுதான் அவர். அவரது நடையின் சரளம் நீண்டகாலம் எழுதுவதனால் மட்டுமே வருவது. அவர் தமிழின் பிரபல ஊடகங்களின் மொழிச்செயல்பாட்டை மிக ஊன்றிக் கவனித்து வருகிறார். அவற்றின் மீது ஆழமான அங்கத நோக்கு அவருக்கு உள்ளது. எழுதும்போது மொழி சார்ந்த நுண்ணுணர்வு விழித்திருப்பதன் சாத்தியங்களை ஸீரோ டிகிரியிலும், ராஸலீலாவின் முதல் பகுதியிலும் காணலாம்.
 

இந்தக் கடுமையான விமர்சனத்தை ஜெயமோகன் எழுதி பதினான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இதில் அவர் அந்தத் தருணத்தில் கொண்டிருந்த உணர்ச்சிகரத்தை benefit of doubt-ல் கழித்து விட்டுப் பார்த்தாலும் சாருவின் எழுத்துக்கள் மீது ஜெயமோகன் கொண்டிருந்த அபிப்பிராயம் துலங்குகிறது. இடைப்பட்ட காலத்தில் சாருவும் ஜெயமோகனும் நட்பாகி இலக்கிய மேடைக‌ள் பகிர்ந்து கொண்ட நிகழ்வுகளும் உண்டுதான். ஆனால் அதனால் எல்லாம் இலக்கிய மதிப்பீடு மாறி விடாது என்ற எளிய விஷயத்தை நான் மட்டுமல்ல ஜெயமோகனும் சாருவும் கூட ஒப்புக் கொள்வர்.

ஆக, ஜெயமோகன் அந்த எதிர்மறை விமர்சனப் புள்ளியிருந்து தன் தனிப்பட்ட ரசனை சார்ந்து வழங்கும் ஓர் ஆண்டு விருதுக்கு சாருவின் பெயரைத் தேர்ந்தெடுக்கும் தலைகீழ் மாற்றம் நிகழ இவ்விரண்டில் ஏதாவது ஒன்று இடைப்பட்ட காலத்தில் நட‌ந்திருக்க வேண்டும்: 1) ஜெயமோகனின் இலக்கிய விமர்சனப் பார்வை மாறி இருக்கலாம். 2) ஜெயமோகன் தன் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்வது போல் சாரு நிவேதிதா ஏதாவது இலக்கிய பிரதிகளை எழுதி இருக்கலாம். ஆனால் இந்த இரண்டுமே நடந்தது போல் தெரியவில்லை. இடைப்பட்ட காலகட்டத்தில் சாரு எழுதிய எந்த நூல்கள் குறித்தும் ஜெயமோகன் பாராட்டி எழுதவில்லை என்பதைக் கொண்டே இதைச் சொல்கிறேன்.

ஆனால் ஜெயமோகன் வரும் நாட்களில் இந்த விமர்சனங்களை எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்து விடுமளவு சாருவின் இலக்கியப் பங்களிப்புகள் பற்றி சாருவே அயர்ந்து போகுமளவு விரிவாகத் தன் கருத்துக்களைப் பல தொடர் கட்டுரைகள் வாயலாக‌ முன்வைத்து விட முடியும். அவர் அதற்கான வாதத் திறன்கள் மிக்கவரே. அல்லது விஷ்ணுபுரம் வட்ட நண்பர்களும் கூட செய்யலாம்.

இப்போதே "என் தனிப்பட்ட எதிர்மறை கருத்து தாண்டி நாம் எல்லோரும் சாருவை முழுமையாக வாசித்து மறுபடி மதிப்பிட உண்டாக்கித் தரப்பட்டிருக்கும் வாய்ப்பு" என்ற ரீதியில் பதிவுகள் வருகின்றன. ஆனால் இதே சலுகையை யுவபுரஸ்கார் பெற்ற‌ காளிமுத்துவுக்கு ஏன் தரவில்லை, சாஹித்ய அகாதமி பெற்ற‌ இன்குலாபுக்கோ, டி. செல்வராஜுக்கு, மேலாண்மை பொன்னுச்சாமிக்கு, மு.மேத்தாவுக்கு, ஜி. திலகவதிக்கு, ஈரோடு தமிழன்பனுக்கு,  வைரமுத்துவுக்கு, சிற்பி பாலசுப்ரமணியமுக்கு ஏன் அவர்கள் தரவில்லை என்ற கேள்வி இயல்பாகவே எழும்.

ஜெயமோகன் ஏற்காத ஓர் எழுத்து முறைக்கும் விஷ்ணுபுரம் விருதில் இடமுண்டு என்பதற்கான‌ முக்கியமான சமிக்ஞை இது என்று ஒரு கோணம் சொல்கிறார்கள். ஜெயமோகனை விடுங்கள், விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தினரே கூட (ஓரிருவர் தவிர) சாருவைப் பற்றி எழுதி நான் பார்த்ததில்லை. எனில் யாரது ஏற்பின் அடிப்படையில் விருது? பரந்த தமிழ் வாசகர்களா? எனவே ஜெயமோகன் ஏற்காத எழுத்து, ஆனால் வாசகர்கள் ஏற்கிறார்கள் என்பதை ஒரு tenet ஆகக் கொண்டால், எல்லையின்றிப் பல பேரிடம் விருது சென்று நிற்கும் ஆபத்து இருக்கிறது. அதை எல்லாம் சிந்தித்து இம்மாதிரி ஸ்டேட்மெண்ட்களை விடுக்க வேண்டும். விருதை முன்பு வாங்கியோர் சங்கடப்படக்கூடாது; எதிர்காலத்தில் நல்ல எழுத்தாளர்கள் விருதை ஏற்கத் தயங்கக்கூடாது என்பது முக்கியமான கோடு.

*

என் புரிதல் இதில் இன்னொரு விஷயம் சாத்தியம் இருக்கிறது. ஜெயமோகனின் மன இளகல். இதை ஜெயமோகன் பல்டி அடித்து விட்டார், சுயநலத்துக்காகச் சமரசம் செய்து விட்டார், லாப நஷ்டக் கணக்கு பார்த்து விருது கொடுக்கிறார் என்ற இளக்காரமான‌ தொனியில் நான் சொல்லவில்லை.

நான் முன்வைப்பது முழுக்க அகவயமான ஒரு கோணம். ஓர் உளவியல் தர்க்கம். ஒருவர் நிறுவனமயமாகும் போது எல்லோரையும் உள்ளடக்கிய மனநிலை அவசியம். தனி மனிதன் குறுக்கலிலேயே கம்பீரமாக‌ வாழ்ந்து முடிக்கலாம். ஆனால் நிறுவனத்துக்கு விரிவதுதான் இயல்பு. விஷ்ணுபுரம், தமிழ் விக்கி என ஜெயமோகன் முன்னெடுக்கும் நிறுவனங்கள் எல்லாமே பல நூறு வாசகர்களின், வாசகர்களையும் தாண்டிய வெகுமக்களின் பங்கேற்பையும் ஆதரவையும் கோருபவை. அதற்குத் தீனி போட அவர் அடிப்படையில் முரண்படும் சில விஷயங்களைக் கூட அணைத்து உள்ளே இழுக்க வேண்டி இருக்கும். அப்படியான ஒன்று இது என்றே தோன்றுகிறது. சச்சின் டெண்டுல்கர் ஒரு மேட்சில் சுமாராக விளையாடினாலே போதும், வேறு ஒருவர் அவரை விட நன்றாக விளையாடி இருந்தாலும், இந்தியா ஜெயிக்கவில்லை என்றாலுமே கூட சச்சினுக்கு மேன் ஆஃப் த மேட்ச் கொடுப்பார்கள். அது ஒரு மனநிலை. அப்படித்தான் இதுவும் எனத் தோன்றுகிறது.

பாப் டயலனுக்கு நொபேல் பரிசு அளிக்கப்பட்டதைக் கூட இதனோடு ஒப்பிடத் தோன்றுகிறது.

இன்னொன்றையும் கவனித்திருக்கலாம். கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயமோகன் இலக்கிய விமர்சனங்களில் கடுமை காட்டுவதில்லை. அதை அவரே சில இடங்களில் பதிவு செய்தும் இருக்கிறார். மற்றவர்களை விடுங்கள், என் கன்னித்தீவு நாவலுக்கு எழுதப்பட்ட விமர்சனத்தில் கூட அதை உணர்கிறேன். சமீபத்தில் வந்த யுவபுரஸ்கார் சர்ச்சையில் கூட விருது பெற்ற நூலை எதிர்மறையாக விமர்சித்தாலும் காளிமுத்து எதிர்காலத்தில் நல்ல கவிதைகள் எழுதச் சாத்தியமுண்டு என்பதை பல முறை மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கிறார். ஸ்ரீதர் சுப்ரமணியன் ஜெயமோகன் நூல்களை வாசிக்காததில் பெருமை கொள்கிறேன் என்று அசட்டுத்தனமாகச் சொல்லியதற்கும் கூட அவரை அரவணைத்தே செல்கிறார். பழைய ஜெயமோகன் என்றால் சமயம் பார்த்துக் கிழித்துத் தொங்க விட்டிருப்பார். நேற்று கேஆர்எஸ் பற்றிய பதிவின் கடைசிப் பத்தியில் கூட அவரது அணுகுமுறையில் ஒரு மென்தன்மை இருப்பதைக் காண முடிகிறது. முன்பு கலைஞர், பெரியார், திமுக, திராவிட இயக்கம் போன்றவற்றை விமர்சிப்பதில் காட்டிய வேகம் இன்று இல்லை. அவர்களின் ஆக்கப்பூர்வமான பகுதிகளைப் பேசுகிறார். இது நான் சமீப காலமாகவே கவனித்து வரும் மாற்றம்.

இன்று அவர் கடுமையாக விமர்சித்து எழுதும் விஷயங்கள் எல்லாம் பொதுவான ஒரு திரள் பற்றியே; தனி மனிதர்கள் அல்லது அமைப்புகளை நேரடியாகத் தாக்கும் விஷயங்கள் வெகுவாகக் குறைந்து விட்டன என்பதே என் அவதானிப்பு. ஆக, நிச்சயமாக ஜெயமோகன் பழைய கடுமையுடன் இல்லை. இதையும் இந்த விருது அறிவிப்புடன் இணைத்துப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது.

இன்னும் சில கோணங்களும் இருக்கின்றன. அறுபது வயதைத் தொடுகையில், எல்லோரையும் அரவணைத்துத்தான் போவோமே என்று உண்டாகும் கனிவாக இருக்கலாம். அல்லது வெண்முரசு போல் அறத்தை முன்வைக்கும் ஒரு பெரும் படைப்பை எழுதிய பின்பு மனம் கொள்ளும் மௌனமாக‌ இருக்கலாம். இவை எல்லாம் கடந்த காலத்தின் கறார் மதிப்பீடுகளை மாற்றிக் கொள்ளச் செய்பவை.

இதை ஜெயமோகன் அறிந்தே ப்ரக்ஞைப்பூர்வமாகச் செய்தால் நாம் விமர்சிக்க ஏதுமில்லை. இதே திசையில் அடுத்த ஆண்டுகளில் வண்ணநிலவன், பெருமாள்முருகன், மனுஷ்ய புத்திரன், எஸ்.ரா. போன்றோர் விஷ்ணுபுரம் விருது வாங்கும் வாய்ப்பு உண்டு என நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் ரமணிச்சந்திரன், ராஜேஷ் குமார், வைரமுத்து என்று போக மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன். 

ஆக, எப்படியாகினும் ஒரு தீவிர இலக்கியவாதிக்கே விஷ்ணுபுரம் விருது கொடுத்திருக்கிறார்கள் என்ற வகையில் இந்த அறிவிப்பில் அதிர்ச்சி உண்டே ஒழிய, வருத்தம் ஒன்றுமில்லை.

(என் தனிப்பட்ட விருப்பம் யுவன் சந்திரசேகருக்கு விரைவில் இவ்விருது அளிக்கப்பட வேண்டும்.)

***

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்