CSK டயட்: சில சிந்தனைகள்

1) கடந்த ஆண்டு விநாயக சதுர்த்தியன்று ஒரு சின்ன அசம்பாவிதத்துக்குப் பின் உடல் எடை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வாழ்வில் நூறாவது முறையாய் மீண்டும் எழுந்தது. முதலில் நடைப் பயிற்சி மட்டும் மேற்கொண்டேன் - உணவில் எந்தக் கட்டுப்பாடும் வைத்துக் கொள்ளவில்லை. அப்போது மிகக் குறைவான பலனே இருந்தது: ஆகஸ்ட் 2020 இறுதி முதல் டிசம்பர் 2020 மத்தி வரை 113 நாட்களில் நடைப்பயிற்சி மட்டும் மேற்கொண்டதில் 4 கிலோ எடை குறைந்தது. பிறகுதான் அதோடு உணவுக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்தேன். ஒப்பீட்டளவில் துரித முன்னேற்றம்: டிசம்பர் 2020 மத்தி முதல் ஏப்ரல் 2021 துவக்கம் வரை 112 நாட்களில் நடையோடு டயட்டும் இருந்ததில் 7 கிலோவுக்கு மேல் எடை குறைந்தது. ஆக, மொத்தமாய்ப் பார்த்தால் ஏழரை மாதங்களில் 11 கிலோ எடை குறைந்திருக்கிறது.

2) என்னிடம் எடை எவ்வளவு குறைந்தது என விசாரித்த அனைவரும் அடுத்துச் சொன்னது அந்த உணவு முறையைப் பின்பற்றினால் இன்னும் வேகமாகக் குறையும், இந்த டயட்டை எடுத்தால் இன்னும் சீக்கிரம் குறைக்கலாம் என்கிற யோசனைகளே. ஆம், மிகச் சரி. எனது டயட் முறையைக் காட்டிலும் வீரியமான எடை குறைப்பு உணவு முறைகள் பல உண்டுதான். ஆனால் நான் அவற்றைத் தெரிந்தே நிராகரிக்கிறேன். ஏன்? அதற்கு ஒரு பூர்வகதை உண்டு. 2007 முதல் நடை, ஜிம், யோகா, நான்கைந்து வித டயட்கள் எனப் பல‌ முறைகளைப் பின்பற்றி நானே மேற்சொன்னதை விடவும் வேகமாக எடை குறைத்திருக்கிறேன். (உதாரணமாய் 2016ல் ஐந்து மாதங்களில் 13 கிலோ குறைத்தேன்.) பிறகு என்ன பிரச்சனை? அதையே தொடர்ந்திருக்கலாமே! முடியாது. அந்த எல்லா முறைகளிலும் இருக்கும் பெரும் சிக்கல் அவற்றை நிறுத்தினால் (தற்காலிகமாக என்றாலும்) உடனே எடை அதிகரிக்கும். வேகமாய்க் குறைந்தது, வேகமாய்க் கூடுவதுதானே இயற்கையின் நியதி! இன்னொரு சிக்கல் அந்த முறைகளைத் தொடர்ந்து பின்பற்றவே முடியாது. அதைச் செய்ய நீங்கள் ஒரு துறவியாக இருக்க வேண்டும்.

3) என் உடலையே பரிசோதனைச் சாலையாக்கி சுமார் பதினான்காண்டுகள் பல வித உத்திகளைப் பின்பற்றிப் பலன்களைக் கவனித்து நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான்: பலன் மிக மெல்லக் கிடைத்தாலும் தொடர்ந்து விடாமல் பின்பற்றத் தகுதியான உணவு முறையாக இருக்க வேண்டும். 'தொடர்ந்து' என்றால் அவசியப்பட்டால் ஆயுள் முழுவதும் கூட சங்கடமின்றிப் பின்பற்ற முடிந்த ஓர் உணவு முறை. Sustainable Diet! அதற்கு மிக முக்கியமாய் அந்த உணவு முறையில் நாம் எதையோ தியாகம் செய்கிறோம் என்ற எண்ணம் வராத மாதிரி அமைய வேண்டும். அதற்குத் தான் வாரம் ஒரு வேளை மட்டும் Cheat Meal எடுக்கத் தீர்மானித்தேன் (அதாவது 20:1 என்ற விகிதத்தில்). அந்த ஒரு வேளை மட்டும் எல்லாப் பாவங்களும் செய்யலாம். என் நோக்கமே மாதம் ஒரு கிலோ குறைப்பது மட்டுமே. அதாவது வாரம் கால் கிலோ. அவ்வளவேதான். Slow and Steady! (அப்படிப் பார்த்தால் ஏழரை மாதங்களில் 11 கிலோ என்ற எனக்குக் கிட்டிய பலனே கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம்.) அப்படி மெதுவாய்க் குறைப்பது இடையில் சில தினங்கள் டயட்டை விடுத்தாலும் உடனே எடை அதிகரிக்காது.

5) உண்மையில் இது ஒரு Reversal Process. எப்படி எடையை அதிகரித்தீர்களோ (தவறான உணவுகள், வியர்வையற்ற தினசரிகள்) அதற்கு நேரெதிர் வழியில் போய் எடையைக் குறைப்பது. அதனால்தான் பிரபலமான, பெரும்பாலான‌ சுருக்குவழிகள் போலன்றி இது நடந்தேற‌ அதிக காலமெடுக்கும். ஆக, ஷாஹித் அப்ஃரிடி மாதிரி அதிரடி ஆட்டம் வேண்டுவோருக்கு இந்த டயட் உகந்ததில்லை. ராகுல் ட்ராவிட் மாதிரி நின்று நிதானமாய் நிலைத்து ஆட விரும்புவோருக்கு உரியது. Perseverance is the key.

4) என் தனிப்பட்ட‌ புரிதலில் டயட் என்பது தற்காலிக சிகிச்சை அல்ல; அது ஒரு வாழ்வியல் மாற்றம் (Lifestyle Change). இப்போது 100 நாள் டயட் என்பதை 1000 நாள் என நீட்டித்திருக்கிறேன். இன்னொரு எளிய‌ வழி ஒவ்வோர் ஆண்டும் மூன்று முறை 100 நாள் டயட்டைப் பின்பற்றுவது: ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒன்று, மே முதல் ஆகஸ்ட் வரை அடுத்தது, கடைசியாய் செப்டெம்பர் முதல் டிசம்பர் வரை. அதாவது ஒவ்வொரு 120+ நாட்களிலும் குறைந்தது 100 நாட்கள் இப்படி டயட்டில் இருக்க வேண்டும்.

6) என் வரையில் இந்த டயட்டின் Flexibilityதான் இதன் பலம். ஏதோ ஒன்றைத் தின்ன வேண்டும் என‌ ஆசைப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளலாம். பிறகு மீண்டும் விரதம். விட்டுப் பிடிக்கும் உத்தி. எதற்காக‌ எதை விட்டுக் கொடுப்பது என்கிற பேரத்தில் கொஞ்சம் நாட்களில் ஒரு தெளிவு கிடைத்து விடும். உங்களுக்கு நிஜமாகவே பிடித்த பண்டத்திற்காக‌ மட்டுமே Cheat Meal எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தானாய் வரும். எனக்கு ஓரளவுக்கு வந்து விட்டது. சும்மா போகிற போக்கில் ஒரு முறுக்கைக் கடிப்போம் என்கிற சமரசமெல்லாம் அந்த மனநிலைக்கு வந்த பின் நடக்காது.

7) டயட் மட்டும் போதாதா, நடைப்பயிற்சியும் வேண்டுமா? அல்லது நடைப்பயிற்சி மட்டும் போதாதா டயட்டும் தேவையா? என்பன நான் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்விகள். போதாது என்பதே எளிய பதில். இரண்டுமே தேவை. அப்போதுதான் முடிவுகள் எதிர்பார்க்கும் வகையில் இருக்கும் என்பதே என் அனுபவம். நான் வல்லுநர்களிடம் கேட்டவையும், நேரடியாய் உணர்ந்தவையும் உடல் எடைக் குறைப்பில் (அல்லது அதிகரிப்பில்) சுமார் 70% பங்கு உணவுக்கு, மீதிதான் உடற்பயிற்சிக்கு. ஆக, ஒன்றை மட்டும் வைத்து எடை குறைக்க முடியாது. அதனால் உணவுப் பழக்கம் தொடர்பான ஒழுக்கம், தினம் விடாத நடைப்பயிற்சி (தொடர்ச்சியாய் ஒன்றரை மணி நேரம்) இரண்டுமே இந்த முறைக்கு அத்தியாவசியம். சர்க்கரை, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கும் இதுவே உவப்பானது.

8) CSK டயட் விவரங்களுக்கு: http://www.writercsk.com/2020/10/csk-diet.html. இந்த டயட்டில் கலோரி கணக்குப் பார்க்க வேண்டியதில்லை; கொழுப்பா, மாவா, புரதமா என அளக்க வேண்டியதும் இல்லை. நல்லதை எடுத்து, அல்லதைத் தள்ளுவது மட்டுமே தாத்பர்யம். (சரி, இதை எவ்வளவு துல்லியமாகப் பின்பற்றுகிறேன்? சுமார் 80%. குறிப்பாக நேரத்துக்குச் சாப்பிடுவது, தூக்க நெறிகள், வாழை தவிர்ப்பது முதலியவை சரிவரப் பின்பற்றுவதில்லை. ஆனாலும் 100% முயன்றால்தான் 80% ஆவது நடக்கும்.)

9) கொஞ்சம் ஊன்றி கவனித்தால் இந்த டயட் என்னவெனப் பிடிபட்டு விடும். நம்முடைய‌ முந்தைய தலைமுறையின் உணவு முறைதான் இது. அவர்கள் எத்தனை முறை ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டார்கள்? அதிகபட்சம் மாதம் ஒரு முறை. எத்தனை நாள் மாமிசம் உண்டார்கள்? உத்தேசமாய் வாரம் ஒரு முறை. ஏகதேசமாய் அதையொட்டித்தான் நான் இந்த உணவு முறையை conceive செய்தேன். ரொம்பப் பழைய முறைக்குப் போகிறேன் என்று நியாண்டர்தால் அரைக்குரங்கின் பேலியோவுக்கும் போகாமல், இன்றைய நவீன பீட்ஸா - பர்கருக்கும் போகாமல் something in between!

10) எச்சரிக்கை: உடற்கோளாறு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் முறையாக மருத்துவர் அறிவுரையை நாடுவதே நல்லது. சாதாரண உடல் நலத்தில் உள்ளோர், உடல் எடைடைக் குறைக்க மட்டும் இம்முறை.

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்