சிஎஸ்கே அட்டென்ஷன் சீக்கிங் செய்கிறானா?

நான் எழுத ஆரம்பித்தது முதல் கடந்த ஒரு டஜன் ஆண்டுகளாக அவ்வப்போது நான் சந்திக்கும் குற்றச்சாட்டு நான் அட்டென்ஷன் சீக்கிங்கிற்காக சில விஷயங்களை எழுதுகிறேன் என்று.

அவர்கள் தங்களைக் கொண்டோ அல்லது இப்படிச் செய்யும் மற்றவர்களைக் கொண்டோ என்னையும் எடை போட முயல்வதால் நிகழும் புரிதற்பிழையே இது. நான் இதுவரை ஒரு பதிவு கூட, ஒரு வாக்கியம் கூட, ஏன் ஒரு சொல் கூட கவன ஈர்ப்புக்காக எழுதியதில்லை. இதை நான் ஆயிரம் முறையாவது சொல்லி இருப்பேன். எனக்கு என்ன இயல்பாக தோன்றுகிறதோ அதை மட்டுமே நான் எழுதுகிறேன். அதைத் தாண்டி வேறில்லை. ஆனால் ஒரு விஷயம், நான் மற்றவர்களை விட ஒப்பீட்டளவில் குறைந்த அளவு தணிக்கை செய்யலாம். அல்லது மற்றவர்களை விட முகத்திலடித்தாற் போல் நேரடியாக எழுதலாம். அது கவன ஈர்ப்புக்காக இல்லை. அது அப்படி இருப்பது தான் சரி என நம்புகிறேன்.

அப்படி நான் எழுதும் எல்லாமே என் மனதில் தோன்றியவை. எதுவுமே மொண்ணை பிளேட் வைத்துச் சுரண்டுவது போல் யாரையோ ஈர்க்கத் தேடிப் பிடித்ததில்லை. எழுதும் போது இதற்கு இத்தனை லைக் விழும், இந்த சர்ச்சையை உண்டாக்கும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. தனி மனிதத் தாக்குதல் செய்யக்கூடாது, சட்டத்திற்கு புறம்பாக எழுதக்கூடாது என்ற இரண்டே கோடுகள் மட்டுமே நான் வைத்துக் கொள்கிறேன். இதை எழுதினால் அவன் கொண்டாடுவானா, இவன் திட்டுவானா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பதில்லை. அது திருகல் வேலை. இப்படி இருப்பதே வசதியாய், எளிதாய் இருக்கிறது. இவ்விஷயத்தில் இப்படியே தொடர்வேன் என்றே நினைக்கிறேன்.

இன்னொரு விஷயம். என் கருத்து தவறு என்றோ முட்டாள்தனம் என்றோ சுவாரஸ்யமாய் இல்லை என்றோ சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் கவன ஈர்ப்புக்காக அதை எழுதினேன் என்று சொல்வது அவதூறு. கேரக்டர் அசாசினேஷன். கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் அதைப் போகிற போக்கில் சொல்கிறார்கள். என்ன ஆதாரத்தை ஒருவர் இதற்குத் தர முடியும்? அவர்கள் முன்பு கண்ட உதாரணங்களின் நீட்சியான அவர்களின் சொந்தக் கற்பனை (அல்லது விருப்பம்) என்பதைத் தவிர. "இவன் என்ன இப்படிப் பேசுகிறான், இவற்றில் சிலதெல்லாம் நமக்கும் தோன்றி இருக்கிறது என்றாலும் நாம் வெளியே பேசியதில்லையே, ஆக இவன் கவன ஈர்ப்புக்காகவே இதைப் பேசுகிறான்" என்று நம்பிக் கொண்டால் அதில் ஓர் ஆறுதல் கிடைக்கிறதல்லவா! அதை அப்படியே தீர்ப்பாக எழுதி விடுகிறார்கள். இன்னொரு தரப்பும் உண்டு. தங்களுக்கு ஒவ்வாத கருத்தைப் பேசினாலே அட்டென்ஷன் சீக்கிங் தான். அதன் அர்த்தம் தெரிந்து தான் அச்சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்களா என்றே சந்தேகமாக இருக்கிறது. சரி, அது கிடக்கட்டும். அந்தக் குற்றச்சாட்டுக்கு வருவோம்.

இங்கே கவனம் ஈர்த்து எனக்கு என்ன லாபம்? இது மிக மிக முக்கியமான கேள்வி அல்லவா? இதற்கு என்ன பதில் இருக்கிறது அவர்களிடம்? உண்மையில் இங்கே பெரும்பான்மைக்கு (குறிப்பாகப் பெண்களுக்கு) பிடித்த மாதிரி எழுதுவது வெகு சுலபம். அது ஒரு நடுவாந்தர எழுத்து (mediocre). அதைப் பலரும் செய்கிறார்கள். சிலரது உயரமே அது தான், சிலர் வேண்டுமென்றே குறி வைத்து எழுதுகிறார்கள். அப்படி எழுதினால் இதை விட‌ இன்னும் 10 மடங்கு லைக் வரும். அதை எழுதுவது சுலபமும் கூட. ஆனால் நான் அதைச் செய்யாமல் எனக்குத் தோன்றுவதையே (unfortunately, பெரும்பான்மையைக் கோபப்படுத்தும், எரிச்சலூட்டும் கருத்துக்கள்) எழுதுகிறேன். இது கிட்டத்தட்ட தற்கொலைக்குச் சமானம். இதனால் எத்தனையோ நண்பர்களை (குறிப்பாகப் பெண்களை) இழந்திருக்கிறேன். ஆனால் அது பொருட்டல்ல. என் கருத்துக்குப் புண்பட்டால் விலகுவதே நியாயம். நீங்கள் விலகுவீர்கள் எனப் பயந்து உங்களுக்கு நீவி விடுவது மாதிரி நான் எழுத முடியாது.

சரி, ஓர் எழுத்தாளனாகவாவது இதனால் எனக்கு ஏதும் பிரயோஜனம் உண்டா? பூஜ்யம். இங்கே கவனம் ஈர்ப்பதால் ஒரு புத்தகம் கூட கூடுதலாய் விற்காது எனக்கு. இன்னும் சொல்லப் போனால் இதனால் மோசமான ஒரு பிம்பம் தான் இலக்கிய உலகில் எனக்கு வருகிறது. வாசகர்கள் மத்தியில் இன்னும் மோசம். பேஸ்புக்கில் இப்படி எழுதுகிற ஆள் என்ன இலக்கியம் எழுதி விடப் போகிறான் என்று என்னை வாசிக்காமல் நிராகரிப்பவர்கள் ஏராளம் என்பதை அறிவேன். இதை என்னிடம் நேரடியாகச் சொன்னோர் உண்டு. நண்பர்கள் மூலம் இத்தகைய கருத்துக்கள் என்னை வந்தடைந்திருக்கின்றன. இப்படி நான் இழந்து கொண்டிருக்கும் வாசகர்களும் கணிசம். இப்படி இருப்பது என் புத்தகங்கள் விற்க இடைஞ்சல். என் பதிப்பாளருக்கே கூட என் மீது வருத்தங்கள் இருக்கலாம். சில எழுத்தாளர்கள், சில நண்பர்கள் இதெல்லாம் தேவையா என அங்கலாய்த்து என்னை மாறச் சொல்லி அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். நான் மாறாததால் அலுத்துப் போய் அறிவுரையைக் கை விட்டவர்கள் உண்டு. இப்படியான அத்தனை நஷ்டங்களையும் தாண்டி எனக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதாலேயே தோன்றுவதை மட்டும் எழுதுகிறேன். அத்தனை நஷ்டத்துக்குப் பின்பும் கவன ஈர்ப்புக் குற்றச்சாட்டு.

இத்தனையும் இருக்கும் போது, இதெல்லாம் எனக்கு நன்கு தெரிந்திருக்கும் போது நான் வெறும் அட்டென்ஷன் சீக்கிங் என்ற வெற்று அரிப்புக்காக‌ எப்படி ஒன்றை எழுதுவேன்? நான் ஒரு பைத்தியகாரனாக இருந்தால் ஒழிய வேண்டுமென்றே இப்படி எழுத மாட்டேன். ஆக, நான் எழுதுவது கவன ஈர்ப்புக்காக இல்லை. புத்தகம் விற்கவில்லை என்றாலும் சரி, என்னை வெறுப்பவர்கள் அதிகரித்தாலும் சரி, இலக்கிய உலகில் எனக்கு வேறு மாதிரி முத்திரை விழுகிறது என்றாலும் சரி, பரவாயில்லை. மனதிலிருப்பதை எழுதி விட்டோம் என்ற நிம்மதி போதும் என்பதாலேயே. அதை மறைத்து, எழுத்தில் சமரசம் செய்து கொண்டு, மேற்சொன்னவற்றை அடைவது தான் சில்லறைத்தனம் என நம்புகிறேன். அது என்னை நானே அவமதித்துக் கொள்ளும் செயல்.

நான் மிக எளிய மனிதன். தினம் காலையில் கண்ணாடி பார்த்தால் நம்மை நாமே துப்பிக் கொள்ளத் தோன்றும் வாழ்க்கையை வாழக்கூடாது என்பதே என் சித்தாந்தம். அதற்கு முதல் தேவை நேர்மையாய் இருப்பது. நான் என் தொழிலான எழுத்தில் அப்படி இருக்க முயல்கிறேன். அவ்வளவு தான். அது உங்களுக்கு கவன ஈர்ப்பாகத் தோன்றினால் அது என் பிரச்சனையா, சொல்லுங்கள், நண்பர்களே?

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி