சைக்கோ: பேரன்பெனும் பாசாங்கு
“We all go a little mad sometimes.”
- Psycho (1960) படத்தில் வரும் வசனம்
சைக்கோ (Psycho) என்பது சைக்கோபாத் (Psychopath) என்ற சொல்லின் பேச்சு வழக்கு. கேம்ப்ரிட்ஜ் அகராதி அச்சொல்லுக்கு இப்படி விளக்கம் அளிக்கிறது: “a person who has no feeling for other people, does not think about the future, and does not feel bad about anything they have done in the past”. அதாவது எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ இறந்த காலம் பற்றிய குற்றவுணர்வோ அற்ற ஆள். பொதுவாக சைக்கோ பாத்திரத்தை மையமிட்டு புனையப்படும் எழுத்துக்களோ, திரைப்படங்களோ இந்த அர்த்தப்படுத்தலை அசைத்துப் பார்க்க முனைவன. அதாவது அவை சைக்கோக்கள் ஏன் சைக்கோக்கள் ஆனார்கள் என அடிக்கோடிட முனைகின்றன. மிஷ்கினின் சைக்கோ அம்முனைப்பின் உச்சம்.
தமிழ் சினிமாவுக்கு சைக்கோபாத் படங்கள் புதியவை அல்ல. பன்னெடுங்காலமாக எடுக்கிறோம். பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் (1978) படத்தை இதன் தொடக்கம் எனலாம். பிறகு பாலு மகேந்திராவின் மூடுபனி (1980) ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் Psycho பாதிப்பில் எடுக்கப்பட்டது. அருமையான இவ்விரு படங்களின் துவக்கத்துக்குப் பிறகு 1986ல் திரைப்படக்கல்லூரி மாணவரான ஆர். அரவிந்த்ராஜ் இயக்கிய ஊமை விழிகள். பிறகு 2001ல் சுரேஷ் கிருஷ்ணாவின் ஆளவந்தான். கமல் ஹாசன் எழுதிய தாயம் என்ற தொடர்கதையை அடிப்படையாய் வைத்து அவரே எழுதிய திரைக்கதை. பிறகு சிலம்பரசன் திரைக்கதை எழுதி, ஏஜே முருகன் என்பவர் இயக்கிய மன்மதன் (2004), கௌதம் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு (2006) மற்றும் நடுநிசி நாய்கள் (2011), ராம் குமாரின் ராட்சசன் (2018), ஸ்ரீசெந்தில் இயக்கிய காளிதாஸ் (2019) என நிறையத் திரைப்படங்கள் உண்டு. மிஷ்கினின் சைக்கோ அதன் சமீபக் கண்ணி.
இவற்றில் மிகச் சில தவிர்த்து எல்லாவற்றிலுமே சில பொது அம்சங்கள் உண்டு. Random-ஆகப் பெண்களைக் கடத்திக் கொலை செய்யும் ஒரு சைக்கோ. அவனுக்குப் பின்னிருக்கும் பாலியல் தொடர்புடைய ஏதோ ஒரு சிறுவயதுச் சம்பவம். சிறார் குற்றவாளியாகச் சிறை சென்று வந்திருப்பான். (சுஜாதா கூட அப்ஸரா என்றொரு நாவல் எழுதி இருக்கிறார். ஒரு கம்ப்யூட்டர் ஆசாமி சிறு வயது உளச்சிக்ககால் தெரியாத பெண்களைக் கணிணி நிரல் மூலம் தேர்ந்தெடுத்துக் கொலை செய்வான்.)
சைக்கோவிலும் பிசகாமல் இது தான் இருக்கிறது. ஆனால் உடன் இரு பிரச்சனைகள். முதல் விஷயம் அவ்விஷயத்தின் தெளிவின்மை. அடுத்த விஷயம் அதன் பாசாங்கு.
தெளிவின்மையை மிஷ்கின் திட்டமிட்டே வைத்திருக்கிறார் என எண்ணுகிறேன். ஆனால் பிரச்சனை அவருக்குத் தெரிந்தே அது படத்தின் அங்கமாக இருக்கிறதா இல்லையா என்பதல்ல; பார்வையாளனுக்கு அந்தத் தெளிவின்மையானது பூடகமான ஒரு வசீகரத்தை அளிக்கிறதா அல்லது வெறும் குழப்பத்தை, நிறைவின்மையை மட்டுமே அளிக்கிறதா என்பதே. சைக்கோ படத்தில் இரண்டாவது தான் நிகழ்கிறது.
ஒழுக்கக் கட்டுப்பாடுகள் நிறைந்த கிறிஸ்துவப் பள்ளி விடுதியில் சுயஇன்பம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பதின்மனான வில்லனுக்கு ஆசிரியையால் தினம் அறுபது பிரம்படிகள் வழங்கப்படுகிறது. (அவன் தன் சுண்டு விரலை இழந்ததற்குக் காரணம் இதுவாக இருக்கலாம்.) ஆனால் அவனோ தன் குறி கால் சராயின் ஜிப்பில் மாட்டிக் கொண்டதாலேயே அதை விடுவிக்க கால்களுக்கிடையே தன் கையை வைத்திருந்ததாக ஆசிரியையிடம் மன்றாடுகிறான். அவன் சொற்கள் செவி மடுக்கப்படுவதில்லை. இரவெல்லாம் கண்காணிக்கப்பட்டிருக்கிறான். நிம்மதியும் உறக்கமும் இழக்கிறான். பள்ளியில் எல்லோருக்கும் தெரிந்து அவமதிக்கப்படுகிறான். அதனால் கடும் குற்றவுணர்வுக்கும் மனவுளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறான். இதில் இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று அவன் ஜிப் மாட்டியது நிஜமே, அவன் சுயஇன்பம் செய்யவில்லை, ஜிப் மாட்டிய சம்பவத்தில் தான் ஆண்மை இழந்து அவன் கடத்தும் பெண்களைத் தொடுவதில்லை. அல்லது அவன் சுய இன்பம் செய்தது நிஜமே, ஆனால் அது அவ்வயதின் இயல்பு, ஆனால் வறட்டு விக்டோரிய ஒழுக்கவாதத்தால் அதை ஒரு பெரிய விஷயமாக்கி அந்த ஆசிரியை அவனுக்கு உளச்சிக்கல் ஏற்படுத்தி அதன் நீட்சியாக அவன் தனது ஆண்மையை இழக்கிறான் அல்லது கலவி என்ற விஷயத்தை வெறுப்புக்கும் பயத்துக்கும் உரியதாக மனதில் வரித்துக் கொள்கிறான். இதில் எது நிஜமாக நடந்தது என்பது தெளிவில்லை. ஆனால் அது பரவாயில்லை.
அடுத்து அவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறான். அவனை அங்கே அழைத்துச் செல்லும் வழியில் போலீஸ்காரர் அவனை பாலியல் வல்லுறவு செய்கிறார். முதலில் அவனை ஏன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்பது தெளிவில்லை. சுயஇன்பத்தை எல்லாம் காரணம் காட்டி அனுப்ப முடியுமா என்ன! அடுத்து இந்த போலீஸ்காரர் விஷயம். இப்போது வில்லன் சைக்கோவாகக் காரணம் பிரம்படியா போலீஸ்காரரா எனக் குழப்பம் வருகிறது. போலீஸ்காரர் தான் காரணம் என்றால் ஏன் பெண்களை வரிசையாகக் கொலை செய்ய வேண்டும்? ஆக, போலீஸ்காரர் என்பது சுயஇன்ப விவகாரத்தைப் பலவீனமாகப் பார்வையாளன் உணரக்கூடும் என்பதால் இயக்குநர் கூடுதலாக ஒரு காரணத்தை வைத்து விடுவோம் என்று சேர்த்திருப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இது அடுத்த குழப்பம்.
அடுத்து அவன் ஏன் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பெண்ணைக் கடத்த வேண்டும்? மேலே சொன்ன இரண்டில் எது அவனது சைக்கோத்தனத்துக்குக் காரணமென்றாலும் இது பொருத்தமற்றதாகத் தெரிகிறது. இன்னொன்று அப்படிக் கடத்தப்படும் பெண்ணை ஏதேனும் காரணத்தால் அவனால் கொல்ல முடியவில்லை என்றால் அணுக எளிதான பாலியல் தொழிலாளி ஒருத்தியைக்கடத்திக் கொல்கிறான் என்கிறார்கள். அப்படிப் பிழைக்கும் ஒருத்தி தான் அதிதி ராவ். எனில் அப்படிப் பிழைத்த மற்ற பெண்கள் என்ன ஆனார்கள்? என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
தன்னை வன்புணர்ந்த போலீஸ்காரர் உட்பட எல்லோரையும் கடத்திக் கொல்லும் சைக்கோ தன் நிலைக்கு மூலக்காரணமான ஆசிரியையை மட்டும் ஏன் கொல்லாமல் எட்டாண்டுகளாக சிறை வைத்திருக்கிறான் என்பதற்கும் சரியான விளக்கம் இல்லை.
அடுத்து அங்குலிமாலா என்ற உருவகம். வில்லனுக்கு அந்தப் பெயரையே சூட்டி இருக்கிறார் இயக்குநர். தன் நேர்காணல் ஒன்றிலும் இது புத்தர் கதையில் வரும் அங்குலிமாலாவின் கதையை ஒட்டியது என்றார் மிஷ்கின். அங்குலிமாலா என்ற கொடூரன் தானிருந்த வனத்தில் வருவோரைக் கொன்று அவர்களின் சுண்டுவிரலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொள்வபவன். ஒருநாள், அவன் இருக்கும் காட்டுப் பகுதியிலே செல்ல புத்தர் முயன்ற போது விஷயத்தைச் சொல்லி மக்கள் அவரைத் தடுத்தனர். புத்தர் மீறி வனத்துள் சென்று திரும்பி வருகையில் அவனை அழைத்து வந்தார். அப்போதிருந்து அவன் சாதுவாகி, இறுதி வரை அவரது சீடர்களுள் ஒருவராக இருந்து மறைந்தான். புத்தர் என்ன சொல்லி அவன் மனதை மாற்றமடைய வைத்தார் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் கதைகளாக நிலவுகின்றன. தான் அதற்கு ஒரு பதிலை இப்படத்தின் மூலம் சொல்ல முயன்றிருப்பதாக மிஷ்கின் குறிப்பிட்டார்.
அதுவுமே குழப்பமாக மிஞ்சுகிறது. படத்தில் நாயகன் பெயர் கௌதம். ஆக, அவன் தான் அந்த புத்தன் என்று கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் உண்மையில் படத்தில் வில்லனை மீட்பது அதிதி ராவின் அன்பு தான். இதில் அதிதி ராவின் பெயர் தாகினி. புத்த மரபில் வரும் ஒரு தேவதை. ஆன்மீக குரு போன்றவள். தியானம் மற்றும் போதனைகளைப் பாதுகாப்பவள். அங்குலிமாலாவைக் காப்பது புத்தரா தாகினியா? அல்லது உயிரைப் பணயம் வைத்து அதிதியை மீட்குமளவு போகும் கௌதமின் காதல் தான் அவனை ஒரு தோல்வியுற்றவனாக உணரச் செய்து அங்குலிமாலா திருந்தக் காரணம் என்கிறாரா? ஆனால் அதிதி இறுதியில் அவனது கால் விலங்கின் சாவியை அளிப்பதும் தொலைக்காட்சியில் தரும் பேட்டியைக் காண்பதுமே வில்லன் திருந்தக் காரணமாக அமைவதாகவே எடுக்க வேண்டியுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேல் படத்தில் பேசப்படும் அன்பு அபத்தமாகவும் ஆபத்தாகவும் தோன்றுகிறது. அதிதி ராவ் சொல்கிறார், கடத்தப்பட்டு வைத்திருந்த நாட்களில் தான் வில்லனிடம் குரூரத்தைப் பார்க்கவில்லை ஒரு குழந்தையைத் தான் பார்த்தேன் என. அதிதி ராவே சைக்கோவோ என எண்ண வைக்கும் வசனம் அது. அதிதி ராவை அறையில் வைத்துக் கொண்டே மூன்று பேரின் தலையை வாங்குகிறான் வில்லன். அதில் தெரிவது என்ன குழந்தைத்தனமா? உளச்சிக்கலால் பாதிப்புற்றவன், அவனது சைக்கோக் கொலைகளுக்குப் பின் இருக்கும் மனநிலை பாதிப்பைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று சொல்வது வேறு விஷயம். போகிற போக்கில் அவன் குழந்தை, அவனுக்கு அன்பை வாரி வழங்க வேண்டும் என்று சொல்வது தர்க்கமே இல்லாதது. இதை நீட்டித்து ஒரு சிறுமியை வல்லுறவு செய்தவனுக்கும் சொல்ல முடியும். அதை நம்மில் யாரும் செய்வோமா? எவ்வளவு ஆபத்தான சிந்தனை!
மிஷ்கினின் பிரச்சனை என்னெனில் அவர் பிசாசு படத்தில் செய்ததையே இதிலும் செய்ய முயன்றிருக்கிறார். பிசாசு என்பது கெட்டது, வன்முறையானது என்று மட்டுமே இருந்த சித்திரத்தை உடைத்து, அன்பும், காதலும் கொண்ட ஒரு பேயைக் காட்டினார். அதையே சைக்கோவுக்கு நீட்டிக்கப் பார்த்தது தான் சிக்கல். ஒரு சைக்கோவுக்குப் பின்னிருக்கும் ரகசியங்களை உளப்பகுப்பாய்வு செய்வது வேறு, அவன் குழந்தை, அவனை ஒரு தாயைப் போல் அணுக வேண்டும் என்று அவனது குற்றங்களை எல்லாம் ஒன்றுமில்லாமல் கழுவி விட்டு ரத்து செய்வது வேறு. சைக்கோ படம் இரண்டாவதைத் தான் தன் முதிர்ச்சியின்மையால் செய்கிறது.
இவை யாவும் சேர்ந்து தான் பார்வையாளனை படத்துடன் முழுமையாக ஒன்ற விடாமல் தடுத்து விடுகிறது. அதானாலேயே சுமார் என அடையாளம் பெறுகிறது.
படத்தில் தொழில்நுட்பரீதியாக ஏராள நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இசையும், ஒளிப்பதிவும், ஆக்கமும் உரிய உச்ச சாத்தியத்தை இப்படத்தில் எய்தி இருக்கின்றன. ஆனால் படம் என்பது அதன் உடல் மட்டுமல்ல, அதன் ஆன்மாவும் சேர்த்துத் தான்.
பலரும் படத்தில் விரவிக் கிடக்கும் தர்க்கப் பிழைகளைச் சுட்டுகிறார்கள். பார்வை அற்றவன் காரோட்டுவது, அவனைத் தனியே விடுத்து கனடாவிலுள்ள பெற்றோர், சிசிடிவி கேமெராக்களற்ற நகரம், தொடர்கொலைகள் தொடர்பாய் உருப்படியாய் ஒன்றுமே செய்யாத போலீஸ் எனப் பல விஷயங்கள் இருக்கின்றன. அது அவரது வழமை தான். என்ன இம்முறை எண்ணிக்கை கொஞ்சம் ஜாஸ்தியாகி விட்டது!
மிஷ்கின் படங்களில் வரும் நகரத்தில் பாத்திரங்கள் தவிர யாரும் இருப்பதில்லை. இதெல்லாம் யதார்த்தமா? ஏன் அவர் பாத்திரங்கள் தரையைப் பார்த்துக் கொண்டே சற்று நேரம் நிற்கிறார்கள்? இதெல்லாம் பத்தாண்டுகளாய் மிஷ்கின் படம் வரும் போதெல்லாம் எழும் பிரபலக் கேள்விகள். தான் யதார்த்தப் படம் எடுப்பதாய் மிஷ்கின் எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை. அவருடைய சினிமா உலகம் யார்த்த சினிமாவுக்கும் ஃபேண்டஸி சினிமாவுக்கும் இடையில் ஒரு புள்ளியில் நிற்கிறது. அவரது தனித்துவம் அது தான். அது நிஜ உலகம் அல்ல; மிஷ்கினின் உலகம். எப்படி பண்டோரா என்பது ஜேம்ஸ் கேமரூனின் உலகமோ அப்படி. அதற்கு மிஷ்கின் தான் கடவுள். அதில் அவர் இஷ்டப்படி தான் மனிதர்களும், மிருகங்களும், பொருட்களும் நடமாடுவார்கள். உங்களுக்குப் பழகிய பழைய உலகை அவர் மீது திணிக்காதீர். அவருலக நியமங்களின்படி அவர்கள் யதார்த்தமாகவே இருக்கிறார்கள்.
எனக்குப் படத்தில் பிடித்த காட்சி. “தனிமையிலே இனிமை காண முடியுமா…” என்று ஏஎம் ராஜா பாடலைப் பாடிக் கொண்டிருக்கும் போதே போலீஸ்காரரான ராம் தலை வெட்டப்பட்டு இறப்பது. அப்பாடலுக்கும் வில்லனின் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது தான் விஷயம். அதிதி கால் விலங்கின் சாவியை வில்லனுக்கு விட்டுப் போவதும், அதை ஆசிரியை பறித்து விழுங்குவதும், வில்லன் அவள் குரல் வளையைக் கடித்து சாவியை மீட்பதும் அபாரமான காட்சி. உண்மையில் அவனது மீட்புக்கான கணம் அதுவே எனத் தோன்றுகிறது. அந்தக் கொலையோடு அவன் தன் மன விகாரங்களை முடித்துக் கொள்கிறான். ரத்தம் தோய்ந்த அந்தச் சாவி தான் அவனுக்கு விடுதலை அளிக்கிறது. (அதன் பிறகு தொலைக்காட்சியில் அதிதியின் உணர்ச்சி ததும்பும் மிகைப் பேட்டியைப் பார்ப்பது எல்லாம் அவசியமற்ற செருகல்.)
அதிதி ராவ் ஒரு காட்சியில் ஆசிரியைக்கு சிகரெட் கொடுப்பார். சிகரெட் பிடிப்பது எவ்வகை ஒழுக்கக்குறைவும் இல்லை என்றிருக்கும் ஆசிரியை தான் சுயஇன்பத்தைப் பெரும்பாவமாகக் கருதுகிறார். கிறிஸ்துவ ஒழுக்கவியலின் ஹிப்போக்ரைஸியின் மீதான விமர்சனம்தான் அது. ஒரு காலத்தில் சுயஇன்பம் தவறானது, பாவம், குற்றம் என்ற கருத்து பரவலாக இருந்தது. அதைப் பற்றிப் பேசவே தயங்கினார்கள். அது பற்றிய மூட நம்பிக்கைகள் பரவிக் கிடந்தன (ஒரு சொட்டு விந்து = 60 சொட்டு ரத்தம், உறுப்பு சிறுக்கும், ஆண்மை போகும் etc). சுஜாதாவே ஏன்? எதற்கு? எப்படி? தொடரில் சுயஇன்பம் பற்றிய கேள்விக்கு “இனியும் தயங்காமல் உடைத்துப் பேசி விடலாம் என்றிருக்கிறேன்” எனப் பீடிகை போட வேண்டி இருந்தது (அது 80களின் இறுதி). ஏழெட்டு ஆண்டுகள் முன் நான் குங்குமம் இதழில் ‘ச்சீய் பக்கங்கள்’ தொடர் எழுதுகையில் சுயஇன்பம் அத்தியாயத்திற்கு அனுமதி கிட்டவில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் பல பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் பாலியல் மருத்துவர் கேள்வி - பதில்களிலும், திரைப்பட வசனங்களிலும் காட்சிகளிலும் சுயஇன்பம் வந்து விட்டது. இன்று சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் பரம்பரை தவிர யாரும் சுய இன்பத்தைப் பற்றி எதிர்மறையாகப் பேசுவதில்லை. அதனால் சைக்கோ படம் அதைப் பற்றிப் பேசும் போது நமக்கு எந்த ஒரு அதிர்ச்சியும் இருப்பதில்லை. (பேரன்பு படத்தில் பதின்மப் பெண்ணோருத்தி சுயஇன்பம் செய்வதையே சொல்லி விட்டார்களே!)
மிஷ்கினின் ஆகப் பெரிய மேதமை சைக்கோ படத்தில் தாகினி பாத்திரத்துக்கு அதிதி ராவைத் தேர்ந்தது. கொலைகாரன் பலிபீடத்தில் அதிதியை மல்லாக்கக் கிடத்திய பின் அவரது பரிசுத்த முகத்துக்குக் க்ளோஸப் வைக்கும் போது நமக்குத் தோன்றுகிறது –
இத்தனை அழகான கழுத்தைப் பார்த்தால் யாருக்கும் வெட்டத் தான் தோன்றும்.
***
(உயிர்மை - ஃபிப்ரவரி 2020 இதழில் வெளியானது)
Comments
It is not easy to see next next post in this template if yours....