ஷ்ருதிக்கு என்ன ஆச்சு?
கபிலன் மற்றும் ஷ்ருதி டிவி குழுவினர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் இலக்கியத்துக்குச் செய்து வருவது ஒரு சுத்தமான சேவை. சேவை என்றால் பெரும்பாலும் எந்த எதிர்பார்ப்புமற்ற வேலை. தற்போது அவர்கள் சிரம தசையில் இருப்பதாக அறிகிறேன். அவர்களின் யூட்யூப் சேனலிலிருந்து போதுமான வருமானம் வருவதில்லை என்பதே காரணம். அதை எதிர்கொள்ளும் முகமாக துறைசார் வல்லுநர்களின் ஆலோசனைப்படி இலக்கியத்துக்கென தனி யூட்யூப் சேனல் துவங்கி இருக்கிறார்கள். Shruti.TV Literature என்ற பெயரில். பழைய பாடங்களிலிருந்து வாசகர்களுக்கு அவர் வைத்திருக்கும் கோரிக்கைகள் இரண்டே இரண்டு தாம்: 1) வீடியோக்களை முழுக்கப் பாருங்கள். 2) டவுன்லோட் செய்யாமல் நேரடியாகப் பாருங்கள். செய்ய முடிந்த எளிமையான உதவிகள்!
சேனலை subscribe செய்ய: https://www.youtube.com/channel/UCW1Eo2DbGgHjc0zk9wCi2Bw?sub_confirmation=1
இந்த முயற்சி அவருக்கு மீட்சியைத் தரட்டும். வாழ்த்துக்கள்.
*
இது குறித்து மேலும் சில விஷயங்கள்.
கபிலன் பொதுவாக இலக்கிய நிகழ்ச்சிகளுக்குத் தானாய் காசு கேட்பதில்லை. சில சமயம் சம்மந்தப்பட்டவர்கள் பணம் தர முன் வந்தாலும் மறுத்து விடுகிறார் என்பதையும் அறிவேன். (நானே நேரடியாக அதை எதிர்கொண்டிருக்கிறேன்.) மற்றபடி, அவர் முதன்மையாய் நம்பியிருப்பது வீடியோக்கள் இடையே விளம்பரங்கள் காட்டப்படுவதன் மூலமாக யூட்யூப் அளிக்கும் வருமானத்தை மட்டுமே. அது யூட்யூப் சேனலின் சப்ஸ்ப்க்ரைபர்களின் எண்ணிக்கை, வீடியோக்களைப் பார்ப்போரின் எண்ணிக்கை, ஒவ்வொரு வீடியோவும் பார்க்கப்படும் நேரம், இடையே சொருகப்படும் விளம்பரங்கள் பார்க்கப்படும் நேரம் என எல்லாவற்றையும் பொறுத்தே அமையும். என் புரிதலில் அது மிகவும் மறைமுகமான வருமானம். ஓர் எண்டர்டெய்ன்மெண்ட் சேனலுக்கு இது சரிப்படும். ஆனால் பிரதானமாய் இலக்கியம் மாதிரி அடர்த்தியான விஷயத்தை நம்பி இயங்கும் சேனலுக்கு ஒத்து வராது, அதுவும் குறிப்பாய்த் தமிழ்ச் சூழலில். இங்கே இலக்கியம் வாசிப்பவர்களே மொத்தம் பத்தாயிரம் பேர் தான். அதிலும் ஆயிரம் மனச்சாய்வுகள், முன்தீர்மானங்கள், அலட்சியங்கள், அக்கப்போர்கள்.
அதனால் என் தனிப்பட்ட சிபாரிசு கபிலன் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஒரு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயித்து இலக்கிய நிகழ்ச்சி நடத்துவோரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான்.
இன்று உலகில் எதுவும் இலவசமில்லை. எல்லாவற்றுக்குமே மறைமுகமாகக் காசு கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். நாம் தருவோம் அல்லது நம் பொருட்டு இன்னொருவர். ஜிமெயில் கூட பொதுமக்களுக்குத் தான் இலவசம்; கார்ப்பரேட் பயன்பாட்டுக்குக் கட்டணம். ஆனால் கார்ப்பரேட்களிடம் தைரியமாய்ப் பணம் கேட்க பொதுமக்களிடம் அதைப் பரவலாக்கிப் பழக்கப்படுத்தியதே காரணம். ஓலா, ஊபர் எல்லாம் ஆரம்பத்தில் மிக மிகக் குறைவான கட்டணத்தில் வாடகைக் கார் ஓட்டியதும் இதே உத்தியில் தான். சில ஆண்டுகளில் மக்களை அந்தச் சொகுசுக்குப் பழக்கப்படுத்தி விடுவது. பிறகு கட்டணம் உயர்த்தினாலும் அதில் கணிசமானோர் அதைக் கைவிட முடியாமல் கூடுதல் காசு கொடுத்து தொடர்ந்து பயன்படுத்துவார்கள். (சில ஆண்டுகள் முன் என் அலுவகலத்தில் ஒரு பெண் ஒருமுறை ஓலா / ஊபர் வேலை நிறுத்தத்தின் போது அதைக் காரணம் காட்டி விடுப்பு எடுத்த போது உண்மையாகவே அதிர்ந்து போனேன். அந்த அளவு அதைச் சார்ந்து இயங்குமளவு மக்களைப் பழக்கப்படுத்தி விடுகிறார்கள். சந்தைப்படுத்தல் உத்தி!)
ஷ்ருதி டிவியும் இந்த முதல் ஐந்தாண்டுகளில் நவீனத் தமிழ் இலக்கியத்தில் அப்படிப் பழக்கப்படுத்தி விட்டார் என்றே சொல்வேன். இப்போது எந்த விழா என்றாலும் வாசகர்கள் ஷ்ருதி டிவியில் வரும் என்ற எண்ணம் இயல்பாகவே வந்து விட்டது. சொல்லப் போனால் சமீப ஆண்டுகளில் நட்சத்திர எழுத்தாளர்களின் இலக்கியக் கூட்டங்களில் கூட்டம் குறையவே ஷ்ருதி டிவி தான் காரணம் என்பேன். எதற்கு வாகன நெரிசலில், அலைந்து திரிந்து போக வேண்டும், மெல்ல நமக்கு வசதியான ஒரு நேரத்தில் யூட்யூபில் பார்த்துக் கொள்ளலாம் என வாசகர்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். இது இயல்பான பரிணாம வளர்ச்சி தான். அதனால் இலவச சேவை எல்லாம் போதும்.
இந்த நிலையில் அவர் இலக்கிய நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் தொகை வசூலிக்கலாம் என்றே சொல்வேன். அது அவர் உரிமை. நிதிச் சிக்கலில் விழுந்த பின் அதைக் கையாள்வதற்குப் பதிலாக முன்கூட்டியே அதை எதிர்கொள்ளலாம். எழுத்தாளர்கள், பதிப்பகங்கள், இலக்கிய அமைப்புகள் எனச் சம்மந்தப்பட்டோரிடம் வேலைக்கேற்பவும், அவர்களின் சக்திக்கேற்பவும் வசூலிக்கலாம்.
கடைசியாக ஒரு முக்கியமான விஷயம். இதுவரை அவர் செய்த சேவைக்கு ஈடாக தாமாக முன் வந்து அவர் வேலையைப் பயன்படுத்திக் கொண்ட எழுத்தாளர்கள், பதிப்பகங்கள், இலக்கிய அமைப்புகள் நிதி வழங்க வேண்டும். எனக்கு இன்று நிகழ்ச்சிக்கு வீடியோ எடுக்க சந்தை விலை என்னவெனத் தெரியாது. பத்தாண்டுகள் முன் எனது 'பரத்தை கூற்று' புத்தக வெளியீட்டு நிகழ்வு (சுமார் 3 மணி நேரம்) நடந்த போது அதற்கு ரு.2,000 வீடியோ எடுக்கக் கொடுத்த நினைவு. இன்று அதே போன்ற ஒரு நிகழ்வுக்கு எப்படியும் 5,000 ரூபாயாவது கொடுக்க வேண்டி இருக்கும். இதையெல்லாம் கணக்கில் கொண்டு ஒரு தொகையை ஷ்ருதி டிவியால் பயனடைந்த இலக்கிய நண்பர்கள் எல்லோரும் தம் மனசாட்சிப்படியும், தம் பொருளாதாரச் சாத்தியப்படியும் வழங்க வேண்டும் எனக் கோருகிறேன்.
வாசகர்களும் ஷ்ருதி டிவியால் அடைந்தது நிறைய என்றே சொல்வேன். அதனால் அவர்களும் அமேஸான் ப்ரைம், ஃநெட்ஃப்ளிக்ஸுக்குத் தருவது போல் ஒரு தொகையை அளிக்கலாம். இதுவும் அதே போன்ற தரமான விஷயங்களைத் தருகிறது தானே! அல்லது விக்கிபீடியா பயனர்கள் அதற்கு நிதியளிப்பது போல் நினைத்துச் செய்யலாம். ஏனெனில் இதிலும் ஏராளம் அறிதல், புரிதல் உண்டு.
கவனித்தால் இது எதுவுமே அவருக்கு நாம் செய்யும் உதவி அல்ல; தானம் அல்ல; இது தாமதமான சம்பளம்; வட்டியற்ற கடனடைத்தல். நண்பர்கள் முன்வந்து அவரைக் கம்பீரப்படுத்துக!
(இதை நேரடியாக அவரிடமே நான் சொல்லியிருக்க முடியும். ஆனால் பொதுவில் பதிவாக எழுதக் காரணம் கடைசியாக வைத்திருக்கும் கோரிக்கை தான். அவரிடம் சொன்னால் செய்ய மாட்டார்.)
Comments