Let the cat out of the bag


இது என் இரண்டாம் சிறுகதைத் தொகுதி. ஒன்பதென்பது போதுமான எண்ணிக்கையா எனத் தெரியவில்லை. போன தொகுப்பில் பதினோரு கதைகளிருந்தன. எண்ணிக்கை பொருட்டில்லை என எண்ணிக் கொள்கிறேன். (இதில் பல கதைகள் நீளமானவை.)

இவற்றில் முதலிரண்டு கதைகளும் நெடுங்காலம் முன் எழுதியவை. ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ என் முதல் சிறுகதை. சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன் எழுதியது. அப்போது குமுதம் நடத்திய ஒரு சிறுகதைப்போட்டிக்கும் பின் ஆனந்த விகடனுக்கும் அனுப்பிய நினைவு. குமுதத்தில் ஜெயிக்கவில்லை. ‘தொடர்ந்து எழுதவும்’ என்று ஒரு துண்டுச் சீட்டு விகடனிலிருந்து வந்தது. அக்கதையைத் திருத்திச் சேர்த்திருக்கிறேன்.


‘மியாவ்’ சிறுகதை ‘சகா: சில குறிப்புகள்’ என்ற தலைப்பில் சுமார் பத்தாண்டுகள் முன் சாரு நிவேதிதாவின் ‘ராஸலீலா’, ‘காமரூபக் கதைகள்’ நாவல்களின் உந்துதலில் அதே பாணியில் என் வலைதளத்தில் எழுதிய குறுங்கதைகளின் செம்மையூட்டிய வடிவம்.

மற்ற ஏழு கதைகளும் 2017 மத்தி முதல் 2018 மத்தி வரையிலான ஓராண்டில் எழுதப் பெற்றவை. இதே காலகட்டத்தில் தான் ‘ஆப்பிளுக்கு முன்’ நாவலையும் எழுதினேன். அந்த ஒரு வருட இடைவெளியை படைப்பூக்கம் வெடித்துப்பொங்கிய காலமென்பேன்.

இவற்றில் அதிகம் கவனிக்கப்பட்ட கதை ‘நான்காம் தோட்டா’. காந்தியின் இரண்டாம் கொலையாளியைத் தேடிப் போகும் கதை. ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல் எழுதியதன் பக்கவிளைவாய் உருவானதே இக்கதை. ஆனந்த விகடன் இதழில் வெளியான என் முதல் மற்றும் (இப்போதைக்கு) ஒரே கதை அது. பிற்பாடு பலரும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் பேசும் போது அக்கதையைக் குறிப்பிட்டுப் பேசி இருக்கிறார்கள். இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) வாசகர் வட்டம் தங்கள் வாராந்திரக் கூட்டத்தில் அக்கதையை வாசித்து விவாதித்தார்கள். தொகுப்பின் தலைப்பாகவும் தகுதி பெற்றதே. (ஆனாலும் எல்லாக் கதைகளுக்குமான பொருத்தப்பாடு கருதியும், ‘இறுதி இரவு’ என்ற தலைப்பின் சாயை தவிர்க்கவும் அதைத் தலைப்பாக்கும் நினைப்பைக் கைவிட்டேன்.)

‘பெட்டை’ கதை தினமணி - எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. அப்பரிசு விழாவில் உரையாடுகையில் சிவசங்கரியும், நடுவர்களில் ஒருவரான மாலனும் ‘பெட்டை’ நல்ல சிறுகதை என்றாலும் அதன் எதிர்மறை முடிவு தான் அதற்கு முதல் பரிசு தராததற்குக் காரணம் என்று என்னிடம் சொன்னார்கள். (அதாவது பெண்களைத் தவறான முடிவை நோக்கி வழிநடத்தக்கூடும் என்பதால்.)

இவற்றில் ‘காமத் தாழி’, ‘அணங்கு’ இரண்டும் இரு பிரபல வெகுஜன வார இதழ்கள் கேட்டதன் பேரில் எழுதியவை. சில காரணங்களால் அவற்றில் வெளியாகவில்லை.

‘காமத்தாழி’ பற்றி இதழ் குழுவினர் சொன்ன கருத்து: “தனிப்பட்ட முறையில் எனக்கு கதை பிடித்திருந்தது. Couple swapping என்ற விஷயத்தை நீங்கள் அதிர்ச்சி மதிப்புக்காக மட்டும் கதையின் பேசுபொருளாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை கதையின் முடிவு உணர்த்தியது. எழுத்து நடை சுவாரஸ்யமாக இருந்ததோடு பல இடங்களில் நிறுத்தி ரசித்து அசைபோடத்தக்க புதுமையான சொற்களும் வரிகளும் இருந்தன. முடிவும் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருந்தது. எங்கள் அணியில் கதையைப் படித்த மற்ற இருவரும் இதே கருத்தையே சொன்னார்கள். ஆனால் ஒரு வெகுஜன இதழில் Couple swapping-ஐக் கையாளும் கதையை வெளியிடுவதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லை என்பது ஆசிரியர் குழுவின் கருத்து. எனவே இந்தக் கதையை வெளியிட முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”

‘அணங்கு’ நிராகரிக்கப்படக் காரணம் அத‌ன் புனைவுத்தன்மை குறைந்ததன்மை. அது திட்டமிட்டு, ப்ரக்ஞைப்பூர்வமாகச் செய்ததே. அதாவது உண்மைச் சம்பவங்களையே காட்சிப்படுத்தி இருப்பேன். ஒரு பிரச்சனையை அது நிகழும் காலத்திலேயே அப்படி புனைவாக்கும் போது ‘இது தெரிந்த விஷயம் தானே!’ என்கிற பார்வை வரத் தான் செய்யும். எதிர்காலத்தில் அது பரவலாய் மறதிக்குள்ளாகும் போது அதே கதையை வாசகன் வேறு மாதிரி எதிர்கொள்வான் எனத் தோன்றுகிறது. தவிர, என் வரையில் அக்கதையின் மய்யம் ‘நங்கேலி’ என்ற தொன்மத்தை மீட்டுருவாக்கம் செய்திருப்பது. அதை எத்தனை பேர் கவனித்துப் புரிந்து கொண்டார்கள் என்பது தெளிவில்லை.

சில கதைகள் சமூக வலைதளங்களில் நிகழும் ஆண் - பெண் உறவுச் சிக்கல்களைப் பேசுகின்றன. ஆதியில் அபுனைவாய்த் திட்டமிடப்பட்டு பின் கதாரூபம் கொண்டன. இரண்டும் அடுத்தடுத்த வாரங்களில் காமதேனு, குங்குமம் இதழ்களில் வெளியாகின.

‘நீதிக்கதை’ நானெழுதிய ஒரே த்ரில்லர் கதை. ப்ளூவேல் கேம் அடிப்படையிலானது. சுஜாதாவின் ‘பாலம்’, ‘விளிம்பு’ சிறுகதைகளை, ‘ஆ…!’ நாவலை இதற்கு முன்னோடி எனலாம். இப்போது ஓராண்டு கழித்து வாசிக்கையிலும் எனக்கு மிகப்பிடித்திருந்தது.

இக்கதைகள் அனைத்திலும் பெண்களே மையப்பாத்திரம். அவர்தம் குரலே இவற்றில் ஓங்கியும் சன்னமாகவும் ஒலிக்கின்றன. தவிர, இவற்றில் பெரும்பாலான கதைகள் காமத்தை, அதன் அரசியலை மையப்படுத்திய கதைகள். ஆக, இவை யோனியின் குரல். Vaginal Monologues போல் Voice of Pussy. பூனைக்குட்டியின் கிசுகிசுப்பு. மியாவ்!

பெண் பிறப்புறுப்பை ‘Pussy’ எனக் குறிப்பது பெண்களைப் போகப் பொருளாகக் கருதும் ஓர் ஆணாதிக்கப் போக்கின் அடையாளம். அதற்கு நேரெதிர் நின்று அந்த உறுப்புக்கு ஒரு மனமும் குரலும் உண்டு என்றே இதன் கணிசமான கதைகள் பேசுகின்றன.

அதனால் தான் தொகுப்பின் முக்கியக் கதை அல்ல‌ என்ற போதும் அதன் தலைப்பை நூலுக்கு வைத்திருக்கிறேன். இத்தொகுப்பின் பெரும்பாலான சிறுகதைகளை ‘மியாவ்’ என்ற தலைப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாய் நம்புகிறேன்.

என் ஆரம்ப காலப் புனைவெழுத்துக்களுக்கு உந்துதலாய் இருந்தவர் சாரு நிவேதிதா. ‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதை நூலை 2010ல் வெளியிட்டது அவர் தான். ஆர். அபிலாஷ் ‘இறுதி இரவு’ நூல் வெளியீட்டு உரையில் சாரு நிவேதிதாவின் நீட்சி என்பதாக என் எழுத்தைக் குறிப்பிட்டார். 2017 சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி தினமலர் நாளேட்டுக்கு சாரு நிவேதிதா அளித்த பேட்டியில் ‘இறுதி இரவு’ சிறுகதைத் தொகுப்பைப் பரிந்துரை செய்திருந்தார். இத்தொகுப்பில் இருக்கும் சில கதைகளும் அவரது புனைவுலகத்துக்கு நெருக்கமானவை. அதனால் இத்தொகுப்பை அவருக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். நன்றியறிதலும் முன்னோடிக்கான மரியாதையும் இஃது.

என் அம்மா, மனையாள், மகன்கள், செல்பேசியிலேயே மொத்தத் தொகுதிக்கும் பிழை திருத்தம் பார்த்துக் கொடுத்த சௌம்யா, கதைகளை வெளியிட்ட இதழ்கள், ஐஐஎஸ்சி வாசகர் வட்டம், புத்தகமாய்க்கொணரும் உயிர்மை பதிப்பகத்தார், நூலின் அட்டையை வடிவமைத்த மீனம்மா கயல், வாங்கவிருக்கும் வாசகர்கள் - அனைவருக்கும் அன்பு.

கனடிய விஞ்ஞானப் புனைவெழுத்தாளரான ராபர்ட் சாயர் “A short story is the shortest distance between two points; a novel is the scenic route.” என்கிறார். நான் அடிப்படையில் ஒரு பொறியாளன் என்பதாலோ என்னவோ நேர்வழியே எப்போதுமென் விருப்பம். Efficiency!

ஒரு நாவல் முடித்து விட்டேன். இன்னொன்று தொடங்கி இருக்கிறேன். ஆனாலும் சிறுகதைகள் எழுதுவதே எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. அதன் சவால் தான் வசீகரமாய் இழுக்கிறது. குறைந்தது பத்து சிறுகதைகளுக்கான விரிவடைந்த கருக்கள் மனதில் சூல் கொண்டிருக்கின்றன. எழுதித் தீர்க்கத் தான் நேரம் வாய்க்கவில்லை.

இடையே பெங்களூர் வாசகசாலை குழுவினர் என் ‘கருப்பு மாளிகை’ சிறுகதையை எடுத்து விவாதித்ததும் எனது சிறுகதைக் கடமைகளை நினைவூட்டியது எனலாம்.

சிறுகதை எழுத்தாளன் என்றே எதிர்காலத்தில் நான் அறியப்படுவேன் என்பதாய்த் தோன்றுகிறது. அதற்கான இரண்டாம் அடியாய் இது இருக்கும் என நம்புகிறேன்.

சி.சரவணகார்த்திகேயன்
டிசம்பர் 18, 2018

*

('மியாவ்' சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை)

Comments

என்ன தம்பி நலமா?அப்புறம் நாடாளுமன்ற தேர்தல் வருது.உங்களை மாதிரியான முற்போக்கு போராளிகளின் உதவி எங்களுக்கு வேணும்!நல்லா மோடி ஒழிக காங்கிரஸ் வாழ்க!ஈழ படுகொலை ஓங்குக என்று நீங்க இன்னும் நல்லா சவுன்டு விடனும்!இந்த உயிர்மை காலச்சுவடு மாதிரியான ரெண்டு பேரு படிக்கிற இதழ்கள்ல நான் ஏன் மோடியை எதிர்க்கிறேன்!நான் ஏன் ராகுலை ஆதரிக்கிறேன் பதிவுகளை எழுதணும்.இன்னும் மோடிக்கு எதிரா நல்லா சவுண்டை அதிக படுத்துங்க.அப்போதான் முன்பை விட இன்னும் வலுவான மெஜாரிட்டியோட ஆட்சிக்கு வருவார்!சரியா தம்பி?வரேன்

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்