தனிப்பெருந்துணை
மணி ரத்னத்தின் ‘நாயகன்’. தமிழில் எனக்கு மிகப் பிடித்த படம். தமிழில் ஏதேனும் ஒரு படம் பற்றி நான் ஒரு நூல் எழுதுவதாய் இருந்தால் அது ‘நாயகன்’ குறித்தே இருக்குமென நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போது ஓர் இளம் இயக்குநரின் முதல் படம் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறேன் என்பது எனக்கே ஆச்சரியம் தான்!
எழுத்தாளர் முகில் தான் தன்னையறியாமல் இப்புத்தகத்துக்கான விதையை இட்டது.
நவம்பர் மத்தியில் ஒரு நாள் ‘96’ படம் பற்றிய என் தொடர் ஃபேஸ்புக் பதிவுகளைப் பார்த்து விட்டு “இது 96 குறித்த உங்களது 95-வது ஸ்டேட்டஸ். இன்னும் ஒன்றுடன் முடித்துக் கொள்ளவும்.” என்று விளையாட்டாய்க் கமெண்ட் செய்திருந்தார். அப்போது வரையில் ‘96’ படம் பற்றி சிறிதும் பெரிதுமாய் சுமார் 25 பதிவுகள் எழுதி இருப்பேன்.
அவர் சொன்னதும் தான் உண்மையிலேயே ‘96’ பற்றி 96 பதிவுகள் எழுதி அவற்றைத் தொகுத்து நூலாக்கினால் என்ன எனத் தோன்றியது. மறுநாள் மனுஷ்ய புத்திரனிடம் உயிர்மையில் இப்புத்தகம் சாத்தியமா என ஃபேஸ்புக் சாட்டில் கேட்டேன். மறுகணம் “கொண்டு வரலாம். தயார் செய்யுங்கள்” என்று பதில் வந்து விழுந்தது. ஆனால் பிறகு ஒரு கட்டத்தில் எனக்கே நூலளவுக்கு எழுத முடியுமா எனத் தயக்கமெழ, வேண்டாம் என அவரிடம் பேசினேன். ஆனால் நூலளவும் சந்தேகமின்றி “இது கலாசாரப் பதிவு. கொண்டு வந்தே ஆக வேண்டும்.” எனப் பிடிவாதம் காட்டி கொண்டு வந்தும் விட்டார்.
நான் முன்பு நினைத்ததை விட இரு மடங்கு பெரிதாய் வந்திருக்கிறது. ஆச்சரியம்!
2019 சென்னை புத்தகக் காட்சிக்குக் கொண்டு வந்திருக்க வேண்டிய என் இரண்டாம் நாவலை அப்படியே அந்தரத்தில் விடுத்து இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரே காரணம் தான். இதை எழுதப் பிடித்திருக்கிறது. இதை எழுதுகையில் சந்தோஷமாய் இருக்கிறேன். இதுவரை நான் எழுதியவற்றில் மிகச்சுகமனுபவித்து எழுதியதிதுவே.
மற்ற யாவற்றிலும் எழுதுகையில் ஒரு பிரசவ வலி இருந்து கொண்டே இருக்கும்; இதில் மனதிலிருப்பதை எழுதினால் போதுமானதாய் இருந்தது. வாசிப்பின்பம் என்று சொல்வது போல் எழுத்தின்பம் என்றும் ஒன்றிருப்பதை முதல் முறை உணர்கிறேன்.
திரைப்படக் கலைஞர்கள் பற்றி தமிழில் ஏராளம் நூல்களுண்டு. அவற்றில் சிறப்பான சில ஆக்கங்களும் உண்டு (உடனடியாய் நினைவுக்கு வருபவை ஆர்.ஆர். சீனிவாசன் தொகுத்த ‘ஜான் ஆபிரகாம்: கலகக்காரனின் திரைக்கதை’ மற்றும் பரத்வாஜ் ரங்கனின் ‘மணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல்’). சினிமாக்காரர்களால் எழுதப்பட்ட நல்ல நூல்களும் உண்டு (உதா: இளையராஜாவின் ‘யாருக்கு யார் எழுதுவது?’ மிஷ்கினின் திரைக்கதைகள்). திரைப்படம் எடுப்பது பற்றியும் நூல்கள் உண்டு (உதா: சுஜாதாவின் ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’). திரைப்பட வரலாற்று நூல்கள் இருக்கின்றன (உதா: தியடோர் பாஸ்கரன் எழுதியவை, தனஞ்செயனின் PRIDE OF TAMIL CINEMA). திரைப்பட விமர்சனங்களின் தொகுப்பு நூல்கள் ஏராளம் (நானே ஒன்று எழுதியிருக்கிறேன்).
ஆனால் குறிப்பிட்ட ஒரு திரைப்படம் குறித்து மட்டும் ரசனை சார்ந்து தனியே முழு நூல் எழுதப்பட்டிருக்கிறதா என்றால் எனக்குத் தெரிந்து ஒரே ஒரு புத்தகம் தான் தென்படுகிறது: எஸ்.ராமகிருஷ்ணனின் ‘பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள்’.
ஆனால் அது ஒரு தமிழ் படத்துக்குரியது அல்ல. ஆக, தமிழில் தமிழ்த் திரைப்படம் ஒன்று பற்றி தனி நூல் ஏதும் வந்த தடயமில்லை. அவ்வகையில் இது முதல் நூல்.
சன் டிவியில் தீபாவளிக்குப் ஒளிபரப்பு செய்து விட்டார்கள் என்றாலும் இதை எழுதிக் கொண்டிருக்கும் நாளில் பெங்களூரில் இன்னும் ‘96’ படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையிலும் ‘பதேர் பாஞ்சாலி’ போல் என்றோ வெளியான படம், Cult Classic என்று நிறுவப்பட்ட படம் பற்றிய நூல் என்பதாக அல்லாமல் சமகாலப் படத்தைப் பற்றியது என்ற வகையிலும் இந்தப் புத்தகத்தை முக்கியமானதாகக் கருதுகிறேன்.
இந்த நூலை ஏன் எழுதினேன்? ராம், ஜானு பற்றி படம் பார்த்த எல்லோருக்கும் ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. அவர்கள் என்ன செய்திருக்கலாம் என்ற அங்கலாய்ப்பு இருக்கிறது. அல்லது அவர்களைப் பற்றிய கண்ணீர் மல்கல் இருக்கிறது. எனக்கும் அப்படிக் கலவையான கருத்துக்கள் இருக்கின்றன. அதைப் பதிவு செய்ய வேண்டும் என நினைத்தேன். ஓர் அற்புதப்படத்தைக் கொண்டாட வேண்டும் என விரும்பினேன்.
பெண் தன்னைக் காதலிக்கவில்லை எனில் அவளுக்குக் கத்திக்குத்தோ அமிலவீச்சோ பரிசளிக்கும் சமூகத்தில், தான் காதலிக்கும் பெண்ணுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்றறிந்ததும் மறுவார்த்தை பேசாமல் ஒதுங்கிக் கொண்டு, வேறொரு திருமணமும் செய்து கொள்ளாமல் வாழும் அரியனை நாயகனாகக் கொண்டுள்ள ‘96’ மாதிரி காதல் படங்கள் விவாதிக்கப்பட வேண்டியவை. அதையே ஆவணப்படுத்த முயன்றுள்ளேன்.
இது சினிமா விமர்சன (Film Criticism) நூல் அல்ல; சினிமா மதிப்பீடு (Film Appreciation). இன்னும் சொன்னால் ‘96’ படத்துடனான எனது அனுபவங்கள்; அதைப் பற்றிய என் புரிதல்கள்; அதில் நான் ரசித்த அழகியல்கள். மேற்கே Companion நூல்கள் உண்டு. ஒரு பொருளுக்கு அல்லது படைப்புக்குத் துணை நூல். அதை மேலும் நன்றாகப் புரிந்து கொள்ளவும், இன்னும் அதிகம் ரசிக்கவும் அல்லது பயன்படுத்தவும் உதவி செய்வது. இப்புத்தகத்தை அவ்வகையாகவும் காணலாம். அதாவது ‘96’ன் தனிப்பெருந்துணை!
இந்நூலுக்குத் தலைப்பளித்தது நண்பன் இரா. இராஜராஜன். அட்டை வடிவமைத்தது மீனம்மா கயல். பிரதியை வாசித்துக் கருத்துரைத்து, பிழை திருத்தியது சௌம்யா. இந்நூல் வருவதில் அதிக ஆர்வம் காட்டியவர் சக ’96’ பட வெறியரான பா. ராகவன். சில நண்பர்கள் என்னுடன் இந்தப் படம் பற்றித் தீவிரமாய் விவாதித்திருக்கிறார்கள். எப்போதும் போல் உற்சாகமூட்டி ஒத்துழைத்தது என் மனைவி ந. பார்வதி யமுனா. என் அம்மைக்கும் பிள்ளைகட்கும் அதில் பங்குண்டு. அனைவருக்கும் என் பிரியங்கள்.
அட்டை வடிவமைக்க உயர்துல்லியப் படங்கள் நல்கிய கோபி பிரச்சன்னாவுக்கும் நூலாக்கத்தில் உழைத்த செல்வி முதலான உயிர்மை குழுவினருக்கும் என் நன்றி. (பல தவணைகளில் பிழை திருத்தங்களும் மாற்றங்களும் சொல்லியும் சலிக்காமல் செய்து கொடுத்த உயிர்மையின் இரா.வேல்முருகன் அவர்களுக்குப் பிரத்யேக நன்றி.)
இதை எழுதி முடிக்கையில் ஒரு முழுநீளத் திரைக்கதையில் பணியாற்றிய உணர்வு எழுகிறது. அவ்வளவு தூரம் இதோடு ராமாய் ஜானுவாய்ப் பயணம் செய்து விட்டேன்.
என் அபிப்பிராயத்தில் தமிழ் சினிமா வரலாற்றின் ஒரு முக்கியமான காதல் படம் ‘96’.
நான் சொல்லும் சில விஷயங்களை இயக்குநர் யோசிக்காமலும் இருந்திருக்கலாம். ஆனால் ராமும் ஜானுவும் இப்போது ரசிகர் சொத்து. அவர்களை எப்படியும் நாம் புரிந்து கொள்ளலாம். அதில் தடை சொல்லப் படைப்பாளிக்குமே உரிமையில்லை.
சொல்லப் போனால் இயக்குநரே கருவி தான். ராமும் ஜானுவும் அவரது விரல் வழி கணிணியிலோ, தாள்களிலோ, இறுதியில் டிஜிட்டல் ஹார்ட் டிஸ்க்களில் இறங்கித் தம் அபிலாஷைகளை இதில் பூர்த்தி செய்து கொண்டதாய்த்தான் எண்ண வேண்டி இருக்கிறது. ஆதாம் ஏவாள் போல் ராமும் ஜானகியும் மொத்த மானுடத்தின் சின்னம்!
படம் பற்றிய அத்தனையையும் எழுதித் தீர்த்து விட்டேனா எனத் தெரியவில்லை. இப்போதைக்கு நிறுத்தி வைக்கிறேன். பிரிவுகள் இல்லாமல் என்ன பெரிய காதல்!
பெங்களூரு மஹாநகரம்
பாரதி பிறந்த நாள், 2018
*
('96: தனிப்பெருங்காதல்' நூலுக்கு எழுதிய முன்னுரை)
Comments
நூலுக்கு மிக்க நன்றி.
வழியொன்று உண்டெனில் கூறவும்!?
இஸ்லாம் குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் அதுவும் சமீப காவி மோடி ஆட்சி வந்தபிறகான கதையாடல்கள் போலியான பிம்பங்கள் விஷமத்தனமான எண்ணங்கள் அதிகரித்துள்ளதை காண முடிகிறது.இதற்கு ஒரே மருந்து மனித இனத்திற்கே வழிகாட்டியாக இறங்கிய திருக்குர்ஆன் மட்டுமே.அதையும் சிலர் விஷமத்தனமாக வெட்டி ஒட்டி பொய்யான அர்த்தம் கூறி திரிக்கும் வேலைகளை காண முடிகிறது.வேறு என்ன செய்யலாம்?இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு மட்டும் இலவசமாக திருக்குர்ஆன் வழங்குவதே அந்த வழி.நண்பரே நீங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.நீங்கள செய்ய வேண்டியதெல்லாம் 1800-2000-787 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் பெயர் முகவரியை தெரிவிப்பது மட்டுமே.திருக்குர்ஆன் உங்களை தேடி வரும்.நன்றி.
1) https://puthinambooks.in/c-saravana-karthikeyan/96-thanipperunkaathal
2) https://www.commonfolks.in/books/d/96-thanipperunkaathal
3) தொலைபேசி / WhatsApp: 84894 01887 (கதிரேசன்)
i'm drawing tamil albhabet chart for my sister's baby...
one doubt while writing in that chart. just answer to this only...
உயிர் எழுத்துகள் ? or உயிர் எழுத்துக்கள்?
மெய் எழுத்துகள்? or மெய் எழுத்துக்கள்? க் வருமா வராதா?
எழுத்துக்கள் என்பது சரியா, எழுத்துகள் என்பது சரியா எனும் உங்கள் கேள்விக்கான விடையை அறிய http://madhavipanthal.blogspot.com/2012/06/blog-post.html எனும் இணைப்பில் உள்ள கட்டுரையைப் படித்துப் பாருங்கள்! தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் வழங்கியுள்ள மிகச் சிறப்பான விளக்கம்!