சோஃபியா எனும் வனயட்சி


A voice so thrilling ne'er was heard
In spring-time from the Cuckoo-bird,
Breaking the silence of the seas
Among the farthest Hebrides.

- William Wordsworth (The Solitary Reaper)

இவ்விஷயத்தில் எதிரணி பாஜக என்பதை நீக்கி விட்டு, நிதானமாக யோசித்தாலுமே கூட சோஃபியா செய்தது தவறு இல்லை என்றே தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால் அது கொண்டாடப்பட வேண்டியது.

எனக்குத் தெரிந்து சோஃபியா என்ற இளம் பெண் விமானத்திலும், விமான நிலையத்திலும் "ஃபாசிஸ பாஜக - ஆர்எஸ்எஸ் அரசு ஒழிக" என்று தமிழிசையைப் பார்த்துக் கோஷம் போட்டிருக்கிறார். மற்றபடி, அவர் மீது உடல்ரீதியான தாக்குதல் ஏதும் தொடுக்கவில்லை. அதற்கான முஸ்தீபுகளிலும் இறங்கவில்லை. அவரை மிரட்டவில்லை. கண்ணியமற்ற சொற்கள் ஏதும் பிரயோகிக்கவில்லை. தான் நம்பும் ஒரு கருத்தை - அதாவது இந்தியாவின் ஃபாசிஸ ஆட்சி நடக்கிறது என்பதை - அக்கட்சியின் பிரதிநிதி ஒருவரைப் பார்க்கும் போது பொதுவெளியில் பகிர்கிறார். அரசியல் சாசனச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின் படி இதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு ("All citizens shall have the right to freedom of speech and expression").


ஏன் அப்படி கோஷம் போட்டுச் சொல்ல வேண்டும், காதில் ரகசியமாய்ச் சொல்லி இருக்கலாமே என்று நீங்கள் கேட்பீர்கள் என்றால், அப்படி சொல்லி இருந்தால் "மூடிட்டு போடி" என்று தான் அப்பெண்ணிற்குப் பதில் சொல்லி இருப்பார் தமிழிசை (எந்த அரசியல்வாதியாக இருந்தாலுமே அதைத் தான் செய்வார்). அதனால் யதார்த்தச் சாத்தியக்கூறாய் தன் எல்லைக்குள் நின்று தன்னால் சாத்தியமான எதிர்ப்பை அந்தப் பெண் செய்திருக்கிறார். இது ஒரு போராட்ட முறை. இது பொதுமக்களுக்கு இடையூறு என ஒருவர் சொன்னால், ரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும் தலைவர்கள் வரும் போது வாழ்க கோஷம் போடுவதும் அதில் தானே வரும்? அதை ஏன் நாம் கண்டிப்பதில்லை?

இன்னொரு கேள்வி கேட்கிறார்கள். இதுவே ஜெயலலிதா என்றால் இப்படிச் சொல்லும் தைரியம் வந்திருக்குமா? தமிழிசை என்பதாலும் பாஜக என்பதாலும் தானே இந்த இளக்காரம் என்று கேட்கிறார்கள். ஆம், உண்மை தான். ஆனால் இதைச் சொல்ல ஜெயலலிதா தரப்பினர் வெட்கப்பட வேண்டும். எதிர்த்துப் பேசினால் கைது என்பது மட்டும் ஃபாசிஸம் அல்ல‌; எதிர்த்துப் பேசவே பயப்படுமளவு வைத்திருப்பதும் ஃபாசிஸம் தான். இங்கே எதிராளி யார் என்பதெல்லாம் விஷயமே இல்லை. அந்தக் கோஷமிட அவருக்கு உரிமை இருக்கிறதா என்பது தான் விஷயம்.

சோஃபியா கிறிஸ்தவர் என்ற கோணத்தைச் சிலர் முன்வைக்கிறார்கள். நான் அதனால் தான் அவர் கோஷமிட்டார் என நினைக்கவில்லை. ஒரு பேச்சுக்கு அப்படி நம்ப விரும்புபவர்கள் வழியிலேயே சென்று அந்த அடிப்படையில், அவர்களின் பிரதிநிதியாகத் தான் கோஷமிட்டார் என வைத்துக் கொள்வோம். அதிலும் ஒரு செய்தி இருக்கிறது. இந்த ஆட்சியில் சிறுபான்மையினர் நிம்மதியாக இல்லை என்று சொல்கிறார். அதுவும் பொருட்படுத்தத் தகுந்த எதிர்ப்பு தானே? அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் தானே? அவர்களுக்கும் எல்லாம் உரிமைகளும் உண்டு தானே? தவிர, இப்படிச் சொல்பவர்களின் பிரச்சனை அவர் கோஷமிட்டதா அல்லது அவர் எந்தத் தரப்பைச் சார்ந்தவர் என்பதா?

இன்னும் சிலர் அவர் இரு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்தினார் என்கிறார்கள். வழக்கும் அப்படித்தான் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எப்படி? அவர் தன் தரப்புக்கு ஆள் திரட்டினாரா? அவர்களையும் கோஷமிடத் தூண்டினாரா? இந்தக் குற்றச்சாட்டில் அந்த "இரண்டு பிரிவுகள்" என்பது யார்? இந்துக்கள், கிறிஸ்தவர்களா? அவர் ஒரு கட்சியை அல்லது ஆட்சியை எதிர்த்தாரா அல்லது குறிப்பிட்ட மதத்தையா? ஜோடனை என்றாலும் தர்க்கம் வேண்டாமா?

கோஷமிடும் முன்பே ட்வீட் செய்திருக்கிறார் சோஃபியா, அதனால் இது திட்டமிட்டது என்று சொல்கிறார்க‌ள். அடிப்படை அறிவு கொண்டவர்களுக்குக் கூட இது எவ்வளவு பிழையான புரிதல் என்பது தெரியும். திட்டமிட்டுச் செயல்படுபவர் வேலையைச் செய்வதில் முனைப்பாய் இருப்பாரா, அல்லது ட்வீட் போட்டுக் கொண்டிருப்பாரா? ட்வீட் போட்டது, கோஷமிட்டது இரண்டுமே அந்த அரை மணி காலவெளியில் அவர் மனம் கொந்தளித்ததில் செய்த உணர்ச்சிவசப்பட்ட செயல்கள் தாம் என்பதையே இது காட்டுகிறது. தவிர, திட்டமிடுமளவு என்ன பெரிய குற்றம் நடந்து விட்டது?

எழுதப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் காட்டி இச்செயல் குற்றம் என நிரூபிக்க முடியலாம். ஆனால் அறம் என்று ஒன்று இருக்கிறது. எவருக்கும் எதிர்மறைப் பாதிப்பற்ற ஓர் எதிர்ப்புக்கு அவர் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குமளவு அடிப்பது அயோக்கியத்தனம் தான். தமிழிசையின் இடத்தில் முக ஸ்டாலின் இருந்தாலும் இதையே தான் சொல்வேன்.

தமிழிசை என்ற தனி மனுஷிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு என்ன பதில் எனக் கேட்கிறார்கள். தமிழிசை தனி மனுஷி அல்ல; ஒரு கட்சியின் தலைவி. பொது வாழ்க்கையில் இருப்பவர். அப்படி இருப்போருக்கு இம்மாதிரி எதிர்ப்புகள் சகஜம். இதற்குத் தயங்குவோர் பொது வாழ்க்கைக்கே வரக்கூடாது. பெரியாரைப் படித்திருந்தால் இந்த அறிவெல்லாம் இருந்திருக்கும். நோகாமல் நுங்கு தின்ன முடியாது. தவிர, பாஜக மாதிரி ஒரு கட்சியில் இருக்கும் போது இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். பாஜக ஆட்சியில் இல்லாத போது ஏதாவது இப்படி நடந்திருக்கிறதா? இல்லை. எனில் மக்களுக்கு அந்த ஆட்சியின் மீதான அதிருப்தி இருப்பதைத் தானே இச்சம்பவங்கள் காட்டுகின்றன? மற்றபடி சோஃபியாவுக்கும் தமிழிசைக்கும் தனிப்பட்ட முறையில் வாய்க்கால் தகராறா என்ன! இம்மாதிரி சம்பவங்களிலிருந்து ஓர் அசலான அரசியல்வாதி கற்றுக்கொள்ளத்தான் பார்ப்பான். தாம் தூம் என்று குதித்து சேம்சைட் கோல் போடுவது போல் உளறிக் கொண்டிருக்க மாட்டான். பூனை கண்கள் மூடிக் கொண்டால் பூமி இருண்டிடாது. அப்பெண்ணின் வாயை மூடி விட்டால் கள நிலவரமே மாறி விடுமா? நான் தமிழிசையின் இடத்தில் இருந்தால் சோஃபியா மீதான வழக்கை வாபஸ் வாங்கி விட்டு, பாஜக எம்மாதிரியான ஒரு கோமாளித்தன நிலையில் தமிழகத்தில் இருக்கிறது என டெல்லி மேலிடத்துக்கு விரிவாய் அறிக்கை அனுப்பித் தெரியப்படுத்துவேன். அது காது கொடுக்கப்படவில்லை எனில் கட்சியை விலகுவேன்.

"அந்தப் பெண்ணின் பின்புலம் மீது சந்தேகம் வருகிறது, அவர் என் உயிருக்கு ஆபத்து உண்டாக்க முயன்றார்" என்று சொல்வது எல்லாம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பாணி. ஒருவன் உன்னை எதிர்த்தால் அவன் மீது தேசத்துரோகி என முத்திரை குத்து, முடித்தால் தீவிரவாதி என நிரூபி, இறுதியில் வாயில் சுடு என்பது தான் ஃபாசிஸம். இன்றைய பாஜக அரசு அதைத் தான் செய்து வருகிறது. மிகத் துல்லியமாக அதைத் தான் எதிர்த்துக் குரல் கொடுத்தார் சோஃபியா. அவரது மீதே ஃபாசிஸத்தை ஏவி அதை நிரூபிக்கிறார்கள். Ghoul சீரிஸில் சொல்வது போல் எதை எதிர்த்துக் குரல் கொடுத்தார்களோ அதையே அதற்குப் பதிலாகச் சொல்லி அந்த எதிர்ப்பு சரி தான் என அவர்களே ஒப்புக் கொள்ளும் முட்டாள்தனம்.

மறுபடி அழுத்துகிறேன். தமிழிசை மீது அந்தப் பெண் காட்டிய எதிர்ப்பு என்பது எல்லைக்குள் நிற்பதால் மட்டுமே இதை ஆதரிக்கிறேன். அவர் தமிழிசை மீது தாக்குதல் நடத்தி இருந்தாலோ, ஆபாச மொழிகள் பேசி இருந்தாலோ, செருப்பை எறிந்திருந்தாலோ, மை பூசியிருந்தாலோ நிச்சயம் அதை ஆதரிக்க மாட்டேன். ப.சிதம்பரம் மீது, அரவிந்த் கேஜ்ரிவால் மீது செருப்பு வீசியதை நான் ஆதரிக்கவில்லை. அதெல்லாம் எல்லை மீறல். ஆனால் இது குரல்வளையை நெரிக்கும் வேலை. இன்று காந்தி இருந்து இந்த ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தால் கூட கைது செய்திருப்பார்கள் போலிருக்கிறது.

கைதை ஏன் எதிர்க்க‌ வேண்டும்? இது கருத்துரிமையைக் கொலை செய்யும் வேலை. பாஜகவை எதிர்ப்போரை நோக்கி பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் செயல். நான் பேசிக் கொண்டிருப்பது இந்துத்துவா ஆட்களுக்கும் சேர்த்துத் தான். நாளை இடதுசாரிகளை, காங்கிரஸை, இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்க்க உங்களுக்கும் குரல் இல்லாமல் செய்வார்கள். அதற்கு இந்த நிகழ்வு உதாரணமாகக் காட்டப்படும். அந்தச் சுரணை கூட இல்லாமல் கைதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

சோஃபியாவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? அவரது துணிச்சல் முக்கியமானது. சோஃபியா இளங்கன்று என்பதால் பயமறியாமல் செய்திருக்கலாம் தான். ஆனால் இன்று எத்தனை இளங்கன்றுகள் பயமின்றி இருக்கின்றன? தினமும் கழுநீரும், வைக்கோலும் கிடைத்தால் போதும் என்றே பெரும்பாலான இந்திய இளங்கன்றுகள் இருக்கின்றன. நான் அவ்விடத்தில் இருந்திருந்தாலும் இங்கிதம் அல்லது விளைவுகள் கருதி வாயை மூடிக் கொண்டு தான் இருந்திருப்பேன். ஆனால் சோஃபியா எந்த அச்சமுமின்றி தைரியமாய்த் தான் நம்பும் ஒரு கருத்தைப் பொதுவெளியில் வைத்திருக்கிறார். அவர் பெண் என்பதும், சிறுவயது என்பதும் இச்செயலுக்கான மரியாதையைக் கூட்டுகிறது. கனடாவில் உயர்கல்வி பயின்று வருபவர் என்ற பின்புலத்தை வைத்துப் பார்க்கும் போது இந்த அக்கப்போர்களில் எல்லாம் இறங்காமல் பணத்தால் அலங்கரித்த சொகுசு வாழ்க்கை ஒன்றை மட்டும் அவர் கவனித்திருக்கலாம். ஆனால் அவர் அதை மீறி தன் நாட்டைப் பற்றிக் கவலை கொண்டிருக்கிறார். அவர் இன்றைய தலைமுறைக்கு ஓர் உதாரண ஆளுமை. Youth Icon!

இந்திய அரசியல் சாசனம் சொல்லும் கருத்துரிமை என்பது ஏட்டுச்சுரைக்காய் அல்ல; ஒவ்வொரு குடிமகனின் யதார்த்த உரிமை என்று உண்மையிலேயே நம்பிக்கை கொண்டிருக்குமானால் நீதிமன்றம் அவரை விடுவிக்க வேண்டும்.

*

Comments

Anonymous said…
இதே கருத்துரிமை தான் உதயகுமாருக்கும் இருந்திச்சு
ஆனால் அவனுக்கு சாவுதான் கிடைச்சிச்சு

( இந்த கமெண்ட் வெளிவராது என்பது எனக்கு தெரியும் )
John said…
ஆமா அந்த பொண்ணு ஐய்யாசாமீ விட்டுடுங்க இனி இந்தமாதிரி பண்ண மாட்டேன்.ஏதோ இணைய போராளிங் கஉசுப்பி வீட்டதுல சவுண்டே விட்டுட்டேன்.வெளிநாட்டு விமானத்துல இதேமாதி.தி சவுண்டு லிடேடிருந்தா உள்ள தள்ளியிருப்பான்.ஏதோ நா சொகுசா வெளிநாட்ல இருந்துட்டு போகாம ஜிவாஜி ரஜினி மாதிரி எனக்கு சம்மந்தமே இல்லாத இந்தியாவுக்காக சவுண்ட் விட்டுட்டேன் அப்படின்னு மன்னிப்பு குடுத்துட்டு பாஸ்போர்ட் ஐ திரும்ப வாங்கிட்டு ஒடிடுச்சாமே?நீ என்னடான்னா வன யாட்சி மிளகா பச்சின்னு காமெடி பண்ணிட்டு இருக்க

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்