இரண்டாம் எமர்ஜென்ஸி


ஹாலிவுட்டில் சமீப எதிர்காலம் பற்றிப் பல படங்கள் எடுத்திருப்பார்கள். ஆனால் இந்தியாவைப் பற்றி அப்படியான‌ படம் - அதுவும் Dystopian சமூகமாக வர்ணித்து - ஒன்றை இவ்வளவு சீக்கிரம் பார்ப்பேன் என எதிர்பார்க்கவே இல்லை. Ghoul (Season1) மிகச் சிறப்பான படம். வெப்சீரிஸை ஏன் படம் என்று சொல்கிறேன் என்றால் இந்த சீஸன், 3 எபிஸோட்கள் (Out of the Smokeless Fire, The Nightmares Will Begin மற்றும் Reveal Their Guilt, Eat Their Flesh) மட்டுமே. இறுதி டைட்டில் கார்ட் கழித்தால் இரண்டு மணி நேரத்துக்கு சற்று கூடுதல் நேரம் தான் ஓடுகிறது.

இந்தியாவின் இரண்டாம் எமெர்ஜென்ஸி பற்றிய படம் Ghoul. அதாவது இன்றைய மதச் சகிப்பின்மையற்ற, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான ஆட்சி நீட்டித்தால் என்ன ஆகும் எனச் சிந்தித்திருக்கிறார்கள். குழந்தைகளின் புத்தகங்களைக் கூடத் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி அவற்றை பிடுங்கி எரிக்கும் ஓர் அரசு. மக்கள் சிந்திப்பதை, எதிர்த்துக் கேள்வி கேட்பதை விரும்பாத அராஜக அரசு. மாட்டுக்கறியை வெறுக்கும் அரசு. ஒரு மதத்தையே எதிரியாகக் கருதும் அரசு. அதை விட முக்கியமாய் அதை எதிர்ப்போர் அனைவரும் தேச விரோதிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள்; அதை அப்படியே பின்பற்றுவதே தேசபக்தி என அதன் அதிகாரிகள் நம்புகிறார்கள். இன்றைய சூழலில் இது மிகத் தைரியமான படம்.

அதை ஓர் அமானுஷ்யப் படமாக்கி இருக்கிறார்கள். கவுல் என்ற பண்டைய அரேபிய நாட்டுபுறப் பேயயை அடிப்படையாக வைத்த கதை. நன்றாக வந்திருக்கிறது. ஹாரர் இல்லாமல் த்ரில்லராக எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது ஒரு பகுத்தறிவாளனாக என் கருத்து என்றாலும் இந்த வடிவும் எனக்கு மிகப் பிடித்திருந்தது. ஒருவகையில் இது உளவியல் த்ரில்லரும் கூட. படம் முழுக்கவே ஒற்றைக் கைதி ஒட்டுமொத்த விசாரணை குழுவுடன் நிகழ்த்தும் உளவியல் விளையாட்டு தான் எனலாம்.

படத்தில் எங்குமே தொய்வில்லை. எல்லாமே கச்சிதமான, அவசியமான காட்சிகள். கூர்மையான, சுருக்கமான வசனங்கள். படத்தின் மையக்கருத்தான விஷயத்தை கூட ஆவேசமாகப் பாடமெடுக்காமல் நான்கைந்து வார்த்தைகளில் கதைக்கு அவசியமான இடத்தில் சொல்லிச் செல்கிறார்கள் ("This is what exactly he is fighting against" என்று ராதிகா இறுதியில் சொல்வது - அதாவது "அவர் போராட்டம் நியாயம் என்று அதை ஒடுக்குவதன் மூலமே நிரூபித்து விட்டீர்கள்" என்ற பொருளில்). படம் சில இடங்களில் The Shape of Water-ஐ நினைவூட்டியது. படத்தின் இறுதியில் இரண்டாம் சீசனுக்கான கொக்கியை அழகாக வைக்கிறார்கள். படத்தின் டீட்டெய்லிங் மலைக்கச் செய்கிறது. இதன் பின் இயக்குநர், திரைக்கதையாசிரியர் பேட்ரிக் க்ரஹாமின் அசுர உழைப்பு இருக்க வேண்டும்.

இந்தியா உண்மையில் அதன் அசலான அமானுஷ்யத் திரைப்பட மொழியைக் கண்டறியவில்லை என்றே சொல்வேன். நாம் எடுக்கும் பெரும்பாலான படங்கள் மேற்கின் பேய்களைப் பிரதிபலிப்பவையே. இன்னும் சரியாகச் சொன்னால் கிறிஸ்துவம் முன்வைக்கும் பேய்களையே நம் சினிமாக்கள் திரும்பத் திரும்பக் காட்டி இருக்கின்றன. நம் பாரம்பரியத்தில் புதைந்திருக்கும் அமானுஷ்யங்களை நாம் அதிகம் கண்டுகொள்ளவில்லை. தமிழில் வந்த சிறந்த பேய்ப் படங்கள் என பீட்ஸாவைவும், டிமான்டி காலனியையும் சொல்வேன். அதில் இரண்டாவது மட்டும் கொஞ்சம் இந்தியத்தனம் கொண்டிருந்தது. மர்மதேசம் விடாது கருப்பு சீரியலையும் இதில் கணக்கு வைக்கலாம். அவ்வகையில் Ghoul கூட இந்தியப் பின்னணியிலான அரேபியப் பேய் தான்.

படத்தின் ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் நாம் ஓர் இந்தியப்படத்தைத் தான் பார்க்கிறோமா என்ற பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. (படம் முழுக்க ஒளி ஊடுருவல் தடுக்கப்பட்ட ஒரு விசாரணை மையத்தில் நடக்கிறது.) சிறப்பு விசாரணைப் பயிற்சி மாணவி நீதா ரஹீமாக நடித்திருக்கும் ராதிகா ஆப்தேவின் நடிப்பை ஒவ்வொரு முறையும் சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நடிகர்களில் கமல் ஹாசன் போல் நடிகைகளில் ராதிகா ஆப்தே எனக்கு! அவ்வளவு தான். கர்னலாக வரும் மானவ் கவுல், லெஃப்டினன்டாக வரும் ரத்னபாலி பட்டாச்சார்ஜி, தீவிரவாதி அலி சையதாக வரும் பால்ராஜ் மஹேஷ், ராதிகா ஆப்தேவின் அப்பாவாக வரும் எஸ்எம் ஜாஹீர் ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினலான Sacred Games-ஐ விடவும் இதுவே நன்றாக இருக்கிறது. தினம் ஓர் எபிஸோட் பார்க்கலாம் என நேற்றிரவு தொடங்கியவன் நிறுத்த முடியாமல் மூன்று எபிஸோட்களையும் பார்த்து முடித்தேன். அவசியம் பாருங்கள்.
*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்