கலைஞர் - நீயா நானா: விடுபட்டவை


கலைஞர் சிறப்பு நீயா நானாவில் கலந்து கொண்டு நான் பேசியதில் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது போக, மீதிக் கேள்விகளுக்கு என் மனதில் தோன்றிய பதில்கள் (இவற்றை அன்றிரவே ஃபேஸ்புக்கில் எழுதி இருந்தேன்). இவ‌ற்றில் புகைப்படம் பற்றிய கேள்வி மட்டும் பேசி வரவில்லை; மற்றவை பேச வாய்ப்புக் கிடைக்கவில்லை. இவற்றில் முதல் மூன்று கேள்விக்குமான பதில்கள் சொல்ல வாய்ப்புக் கிடைத்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என ஆதங்கம் உண்டு. ஆனால் ஆறு மணி நேர ஷுட்டிங்கைச் சுருக்கி ஒரு மணி நேர நிகழ்வாய்க் காட்டும் நிர்ப்பந்தம் இருப்பதும் புரிகிறது.

கலைஞரிடம் விஞ்சி நிற்பது பண்டைய முகமா நவீனத்தின் முகமா?

சந்தேகமே இல்லாமல் நவீனத்தின் முகம் தான். நாம் கலைஞரின் பண்டைய முகம் எனக் கருதும் குறளோவியமும், சங்கத்தமிழும், தொல்காப்பியப் பூங்காவும் கூட உண்மையில் நவீனத்துவத்தின் முகம் தான். அவர் அந்தப் பழைய விஷயங்களை இன்றைய தலைமுறைக்கு அவர்களுக்குப் புரியும், அவர்கள் ரசிக்கும் நவீன வடிவில் கடத்த முயன்றார். அவர் தமிழகத்துக்குச் செய்த நவீன பங்களிப்புகள் டைடல் பார்க் கட்டியதும் மேம்பாலங்கள் கட்டியதும் மட்டுமல்ல. அவர் பொருளாதார மற்றும் சமூகத் தளங்களிலும் நவீனத்தைப் புகுத்தினார். ஏதொன்றில் பழைய சிக்கல்களை அகற்றும் எளிமைப்படுத்தலைக் கொணர்வதும் நவீனமயமாக்குதலே. இரு உதாரணங்கள் உழவர் சந்தை மற்றும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள். ஒன்றில் இடைத்தரகை அகற்றி விவசாயிகளுக்கு நேரடிப் பலன் கிட்டச் செய்தார். அது ஒரு பொருளாதாரப் புரட்சி. அடுத்ததில் சாதி வேற்றுமை களைந்த ஒரு மாதிரித் தமிழ்ச் சமூகத்தை உண்டாக்கிக் காட்ட முயன்றார். அது ஒரு சமூக மீட்டுருவாக்கம். இப்படி அவர் எல்லா இடங்களிலும் நவீனத்தைப் புகுத்தினார்.

கலைஞரிடம் நீங்கள் வியந்த ஒரு விஷயம் என்றால் எதைச் சொல்வீர்கள்?

அவர் மக்களின் மனதைத் துல்லியமாகப் புரிந்து வைத்திருந்தது. ஜனநாயக அமைப்பில் அது ஒரு தலைவனுக்கு முக்கியப் பண்பு. ஓர் உதாரணம் 2016 தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி காண "பழம் நழுவிப் பாலில் விழும்" என்று சொல்லிக் காத்திருந்தார். முந்தைய ஆட்சி மீதான அதிருப்தி காரணமாய் நிச்சயம் திமுகவே ஆட்சிக்கு வரும் என்று பரவலாய்க் கருத்து இருந்த சமயம் அது. அச்சூழலில் ஒரு பேரியக்கம் ஏன் இப்படி ஒரு காளான் கட்சியிடம் கூட்டணிக்குக் காத்திருக்க வேண்டும் என நண்பர்களிடம் பொருமி இருக்கிறேன். அப்போது பல திமுக அனுதாபிகளுக்கும் அதே கருத்து இருந்திருக்கும். ஆனால் கலைஞர் அப்படி உணர்ச்சிவசப்படாமல் துல்லியமாய்க் கணித்திருக்கிறார் - தேமுதிகவை வெளியே விட்டால் மூன்றாம் அணி அமைந்து வாக்குகளைப் பிரிக்கும், அது திமுகவுக்குப் பாதகமாகும் என. அதனால் தான் அதைத் தவிர்க்க இறங்கிப் போயிருக்கிறார். (அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவர் கூட இல்லை. அதனால் உளவுத்துறை இத்தகவலை அளித்திருக்கும் வாய்ப்பும் குறைவு.) தேர்தல் முடிவுகள் அவர் கணிப்பை உறுதிப்படுத்தின. திமுக தோற்ற கணிசமான தொகுதிகளில் தோற்ற வித்தியாசத்தை விட தேமுதிக / மநகூ வேட்பாளர்கள் அதிக வாக்குப் பெற்றிருந்தார்கள். அவர் கூட்டணிக்குக் காத்திருக்கக் காரணம் அதை முன்பே ஊகித்தது தான்.

கலைஞருக்கு நீங்கள் தனிப்பட்டு நன்றி சொல்ல நினைப்பது எதற்கு?

தனிப்பட்டு என்று சொல்வதை விட சித்தாந்தரீதியாக என்று வைத்துக் கொள்ளலாம். திராவிடம் என்ற கருத்தாக்கம் இன்று அவசியமானது என்றும், அது வெல்லக்கூடியது என்றும் கடந்த ஐம்பதாண்டுகளில் நிரூபித்ததற்காக. அதனால் என்னை, எம் தலைமுறையை சரியான பாதையில் திராவிடத்தை நோக்கி ஈர்த்ததற்காக நன்றி சொல்ல வேண்டும். இன்று கம்யூனிஸம் வீழ்ந்து விட்டது என்கிறார்கள். ஏன்? கம்யூனிஸக் கட்சிகள் ஆட்சியை இழந்து விட்டதை, அவர்கள் தவறான ஆட்சி முறையால் மக்கள் அவர்களை வெறுத்து விட்டதையே சித்தாந்தத் தோல்வியாகச் சித்தரிக்கிறார்கள். அந்த ஆபத்து எல்லாச் சித்தாந்தத்துக்கும் உண்டு. திராவிடத்துக்கும் இருந்தது. ஆனால் கலைஞர் அதை நடக்க விடாமல் பார்த்துக் கொண்டார். சமூக நீதி, மொழியுரிமை, மாநில சுயாட்சி என திராவிடம் இன்றும் அவசியமான, வெல்லும் சித்தாந்தம் என்று நிரூபித்துக்காட்டினார். மற்ற திராவிடக் கட்சிகளுக்கும் தானே அதில் பங்குண்டு எனக் கேட்டால் பெயரில் திராவிடம் கொண்டுள்ள கட்சிகள் எல்லாம் திராவிடக் கட்சிகள் என்று ஆகி விட முடியாது. அதையும் மீறி சில பங்களிப்புகளை அவர்கள் தம்மையறியாமல் செய்திருக்கலாம். மறுக்கவில்லை. நான் சொல்வது திட்டமிட்டுச் செய்தது.

உங்களுக்குப் பிடித்த கலைஞரின் புகைப்படம் எது?

எனக்குத் தோன்றிய புகைப்படங்களைச் சொல்லி விட்டார்கள். அதனால் வேறு இரண்டைச் சொல்ல நினைக்கிறேன். ஏதோ ஓர் இதழின் பேட்டியில் லுங்கியும் முண்டா பனியனும் அணிந்திருக்கும் போது எடுத்த புகைப்படம். அதில் ஓர் எழுத்தாளனின் பிம்பம் இருந்தது. அடுத்து அவரது மனைவி ராஜாத்தி அம்மாள் உணவு பரிமாற, அதை அவர் சாப்பிடும் படம். இந்தியா டுடேவில் வந்தது. அவர் ஒரு குடும்பஸ்தராகவும் சிறப்பாகச் செயல்பட்டார் என்ற உணர்வைத் தரும் படம்.

நீங்கள் பார்த்த முதுமைக் கால கலைஞர் வீடியோக்களில் உங்களை நெகிழ வைத்தது எது?

தன்னைச் சந்திக்க வந்த பேராசிரியர் அன்பழகனின் கையைப் பற்றிக் கொண்டு முத்தமிட்ட வீடியோவைச் சொல்வேன். ஒரு பேரரசியல்வாதி கனிந்திளகி பெருந்தோழனாய் மட்டும் நின்ற தருணம். என் மூப்பில் என் நெருங்கிய நண்பர்களை அதே போல் அணுகுவேனோ எனத் தோன்ற வைத்த காட்சி. அதனால் அந்த வீடியோ பிடிக்கும்.

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்