கருப்பின் அழகு
காலா சுமார் எனப் பார்த்த முதல் நாளே சொல்லி இருந்தேன். அது எவற்றை ஒட்டி எழுந்தது என்பதைப் பார்ப்போம்.
1) காலாவின் பாத்திர வார்ப்பு (பெரும்பாலும்) இயல்பானதாக இருந்தது. ரஜினி படம் என்பதை வைத்துப் பார்க்கும் போது இது அரிதினும் அரிய நிகழ்வு. (மனைவியை மீண்டும் சந்திக்கும் இடம் தவிர கபாலி இயல்பாய்க் கட்டமைக்கப்பட்ட கதாபாத்திரம் அல்ல. ஆனால் அதை நம் மக்கள் யதார்த்தமெனக் கொண்டாடினார்கள். அவ்வளவு பஞ்சம்.) நீரில் ஒன்று, நெருப்பில் ஒன்று என்று வரும் அந்த இரு சண்டைக் காட்சிகளையும் காலாவுக்கு இருக்கும் காரணமற்ற பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கையும் கத்தரித்து விட்டால் எந்த ஹீரோயிசமும் இல்லாத சாதாரணன் காலா. இன்னும் சரியாய்ச் சொன்னால் சாதாரணக் குடும்பஸ்தன். அவனது அறிமுகக் காட்சியே சிறுவர்களுடனான ஸ்ட்ரீட் க்ரிக்கெட்டில் க்ளீன் போல்ட் ஆவது தான். (சூப்பர் ஸ்டார் அந்தஸ்து, அரசியல் பிரவேச முடிவு என்றெல்லாம் கமிட்மெண்ட்கள் உள்ள சூழலில் இப்படிக் காட்சி வைக்கவும் ஒப்புக் கொண்டு நடிக்கவும் அசாத்தியத் திமிர் வேண்டும்.) அவனது அன்பு, காதல், நட்பு, பிரியம், பாசம் எல்லாமே மிகையற்ற அழகு. அப்படியான பாத்திரத்தை ரஜினிக்கு உருவாக்கிய ரஞ்சித்தை உச்சி முகரலாம்.
2) அடுத்தது ரஜினி அந்தப் பாத்திரத்தை எப்படிச் செய்திருக்கிறார் என்ற விஷயம். காதல் மற்றும் குடும்பக் காட்சிகளில் ரஜினியின் நடிப்பு அபாரம். நெடுங்காலம் கழித்து ரஜினியின் நடிப்பு நிஜமாகவே இதில் பிடித்திருந்தது. (கபாலியில் அவர் நடிப்பு அதீதமாக அல்லது போலியானதாக இருந்ததாகப் பட்டது.) காலா குடும்பத்திடம் காட்டும் கண்டிப்பான பிரியம், மனைவியிடம் விளையாட்டாய் அஞ்சுவது, பழைய காதலியுடனான தடுமாற்றங்கள் எல்லாவற்றிலுமே இயல்பான ஒரு பின்மத்திம வயது ஆளை (அதாவது முன்கிழவர்) ரத்தமும் சதையுமாய் நம் கண் முன் கொணர்ந்து விடுகிறார் ரஜினி. உதாரணமாய் மின்துண்டிப்பின் போது தன் வீட்டினுள் இருக்கும் குழந்தைகளைப் பயமுறுத்த "பே" என்றபடி நுழைகையில் உள்ளே அமர்ந்திருக்கும் ஹூமாவைப் பார்த்து ரஜினி அதிரும் கணம் ச்சோ ச்வீட்! குடித்து விட்டு வீட்டிலும், காவல் நிலையத்திலும் பேசும் காட்சிகளிலும் அற்புத நடிப்பு. கபாலி நடிப்புக்கே உச்சமடைந்த ரசிகர்கள் இதற்கு என்னாவார்களோ!
3) காலாவின் காதல்கள் - ஹூமா குரேஷியுடனான உறவும் சரி, ஈஸ்வரி ராவுடனான உறவும் சரி - மிக அழகு. காவல் நிலையத்திலிருந்து வெளிவருகையில் ஜரீனா அழுதாள் என்று காலாவிடம் செல்வி பிலாக்கணம் வைக்கும் போது கண்டு கொள்ளாமல் விட்டுப் பின் நிஜமாகவே அழுதாளா என காலா கேட்பது போன்ற காட்சிகளை உதாரணமாய்ச் சொல்லலாம்.
4) காலாவின் மிகையற்ற ஹீரோயிசங்களை மிக ரசித்தேன். ஒன்று இடைவேளைக்கு முந்தைய தாராவி வந்து திரும்பும் நானா படேகரின் நிக்கால் நிக்கால் காட்சி. அடுத்தது காவல்நிலையத்தில் குடித்து விட்டு சாயாஜி ஷிண்டேவுடன் ரஜினி உரையாடல். அப்புறம் நானா படேகரை அவரது வீட்டில் வைத்து ரஜினி சந்தித்துப் பேசும் காட்சி. வழக்கமான, நீர்த்த, மேலோட்டமான, ஜிகினாத்தனமான, அர்த்தமற்ற ரஜினி பட பஞ்ச் டயலாக்களாக, பில்டப் காட்சிகளாகச் செய்யாமல் தீவிரமான சினிமாப் பார்வையாளர்களும் ரசிக்கும்படி இக்காட்சிகள் இருந்தன. ஒருமாதிரி underplayed super-stardom.
5) படம் நெடுகிலும் சாதி மதம் சார்ந்த இந்துத்துவ / பாஜக அரசியலை, அதன் சகிப்பின்மையை, அதனால் விளையும் சமூக அமைதியின்மையை, மக்கள் மீதான அதன் அக்கறையின்மையை தொங்க விட்டுத் தோலை உரித்திருக்கிறார் ரஞ்சித். "நீ சொல்றதை எதிர்த்தா கொலை செய்வேன்னா அது ஃபாசிஸம்" என்று நேரடியாகவே தாக்கும் வசனம் இருக்கிறது. கடைசியில் கருப்பு, சிவப்பு, நீலம் மூன்றையும் உள்ளடக்கிய ஓர் அரசியலாலேயே காவியை வீழ்த்த முடியும் என்று சூசகமாகச் சொல்லியிருக்கிறார். அவ்வகையில் இப்படம் வழக்கமான ரஞ்சித் படங்களின் அரசியலிலிருந்து வேறானது. இதில் பிரதானம் தலித் அரசியல் அல்ல; இந்துத்துவ மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு அரசியல். மையக் கதை தவிர்த்து ரஜினி தன் குடும்பத்தினருடன் உறவாடும் காட்சிகளில் தான் தலித் அரசியல் பேசப்பட்டிருக்கிறது. மகன், மருமகள் வீட்டை விட்டுப் போவதாகச் சொல்லும் காட்சியில் ரஜினி பேசும் வசனங்கள் உதாரணம். "நான் கால் மேல் கால் போட்டா உனக்குக் கோபம் வருதுன்னா" என்பது போன்ற கபாலி பேசிய அசட்டு வன்முறை தலித்தியத்தை விட காலா பேசியிருக்கும் ஆக்கப்பூர்வ தலித்தியம் மேலானது. (அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களிலும் இதைக் கொஞ்சம் செய்திருக்கிறார்.)
5அ) மும்பை முழுக்க சேரி வாழ் உழைப்பாளிகள் வேலை நிறுத்தத்தில் இறங்குவது குஜராத்தின் ஊனா எழுச்சியைச் சுட்டுகிறது. போராட்டத்தின் நிகழ்வுகள் மெரீனா ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது. காவியை எதிர்க்க தலித் - முஸ்லிம் ஒற்றுமை முக்கியமான யுக்தி என்பதை நீல பச்சைக் கொடியின் மூலம் காட்டுகிறார் ரஞ்சித்.
5ஆ) சாதியை ஒழிக்க மனுசாஸ்திரம் முதலிய மத நூல்களுக்கு வெடி வைக்க வேண்டும் என்கிறார் அம்பேத்கர். படத்தில் வில்லனின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெர்யர் மனு. ஒரு இந்து வெறி அரசியல்வாதியை காலா வெட்டியெறிந்ததும் அவன் வைத்து வணங்கிய விநாயகர் சிலை ஆற்றில் கரைக்கப்படும் காட்சியைக் காட்டுகிறார்கள். சென்னைச் சேரிகளை ஒழிக்க அறைகூவும் அரசியல்வாதி பெயர் ஹெச்.ஜாரா. இப்படிப் படம் முழுக்கத் தெனாவட்டு காட்டியிருக்கிறார் ரஞ்சித்.
6) காலா கொண்டிருப்பது பலவீனமான திரைக்கதை. நாம் ஒரு சிறுகதை எழுதும் போதே அத்தனை நுட்பமாய் எல்லா விஷயங்களையும் கவனித்துத் திரும்பத் திரும்ப எழுதிச் சரி செய்கிறோம். தேசத்தின் உச்ச நட்சத்திரத்தினை இயக்கும் வாய்ப்பு, அதுவும் முந்தைய வாய்ப்பில் செய்த பிழைகளைச் சீர் செய்யக் கிடைத்த இரண்டாம் வாய்ப்பு எனும் போது ஒருவர் எத்தனை மென்க்கெட்டுத் திரைக்கதை எழுதியிருக்க வேண்டும்! துரதிர்ஷ்டவசமாய் அந்த உழைப்பு வெளிப்படவே இல்லை. மேலே சொல்லியிருக்கும் விஷயங்களும் ரசிக்கத்தக்கவை என்றாலும் அவை தனித்தனிக் காட்சிகளாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன. காலா ஒரு படமாக ஒட்டுமொத்த உணர்வெழுச்சியைத் தரத் தவறுகிறது. படத்தின் பிரதானச் சறுக்கல் அதுவே. அது போக கணிசமான தர்க்கப் பிழைகள் அல்லது கேள்விகளற்ற பதில்கள் ஆங்காங்கே கிடந்து உறுத்துகின்றன.
7) நானா படேகர் படத்தில் ஹரிதேவ் அப்யங்கர் என்ற வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். சித்பவன் பிராமணர். காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்ஸேவும், நாராயண் ஆப்தேவும் இப்பிரிவினரே. அதையும் இந்துத்துவக் குறியீடாகவே வைத்திருக்கிறார் எனப் படுகிறது. மாறாக எதிர்தரப்பில் சாருமதி கெய்க்வாட் போராடுகிறார், போலீசிடம் அடிபடுகிறார், சிவாஜ்ராவ் கெய்க்வாட் என்ற போலீஸ்காரர் "ஜெய்பீம்" என்று போராடும் மக்களிடையே உரக்க, உணர்ச்சிகரமாகப் பேசுகிறார். (தலதளபதி சலூன் மாதிரி இந்துத்துவ அம்பேத்கர் என்ற பொய்யைக் கட்டமைப்போர் கவனத்திற்கு.)
8) ரஜினி ரசிகன் அந்த பிம்பச் சிறையிலிருந்து வெளிவந்து காலா படத்தை ரசிக்க முடியாமை ஒரு பெரும் பின்னடைவு. ரஜினி சம்பத்தைத் தட்டிக் கேட்க வரும் முதல் காட்சியிலும், க்யாரே செட்டிங்கா காட்சியின் போதும் ஒரு பரபரப்பான ஆக்ஷன் ப்ளாக்கை ரசிக மனம் இயல்பாகவே எதிர்பார்த்து ஏமாறுகிறது. ஒன்று முழு யதார்த்தப்படமாக இருந்திருக்க வேண்டும், அல்லது முழு ஹீரோயிசம். ரஞ்சித் இரண்டுங்கெட்டாய்ச் சிக்கிக் கொண்டு விழிக்கிறார். படம் இரண்டுக்கும் மத்தியில் அடையாளமிழந்து தடுமாறுகிறது. உருப்படியான படைப்பாளி ரஜினியைக் கையாள்வதன் சிக்கல் அது. இது ரஜினி விஷயத்தில் கடந்த முப்பதாண்டுகளாக நடக்கிறது. பாலு மகேந்திரா, பாரதிராஜா, ஷங்கர் என எல்லோருக்கும் அந்தச் சிக்கல் இருந்தது. மகேந்திரனும் மணிரத்னமும் தான் அதைச் சரியாக எதிர்கொண்டார்கள் எனச் சொல்ல முடியும்.
9) ஈஸ்வரி ராவ் நடிப்பில் பின்னுகிறார். சிலர் அதை மிகைநடிப்பு எனச் சொல்லக் கேட்கிறேன். அப்படியா என்ன! அப்படிப் படபடவெனப் பொரியும் பெண்களைக் கண்டதில்லையா! கடைசியாய் அந்த ஐ லவ் யூவிற்குக் கிறங்கும் காட்சியை ரஞ்சித் எப்படி கன்சீவ் செய்திருப்பார் என வியக்கிறேன். ஹூமா குரேஷியும் சொல்லிக் கொள்ளும் படி நடித்திருக்கிறார்.
10) சமுத்திரக்கனியின் பாத்திரம் சுவாரஸ்யம். அவர் பேசும் வசனம் ஒவ்வொன்றுக்குமே திரையரங்கில் கைதட்டலோ, சிரிப்போ எழுகிறது. நடிப்பிலும் மின்னுகிறார். அவர் வாழ்க்கையில் நிச்சயம் இது ஒரு முக்கியமான படம் தான்.
11) எல்லோரும் சிலாகித்து விட்ட, கலவரத்தில் போலீஸால் புயல் பேண்ட் அவிழ்க்கப்படும் காட்சி வலுவான ஒன்று தான். பெண்கள் உடலை வைத்து அவமதிக்கப்படுதலைத் தடுக்க ஒரே வழி அதை அவமதிப்பு என்று பெண்களும் அடுத்து சமூகமும் புரிந்து கொள்வது தான். சாருமதியாக அஞ்சலி பாட்டீல் துருதுருவெனப் படம் முழுவதும் ஈர்க்கிறார்.
12) நானா படேகர் மோகன்லாலுக்கு இணையான நடிகர் என்பதை இந்தப் படத்தில் உணர முடிகிறது. ஒரு நடிகனின் முகத்தில் உணர்ச்சிகளைக் கண்டு ரசித்தெல்லாம் எத்தனை நாளாகிறது! இதற்கு முன் அவர் நடிப்பை பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் பார்த்திருக்கிறேன். ஆங்காங்கே சில இந்திப் படக் காட்சிகள். அவ்வகையில் அவரை பிரகாஷ்ராஜ் மாதிரியான ஒரு நடிகர் என நினைத்திருந்தேன். ஆனால் அவர் அதற்கும் மேல் என நிரூபிக்கிறார் காலாவில். ரஜினியைத் தாண்டி நிற்கிறார் என்றே சொல்வேன். (இத்தனை தயங்கி இதைச் சொல்லக் காரணம் ரஜினியும் இதில் நல்ல நடிப்பு!)
13) சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் நாடித்துடிப்பு. பாடல்கள் முழுதாக அல்லாமல் தேவைக்கேற்ற அளவு தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரஹ்மான், யுவனுக்குப் பிறகு கதைக்கான இசையமைப்பாளராக உருவாகி வருகிறார். இசைப் பொருத்தப்பாட்டில் நிலமே எங்கள் உரிமை பாடல் எனக்கு மிகப் படித்தது. கண்ணம்மாவும். நானா படேகருக்ருக்கான பின்னணி இசை மிரட்டல். மெல்லிய மின்சாரம் மாதிரி படம் முழுக்க இசை வியாபித்திருக்கிறது.
14) ஆதவன் தீட்சண்யா போன்றவர்களை வசனப்பணியில் ரஞ்சித் பயன்படுத்தி இருப்பது நல்லது. கபாலி போல் வெற்று ஜம்பமாக அல்லாமல் கோட்பாடுகளைப் பேச முடியும். அது ஓரளவு நடந்தேறி இருக்கிறது. (அது சரி, மகிழ்நன் யார்?)
15) இராவண காவியம் நூலை ரஜினியின் மேசையில் வைத்திருப்பது, நானா படேகர் பேத்தியுடன் அவ்வப்போது ராம, ராவண இருமையைப் பேசுவது, கடைசியில் ராம காதையை ஒலிக்க விட்டு ராவண தியாகத்தை (வதம் என்று சொல்லுதல் இங்கு பொருத்தமில்லை) காட்சிப்படுத்தியிருப்பது எல்லாம் நன்று தான். கடைசியில் மீட்பர்களை நம்பியல்ல எந்தப் போராட்டமும், ஒவ்வொருவருமே காலா தான் என்று சொல்லி இருப்பது தான் படம் சொல்ல வரும் முக்கியச் செய்தி.
16) ரஜினி தன்னைத் தானே எதிர்த்து இதில் அரசியல் பேசியிருக்கிறார் என்பது தான் ஆச்சரியமான உண்மை. காவல் நிலையத்தில் ரஜினி "யார் நீ?" என்று சாயஜி ஷிண்டேவிடம் கேட்பது கூடத் தூத்துக்குடி தம்பியை நினைவூட்டியது. இன்னொரு விஷயம் ரஜினி எடுத்திருக்கும் ஆன்மீக அரசியலையும் படம் அவரை வைத்தே கேள்விக்குள்ளாக்குகிறது. ஒரு போராட்டத்தைப் போலீஸ் எப்படிக் கலவரமாகத் திசை திருப்ப முடியும் என்பது படத்திலேயே காட்டப்படுகிறது. படத்துக்குள் போராடும் தரப்பில் ரஜினி. ஆனால் படத்துக்கு வெளியே போலீஸுக்கு வக்காலத்து வாங்கி, போராடினால் நாடு சுடுகாடாகும் எனச் சொல்லும் ரஜினி. நல்லவேளை, ரஜினி தூத்துக்குடிபோய் வந்தார். இல்லை என்றால் காலா தான் ரஜினியின் அரசியல் என உணர்ச்சிவசப்பட்டு மானாவாரியாய் நம்பிச் சில்லறையைச் சிதற விட்டிருப்போம். தான் வேறு, படங்களில் வரும் பிம்பம் வேறு எனத் தெளிவுபடுத்தி இருக்கிறார் ரஜினி. (இதை குசேலன் படத்திலேயே ஒரு வசனமாக வைத்திருப்பார் பி.வாசு.) எம்ஜிஆரும் அப்படித்தான் என்றாலும் இந்த விஷயம் பொதுமக்களிடம் கசியுமளவு வைத்துக் கொள்ளவில்லை என்பதால் தான் ஜெயித்தார். ரஜினிக்கு அந்தக்கூறு கிடையாது என்பதால் தமிழகம் பிழைத்தது.
17) நானா படேகர் மோடியின் உருவகம் தான். இந்து முஸ்லிம் கலவரத்தைத் தூண்டி விட்டு அரசியலில் வளர்வது. ப்யூர் மும்பை - க்ளீன் இந்தியா. மும்பை முழுக்கத் தேர்தலில் வென்று தாராவியில் மட்டும் காவிக் கட்சி தோற்பது என்பது இந்தியா முழுக்க பாஜக வென்று தமிழ்நாட்டில் மட்டும் தோற்றதற்கு இணை. அவ்வகையில் காலா என்ற பாத்திரமே திராவிட அரசியலின் குறியீடு தான் (ஒரு காட்சியில் தாராவியில் பெரியாரின் சிலை காட்டப்படுகிறது). ஆனால் எனக்குச் சில இடங்களில் காலா என்ற பாத்திரம் நேரடியாய்க் கலைஞரைக் குறிப்பதாகக் கூடத் தோன்றியது. (கரிகாலன் - கருணாநிதி; காலா - கலைஞர், கருப்புக் கண்ணாடி, காவிகளை எதிர்ப்பது, காலாவுக்கு நான்கு மகன்கள், பெருங்குடும்பம், ஒரு மகனின் பெயர் ரஷ்ய அதிபருடையது: லெனின் - ஸ்டாலின், இன்னொரு மகனை தளபதி என்று அழைப்பது, மனைவி இருக்கையிலேயே காதலி, காதலிக்கு ஒரு மகள், சமுத்திரக்கனி நடித்த வள்ளியப்பன் பாத்திரம் - அன்பழகன், நள்ளிரவில் வயதான காலத்தில் போலீஸால் கைது செய்யப்படுவது, மக்களைத் திரட்டிப் போராடும் யுக்தி - இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரக்கன், அசுரன், ராவணன் அடைமொழிகள், எல்லாவற்றுக்கும் மேல் தாராவி காலாவின் கோட்டை எனச் சொல்வது!) ரஞ்சித் வேறு மாதிரி எண்ணியும் இக்காட்சிகளை எடுத்திருக்கலாம் தான். ஆனால் பார்வையாளன் புரிதலுக்கு அணையேது!
18) காலா தலித் என்பது அம்பாசமுத்திரம், புத்தச் சின்னங்கள் எனப் பலவாறு சொல்லப்படுகிறது. அதையொட்டி நானா படேகர் அவர் வீட்டில் சொம்புத் தண்ணீர் வாங்கிக் குடிக்க மறுப்பது வரை புரிகிறது. ஆனால் பிற்பாடு தன் பேத்தியை காலாவின் காலைத் தொட்டு ஆசி பெறச் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சாதி இந்து அதைச் செய்வாரா?
19) இது கபாலியை விட நன்றாக இருக்கிறதா என்ற கேள்வி பதிலளிக்கச் சிரமமானது. காரணம் இரண்டுமே அதனதன் அளவில் மோசமானவை, போலவே சில நல்ல காட்சிகளைக் கொண்டவை. அதனால் இரண்டையும் சமதளத்தில் தான் வைக்கத் தோன்றுகிறது. ஆனால் ரஜினியை கபாலியை விட காலாவில் தான் என்னால் நெருக்கமாக உணர முடிந்தது.
20) என்ன கோபம் இருந்தாலும் ஒரு வேண்டுகோள். நாயகன் மாதிரி என்று மட்டும் காலாவைப் பற்றிச் சொல்லாதீர்கள்.(பல இடங்களில் நாயகனின் பாதிப்பு தெரிகிறது என்பது வேறு விஷயம். அதற்காக அப்படிப் பொசுக்கென்று ஒப்பிட்டு விடுவதா!)
பாஜக / இந்துத்துவ எதிர்ப்புக்காகவும், ரஜினியின் நடிப்புக்காகவும், காலாவின் அழகான காதல்களுக்காகவும் பார்க்கலாம்!
*
Comments