அணங்கு [சிறுகதை]


தன் கரிய, பெரிய கண்ணைக் கசக்கிக்கொண்டே சிவந்த, சிறுவாயில் கொட்டாவி உதிர்த்தபடி சேர்த்தலை இருப்பூர்தி நிலையத்தில் வலப்பாதம் பதித்தாள் கண்ணகி.

கூரையில் தொங்கிக்கொண்டிருந்த மின்னணு கடிகாரம் 07:35 எனச்செம்மையாய்த் துடித்தது. கண்ணகியின் இருதயம் அதைவிட வேகமாய்த்துடித்து ரத்தந்துப்பியது.

அவள் அப்பா அழுக்கேறிய வெள்ளை வேட்டியை மடித்துக்கட்டியபடி ரீபாக் என்று ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்ட கருப்புப்பையைத் தூக்கிக்கொண்டு பின்னாலேயே அவசரமாக இறங்கித்தடுமாறினார். அங்கு ரயில் ஒரு நிமிடம்தான் நிற்கும் என்றிருந்தார்கள். கண்ணகி அவர் கையைப்பிடித்து ஆசுவாசப்படுத்தினாள்.

ஐந்து மணி நேரம் தாமதமாக ரயில் வந்து சேர்ந்திருப்பதைப்பதிவு செய்யப்பட்ட பெண் குரல் மலையாளத்தில் அறிவித்து அசௌகர்யத்துக்கு வருத்தம் மொழிந்தது. கொஞ்சமும் இங்கிதமின்றி அதைச்சட்டை செய்யாமல் ரயில் நகரத்தொடங்கியது.

“ஒரு நிமிஷம்னா ஒரே நிமிஷமேதான் நிக்கறான், பாப்பா.”

ஆச்சரியமாய் அலுத்துக்கொண்டபடி அப்பா நடந்தார். கண்ணகி புன்னகைத்தாள்.நேற்று மாலை நான்கு மணிக்கு மதுரையில் ரயிலேறியது. இன்று பத்து மணிக்கு கண்ணகிக்கு ‘பரிக்ஷா’ தேர்வு. இவ்வூரில்தான் தேர்வு மையம் ஒதுக்கியுள்ளார்கள்.

மதுரை டூ சேர்த்தலை தனியார் பேருந்து உண்டு. ஏழரை மணி நேரத்தில் போகலாம். ஆனால் ஓர் இருக்கை ஆயிரம் ரூபாய். அரசுப்பேருந்து எனில் தேனி போய், கம்பம் போய், அங்கிருந்து கோட்டயம் போய், அப்புறம் சேர்த்தலை போக வேண்டும். மிகுந்த நேரம் பிடிக்கும். அதனால்தான் சுற்றுவழி என்றாலும் ரயிலேறத்தீர்மானித்தார்கள்.

முன்பதிவெல்லாம் இல்லை. சென்னையிலிருந்து வரும் வண்டி. சனிக்கிழமைக் கூட்டத்தைச்சமாளித்துப் பொதுப்பெட்டியில் தொற்றிக்கொள்ளத்தான் முடிந்தது.

நின்றவாறே பயணித்து, திருநெல்வேலியில் கொஞ்சம் கூட்டம் இறங்க, கண்ணகிக்கு மட்டும் ஓரமாய் இடித்தபடி உட்கார இருக்கை கிட்டியது. வாங்கிய இட்லியை விண்டு வாயில் போட்டுக்கொண்டாள். தேங்காய்ச்சட்னி கெட்டிருந்தது. வாஞ்சி மணியாச்சி சந்திப்பின் அபாரமான மசால் வடையும் உள்ளே போயிருந்தது. அப்பா கையோடு கொண்டு வந்திருந்த பழைய தினத்தந்தியைக் கீழேவிரித்துப் படுத்துக்கொண்டார்.

பயிற்சி மையத்தில் கொடுத்திருந்த ‘பரிக்ஷா’ தேர்வுக்கான சூத்திரங்களின் தொகுப்புப் புத்தகத்தைப்பையிலிருந்து கையிலெடுத்தாள். நேற்று மதியம் எதில் விட்டோம் என யோசித்து கனிம வேதியியலில் டி-பிராக்ளே அலைநீளத்தில் தொடங்கினாள். λ = h / mv. மீண்டும் ஒருமுறை அதைப்பார்க்காமல் சொல்லிப்பார்த்தாள். இதில் h என்பது பிளாங்க் மாறிலி. அதன் மதிப்பென்ன? கண்மூடி மனதில் சொன்னாள்: 6.626×10-34 Js.

மனம் எண்களால் எழுத்துக்களால் நிரம்பியது. முக்கால் மணி போயிருக்கும். நீண்ட நேரம் நின்றுவந்த களைப்பில் உட்கார்ந்தவாக்கிலேயே உறங்கிப்போனாள் கண்ணகி.

மீண்டும் கண்விழித்துப் பார்த்தபோது வண்டி எங்கோ நின்றிருந்தது. கைக்கடிகாரம் பார்த்தாள். நேரம் நள்ளிரவு தாண்டியிருந்தது. எதிரே அமர்ந்திருந்தவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தது உறைத்ததும் துப்பட்டாவைச் சரிசெய்தபடியே கேட்டாள்.

“அண்ணா, இது எந்த ஸ்டேஷன்?”

அந்த உடனடி ஊமைத்தாக்குதலில் நிலைகுலைந்தவன் தடுமாறிச்சொன்னான்.

"ஸ்டேஷன் இல்ல. இடையில் நிக்குது. இப்பத்தான் ஆரல்வாய்மொழி தாண்டுச்சு."

“சிக்னலுக்கு நிக்குதா?”

“இல்லங்க. ஏதோ தண்டவாளத்துல ரிப்பேர்னாங்க. பதினோரு மணிக்கு நின்னது.”

அதிர்ந்தாள். அப்படியானால் கிட்டத்தட்ட இரண்டுமணி நேரமாகப்போகிறது. போய்ச் சேரத்தாமதமாகும். சீக்கிரம் எடுத்தால் தேவலாம். அப்பாவைத் திரும்பிப்பார்த்தாள்.

உதட்டோரம் சலவாய் ஒழுக்கியபடி மெல்லிய குறட்டையுடன் உறங்கிக்கிடந்தார். பார்க்கப்பாவமாய் இருந்தது. இன்னும் சில வருடங்கள். அப்புறம் நான் அவரைத் தாங்கிக்கொள்ளத் தொடங்கி விடுவேன். அவர் நிம்மதியாய் வீட்டில் இருக்கலாம்.

மீண்டும் வண்டியெடுக்க அதிகாலை நான்கு மணியாகி விட்டது. அதுவரை அவள் நிமிடம் கூடத்தூங்கவில்லை. நகத்தைக் கடித்தபடி பதற்றமாய் அமர்ந்திருந்தாள்.


மறுநாள் காலை ‘பரிக்ஷா’. மருத்துவப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு. கண்ணகியின் வாழ்நாள் கனவுக்கான வாயில். அதற்காகக்கடந்த ஈராண்டுகளாகத்தயாராகிறாள்.

அவள் ஆசை மருத்துவராவது. அதுவும் இதய நிபுணராவது. ஐந்து வயதாய் இருக்கும் போதே பொம்மை ஸ்டெத்தாஸ்கோப்பை காதில் மாட்டிக்கொண்டு அடிக்கடி இருமிக் கொண்டிருக்கும் அம்மாவின் இடது மார்பில் வைத்துக் கேட்டுவிட்டுச் சொல்வாள்.

“ஒண்ணுமில்லம்மா. சரியாகிடும். கொடுத்த மாத்திரைலாம் ஒழுங்கா சாப்பிடுங்க.”

இருமலுக்கிடையே அம்மா பூரிப்பாள். பூரிப்பிடையே ஒருநாள் செத்தும் போனாள். இரண்டுக்குமிடையே மருத்துவராகும் கனவைக்கண்ணகியின் சின்ன மனதில் ஆழ விதைத்திருந்தாள். மகளை விடப்புருஷன் மனதில் வலுவாய் ஊன்றிப்போனாள்.

அம்மாவுக்கு Congestive Heart Failure என்றார்கள். இருதயம் பலகீனமாய் இருந்ததால் நுரையீரலில் சளி கோர்த்துக்கொண்டு வறட்டு இருமல், மூச்சு விடச்சிரமம், கால் வீக்கம், அவ்வப்போது துப்புகிற சளியில் ரத்தத்திட்டுக்கள் என மூன்று ஆண்டுகள் சிரமப்பட்டாள். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைத்துப்பார்த்தார்கள்.

ஒருகட்டத்தில் மருத்துவர்கள் உதடு பிதுக்கி, கடவுளைக் கைகாட்டினார்கள். கடவுளோ எமதர்மனைக் கைகாட்டினார். அவர் தயங்காமல் அபயமளித்தார்.

அதிலிருந்து “பெரியவளாகி என்ன ஆவாய்?” என யார் கேட்டாலும் “நெஞ்சு டாக்டர்” என்றுதான் பதில் சொல்வாள் கண்ணகி. இப்போது பையன்கள் அதைக்கிண்டல் செய்கிறார்கள் – “பெரியவளானதுமே கண்ணகி ஆசையில் பாதி நிறைவேறிடுச்சு!”

உள்ளுக்குள் கடுமையாகப்புண்படுவாள். ஆனால் அதை மாற்றிக்கொள்ளவில்லை. வைராக்கியம். அம்மா அப்படித்தான் சொல்வாள். இதய மருத்துவர், ஹார்ட் டாக்டர், கார்டியாலஜிஸ்ட் - இவை ஏதும் தெரியாமல் அப்படிச் சொல்லிக்கொடுத்திருந்தாள்.

அம்மா இருக்கையிலேயே நன்றாய்ப் படித்திருந்தவள் பிறகு இன்னும் வெறியானாள்.

அம்மா போன ஓராண்டில் கண்ணகியைக்கவனிக்க இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளுமாறு அப்பாவுக்குச்சொந்தங்கள் சொல்லித்தந்தனர். அப்பா பிடிவாதமாய் மறுத்துவிட்டார். ஆசையில்லாமல் இல்லை. ஆனாலும் மறுக்க ஒரே காரணம்தான்.

“பாப்பா டாக்டர் ஆகனும்னு சொல்றா. இதுல இன்னொரு கல்யாணம்னு போனா, குழந்தைங்க அதுஇதுன்னு செலவு வைக்கும். என் வருமானத்துக்குச்சரிப்படாது.”

அப்பா மாட்டுத்தாவணியில் செருப்புத்தைக்கும் கடை வைத்திருந்தார். அம்மா இருந்தவரை வீட்டிலிருந்து பூக்கட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தாள். கண்ணகியைத் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என அப்பாவுக்கு ஆசை. அதற்கு வருமானம் போதவில்லை என்பதால் அரசுப்பள்ளியில் படித்தாள்.

வகுப்பில் முந்தி நின்றாள். வயதின் கண்ணடிப்புகளுக்குச் செவிசாய்க்கவில்லை. லக்ஷ்மியில்லாத அவ்வீட்டில் போகமாட்டேன் என ஒட்டிக்கொண்டாள் சரஸ்வதி.

குருவாயூர் செல்லும் அந்த ரயில் தாமதித்த கணங்களையும் சேர்த்து முந்தும் வெறியுடன் தலைதெறிக்கத் தடதடத்துக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட விடிந்து விட்டது. மனம் விழிப்பு கண்டுவிட்டது. கண்கள் திறக்காமல் அமர்ந்திருந்தாள்.

கண்ணகி எம்பிபிஎஸ். மனதில் சொல்லிப்பார்க்க ஜிலீர் என்றிருந்தது அவளுக்கு.

திடீரென வயிறு இளகிக்கலங்குவதை உணர்ந்தாள். நேற்றைய சட்னி! கழிவறைப் பக்கம் எட்டிப்பார்த்தாள். வாசல்வரை படுத்துக்கிடந்தார்கள். எல்லோரும் ஆண்கள். பெட்டியின் அடுத்தபுறம் பார்த்தாள். அங்கும் அதேதான். குறைந்தது பத்துப்பேரைத் தாண்டிக்கொண்டு போகவேண்டும். அடுத்து வாயிலில் படுத்திருப்பவர்களை எழுப்பி விட்டுத்தான் கழிவறைக்குள்ளே போக முடியும். அவளுக்குச்சங்கடமாய் இருந்தது.

அப்போது ஆலப்புழை நெருங்கவும் ரயில் வேகமிழந்தது. கண்ணகி பரபரப்பானாள்.

அடுத்தது சேர்த்தலை. இன்னும் அரைமணி நேரம்தான். அப்பாவை எழுப்பினாள். திடுக்கிட்டு எழுந்தார். உறக்கத்துக்கும் விழிப்புக்கும் திரிசங்குக்குழறலில் கேட்டார்.

“வந்திருச்சா, பாப்பா?”

“இல்லப்பா. அடுத்த ஸ்டேஷன்.”

சுற்றிப் பார்த்துவிட்டுக் குழப்பமாய்க்கேட்டார்.

“விடிஞ்சிருச்சா அதுக்குள்ள?”

“ட்ரெய்ன் லேட்பா…”

விவரித்தாள். இறங்கியதும் அருகே அறை எடுத்து, குளித்துத்தயாராகித் தேர்வுமையம் போவதுதான் வழி என்றாள் அவர் விளங்கிக்கொள்ள நேரம் பிடித்தது. தனக்கு வயிறு சரியில்லாததை அவர் காதில் கிசுகிசுத்தாள். அவர் எழுந்து வேஷ்டியைச் சீர்செய்து கொண்டு ஒவ்வொரு தலையாய்த்தாண்டி கழிவறையை அடைந்தார். வாயிலில் படுத்திருந்தவர்களை எழுப்பினார். முனகியபடி எழுந்தார்கள். கதவைத்திறந்தார்.

மேற்கத்தியக் கழிவறை. கண்ணகிக்குப் பழக்கமில்லை என்பதால் அதைத் தாழிட்டு விட்டு எதிரே இருந்த கழிவறைமுன் படுத்திருந்தவர்களை எழுப்பினார். கதைவைத் திறந்தால் கழிவறையினுள்ளே கால்வைக்குமிடத்து மலக்குவியல் ஒன்று கிடந்தது.

கடும் துர்நாற்றம் சூழ்ந்தது. மூச்சை அடக்கிக்கொண்டு உள்ளே சென்று தாழிட்டு, யாரோ வள்ளல் விட்டுச்சென்றிருந்த அரை லிட்டர் பெப்ஸி பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கழுவி விட்டார். பத்து, பன்னிரண்டு முறை கழுவிய பின்னர் சுத்தமாகி துர்மணம் அடங்கத்தொடங்கியது. சிறுநீர் கழித்து, எச்சில் துப்பி, குழாயின் கைப்பிடி அழுத்தித்தண்ணீர் பீய்ச்சிவிட்டு வெளியே வந்தார். கண்ணகி இருக்கையிலிருந்து அங்கு எட்டிப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. வரச்சொல்லி சைகை செய்தார்.

கண்ணகி எழுந்து, நடந்து, தாண்டி, வந்தாள். வயிற்றின் அழகு முகத்தில் தெரிந்தது.

“போய்ட்டு வா, பாப்பா. நான் இங்கயே நிக்கறேன்.”

தலையாட்டி விட்டு கதவைத்திறந்து உள்ளே போனாள். பத்து நிமிடங்கள். வெளியே வந்தாள். நெடுங்காலக் கடனடைந்தாற்போல் நிம்மதியில் தெளிந்திருந்தது முகம்.

அதற்குள் அப்பா முகம் கழுவித்தயாராய் இருந்தார். அவளும் வந்து முகம் கழுவிப் பாதரசம் போன கண்ணாடி பார்த்துக்கலைந்திருந்த முடியை ஒதுக்கினாள், சரிந்த பொட்டைத்திருத்தினாள். டாப்ஸை மீறி வலது தோள்பட்டையில் திருட்டுத்தனமாய் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த ப்ரேஸியரைக் கவனித்துப்பதறி உள்ளே தள்ளினாள்.

பைகளைச் சரிபார்த்து எடுத்துக்கொண்டிருக்கையில் சேர்த்தலை வந்துவிட்டது.

கேரளத்தில் எல்லா ரயில் நிலையங்களும் அழகாய் இருக்கின்றன. புதுப்பெண்ணின் சிகையலங்காரம்போல் கூரைகளில் வேலைப்பாடுகள். அதற்குப்பொருத்தமாய் கதவு ஜன்னல்களில் அதே பிரதிமைகள். யாவும் ஒரு மலையாளக்கோவிலின் உணர்வைத் தோற்றுவிக்கின்றன. திருவிதாங்கூர் சமஸ்தான ஞாபகங்களின் எச்சமாகஇருக்கலாம்.

சேர்த்தலை ரயில் நிலையம் அத்தனை பெரியதில்லை. ரயில் நிற்கும் நேரமானது ரயில் நிலையத்தின் அளவுக்கு நேர்த்தகவில் இருக்குமோ எனக்கண்ணகிக்குத் தோன்றியது. எனில் விகித மாறிலி என்னவாய் இருக்கும்! எல்லாவற்றையுமே சூத்திரங்களாய்ப் பார்க்கத்தொடங்கியது உறைத்தது. புன்னகைத்துக்கொண்டாள்.

மலையாளத்திலும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் சேர்த்தலை என நடைமேடையில் பெரிதாய் எழுதி வைத்திருந்தார்கள். மதுரை ரயில் சந்திப்பில் இதை விடப்பெரிதாய் இருக்கும். தமிழிலும் இந்தியிலும் ஆங்கிலத்திலும். இந்தியானது இந்தியாவில் சாமி போல் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறது. ‘பரிக்ஷா’வில்கூட இந்தி உள்ளது!

வெளியே வந்தார்கள். வாயிலின் இடப்புறம் இருசக்கர வாகனங்கள் அந்நேரத்திற்கே வரிசை கட்டியிருந்தன. வலதில் பாரத ஸ்டேட் வங்கியின் தானியங்கி பணமருளும் மையம் இருந்தது. சுற்றிப்படந்திருந்த பச்சை அது தமிழகமில்லை என அறிவித்தது.

ஆங்காங்கே கதிர் அரிவாள் சின்னமிட்ட செங்கொடிகள் காற்றுக்குக்காத்திருந்தன.

ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவற்றில் நிறைய மோகன்லால் போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன. சில விஜய் போஸ்டர்களும். அஜீத் போஸ்டர் ஏதேனும் இருக்கிறதா எனப்பார்த்தாள். இல்லை. தமிழ்செல்வியிடம் சொல்லவேண்டும். அவள் ஆள் பற்றி இங்கே யாரும் கவலைப்படுவதில்லையென. விஜய் போஸ்டரை இன்னொரு முறை பார்த்துக்கொண்டாள். வெயில் மிதமாய்க்கொளுத்தியது. சவாரிக்குக்காத்திருந்த ஆட்டோக்காரர்களிடம் சகாயவிலையில் விடுதிவிசாரித்துப் போய்நின்றார்கள்.

ஒருமாதிரி பார்த்தார்கள். என்ன உறவென விசாரித்தார்கள். சுருக்கென நிமிர்ந்து பார்த்து விட்டு தன் மகள் என்று அப்பா சொன்னார். பெயர், முகவரி எழுதி வாங்கிக் கொண்டு, அடையாள அட்டை கேட்டார்கள். நல்லவேளையாக ‘பரிக்ஷா’வுக்காக ஆதார் அட்டை எடுத்து வந்திருந்தாள் கண்ணகி. அதை வாங்கி ஒளிநகல் செய்து கொண்டு திருப்பித்தந்தார்கள். சிறுவனா இளைஞனா என்று சொல்ல முடியாத ஒரு பூனைமீசைப் பையனின் வழிகாட்டுதலில் அறைக்கு வந்தார்கள். என்ன கேள்வி கேட்டாலும் கண்ணகியின் மார்பில்தான் பதில் எழுதியிருக்கிறது என்பது மாதிரி
பார்த்துக்கொண்டு ஒப்பித்தான். ஒற்றைப்படுக்கை கொண்ட அறைதான். குளித்து முடித்துக் கிளம்ப ஒரு மணிநேரம் என்று சொல்லித்தான் வாங்கியிருந்தார்கள்.

அதற்கே ஐந்நூறு ரூபாய் வாடகை கேட்டார்கள். பொதுவாய் இருநூறு, முன்னூறு ரூபாய்தான் வாடகையாம். கண்ணகியைப்போல் பலரும் தமிழகத்திலிருந்து அங்கே ‘பரிக்ஷா’ எழுதவந்திருந்தார்கள். அதனால் லாட்ஜ்களுக்கு மவுசு கூடித்தற்காலிகமாய் வாடகையை ஏற்றியிருந்தார்கள். அது பிரபலமான லாட்ஜ் இல்லை என்பதால் சில அறைகள் காலியாக இருந்தன. பொதுவாய்த்தேர்வெழுத வந்தவர்கள் அனைவரும் முன்பதிவு செய்துதான் வந்திருந்தார்கள். எல்லாம் ஆட்டோக்காரர்கள் சொன்னது.

முதலில் அப்பா தயாரானார். கண்ணகி குளித்து முடித்து வெளியே எட்டிப்பார்க்கவும் அப்பா வெளியேபோய் நின்றுகொண்டார். உடை மாற்றியபின் உள்ளே அழைத்தாள்.

நுழைவுச்சீட்டு, ஆதார், பேனா (2), பென்சில் (2), அழிப்பான் எடுத்துக்கொண்டாள்.

மறக்காமல் கைக்குட்டையை எடுத்து வைத்தாள். மின்விசிறி சுற்றினாலும் நிறைய வியர்க்கும் அவளுக்கு. எப்போதும் பெரிய கைக்குட்டை வேண்டும். சிறிய துண்டோ எனப் பார்ப்போர் சந்தேகப்படுவது மாதிரி தடித்த கைக்குட்டைகளை வைத்திருப்பாள்.

“போன ஜென்மத்துல லண்டன்ல பொறந்திருப்பா போல!”

அம்மா பெருமிதத்துடன் கேலிசெய்வாள். அப்பாவும் விடாமல் பதில் கொடுப்பார்.

“அட, விக்டோரியா மஹாராணியே உம்மவதானாம்.”

“ஏன், இருக்காதா? அத்தனை லட்சணமா இருக்காளே!”

அம்மா பீற்றுவாள். கண்ணகி வெட்கப்படுவாள். எட்டு வயதுகூட இராது அப்போது.

கண்ணகி கடைசியாய் ஒருமுறை கண்ணாடி பார்த்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வருகையில் அடிவயிறு வலித்தது. அதீதமாய் அதிர்ந்தாள். ஐயோ! இது நாள் இல்லையே! இன்னும் முழுதாய் ஒருவாரம் இருக்கிறது. எப்படி இப்போதே?

மணியைப்பார்த்தாள். எட்டு நாற்பது. பதற்றமானாள். மேலும் வயிறு வலித்தது.

கண்ணகிக்கு மாதவிலக்கு தப்பியதே இல்லை. மாதமானால் அரசாங்கச்சம்பளம் மாதிரி குறித்த தேதியில் தவறாமல் வந்துவிடும். தமிழ்செல்விதான் இப்படி ஒரு வாரம் முன்பே வருவதாய் அல்லது தள்ளிப்போவதாய்ப் புலம்புவாள். அவளுக்கு இதுதான் முதல்முறை இப்படி நடக்கிறது. சானிடரி நேப்கின் எடுத்து வரவில்லை. வீடாக இருந்திருந்தால் எப்போதும் ஒன்றிரண்டு இருக்கும். கழிவறைக்கு ஓடினாள்.

ஐந்து நிமிடத்தில் வெளியேவந்து அப்பாவிடம் நேப்கின் வாங்கி வரச்சொன்னாள்.

“என்ன பாப்பா இப்படிப்பண்ற? இதெல்லாம் முன்னமே வெச்சுக்கறதில்லையா?”

அப்போது அப்பாவின் முகத்தில் ஒரு கணம் – ஒரே ஒரு கணம் - மெல்லியதொரு சலிப்பின் சாயை தென்பட்டதை உணர்ந்தாள். ஆண்பிள்ளையாய்ப் பிறந்திருந்தால் இம்மாதிரி தொல்லைக்கெல்லாம் அவசியம் இருந்திருக்காது என நினைத்தாரோ!

“ம். இல்லப்பா. எதிர்பார்க்கல.”

“சரி. கதவத்தாழ் போட்டுக்கோ. பத்திரம். நான் குரல் கொடுத்தா மட்டும் திற.”

கண்களில் உப்புநீர் முட்டியது. அப்பா அதைக்கவனிக்க நேரமின்றிக்கிளம்பினார்.

அவருக்கு இது ஓர் அனாவசியச்சங்கடம். இங்கும் கருப்பு பாலிதீன் கவர் சுற்றிக் கொடுப்பார்களா என யோசித்தாள். மண் மாறினாலும் சடங்குகள் மாறுவதில்லை.

பயமாய் இருந்தது. பூனைமீசைப் பொறுக்கி ஏதாவது சாக்கு சொல்லிக்கொண்டு வந்து கதவு தட்டினால் என்னசெய்ய? இன்னும் கால்மணியில் கிளம்பினால் நேரத்திற்குப் போய்விடலாம். பத்து நிமிடங்கள் கழித்து அப்பா கதவைத்தட்டி “பாப்பா!” என்றார்.

கண்ணகி கதவு திறந்து பார்த்தபோது அவர் கைகளில் ஒன்றும் இருக்கவில்லை.

நெற்றி சுருக்கினாள். அப்பாவின் முகத்தில் கடுமையான குற்றவுணர்வு தெரிந்தது. பெரிதாய் மூச்சு வாங்கினார். அவரை அமைதிப்படுத்தினாள். வெள்ளம் பருகினார்.

“எங்கயுமே கிடைக்கல பாப்பா.”

“மருந்துக்கடைல கேட்டீங்களாப்பா?”

“இங்க ஹோட்டல்காரங்கிட்ட மருந்துக்கடை கேட்டுக்கிட்டுத்தான் போனேன். அங்க கடை பூட்டியிருக்கு. ஞாயித்துக்கிழமைங்கறதால முன்னபின்ன தொறப்பானாம்.”

“வேற கடைங்க ஏதுமில்லையா?”

“இல்லம்மா. சுத்தி நடந்து பார்த்துட்டேன். நாலஞ்சு பேருகிட்ட கேட்கவும் செஞ்சிட்டேன். ஒண்ணுரெண்டு பொட்டிக்கடைங்கதான். அங்கலாம் இல்ல.”

“…”

“பரிட்சைக்கும் நேரமாச்சுங்கறதால என்ன பண்றதுன்னு புரியாம வந்துட்டேன்.”

அப்பாவின் சமர்த்து அவ்வளவுதான். இன்னும் சற்று நேரம் போனால் அழுது விடுவார் போலிருந்தது. அவர்மீது பரிதாபமும் பிரியமும் ஒருசேர எழுந்தது.

“சரிப்பா. விடுங்க.”

“என்ன பாப்பா பண்றது இப்ப?”

பையைத் துழாவிப்பார்த்தாள். பயன்படுத்தத்தோதான துணியேதும் இருக்கவில்லை.

கண்ணகி யோசித்தாள். ஒருபக்கமாய்த்தலை வலித்தது. சட்டென அந்த யோசனை தோன்றியது. தன் கைக்குட்டையை எடுத்து விரித்தும் திரும்ப மடித்தும் பார்த்தாள். பிறகு திருப்தியடைந்தவள்போல் அதை எடுத்துக்கொண்டு கழிவறை போனாள்.

ஐந்து நிமிடத்தில் திரும்பினாள். அவள் முகத்தில் சொல்லவொண்ணா நிம்மதி!

“கிளம்பலாம்பா.”

துணி பயன்படுத்துவது கண்ணகிக்குப்புதிதில்லை. அவள் வயதுக்கு வந்தபோது அம்மா இருக்கவில்லை. ஆரம்ப நாட்களில் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. துணைக்கிருக்க வந்த அப்பா வழிக்கிழவி ஒருத்திதான் துணி வைக்கவும், பின் துவைத்து, பத்திரப்படுத்தவும் கற்றுக்கொடுத்தாள். முதல் நான்கைந்து மாதங்கள் அப்படித்தான். பிறகுதான் அத்தை - அப்பாவின் தங்கை - ஒருமுறை வீட்டுக்கு வந்தவள், துணி பயன்படுத்துவதைப் பார்த்துவிட்டு சானிடரி நேப்கின் அதைவிட எளிமையானது, சுகாதாரமானது என்று சொல்லித்தந்தாள். ஆனால் கைக்குட்டை இதுதான் முதல். எப்படியும் நான்கைந்து மணி நேரம் தாங்கும் எனக்கணித்தாள்.

கிளம்பினார்கள். விடுதி வரவேற்பறையில் சாவியை ஒப்படைத்து தேர்வுமையம் சொல்லி எப்படிப்போவது என விசாரித்து வெளியே வந்தார்கள். ஆட்டோவிலும் போகலாம். ஐந்து நிமிட நடையில் பேருந்து நிறுத்தம்; பத்து நிமிடத்துக்கொரு பேருந்து உண்டு; பதினைந்து நிமிடப்பயணம் என்று சொல்லியிருந்தார்கள். மணி ஒன்பது ஐந்துதான். அப்பாவுக்கு அனாவசியச்செலவு வைக்க விரும்பவில்லை.

"அப்பா, பஸ்லயே போயிடலாம். நேரமிருக்கு."

“சாப்படனுமே?”

அப்போதுதான் இன்னும் சாப்பிடவில்லை என்றுறைத்தது கண்ணகிக்கு. பசித்தது.

காலையில் வேறு ரயிலில் தண்ணீர் தண்ணீராய்ப்போனது. இப்போது சாப்பிட்டு மீண்டும் வயிற்றுக்கோளாறாகித் தேர்வுக்கேதும் தொந்தரவாகி விடக்கூடாது.

“எனக்குப்பசிக்கலப்பா. எக்ஸாம் முடிச்சிட்டு வந்து சாப்பிட்டுக்கறேன். நான் உள்ள போனதும் நீங்க அங்க செண்டருக்குப்பக்கத்துல போய் ஏதாவது சாப்பிட்டுக்கங்க.”

“சாப்பிடாமப்போய் பரிட்சை எழுத முடியுமா, பாப்பா? மயக்கம் வந்திராது?”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.”

நிறுத்தத்தில் நின்றவுடன் பேருந்து கிடைத்தது. ஏறிக்கொண்டார்கள். கூட்டமில்லை. இருவருக்கும் அமர தனித்தனியே இடம் கிடைத்தது. கண்ணகிக்கு ஜன்னலோரம். ஜன்னலோர இருக்கை எப்போதும் அவளுக்கு அம்மாவின் மடியை நினைவுபடுத்தும் - முகத்தை வருடும் தென்றல், இருக்கை தரும் அரவணைப்பு, காட்சிகளின் கதகதப்பு!

அம்மா இல்லை என்றால் அவள் இங்கே, இந்தக்கணம், இந்தப்பேருந்தில் போய்க் கொண்டிருக்க மாட்டாள். அம்மாவின் தாலி ஒரு பவுன். அதை அடகு வைத்ததில் பதினைந்தாயிரம் கிடைத்தது. அதில்தான் கண்ணகி ‘பரிக்ஷா’ கோச்சிங் சேர்ந்தாள்.

ஈராண்டுகள் முன்பு வரை ‘பரிக்ஷா’ இல்லை. பன்னிரண்டாவது மதிப்பெண் வைத்து மருத்துவச்சேர்க்கை நடந்தது. சென்ற ஆண்டுதான் ‘பரிக்ஷா’ வந்தது. எல்லோரும் எதிர்த்துப்பார்த்தார்கள். பலனில்லை. ‘பரிக்ஷா’ கோச்சிங் செண்டர்கள் முளைத்தன.

தமிழ் வழியில் ‘பரிக்ஷா’ பாடம் நடத்தும் மையங்களே குறைவாய்த்தான் இருந்தன. விலை விசாரித்ததில் இருபதாயிரம் முதல் இரண்டு லட்சம் வரை சொன்னார்கள். கண்ணகி இருபதாயிரம் ரூபாய்க்கு ஓரிடத்தில் சேர்ந்தாள். ஆறு மாதகாலப்பயிற்சி வகுப்பு. சனி, ஞாயிறுகளில் மட்டும். அது மிகச்சுமாரான கோச்சிங் செண்டர். பாடம் நடத்துபவர்களுக்கே பல குழப்பங்கள் இருந்தன. கேள்வி கேட்டால் பெரும்பாலும் மழுப்பினார்கள் அல்லது ஏற்கனவே சொன்னதையே திரும்பச்சொன்னார்கள், இதில் எங்கேனும் உனக்கான பதில் தென்பட்டால் பிடித்துக்கொள் என்பது மாதிரி. கண்ணகி அவர்களை நம்பினால் வேலைக்காகாது என ஒரு மாதத்திலேயே புரிந்துகொண்டாள்.

ஆனால் அதிர்ஷ்டவசமாய் அவர்கள் அளித்த புத்தகங்களும் தேர்வுத்தாள்களும் தரமானவையாக இருந்தன. அவற்றை மட்டும் ஏதோ ஓர் உருப்படியான குழுவிடம் கொடுத்துப்பெற்றிருந்தார்கள். முதலில் தன் பள்ளி ஆசிரியர்களிடம் உதவிகேட்டுப் பார்த்தாள். அவர்கள் ஒன்று அறியாமையில் எரிந்து விழுந்தார்கள் அல்லது தப்பும் தவறுமாகச் சொல்லிக்கொடுத்தார்கள். கண்ணகி தானே மண்டையை உடைத்துக் கொண்டு வாசித்தாள். சந்தேகம் வந்தால் உடன் படிப்பவர்களுடன் விவாதித்தாள். அவர்களே அவர்களுக்குள் கைகொடுத்துத் தூக்கிவிட்டுக்கொள்ள முயன்றார்கள்.

அவளது பள்ளிப்பாடங்களுக்கும் ‘பரிக்ஷா’வின் பாடங்களுக்கும் நிறைய இடைவெளி இருந்தன. மிகவும் சிரமப்பட்டாள். பள்ளித்தேர்வுகளில் எல்லாம் நேரடிக்கேள்விகள். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு பாடத்தின் பின்னும் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளே பெரும்பாலும் கேட்கப்படும். அதற்குத்தான் அவள் தயாராகியிருந்தாள்.

இப்போதும் அதில் நூற்றுக்கு நூறு வாங்கும் நம்பிக்கையுண்டு. ஆனால் ‘பரிக்ஷா’வில் தலைகீழ். யாவும் சுற்றிவளைத்த கேள்விகள். பாடங்களை அடியொற்றிய கணக்குகள். குழப்பமூட்டும் நான்கு விடைகளிலிருந்து ஒன்றைத்தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கும். “சொரசொரப்பான அகப்பிளாச வலைப்பின்னலில் எது நிகழ்வதில்லை?” எனக்கேட்பர். அதற்கு விடையளிக்க என்னவெல்லாம் நிகழ்கின்றன எனத்தெரிந்திருக்க வேண்டும்.

பல விஷயங்கள் பிடிபடவில்லை. சிலவற்றை மனனம் செய்தாள். தடுமாறினாள். முழு நம்பிக்கை வரவில்லை. தேர்வு நாளான இன்றைய தேதியிலும் பயம்தான்.

இன்னொரு புறம் பள்ளிப்பாடத்தையும் விட்டுவிட முடியவில்லை. மருத்துவச் சேர்க்கை ‘பரிக்ஷா’ மூலம் கூடாது என இவ்வாண்டும் போராடினார்கள். வழக்குத் தொடுத்தார்கள். அத்தனை எளிதாய் ‘பரிக்ஷா’வை அழிக்க விட்டுவிட மாட்டார்கள் தான். ஆனாலும் ஏதேனும் அதிசயம் நடந்து பள்ளிப்பாடத் தேர்வுகளில் வாங்கும் மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவச்சேர்க்கை என்று சொல்லிவிட்டால்?

அதனால் அதையும் சமமான முக்கியத்துவத்துடன் படிக்க வேண்டும். இரு மடங்கு பாரம் சுமக்கும் வண்டி மாடுபோல்தான் கண்ணகி அந்த ஆறு மாதங்கள் இருந்தாள். அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் மட்டுமே தூங்கினாள். கணிசமாய் எடையிழந்தாள். அத்தை சொல்லி இரும்புச்சத்து மீட்க பேரிச்சை சிரப் குடித்தாள். (“மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்கல” என்று பள்ளியில் எவனோ சொன்னான்.)

கடைசியில் எதிர்ப்பு வழக்கேதும் எடுபடவில்லை. ‘பரிக்ஷா’ நடப்பது உறுதியானது.

‘பரிக்ஷா’வுக்கு இரு வாரங்களிருக்கையில் நுழைவுச்சீட்டு சேர்த்தலை என்று போட்டு வந்தது. அது கேரளத்தில் எங்கோ இருக்கிறது என்பது புரியவே அரைநாள் பிடித்தது.

அப்போதும் அது ஏதோ கணிணிப்பிழை என்றே நினைத்தாள். காரணம் அவள் ‘பரிக்ஷா’ விண்ணப்பப்படிவத்தில் மதுரை, திருச்சி, திண்டுக்கல்தான் தேர்வு மைய விருப்பங்களாகக்கொடுத்திருந்தாள். பிறகெஎப்படி வேறெங்கோ போட முடியும்?

விசாரித்தபோது சிலருக்கு ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் எல்லாம் போட்டிருந்தனர். அருகிலேயே கேரளத்தில் மையம் கிட்டியதற்கு அவளை அதிர்ஷ்டசாலி என்றார்கள்.

‘பரிக்ஷா’வே கூடாது என்று சொன்ன வாயாலேயே இங்கேதான் ‘பரிக்ஷா’ நடத்த வேண்டும் என்று சொல்லவேண்டியதாயிற்று. வெளிமாநிலங்களில் தேர்வு மையம் போட்டதை எதிர்த்துத்தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அவர்கட்கு இங்கேயே மையம் ஒதுக்கவேண்டும் என்று ‘பரிக்ஷா’வை நடத்தும் அமைப்புக்கு உத்தரவிட்டது.

‘பரிக்ஷா’ விஷயத்தில் முதல் வெற்றி. கொண்டாடினார்கள். கண்ணகி நிம்மதியுடன் மதுரையிலேயே எழுதமுடியும் என்று நம்பி சேர்த்தலைக்குப் போவதற்கான எந்த ஏற்பாடுகளிலும் அப்பாவை ஈடுபடக்கேளாமல் மீண்டும் படிப்பில் மும்முரமானாள்.

நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும். உச்சநீதிமன்றமும் தெய்வமே.

‘பரிக்ஷா’ நடத்தும் அமைப்பு, மாறுதல் ஏற்பாடுகள் மேற்கொள்ள போதிய அவகாசம் இல்லை என்று சொன்னதை ஏற்றுக்கொண்டு தேர்வு மையங்களில் மாற்றமில்லை எனத் தேர்வுக்கு மூன்று நாட்களிருக்கையில் உச்சநீதிமன்றம் தீர்ப்புச்சொன்னது.

அந்த இடியைத் தாங்கிக்கொண்டு, அவசரமாய்ப் பிரயாணத்தைத்திட்டமிட்டார்கள்.

பேருந்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள் கண்ணகி. இந்த இடங்களை எல்லாம் முன்பே பார்த்திருப்பதுபோல் அவளுக்குத்தோன்றியது. இதோ இந்தக் குளக்கரையில் குளித்திருக்கிறேன். இந்தப் பச்சைவயல் நடுவே நடந்திருக்கிறேன். இந்த ஒற்றையடிப்பாதை இரவின் ஒளியில் எப்படி மினுங்கும் என்று அறிவேன்.

எல்லாம் பிரமை. பக்தியை உத்தேசித்த யாத்திரைகள், தொல்லியல் நோக்கிலான சுற்றுலாக்கள் என்று அவள் திருச்சி, தஞ்சை, நெல்லை, குமரி தாண்டியதில்லை.

“நங்கேலி!”

யாரோ யாரையோ அழைத்தது “கண்ணகி” எனக்காதில் விழ, திரும்பிப்பார்த்தாள். தலை வாழையிலை முழுக்க ரத்தங்கிடக்கும் காட்சி கணம் தோன்றிமறைந்தது.

திடுக்கிட்டாள். தலையை உதறிக்கொண்டாள். சிந்தனையைத்திருப்ப விரும்பினாள்.

கால்பிட் அலையியற்றியின் சுற்றுவரைபடத்தை யோசித்தாள். அதில் அலைவுகளின் அதிர்வெண் பற்றிய ஒரு கணக்கு இன்று வினாத்தாளில் இருக்குமெனத்தோன்றியது.

பேருந்து விட்டிறங்கி மனோரமா ஹைஸ்கூலைக்கேட்டு நடந்து அந்தத்தனியார் பள்ளி வாசலை அடைகையில் மணி சரியாய் ஒன்பதரை. வாயிலில் நீண்டவரிசை காத்திருந்தது. அவசரமாய் அதன் வாலில் போய்த்தன்னை இணைத்துக்கொண்டாள்.

அலைச்சலும் அட்ரினலினும் சேர்ந்து வியர்வையைத்துப்பி உள்ளாடை நனைத்தது. கைக்குட்டையும் கிடையாது என்று நினைவு வர, குருதி கசிவதுபோல் தோன்றியது.

மேலும் பதற்றமானாள். தேர்வு முடிந்து திரும்பும்வரை தாங்க வேண்டும். பிறகு இங்கே எங்கேனும் நேப்கின் வாங்கிக்கொள்ளலாம். அப்பா நிஜமாகவே சலித்துக் கொண்டாரா அல்லது தனக்குத்தான் அப்படித்தோன்றியதா என யோசித்தாள்.

திரும்பி அவரைப்பார்த்தாள். இப்போது அவர் முகத்தில் சலனமேதும் இல்லை.

“இவ்ளோ பேரு நிக்கறாங்க, பாப்பா?”

“செக்கிங்பா. அதான் லேட்டாகுது.”

ஒரு சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புப்பரிசோதனைக்கு இணையாக இருந்தது அது. முதலில் நுழைவுச்சீட்டைச் சரிபார்த்தார்கள். அப்புறம் ஆதார் ஆட்டையைச்சோதித்தார்கள். அடுத்ததாய், பார்வையால் வருடி மாணவர்களின் உடைகள் ‘பரிக்ஷா’ விதிமுறைகளுக்கு உட்பட்டவையா எனப்பரிசோதித்தார்கள்.

கடைசியாய் மெட்டல் டிடெக்டர் கொண்டு அங்குலம் அங்குலமாய் உடலைத் தடவிப்பரிசோதித்தார்கள். அதிலும் சிக்கலில்லையென உறுதியான பிறகுதான் தேர்வறைக்குள் அனுமதி. இதற்காக ஐவர் கொண்ட குழு வேலை பார்த்தது.

பெண்களுக்கென தனிப்பரிசோதகர்கள் இல்லை என்பதை கண்ணகி கவனித்தாள்.

நீண்ட கை வைத்த அங்கிகள் கூடாது. எந்த நகையும் அணிந்திருக்கக்கூடாது. ஷூக்கள் கூடா. முழுக்கை சட்டை அணிந்திருந்த ஆண்கள் அவசர அவசரமாய் உடன் வந்திருந்த பெற்றோர் சுமந்து கொண்டிருந்த துணிப்பை துழாவி அரைக்கை சட்டை அணிந்து கொண்டார்கள். பெண்கள் மாற்று உடையுடன் கழிவறை தேடி ஓடினார்கள். அப்படி எந்தப்பொருத்தமான உடையும் கைவசம் இல்லாதவர்களின் சட்டையின் கைகளைத்தயாராய் வைத்திருந்த பெரிய கத்திரிக்கோல் கொண்டு கலைநயத்துடன் வெட்டியெறிந்தார்கள். விட்டால் கைகளையும் சேர்த்து வெட்டி விடுவார்கள் போலிருந்தது. எத்தனை துணிகள் தின்றும் பசியாறாமல் கோரப் பற்களுடன் அந்தக்கத்தரிக்கோல் புன்னகைத்தது போலிருந்தது கண்ணகிக்கு.

“ஸார். இது என் லக்கி ஷர்ட். எல்லா முக்கியமான எக்ஸாமுக்கும் இதுதான் போடுவேன். ஹாஃப்ஹேண்ட் ஷர்ட் மாதிரியே மடிச்சு விட்டுக்கறேன் ஸார்.”

“தம்பி, அதுக்குத்தான் ‘பரிக்ஷா’ ரூல்ஸ்ல எல்லாம் தெளிவாப்போட்ருக்காங்க. அதையே ஒழுங்காப்படிக்காம வந்து நீ டாக்டராகி என்னப்பா பண்ணப்போற?”

அவன் கண்ணீர் மல்கியபடி நிற்க, அந்த நீலச்சட்டையைக் கத்தரிக்கோல் தின்றது.

கண்ணகி எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் ‘பரிக்ஷா’ தேர்வுக்குத்தரப்பட்டிருந்த விதிமுறைகளைக்கவனமாய் வாசித்திருந்தாள். தவிர, போன ‘பரிக்ஷா’வின்போது நடந்த பரிசோதனைச்சிக்கல்களை தொலைக்காட்சியில் பார்த்திருந்தாள். எவை கூடாதென்றார்களோ எல்லாவற்றையும் தவிர்த்திருந்தாள்.

எப்போதும்போல் சுடிதார்தான் அணிந்திருந்தாள். அரைக்கை வைத்த டாப்ஸ். தோடு, மோதிரம், கொலுசு, வளையல் எதுவும் அணியவில்லை. ஹேர்பின் கூடக்குத்தாமல் ரப்பர் பேண்டிடம் கூந்தலை தஞ்சந்தந்திருந்தாள். அவள் செய்து கொண்டிருந்த ஒரே அலங்காரம் நெற்றியில் ஒட்டிய வழக்கமான கருஞ்சிவப்பு ஸ்டிக்கர் பொட்டுதான்.

அம்மா இருந்து பார்த்திருந்தால் “ஏண்டி மூளியாப் போற?” என அதட்டியிருப்பாள்.

வரிசையில் தனக்கு முன் நடப்பனவற்றை ஒரு வெளியாள்போல் சுவாரஸ்யமாகக் கவனித்துக்கொண்டிருந்தாள். நேரமாகிறதே என்பது மட்டும்தான் அவளது கவலை. இருபது நிமிடங்கள் மட்டுமே இருந்தன. அவளுக்கு முன்பு ஐந்து பேர் இருந்தார்கள்.

அவள் முறை வந்தபோது நுழைவுச்சீட்டு, ஆதார் சரி பார்த்தார்கள். புகைப்படத்தில் இருப்பது அவள்தானா என உற்றுப்பார்த்து உறுதி செய்தார்கள். ஆதாரில் இருக்கும் படத்தை அசல் ஆசாமியுடன் ஒப்பிட்டுச்சரிபார்க்க தனிப்பயிற்சி கொடுப்பார்கள் போல என்று நினைத்துக்கொண்டாள். அடுத்தது கத்தரிக்கோல்காரர் கண்களால் அலசினார்.

“துப்பட்டா போடக்கூடாது. ரிமூவ் பண்ணிடு.”

அதிர்ந்தாள்.

“ஸார், இதெல்லாம் ரூல்ஸ்ல சொல்லலையே!”

“அப்புறம் அவுங்க எல்லாம் எப்படி கரெக்டா வந்தாங்க?"

மற்ற பெண்களைச் சுட்டினார். அப்போதுதான் அவர்களைக் கவனித்தாள். டிஷர்ட் அணிந்தவர்கள். சிலர் சுடிதார் டாப்ஸுக்கு மேல் எதுவும் அணிந்திராத பெண்கள்.

“சந்தேகத்துக்குரியதாய்க் கூடுதல் துணிகள் கூடாதுன்னு சொல்லியிருக்குல்ல?”

“அது வந்து…”

“துப்பட்டா அலவ் பண்ணினா அடுத்து யாராவது போர்வை போர்த்திட்டு வருவாங்க.”

“ஸார்… துப்பட்டா இல்லாம எப்படி?”

“இங்க அதெல்லாம் சகஜந்தான்.”

இங்கே என்றால் கேரளத்தைச்சொல்கிறார். பெண்கள் முண்டு கட்டும் பாரம்பரியம்.

பரிதாபமாய் அப்பாவைப்பார்த்தாள். அவருக்கு என்ன சொல்வதெனப்புரியவில்லை.

கண்ணகிக்கு வயதுக்கு மீறிய வளர்ச்சி. பதினோரு வயதில், ருவாகாத போதே அப்பா அவளைப் பள்ளிக்குச் சுடிதார் அணியச்சொன்னார். துப்பட்டாதான் நோக்கம். அன்று ஆறாம் வகுப்பில் கண்ணகி நுழைந்தபோது அவள் மட்டுமே சுடிதார் தரித்திருந்தாள்.

மற்ற எல்லோரும் பாவாடை சட்டை. மிகச்சங்கோஜமாய் உணர்ந்தாள். சுடிதார் போட்ட ராசியோ என்னவோ அடுத்த ஏழாம் மாதம் வயதுக்கு வந்துவிட்டாள். அப்போது துப்பட்டா அவளுக்கு அரவணைப்பாக, பாதுகாப்பாகத்தோன்றியது.

பிறகு எப்போதும் அவளது பிரதான ஆடை சுடிதார்தான். கோவில் திருவிழாக்கள் போகையில், திருமணம், வளைகாப்பு, பூப்பு நீராட்டு போன்ற விசேஷங்களுக்குப் போகையில் மட்டும் பாவாடை தாவணி. வீட்டில் இருக்கையிலும் பழைய சுடிதார் தான். நைட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருமுறை அத்தை தன் நைட்டியை ஒன்றை அவளுக்குத்தர முன் வந்தபோது அப்பா பிடிவாதமாய் மறுத்துவிட்டார்.

“உங்கம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. அவ என்னிக்காவது நைட்டி போட்டுப் பாத்திருக்கியா? ஒருநாளும் அவ முந்தானை விலகி நானே பார்த்ததில்ல, பாப்பா.”

வேறு வழியில்லை. ஏதும் பேசாமல் தோள்பட்டைகளில் இருந்த சேஃப்டி பின்களை விடுவித்து, துப்பட்டாவை நீக்கியெடுத்து, மடித்து, அப்பாவின் கையில் கொடுத்தாள்.

அவரது கண்களைப்பார்க்க அவளுக்குத்திராணி இருக்கவில்லை. அவருக்கும்.

கத்தரிக்கோல்காரர் அடுத்து மெட்டல் டிடெக்டர் கொண்டு அவளை வருடினார்.

“பீப் பீப்.”

புருவத்தைச் சுருக்கியபடி மீண்டும் அவள்மீது அந்த இயந்திரத்தால் தடவினார்.

“பீப் பீப்.”

இப்போது கண்ணகி பதற்றமானாள். இழவெடுத்தது ஏன் இப்படிக்கத்துகிறது!

“ஏதாவது ஜ்வெல் போட்டிருக்கியா?”

“இல்ல ஸார்.”

“வேற ஏதாவது மெட்டல்?”

“ம்ஹூம்.”

“அப்புறம் எப்படிச்சத்தம் வருது?”

“தெரியலையே…”

“ஆம்பிளைப்பசங்கனாலும் அரணாக்கொடி போட்டுக்கிட்டிருந்து சத்தம் வந்துச்சு.”

யோசித்தார்.

“ட்ரெஸ்ஸில் மெட்டல் ஹூக் ஏதாவது இருக்கா?”

யோசித்தாள். சுடிதார் பேண்ட்டில் நாடாதான். டாப்ஸில் முன்பக்கம் பட்டன். ஸிப் கூட ஏதுமில்லை. ஹூக் உத்தரவாதமாய் எங்குமில்லை. தலையாட்டி மறுத்தாள்.

“இன்னர்ல?”

“ஸார்…”

“ப்ரேஸியர், பெட்டிகோட் இப்படி.”

ப்ராவில் ஹூக் இருக்கிறது என்பதும் அது இரும்பு என்பதும் நினைவுக்கு வந்தது.

“ஆமா ஸார்.”

“ரூல்ஸ்படி அதுவும் கூடாது.”

இப்போது அப்பா கொதிப்பானார்.

“என்னய்யா நினைச்சிட்டு இருக்கீங்க? எல்லாத்துக்கும் ஒரு அளவுதான். வயசுக்கு வந்த பொம்பளப்புள்ளயப் புடிச்சுவெச்சு என்ன கேள்விலாம் கேட்டுட்டு இருக்கீங்க?”

“ஐயா, இது எங்க வேலை. இதுல பாவபுண்ணியம் பாத்தா வேலையை விட்டுட்டுப் போக வேண்டியதுதான். போன வருஷம் ஒருத்தன் சின்னதா ஒரு மைக்ராஃபோன் சட்டை பட்டன்ல வெச்சு எழுதி மாட்டிக்கிட்டான். அதான் இந்தத்தடவ கெடுபிடி ஜாஸ்தி. சில ரிலிஜியஸ் மேட்டர்ஸ் தவிர எதுக்கும் எக்சப்ஷன் தரக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட் ஆர்டர். அதை மீற முடியாது. நாங்க என்ன வேணும்னா பண்றோம்?”

“இப்ப என்ன பண்ணணும்னு சொல்றீங்க?”

“இதைக்கழட்டிட்டு மெட்டல் இல்லாத வேற இன்னர் இருந்தா போட்டுட்டு வந்து எழுதச்சொல்லுங்க. நீங்க வந்தவழிலயே ரைட்சைட் போனா டாய்லெட் இருக்கு.”

அவள் வேறு உள்ளாடை எடுத்து வரவில்லை. இன்றே மதுரை திரும்பத்திட்டம்.

“வேற இல்ல, ஸார்.”

“அப்ப ரிமூவ் பண்ணிட்டு வா. டைமாகுது. அஞ்சு நிமிஷம்தான் இருக்கு. உனக்குப் பின்னாடி நாலு பேர் இருக்காங்க. எல்லோரையும் செக் பண்ணி உள்ள அனுப்பனும்.”

“ஸார், ப்ளீஸ்…” கண்ணகி கண்ணீருடன் நின்றாள். ஐம்புலன்களிலும் கெஞ்சலிருந்தது.

“ரூல் இஸ் ரூல். கழட்டிட்டு வர்றியா, இல்ல எக்ஸாம் எழுதாம வெளிய போறியா?”

என் லட்சியம். அம்மாவின் கனவு. அப்பாவின் ஆசை. ‘பரிக்ஷா’ எழுதாமல் போவதா?

தீர்மானித்தாள். அப்பாவை அழைத்துக்கொண்டு டாய்லெட் நோக்கி நடந்தாள். உள்
நுழைந்து தாழிட்டு ஆடை அகற்றி, உள்ளாடை கழற்றி, மீண்டும் ஆடை அணிந்து, வெளியே வந்து அப்பாவிடம் பையை வாங்கி உள்ளே உள்ளாடையைத்திணித்தாள்.

நடக்கையில் மார்பு குலுங்கியது. வயதுக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் இப்படி நடந்ததே இல்லை என்பது உறைத்தது. முன்கழுத்தில் டாப்ஸை மேலே இழுத்து விட்டுக்கொண்டாள். வித்தியாசமாய் உணர்ந்தாள். நிர்வாணமாய் நடப்பதுபோல்.

சிறுவர்களுக்கு மார்புறுப்புகளில் வைரஸ், பேக்டீரியா தாக்கும் மரபியல் நோயின் பெயர் என்ன? எகாமாகுளோபுலினிமியாவா? இல்லை தலாசீமியாவா? கண்ணகி குழம்பினாள். அதுகாறும் படித்ததெல்லாம் மறந்ததுபோல் இருந்தது அவளுக்கு.

வரிசை நோக்கி நடந்து மெட்டல் டிடெக்டர் முன் நிற்கையில் நிராயுதபாணியான தீவிரவாதிபோல் உணர்ந்தாள். இம்முறை அது சத்தங்காட்டாமல் சம்மதம் தந்தது.

“முலைச்சி.”

பின்னால் நின்றிருந்த பையன்களில் யாரோ கிசுகிசுப்பாய்ச் சொல்லிச்சிரித்தார்கள்.

திடுக்கிட்டாள். சரியாய்த்தான் கேட்டேனா? என்னைத்தானா? உடம்பு பற்றி எரிந்தது.

மொலையால் எரித்த தீயும் அய்லசா
மூளுதம்மா கூடலிலே அய்லசா

கன்னியாகுமரியில் காதில் விழுந்து, மனதில் புதைந்த மீனவர்களின் குரல் கிளர்ந்தது.

“எத்தனை முலக்கரம் வாங்கலாம்?”

திரும்பக் கலவையாய்ச்சிரித்தார்கள். யாரோ பாவப்பட்டு அதை அதட்டுவது கேட்டது.

தேர்வறை நோக்கி நடந்தவள் சட்டெனத் திரும்பிச்சென்று, மேசை மீதிருந்த கத்தரிக் கோலைப் பற்றிஎடுத்து ஆவேசத்துடன் தன் முலைகளை வெட்டினாள். சுவரெல்லாம் குருதி தெறித்தது. கண்கள் சொருக, தள்ளாடிப்போய் தேர்வறை வாசலில் விழுந்தாள்.   

காலம் உறைந்து நிற்க, ‘பரிக்ஷா’ தொடங்குவதன் அடையாளமாய் மணி அடித்தது.

***

(ஓவியம்: எம் எஃப் ஹுசைன், 1976)

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்