நெஞ்சுக்கு நீதி (Abridged)
#HBDKalaignar95
இன்று கலைஞருக்கு 95 அகவை பூர்த்தியாகிறது. உடல் நலத்தை முன்னிட்டு அரசியல் களத்தில் செயல்பட முடியாத ஓய்வில் இருக்கிறார். இந்தத் தற்காலிக முடக்கத்திலிருந்து மீண்டு வருவார் என என் போல் நம்பும் கோடிப் பேர் உண்டு.
2016 சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியின் மீதான கடும் அதிருப்தியையும் தாண்டி திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாததற்கு பல விளக்கங்கள் இருக்கலாம். இன்றைய தமிழக இளைஞர்கள் மத்தியில் சமீபத்தில் மறைந்த ஜெயலலிதா பற்றி இருக்கும் நல்லபிப்பிராயம் கூட கலைஞர் பற்றி இல்லை என்கிற கசப்பான உண்மையும் அதிலொன்று. அதற்குக் காரணமாய் விமர்சனத்துக்குரிய சில பிழைகள் கலைஞர் பக்கம் உண்டு என்ற போதிலும் அதை விட அவரது நெடிய அரசியல் வரலாற்றைப் புதியவர்கள் அதிகம் அறிந்து கொள்ளாததே பிரதானப் பிரச்சனை என நினைக்கிறேன்.
இந்தியாவில் இதுகாறும் எழுதப்பட்டதிலேயே ஆக நீளமான சுயசரிதை கலைஞர் மு. கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதியாகவே இருக்கும். ஆறு பாகங்களில் சுமார் 4,000 பக்கங்களில் நீளும் இந்நூற்தொகை 2006 வரையிலான கலைஞரின் வாழ்க்கையைப் பேசுகிறது. அதற்குப் பிறகு நடந்தவைகளை ஏழாம் பாகமாக அவர் எழுதக்கூடும்.
ஆனால் இத்தலைமுறைக்கு பல்லாயிரம் பக்கங்களை வாசித்து ஒரு நூற்றாண்டுச் சகாப்தத்தினை உள்வாங்கும் பொறுமையும் நுண்மையும் இருக்கிறதா என்பதைச் சந்தேகத்தோடவே பார்க்க வேண்டி இருக்கிறது. அதனால் நெஞ்சுக்கு நீதியின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் 50 முதல் 100 சொற்களுக்குள் சுருக்கி அவ்வப்போது ஃபேஸ்புக் பதிவாக வெளியிட உத்தேசித்திருக்கிறேன். எப்படியும் ஈராண்டுகளேனும் ஆகிவிடும். கலைஞரின் மொழிச் செழுமையையும் நடையின் சுவையையும் இதில் கொண்டு வர முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். நூல்களின் உள்ளடக்கத்தைக் கடத்துவது மட்டுமே இந்த முயற்சியின் நோக்கம். குழந்தைகளுக்கு ராமாயணக் கதை சொல்வது போல்! அதில் கம்ப ரசம் அல்ல; கதையின் சாரமே மினுங்கும்.
இது நெஞ்சுக்கு நீதிக்கு மாற்று அல்ல; இதில் தொடங்கி அதற்கு நகரலாம். பள்ளிப் பாடப்புத்தகங்களில் ஆங்கில க்ளாஸிக்களின் Abridged Version தருவார்களே அதுபோல்.
நான் திமுககாரன் அல்லன். கழகத்தோடு மட்டுமல்ல, கலைஞரோடே முரண்பாடுகள் உண்டு. ஆனால் அதெல்லாம் கடந்து அவர் நம் நாட்டின் தவிர்க்க முடியாத, மிகக் கம்பீரமான அரசியல் ஆளுமை. அதைப் பரவலாக்குவது மட்டுமே என் விருப்பம். வதந்திகளை நம்பி எழுப்பப்படும் “திருட்டு ரயிலேறி சென்னை வந்தவருக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது?” போன்ற அசட்டுக் கேள்விகளுக்கு இது பதில் சொல்லும்.
கலைஞர் நூறாண்டு வாழ வேண்டும்; மீண்டும் தமிழகத்தை ஆள வேண்டும்!
*
நெஞ்சுக்கு நீதி – 1
1. தொடக்கம்
அரசுப் பொறுப்புக்கு வந்த பின் அதுவும் முதல்வரான பின் எழுத எப்படி நேரம் கிடைக்கிறது என வியக்கிறார்கள். பணி அழுத்தங்களுக்கு மருந்தே எழுத்து தான். புகை வண்டிப் பயணங்களை எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொள்கிறேன் - இரவு 10 மணிக்கு மேல் துவங்கி அதிகாலை 5 மணி வரை. பின் ஒரு மணி நேரத் தூக்கம்.
காலையில் வீட்டில் பார்வையாளர்கள். பிறகு கோட்டையிலும். பின் அரசாங்கப் பணி. அதன் சுமையைத் தாண்டி என் மனதை இலகுவாக்குவது கட்சி வேலைகள் தாம்.
என் நோக்கம் எளிய மக்களை மகிழ்ச்சியாக வாழச் செய்வது தான். அதற்காக என்ன செய்திருக்கிறேன் இதுவரை? ஓரளவு செய்திருப்பதாக நினைக்கிறேன். இந்த மாநிலம், மக்கள், அரசியல் குறித்தெல்லாம் ஒரு நெடுங்கட்டுரை எழுத நினைக்கிறேன் - அதன் மையக் கதாபாத்திரமாய் என்னை வைத்துக் கொண்டு. அவனவன் தன் நெஞ்சுக்கு நீதி வழங்கிக் கொள்ள வேண்டும் - நீதிமன்றத் தீர்ப்புகள் போல் அதற்கு அப்பீல் இல்லை.
#NenjukkuNeethi #P1C1
*
Comments