ஆட்சிக் கலைப்பு அரசியல் ஆயுதமா?


“Power tends to corrupt and absolute power corrupts absolutely. Great men are almost always bad men.”
- Lord Acton

வெகுஜன மக்கள் மத்தியில் கூட இந்திய அரசியல் சாசனத்தின் ஒரு பிரிவின் எண் பழக்கமாகிப் புழக்கத்தில் இருக்கிறதெனில் அது 356ம் பிரிவு தான். மாநில ஆட்சிக் கலைப்பு. தம் மாநிலத்தை ஆள தாம் தேர்ந்தெடுத்த ஓர் அரசு நியாயமான அல்லது அஃதற்ற காரணத்துக்காக பதவியிலிருந்து நீக்கப்படுவதால் அப்பிரிவு அவர்களின் மன உணர்வுகளோடு நேரடித் தொடர்பு ஸ்தானத்தைப் பெற்று விட்டதெனத் தோன்றுகிறது.

ஆட்சி கலைக்கப்பட்டதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மாநிலம் வந்து விடும் என்றாலும் எழுத்துப்பூர்வமாக இந்திய ஜனாதிபதியே அம்மாநில ஆட்சிக்கான பொறுப்பாளர் என்பதால் ஆட்சிக் கலைப்பை ஜனாதிபதி ஆட்சி என்றும் அழைப்பர். (ஜம்மு & காஷ்மீர் மாநிலம் மட்டும் சாசனத்தின் 370ம் பிரிவின் காரணமாக வேறு விதமாகப் பாவிக்கப்படுகிறது என்பதால் அங்கே அதற்குப் பெயர் ஆளுநர் ஆட்சி!)

இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த 68 ஆண்டுகளில் இதுவரை 115 முறைகள் இப்பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்பட்டிருக்கின்றன (தமிழகத்தில் மட்டும் 4 முறைகள் - அதில் கலைஞரின் ஆட்சி 2 முறை). ஒரு முதல்வர் தன் பெரும்பான்மையைச் சட்டசபையில் நிரூபிக்க முடியாது போகையில் (அரசியல் கூட்டணி அல்லது கட்சி உடைகையில்), ஒரு சட்டசபை முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகும் போது, சட்டசபைக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்படும் போது பொதுவாய் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் சூழல் உண்டாகிறது.

இதைத் தாண்டிய இன்னொரு முக்கியக் காரணம் ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெடும் போது அதைக் காரணம் காட்டி மாநில ஆட்சியைக் கலைக்கலாம். 356வது பிரிவு மத்திய அரசினால் அரசியல் பழிவாங்கும் கருவியாகப்பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுவதற்குக் காரணம் இதுவே. பாராளுமன்ற இரு அவைகளிலும் தம் கட்சிக்குப் (அல்லது கூட்டணிக்கு) பெரும்பான்மை வாய்த்து விட்டால் தமக்கு ஆகாத ஏதேனும் ஒரு மாநில அரசின் மீது 356ம் பிரிவை துஷ்பிரயோகம் செய்வது மத்திய அரசுகளின் வாடிக்கையாக உள்ளது. உண்மையில் அப்பிரிவு ஓர் அரசியல் ஆயுதமா?

மாநில ஆட்சியைக் கலைத்தல் தொடர்பாய் இந்திய அரசியல் சாசனத்தில் இருக்கும் பிரிவுகள் 356 மற்றும் 357. (ஜம்மு & காஷ்மீர் மாநிலம் இப்பிரிவுகளின் கீழ் வராது. அம்மாநிலத்துக்கென தனி அரசியல் சாசனம் இருக்கிறது. அதில் இருக்கும் 92வது பிரிவு ஆட்சிக் கலைப்பு பற்றிப் பேசுகிறது.) அந்தப் பிரிவுகள் சொல்பவை என்ன?

அரசியல் சாசனத்தின் 356வது பிரிவு அரசியல் சாசனப் பிரிவுகளை மாநிலங்கள் செயல்படுத்த முடியாமல் போகையில் என்ன செய்ய வேண்டும் எனப் பேசுகிறது.

(1) ஆளுநரிடமிருந்து மாநிலத்தின் நிலைமை குறித்து அறிக்கை வரப்பெற்றாலோ அல்லது அரசியல் சாசனப் பிரிவுகளின்படி மாநில அரசு செயல்படவில்லை என ஜனாதிபதி நம்பினாலோ ஒரு பிரகடனம் மூலம் கீழ்க்காணும் விஷயங்களைச் செய்ய முடியும்: (அ) மாநில அரசின் செயல்பாடுகளையும், ஆளுநர் மற்றும் எந்த அமைப்போ அதிகாரயோ (சட்டசபை தவிர) செலுத்த முடிந்த அதிகாரங்களையும் தானே எடுத்துக் கொள்ளலாம். (ஆ) சட்டசபையின் அதிகாரங்கள் பாராளுமன்ற ஆளுகையின் கீழ்தான் செயல்பட வேண்டும் என அறிவிக்கலாம். (இ) (மாநில உயர்நீதிமன்றம் தவிர) பிற அமைப்புகள், அதிகாரிகளின் அரசியல் சாசனம் தொடர்புடைய செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்.

(2) இது ஜனாதிபதி ஆட்சிப் பிரகடனம். அப்பிரகடனத்தை அடுத்ததான மற்றொரு பிரகடனத்தின் மூலம் ஜனாதிபதி ரத்து செய்யவோ மாற்றம் செய்யவோ முடிவும்.

(3) இப்படியான பிரகடனங்கள் பாராளுமன்ற இரு அவைகளின் முன் வைக்கப்பட வேண்டும். அங்கு ஒப்புதல் கிட்டவில்லை எனில் (ஜனாதிபதி ஆட்சி ரத்து தவிர) இப்பிரகடனங்களின் செயல்பாடுகள் இரண்டு மாதங்களில் காலாவதியாகி விடும்.

(4) பாராளுமன்ற ஒப்புதல் பெற்ற ஜனாதிபதி ஆட்சிப் பிரகடனம் ஆறு மாதங்களில் காலாவதி ஆகும். பிறகு மறுபடி புதிதாய் பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும். எந்தப் பிரகடனமும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் அமலில் இருக்க முடியாது. (இடையில் மக்களவை கலைக்கப்பட்டு, மாநிலங்களவை மட்டும் ஒப்புதல் தந்தால் அடுத்த மக்களவை அமைந்த 30 நாட்களுக்குள் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.)

(5) (அ) இந்தியாவில் அல்லது அம்மாநிலத்தில் அவசர நிலைப் பிரகடனம் அமலில் இருந்தாலோ (ஆ) தேர்தல் ஆணையம் அம்மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடத்தச் சூழல் இல்லை எனச் சான்றிதழ் அளித்தாலோ ஒழிய ஜனாதிபதி ஆட்சிப் பிரகடனம் செய்யப்பட்ட ஓராண்டுக்குப் பின் அதை நீடிக்க பாராளுமன்றம் ஒப்புதல் தரலாகா. (இக்கட்டுப்பாடு 1978ல் கொண்டு வரப்பட்ட 44வது சட்ட திருத்தத்தின் மூலம் வந்தது.)

இதன் நீட்சியாய் 357வது பிரிவு ஜனாதிபதி ஆட்சியின் போது சட்டம் இயற்றுவது தொடர்பான அதிகாரங்களைப் பேசுகிறது. (1) ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கையில் அம்மாநிலத்தில் ஜனாதிபதியோ, பாராளுமன்றமோ வேறு அதிகாரியோ புதிய சட்டம் இயற்றலாம். (2) அப்படிப் போட்ட சட்டம் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்த பின்பும் அமலில் இருக்கும் (சட்டசபை அதை மாற்றவோ, நீக்கவோ தீர்மானிக்கும் வரை).

சுருங்கச் சொன்னால் ஒரு மாநில அரசு அரசியல் சாசனக்கூறுகளைச் செயல்படுத்த இயலாத சூழலில் மத்திய அரசு ஜனாதிபதி முகமூடியணிந்து அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறது. ஜனாதிபதி ஆளுநரின் மூலமாக ஓய்வு பெற்ற குடிமைப் பணியாளர்கள் முதலிய நிர்வாகிகளைப் பணியில் அமர்த்தி ஆட்சியை நடத்துவார். கவனிக்க வேண்டியது, முதல்வர், அவரது அமைச்சர்கள் அனைவரது பதவியும் பறிக்கப்படும். சட்டசபை ஒத்தி வைக்கப்படும் அல்லது கலைக்கப்படும்.

பொதுவாய் முதல்வரே ஒரு மாநிலத்தின் நடைமுறைத் தலைமை (de facto). ஆளுநர் கௌரவத் தலைமை (de jure). அட்டைக் கத்தி அசல் கத்தியாவதே ஆட்சிக் கலைப்பு!

ஜம்மு & காஷ்மீரில் மேற்சொன்ன சிக்கல்கள் எழுகையில் அம்மாநில அரசியல் சாசனத்தின் 92வது பிரிவின் படி முதலில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படும். இந்திய ஜனாதிபதியின் சம்மதம் பெற்றபின் ஆளுநர் இந்தப் பிரகடனத்தை வெளியிடுவார். ஆறு மாதத்தில் ஆளுநர் ஆட்சியை நீக்குமளவு நிலைமை சீர்படவில்லை எனில் பின் 356வது பிரிவைப் பிரயோகித்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும். இரண்டும் ஒன்று போல் தோன்றினாலும் மெல்லிய நடைமுறை வேறுபாடுகள் உண்டு.

356வது பிரிவின் வேர் உண்மையில் ப்ரிட்டிஷ் இந்தியாவில் தொடங்குகிறது. 1935ல் அவர்கள் இயற்றிய இந்திய அரசுச்சட்டமானது இந்தியாவில் தேர்தல் நடத்தி மக்களே தங்கள் மாகாண அரசுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வழி செய்தது. அதன் 93வது பிரிவு சில சூழல்களில் கவர்னர் (ப்ரிட்டிஷ்காரர்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட அரசை நீக்கி, மாகாண அதிகாரங்களைக் கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்கிறது. முதல்முறையாக இந்திய அரசியல் கட்சிகளிடம் அமைச்சரவை அமைத்து ஆளும் அதிகாரத்தை அளிப்பதால் சிக்கல்கள் முளைத்தால் கையாளும் முன்னேற்பாடாக இத்தகைய சட்டத்தை வைத்திருந்தது ப்ரிட்டிஷ் அரசு. சுதந்திரத்திற்குத் தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்த நம்மை அவர்கள் முழுக்க நம்பாதிருந்தது ஆச்சரியமல்ல. கட்டுப்படுத்தப்பட்ட மக்களாட்சியையே ப்ரிட்டிஷார் இந்தியாவில் அனுமதித்தனர்.

சுதந்திரம் கிடைத்த ஆகஸ்ட் 1947 முதல் அரசியல் சாசனம் அமலுக்கு வந்த ஜனவரி 1950 வரையிலான இரண்டரை ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட 93வது சட்டப் பிரிவு அமலிலேயே இல்லை. பிரிவினைக் கலவரங்கள் மற்றும் மாகாண இணைப்புகள் நடந்த அந்தக் காலகட்டத்தில் அது மாதிரியான மாகாணங்கள் மீதான ஓர் உச்ச அதிகாரம் இன்றி மத்திய அரசு தடுமாறி இருக்க வேண்டும். அதனால் அரசியல் சாசனத்தின் வரைவில் 356வது பிரிவு இடம் பெற்றது. அரசியல் நிர்ணயச் சபை விவாதங்களின் போது இப்படியான உச்ச அதிகாரத்தை மத்திய அரசுக்கு அளிப்பது குறித்த அச்சங்கள் வெளிப்படுத்தப்பட்டன. அது மத்திய மாநில - அரசுகள் இணங்கி நடத்தும் கூட்டாட்சி அரசு (Federal Government) முறைக்கு எதிரானது என மாநிலக் கட்சிகளும் இடதுசாரிகளும் கவலைப்பட்டனர். ஆனால் அம்பேத்கர் அவற்றை எல்லாம் நிராகரித்தார். அவர் இத்தகு சட்டப் பிரிவுகள் எழுத்தில் இருந்தாலும் ஒருபோதும் செயல்பாட்டுக்கு வராத Dead Letter-ஆகவே இருக்கும் என நம்பினார்.

ஆகஸ்ட் 9, 1949 அன்று ஆட்சிக் கலைப்புச் சட்டம் மீதான விவாதத்தில் அதற்கான வழிகாட்டு முறைமையையும் குறிப்பிட்டார் அம்பேத்கர்: “ஒருவேளை இச்சட்டம் பயன்படுத்தப்பட்டால், ஜனாதிபதி மாகாணங்களின் நிர்வாகத்தை முடக்கும் முன் உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்வார் என நம்புகிறேன். முதலில் ஜனாதிபதி சம்மந்தப்பட்ட மாகாணத்துக்கு அரசியல் சாசனம் சரியாக அமல்படுத்தப்படவில்லை என்பது குறித்த ஓர் எச்சரிக்கை விடுக்க வேண்டும். அது பயனளிக்கவில்லை எனில் அடுத்த நடவடிக்கையாக அந்த மாகாணத்தில் வாக்கெடுப்பின் மூலம் மக்களே தங்களுக்குள் அப்பிரச்சனைக்குத் தீர்வு காண வலியுறுத்த வேண்டும். இவ்விரு முயற்சிகளுமே தோற்றால் மட்டுமே ஆட்சிக் கலைப்பைப் பரிசீலிக்க வேண்டும்.”

இப்படியாகத்தான் அன்று இந்திய அரசியல் சாசனத்தில் 356வது பிரிவு இடம்பெற்றது.

ஆனால் அம்பேத்கரின் நம்பிக்கை பொய்த்தது. நவீன இந்தியாவின் முதற்சிற்பியான நேருவே அதை உடைத்து, தவறான முன்னுதாரணம் ஆனார். 1959ல் கேரளாவில் ஈஎம்எஸ் நம்பூதிரி பாடின் கம்யூனிஸ்ட் அரசு முழுப் பெரும்பான்மை பெற்றிருந்த போதும் அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த தன் மகள் இந்திரா காந்தியின் பேச்சைக் கேட்டு விமோசன சாமாரம் (மலையாளத்தில் ‘சுதந்திரப் போராட்டம்’ - கம்யூனிஸ்ட் அரசு கொண்டு வந்த நில மற்றும் கல்விச் சீர்திருத்தங்களை எதிர்த்து நடந்தது) போராட்டங்களால் சட்டம் ஒழுங்கைக் காரணங்காட்டி ஆட்சியைக் கலைத்தார். துரதிர்ஷ்டவசமாக அதைக் காண அம்பேத்கர் உயிருடன் இல்லை.

அதற்கு முன்பே 1953ல் தேசத்தின் முதல் காங்கிரஸ் அல்லாத ஆட்சியின் கலைப்பு பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் மாநிலங்களின் ஒன்றியத்தின் (PEPSU) மீது 356வது பிரிவு பிரயோகிக்கப்பட்டது. அடுத்த வந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றது.

சுதந்திரம் கிடைத்த முதல் இருபது ஆண்டுகளில் அதாவது நேருவும் லால் பகதூர் சாஸ்திரியும் பிரதமராக இருந்த வரை 9 முறை 356வது பிரிவு பயன்படுத்தப்பட்டது. பிறகு இந்திரா காந்தி பிரதமரானார். ஆட்சியிலிருந்த பத்தாண்டுகளில் 35 முறை இப்பிரிவைப் பயன்படுத்தி ஆட்சிகளைக் கலைத்தார். அரசியல் காரணங்களுக்காக 356வது சட்டப் பிரிவு மிக மிக மோசமாகப் பயன்படுத்தப்பட்டது அப்போது தான்.எமர்ஜென்ஸிக்குப் பின் ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாயும் (முதல் காங்கிரஸ் அல்லாத மத்திய அரசு) தான் பதவியிலிருந்த வெறும் ஈராண்டுகளில் 16 முறை மாநில அரசுகளைக் கலைத்தார். எல்லாமே காங்கிரஸ் ஆட்சி செய்தவை. அதில் ஒன்று ராஜஸ்தான். ராஜஸ்தான் மாநில அரசு அதை ஏற்காமல் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. ஆட்சிக் கலைப்புகளுக்குப் பின் இருக்கும் அரசியல் காரணங்களை ஆராய மறுத்தது அத்தீர்ப்பு. வழக்கை விசாரித்த சில நீதிபதிகள் 356வது பிரிவை அமல்படுத்துவது என்ற ஜனாதிபதியின் முடிவைக் கேள்வி கேட்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்று வேறு சொன்னார்கள்.

மீண்டும் 80களில் இந்திரா அரியணை ஏறிய போது முந்தைய ஜனதாக் கட்சி அரசைப் பழிவாங்கும் முகமாக 15 முறை ஜனாதிபதி ஆட்சி கொண்டு வந்தார். (ஆக மொத்தம் இந்திரா காந்தி மட்டும் 50 மாநில அரசுகளைக் கலைத்திருக்கிறார்.) இந்திரா காந்தி ஆட்சியில் ஒரே ஆண்டில் (1977) 12 அரசுகள் கலைக்கப்பட்டன. பின் மீண்டும் அவர் பதவிக்கு வந்த போது ஒரே ஆண்டில் (1980) 9 அரசுகள் கலைக்கப்பட்டன. ஒராண்டில் அதிக முறை 356வது பிரிவைப் பயன்படுத்திய சாதனையாளர்ரும் இந்திரா தான்!

அவர் மறைந்த பின் இச்சட்டப்பிரிவு அவ்வளவு அதீதமாய்ப் பயன்படுத்தப்படவில்லை (ஆனால் நரசிம்ம ராவ் 11 முறை; மன்மோகன் சிங் 12 முறை) என்றாலும் இன்று வரையிலும் கூட இதைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு இருந்து தான் வருகிறது.

மணிப்பூர் (10), உத்திரப் பிரதேசம் (9), பஞ்சாப் (9) மற்றும் பிஹார் (8) ஆகியவை தாம் இதுவரை இச்சட்டத்திற்கு அதிக முறை பலியான மாநிலங்கள். சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தான் இதுகாறும் இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டதில்லை. (தெலுங்கானா ஆந்திரப் பிரதேசத்தின் பகுதியாக இருந்த போது அமல்படுத்தப்பட்டது.)

இதுவரையிலான ஜனாதிபதி ஆட்சிகள் 7 நாட்கள் முதல் 7 ஆண்டுகள் வரையிலும் கூட நடந்திருக்கிறது. ஜம்மு & காஷ்மீரில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஜனாதிபதி ஆட்சி நடந்தது தான் அதிகபட்ச காலம் (1990 - 1996). மேற்கு வங்கத்திலும் (1962), கர்நாடகத்திலும் (1990) வெறும் 7 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி நடந்திருக்கிறது.

ஒருபுறம் எதிரிக் கட்சிகளின் மீது 356வது பிரிவைத் தவறாகப் பயன்படுத்தினார்கள் என்றால் சொந்தக் கட்சியின் மீது அதைப் பயன்படுத்தாமல் தவறு செய்தார்கள் இன்னொரு புறம். பெரும் உதாரணம் 2002 குஜராத் கலவரங்களின் போது மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு இருந்தது. குஜராத்தில் இருந்த மோடியின் பாஜக அரசை 356வது பிரிவைப் பயன்படுத்திக் கலைக்க அத்தனை முகாந்திரம் இருந்தும் வாஜ்பாய் அதைச் செய்யவில்லை. மிகப் புதிய உதாரணம் என்றால் நம் தமிழகம் தான். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினர்களை சொகுசு விடுதியில் அடைத்து குதிரை பேரம் நடந்தது ஊருக்கே தெரியும் என்றாலும் மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசு அதிமுகவைக் கையகப்படுத்தும் நோக்கில் அதைக் கண்டு கொள்ளவில்லை. இன்று வரை தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான காரணங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.

விதிவிலக்காய்ச் சொந்தக் கட்சியின் மாநில அரசையே கலைத்த உதாரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. 1951ல் பஞ்சாபில் காங்கிரஸின் உட்கட்சிச் சிக்கல்களைச் சீரமைக்கும் முகமாக ஆட்சிக் கலைப்பைப் பயன்படுத்தினார் ஜவஹர்லால் நேரு (இந்தியாவில் முதன்முறையாக 356வது பிரிவு பயன்படுத்தப்பட்டது அப்போது தான்). 1983ல் மீண்டும் அதே பஞ்சாபில் இந்திரா காந்தி காங்கிரஸ் அரசையே கலைத்தார். அப்போது தீவிரவாதப் பிரச்சனைகளால் அங்கு சட்டம், ஒழுங்கு சீர் கெட்டிருந்தது. 1973ல் ஆந்திராவில் நரசிம்ம ராவின் அரசும் இதே போல் தான் கலைக்கப்பட்டது.1984ல் இந்திரா ஆந்திரப் பிரதேச மாநில அரசைக் கலைத்தார். அப்போது அங்கே என்டி ராமாராவ் முதல்வர். என்டிஆர் உடனே தன் கட்சி சட்டசபை உறுப்பினர்களைக் கொத்தாகப் பேருந்திலேற்றி கர்நாடகாவுக்குப் போனார். பிறகு ஜனாதிபதியைச் சந்தித்து அவர் முன் தன் ஆதரவு எம்எல்ஏக்கள் எல்லோரையும் ஆஜர்படுத்தினார். ஆக, இன்றைய கூவத்தூர் அக்கப்போர்களுக்கெல்லாம் முன்னோடி என்டிஆர் தான்.

1985ல் ராஜீவ் காந்தி கட்சித் தாவல் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதன் மூலம் பாராளுமன்ற மற்றும் சட்டசபைகளில் சபாநாயகர்களுக்குக் கட்சித் தாவும் உறுப்பினர்களை நீக்கம் செய்யும் அதிகாரம் கிடைத்தது. 356வது பிரிவைத் தவறாகப் பிரயோகிக்க இந்த அதிகாரத்தையும் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினார். 1992ல் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் (Kihoto Hollohan vs Zachillhu and Others) சபாநாயகர்களின் முடிவு நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டதே எனத் தீர்ப்பளித்தது. இதுவும் 356வது பிரிவின் பயன்பாட்டை நேர்செய்ததில் ஒரு முக்கியமான தீர்ப்பு.

மத்திய - மாநில அரசுகளிடையேயான உறவை ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் 1983ல் சமர்ப்பித்த அறிக்கையில் “அரசியல் சாசனத்தின் 356வது பிரிவு மிகக் குறைவாகவே, தீவிரமான சந்தர்ப்பங்களில் மட்டும், மற்ற அனைத்து வழிகளும் மாநிலத்தின் நிலைமைனைச் சீராக்குவதில் தோல்வியுற்றுவிட்ட போது, மிகக் கடைசி நடவடிக்கையாகவே பயன்படுத்தப்பட வேண்டும்” என்று சொல்கிறது.

11 மார்ச் 1994ல் உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசுக்கும் எஸ்ஆர் பொம்மைக்கும் நடந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பானது இந்திய அரசியல் சாசனத்தின் 356வது பிரிவை தவறாய்ப் பிரயோகிப்பதைத் தடுப்பது தொடர்பான மைல்கல் தீர்ப்பாகும்.

கர்நாடகாவில் 1989ல் ஜனதா கட்சி, லோக் தளம் கட்சிகள் இணைந்து ஜனதா தளம் என்ற புதுக் கட்சி உருவானதையொட்டி நடந்த சில குழப்பங்களால் மத்திய அரசு எஸ்ஆர் பொம்மை அரசுக்குப் பெரும்பான்மை இருந்தும் ஆட்சியைக் கலைத்தது. அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடந்த இதே மாதிரியான ஆட்சிக் கலைப்புகளையும் ஒட்டி பொம்மையின் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முன் சில முக்கியமான கேள்விகள் இருந்தன: 1) ஜனாதிபதியின் ஆட்சிக்கலைப்புப் பிரகடனத்தில் நீதித் துறை தலையிட முடியுமா? எனில் எவ்வளவு தூரம்? 2) ஜனாதிபதிக்கு ஆட்சிக் கலைப்பைப் பிரகடனம் செய்வதில் எல்லையற்ற அதிகாரங்கள் இருக்கின்றனவா? 3) ஆட்சிக் கலைப்புப் பிரகடனம் நீதித் துறைப் பரிசீலனை காரணமாக ரத்தானால் கலைக்கப்பட்ட சட்டசபையை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா? 4) ஆட்சிக் கலைப்புக்குப் பாராளுமன்ற அவைகள் ஒப்புதல் அளித்த பின்பும் பிரகடனம் செல்லுபடியாவது பற்றிக் கேள்வி எழுப்ப முடியுமா? 5) ஆட்சிக் கலைப்புப் பிரகடனம் நீதித் துறை விசாரணையில் இருக்கையில் தேர்தல் நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரமுண்டா?

பொம்மை வழக்குத் தீர்ப்பின் முக்கியப் பகுதியாக உச்சநீதிமன்றம் 356வது பிரிவைத் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கச் சில வழிகாட்டி நெறிமுறைகளை அறிவித்தது: 1) ஆளும் மாநில அரசு சட்டசபையில் பெரும்பான்மை பலம் பெற்றிருக்கிறதா என நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். 2) மத்திய அரசு மாநில அரசுக்கு முதலில் ஓர் எச்சரிக்கையும் அதற்குப் பதிலளிக்க ஒரு வார அவகாசமும் தர வேண்டும். 3) மத்திய அரசு ஜனாதிபதிக்கு மாநில நிலைமை குறித்து அளித்த அறிவுரையை நீதி மன்றம் கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஜனாதிபதி அதில் திருப்தி அடைந்தார் எனில் அதற்குப் பின் இருக்கும் காரணங்களைக் கேள்வி கேட்க முடியும். (அ) ஆட்சிக் கலைப்புப் பிரகடனத்துக்குப் பின் ஆதாரம் உள்ளதா? (ஆ) அந்த ஆதாரம் ஏற்குமளவு சரியானதா? (இ) இதில் உள்நோக்கம் ஏதும் இருக்கிறதா? 4) தவறான முறையில் 356வது பிரிவு பயன்படுத்தப்பட்டதாக நீதிமன்றம் கருதினால் உரிய பரிகாரத்தை அளிக்கும். 5) பாராளுமன்ற அவைகள் ஆட்சிக் கலைப்புக்கு ஒப்புதல் அளிக்கும் முன் ஜனாதிபதி சட்டசபையைக் கலைக்க முடியாது. 6) சாசனத்தை அமல்படுத்துவதில் தோற்றிருந்தால் தான் 356வது பிரிவைப் பயன்படுத்தலாம்; மோசமான நிர்வாகத்தின் காரணமாக அல்ல. 7) 356வது பிரிவை அரிதாகவே பிரயோகிக்க வேண்டும். இல்லை எனில் சாசனம் சார்ந்த மத்திய - மாநில உறவுகளை மோசமாய்ச் சிதைத்து விடும்.

பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இந்த முக்கியமான தீர்ப்பிற்குப் பின் 356வது பிரிவைப் பயன்படுத்துவது மட்டுப்பட்டிருக்கிறது. 1994 முதல் இன்று வரை ஆண்டுக்கு அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு மாநில அரசுகள் தாம் கலைக்கப்படுகின்றன. (கடந்த இருபதாண்டுகளாக மத்தியில் பெரும்பாலும் கூட்டணி ஆட்சி நிலவியதால் மாநிலக் கட்சிகளின் கை ஓங்கி இருந்ததையும் இதற்குக் காரணமாகச் சொல்லலாம்.)

பொம்மை வழக்கின் தீர்ப்புக்கான நடைமுறைப் பலன் 1997ல் நிகழ்ந்தது. அப்போது மத்தியிலிருந்த ஐக்கிய முன்னணி அரசு (அப்போது பிரதமர் குஜ்ரால்) உத்திரப் பிரதேசத்தில் ஆட்சியைக் கலைக்க ஜனாதிபதி கேஆர் நாராயணனுக்குச் சிபாரிசு செய்த போது அதைத் திருப்பி அனுப்பினார். அதற்கு அடுத்த ஆண்டு வாஜ்பாயின் பாஜக அரசு பிஹாரில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரச் சிபாரிசு செய்த போதும் மறுத்தார். அதற்கு மூன்று காரணங்கள் குறிப்பிட்டார்: 1) அரசியல் சாசனத்தை அமல்படுத்துவதில் அம்மாநிலம் தோற்று விட்டது என்பது ஆளுநரின் அறிக்கையில் தெளிவுபடவில்லை. 2) மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்தல், அவகாசமளித்து விளக்கம் பெறுதல் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. 3) ராப்ரி தேவி அரசு சட்டசபையில் பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது என்பதையும் பொம்மை தீர்ப்பில் வரும் சர்க்காரியா கமிஷன் வரிகளை முன்வைத்துப் பார்க்க வேண்டும்.

2005ல் பிஹார் அரசு கலைக்கப்பட்டதை ஒட்டிய வழக்கிலும் (Rameshwar Prasad & Ors vs Union of India & Anr) எஸ்ஆர் பொம்மை வழக்கின் தீர்ப்பை ஒட்டியே மாநில அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. (ஆனால் தீர்ப்புக்கு முன் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் கலைத்த சட்டசபையை உயிர்ப்பிக்க முடியாது என மறுத்து விட்டது.)

அரசியல் சாசனத்தின் 356வது பிரிவு சொல்லும் ஆட்சிக் கலைப்பு என்பது அரசியல் ஆயுதம் அல்ல. அதை ஆக்கியோர் அப்படி உத்தேசித்து அதை உருவாக்கவில்லை. ஆனால் அந்தப் பிரிவில் இருந்த அதீத அதிகாரக் குவிப்பின் காரணமாக அது சில நல்ல தலைவர்களால் கூடத் தவறாகப் பிரயோகிப்பட்டது. இன்று வரையிலும் அது தொடர்கிறது. மாறாக, தேவைப்படுமிடத்தே தவிர்க்கும் அநியாயமும் நடக்கிறது.

உதாரணமாக, சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தில் பிராண வாயு சிலிண்டர் தொடர்பான அரசு மருத்துவமனை மெத்தனத்தால் 64 குழந்தைகள் மருத்துவமனையில் இறந்ததை ஒட்டி யோகி ஆதித்யநாத்தின் அரசைக்கலைத்திருக்கலாம். போலவே ஹரியானாவில் சில தினம் முன் குர்மீத் ராம் ரஹீமுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்ததை ஒட்டி நடந்த கலவரத்தில் 31 பேர் இறந்ததை முன்னிட்டு மனோகர் லாலின் ஆட்சியைக் கலைத்திருக்கலாம். இரண்டுமே பாஜக அரசுகள் என்பதால் நரேந்திர மோடி அரசு அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் கள்ளமௌனத்தின் துணையுடன் கடக்கிறது!

ஆக, இவ்விஷயத்தில் இரு முனைகளிலுமே தெளிவான ஷரத்துக்களைக் கொண்ட துல்லியத் திருத்தம் கொண்டு வர வேண்டும்: 1) எப்போதெல்லாம் 356வது பிரிவைப் பயன்படுத்தவே கூடாது 2) எப்போதெல்லாம் அந்தப் பிரிவைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இக்கேள்விகளுக்கும் குழப்பமற்ற பதில்கள் தரக்கூடியதாக அத்திருத்தம் இருந்தால் தான் ஓரளவேனும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க முடியும்!

அப்படிச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து அந்த அதிகாரக்குவிப்பைச் சீர் செய்யலாம் தான். ஆனால் கையிலிருக்கும் பிரம்மாஸ்திரத்தை அழிக்க எவருக்கு மனம் வரும்!

***

(உயிர்மை - செப்டெம்பர் 2017 இதழில் வெளியானது)

Comments

வெகு அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்! கட்டுரையின் தொடக்கத்தில் நீங்கள் கூறியது போல, எளிய மனிதர்களுக்கும் இந்தச் சட்டம் பற்றித் தெரியும் எனினும், சட்டம் படித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய அளவுக்கு நுட்பமான விரிவான தகவல்களை நீங்கள் பதிவு செய்து விட்டீர்கள். சொல்லப் போனால், சட்டம் படித்தவர்களுக்குக் கூட இந்தக் கட்டுரையில் உள்ள எல்லாம் தெரிந்திருக்கும் என்பது தவறு. அவர்களுக்கு இந்தச் சட்டம் பற்றி மட்டும்தான் தெரிந்திருக்கும். இது எப்படியெல்லாம் இதுகாறும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பது இவ்வளவு விளக்கமாக, காலவரிசைப்படி அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அரியதொரு கட்டுரைக்காக மிக்க நன்றி!

ஆனால், இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டால் அதன் பின் குடியரசுத் தலைவரும் நாடாளுமன்றமும் மாநிலத்தின் சட்டத்தையே வகுக்கலாம் என்பதை வைத்துப் பார்த்தால், தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படுவது அவ்வளவு நல்லதாக இருக்காது எனத்தான் தோன்றுகிறது. இழுபறியான, நடுவணரசுக்குத் தாளம் போடுகிற தற்போதைய ஆட்சியே நமக்கு வெறுப்பைத் தருகிறது என்றால் நடுவணரசே நேரிடையாகச் சட்டம் வகுத்து நம் மாநிலத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் நிலைமை வந்து விட்டால் அது இதை விடப் படுகொடுமையாக இருக்குமே!
அபு said…
பிரதமர் பதவியின் ஆட்சியை கலைப்பது எப்படி? இந்திய சட்டத்தில் அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? தற்போது நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய முட்டாள் மோடி பதவியேற்று ஒரு வருட காலம் தான் முடிந்திருக்கிறது .இன்னும் நான்கு வருட காலம் இருக்கிறது .இப்பொழுதே நாட்டின் பொருளாதாரமும் ,நாட்டின் வீழ்ச்சியையும் அகல பாதாளத்திற்கு சென்று விட்டது . இன்னும் நான்கு வருடங்கள் இருந்தால் இந்தியாவில் மனிதர்கள் வாழ்வதே அதிசயம் என்ற நிலைக்கு ஆகிவிடும் . எனவே எனது கேள்வி இந்த அறிவற்ற முட்டாள் கூட்டங்களையும் இந்த பிரதமர் பதவியையும் பறிக்க இந்திய சட்டத்தில் வழி என்ன இருக்கிறது? என சொல்லவும் அதற்காக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடலாமே...

Popular posts from this blog

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

CSK Diet

பொச்சு