வெற்றி - வெற்றி


ஒரு சிறுகதையை முன்வைத்து மட்டும் ஒரு கட்டுரை எழுதுவேன் என்று எண்ணியதில்லை. ஆனால் இப்போது அதைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். ஜெயமோகனின் சமீபத்திய சிறுகதையான வெற்றி தான் அது.

பெண்களை மலினப்படுத்தும் கதை என்றும் பிற்போக்குத்தனமான கருத்தாக்கத்தை முன்வைக்கிறது என்றும் சமூக வலைதளைங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி பேசுபொருளாகும் நோக்கம் என்றும் சிலபல வசைகளை இடைப்பட்ட தினங்களில் கண்ட பின் சற்று முன் தான் கதையை வாசித்தேன்.



வெற்றிச் சிறுகதையா எனப் பார்க்கும் முன் வெற்றி சிறுகதையா? தலைப்பு சேர்க்காமல் துல்லியமாய் 7,458 சொற்கள் வருகின்றன. (சொற்களை எண்ணுவது என்பது உண்மையில் அவற்றுக்கிடையேயான இடைவெளியை எண்ணுவது தானே!) பொதுவாய் தமிழில் இன்று 1,000 முதல் 3,000 சொற்களில் இலக்கியச் சிறுகதைகள் எழுதப்படுகின்றன என்ற அவதானிப்பை வைத்துப் பார்க்கும் போது இது மிக மிக நீளம் தான். ஆனந்த விகடன் பத்தாண்டுகள் முன் சுஜாதாவின் நீளமான‌ சிறுகதைகளை 'சற்றே பெரிய சிறுகதை' என வெளியிட்டது. அவற்றை விடவும் இது மூன்று மடங்கு நீளம்.

ஆங்கிலத்தில் சிறுகதையின் நீளம் குறித்துப் பேசும் போது எட்கர் ஆலன் போவின் The Philosophy of Composition (1846) என்ற கட்டுரையை அளவுகோலாகக் கொள்கிறார்கள். (அது குறிப்பாய் சிறுகதை பற்றிய கட்டுரை அல்ல என்பது வேறு விஷயம்.) அதில் "It appears evident, then, that there is a distinct limit, as regards length, to all works of literary art- the limit of a single sitting-..." என்கிறார் அவர். அதாவது சிறுகதை என்பது ஓர் அமர்வில் வாசிக்கத் தகுந்ததாய் இருக்க வேண்டும். இதனடிப்படையில் பொதுவாய் இத்தனை சொற்கள் என்று சொல்லி விட முடியாது. ஏனெனில் ஓர் அமர்வில் எவ்வளவு படிப்பது என்பது வாசகருக்கு வாசகர் மாறுபடும்; படைப்புக்குப் படைப்பும் வேறுபடும். காலகட்டத்திற்கேற்பவும் இது மாறுபடும். இந்தத் தலைமுறை வாசிக்கப் பொறுமையற்ற ஒன்று. A generation of premature ejaculation in reading!

அமெரிக்காவில் ஆங்கில‌ அறிவியல் புனைவுகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நெபுலா விருதுகளில் சிறுகதை என்பதற்கு 7,500 சொற்களுக்குள் இருக்க வேண்டும் என்று வரையறை வைத்திருக்கிறார்கள். (விருது தொடங்கப்பட்ட 1966 முதல் இன்று வரை அது தான் கணக்கு.) ஆனால் அது ஆங்கிலத்துக்கான கணக்கு. ஆங்கிலத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல தமிழை விட அதிக சொற்கள் தேவைப்படும். (உதாரணமாய் "She is very beautiful" என்பதை "அவள் பேரழகு" என முடித்து விடலாம்.) இரண்டுக்குமான இலக்கண வித்தியாசங்கள் அப்படி. இதை எல்லாம் வைத்துப் பார்த்தால் நான் தனிப்பட்ட முறையில் சில அளவுகோள்கள் வைத்திருக்கிறேன். சீரியஸ் சிறுகதை எனில் அதிகபட்சம் 5,000 சொற்கள். வெகுஜன சிறுகதை எனில் அதிகபட்சம் 3,000 சொற்கள். இரண்டிற்குமே குறைந்தபட்சம் 500 சொற்கள். இது தான் என் கோடு. அதன்படி பார்த்தால் ஜெயமோகனின் வெற்றி ஒன்றரை சிறுகதை!

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் ஒரு மணி நேரப் பேருந்துப் பயணத்தில் வாசித்தேன். ஓர் அமர்வில் முடிக்கும் சுவாரஸ்யம் இருந்தது என்றாலும் நீளம் சற்றே ஜாஸ்தி தான்.

*

ஜெயமோகன் இரண்டு வகையான கதைகளை எழுதுகிறார். ஒன்று அடர்கதைகள். அவற்றின் தோற்றம், கருத்து இரண்டுமே அடர்த்தியானவை. இவை தீவிர வாசகர்களுக்கானவை. இவற்றைப் படிக்க ஒரு வாசக முனைப்பு தேவைப்படும். பத்ம வியூகம், மாடன் மோட்சம் போன்றவற்றை இவ்வகையில் சொல்லலாம். மற்றது அலர்கதைகள். அவற்றின் தோற்றம் எளிமையானது; ஆனால் கருத்து அடர்த்தியானது. இவை மத்திம வாசகர்களுக்கானது. கதையைச் சிரமமின்றி வாசித்து முடித்து விட முடியும். ஆனால் அதன் கருத்தைத் தரிசிக்கக் கொஞ்சம் இலக்கியப் பயிற்சி வேண்டி இருக்கும். அறம் தொகுப்பின் கதைகளை இவ்வகைமையில் வைக்கலாம். மற்றபடி அதற்கும் கீழான, எளிய வாசகர்களுக்கான கதைகளை ஜெயமோகன் எழுதுவதில்லை. (படுகை போன்ற அவரது சில‌ கதைகள் இவை இரண்டிலும் அடங்கா.)

வெற்றி இதில் அலர்கதை வகையில் வரும். பெரும்பாலானோர் அங்கலாய்ப்பது போல் வெற்றி ஒரு பிற்போக்குத்தனமான கதையோ ஆணாதிக்கச் சிந்தனையோ அல்ல. எளிமையான தோற்றம் கொண்ட அதில் நுட்பமான விஷயம் பேசப்பட்டிருக்கிறது. ஆம். காசைக் காட்டினால் எந்தப் பெண்ணும் படிவாள் என்பது அந்தக் கதையின் சாரம் அல்ல. அப்படி அதை உள்வாங்கிக் கொண்டவர்கள் மட்டுமே அதைத் திட்டுகிறார்கள்.

(SPOILER ALERT: அடுத்த பத்திகளை வாசித்தால் கதையின் சஸ்பென்ஸ் உடையக்கூடும்.)

லதா என்ற பெண் எவ்வளவுக்கு எவ்வளவு அப்பாவியாக, வலிவற்றவளாக, சுயமற்றவளாக கதை நெடுகிலும் முன்னிறுத்தப்படுகிறாளோ அந்த ஒற்றை இரவுக்குப் பிந்தைய காட்சிகளிலும், இறுதியிலும் அதற்கு நேர் எதிரான ஆளுமையாக உயர்கிறாள். பொதுப்புத்தி அளவுகோளின்படி அவள் சோரம் போகிறாள் என்பது உண்மையே. ஆனால் அவளது சூழலையும் அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். அவளுக்கு தன் மகன் பிழைக்க வேண்டும். அதற்குக் காசு வேண்டும். அது அவள் கணவனிடம் இல்லை. அதனால் பணம் படைத்த ரங்கப்பரிடம் அவள் தன்னை விட்டுக் கொடுக்கத் தயாராகிறாள். ஆனால் அவள் அதற்கு பதிலாய் விலையாய்க் கேட்டது என்ன என்பது தான் இதில் முக்கியமானது. அது அவள் கற்பு. ஆம், கற்பைக் கொடுத்து கற்பைப் பெறுகிறாள் லதா.

லதா முன் இரண்டு வாய்ப்புகள் இருந்தன: 1) ரங்கப்பரின் ப்ரப்போஸலை நிராகரிப்பது. அதன் விளைவு அவள் கற்பு காப்பாற்றப்படும்; ஆனால் மகன் உயிரிழப்பான். 2) ரங்கப்பரின் ப்ரப்போஸலை ஏற்பது. அதன் மூலம் அவள் மகன் காப்பாற்றப்படுவான்; ஆனால் அவள் கற்பிழப்பாள். இந்த இரண்டு வழிகளிலுமே அவளுக்குப் பேரிழப்பு இருக்கிறது. அவள் அதைத் தவிர்க்க நினைக்கிறாள் அல்லது குறைக்க முனைகிறாள். ஆனால் தான் இவ்விரண்டு வழிகளைத் தாண்டி யோசிக்க விரும்புகிறாள். ரங்கப்பருடன் ஒரு புத்திசாலித்தனமான ஒப்பந்தத்தில் இறங்குகிறாள்.

தான் விட்டுக் கொடுத்ததை தன் கணவனோ உலகமோ ஒருபோதும் அறியக்கூடாது என்பது தான் அவள் கேட்ட விலை. மற்றபடி கடைசி வரியில் நமச்சிவாயம் சொல்வது போல் ஐந்து லட்சமல்ல அவள் கேட்டது. அது உண்மையில் ஒரு பக்கவிளைவு தான். லதா அந்த ஐந்து லட்சத்தை ஆசைப்பட்டாளா என்பது திறந்த கேள்வி தான். ஆனால் அன்றைய தருணத்தில் அவள் தன் மகன் பிழைப்பதை மட்டுமே விரும்பி இருப்பாள். தனக்கு அவப்பெயர் கூடாது என்பதையும். அவை இரண்டையும் அவள் சாதித்துக் கொண்டாள். அவள் கேட்ட விலையைத் தர ரங்கப்பர் அவளை அடைய முடியவில்லை எனப் பொதுவில் பொய் சொல்ல வேண்டும். அதற்கு ஒரே வழி போட்டியில் தான் தோற்றதாய் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படித்தான் அன்று அவர் தோல்வியை க்ளப்பில் நமச்சிவாயம் உள்ளிட்ட எல்லோர் முன்னிலையிலும் ஒப்புக் கொண்டதும் ஐந்து லட்சம் பணம் கொடுத்ததும் நடந்தது. லதாவின் நிபந்தனையும் நிர்ப்பந்தமுமே அதைச் சாதித்தது.

லதாவின் ஒட்டுமொத்த செயல்களிலும் பார்த்தால் அவள் ரங்கப்பரிடம் விழத் தயாராகி விட்டது போன்ற தோன்றத்தை ஏற்படுத்துவது அவள் அவர் வாங்கித் தரும் புடவை, கடனாக அளிக்கும் நகையை நமச்சிவாயத்திடம் சொல்லாமல் ஏற்பது மட்டும் தான். அந்தக் காலத்தில் சாமானியர்களுக்கு அலைபேசி வசதி எல்லாம் இராது என்பதால் அவள் எவ்வழி அன்றே தன் கணவனின் அனுமதி பெற்றிருக்க முடியும்? தவிர, அவள் கணவனிடம் சொல்லி விடுவதாக அவள் மதிப்பிற்குரிய‌ ரங்கப்பர் சொல்லி இருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும், அதனால் அவள் எவ்வளவு தூரம் மறுதலித்திருக்க முடியும்?. ஆனால் இக்காரணங்களைத் தாண்டி ஆம், அது அவள் பலவீனம் தான். அதுவும் பெண்களின் இயல்பே. ஆனால் அங்கே தன்னை அவரிடம் ஒப்புவிக்கும் உத்தேசம் அவளுக்கு இருப்பதாய் எடுக்க முடியவில்லை.

உண்மையில் வெற்றி என்ற கதையின் தலைப்பு சுட்டுவது தனிப்பட்ட முறையில் வென்ற ரங்கப்பரின் வெற்றியையோ ஊரின் பார்வையில் வென்ற நமச்சிவாயத்தின் வெற்றியையோ அல்ல; அது லதாவின் வெற்றி தான். நமது சட்டகத்தை ஏற்றி அதை அவளது ஏமாற்று வேலை என்று சொல்வதற்கில்லை. எல்லோரையும் சந்தோஷப்படுத்துவது தான் உண்மை என்பது அவளது நிலைப்பாடாக இருக்கிறது. அவளது நிலையிலிருந்து தான் அதை அணுக வேண்டும். இன்னும் சொன்னால் நீங்கள் அவ்விடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என யோசிக்கலாம்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் ரங்கப்பரின் கோணம். ஒன்று அவரது அறம் மற்றும் நேர்மை. அவர் லதாவிடம் சொன்ன சொல் காப்பாற்றுகிறார். அடுத்தது அவரது வெற்றி. அதாவது அவர் அது வரை கொண்டிருந்த கருத்தாக்கங்களின் வெற்றி. "ஆண்கள் ஒரு இடத்தில் தோற்றுப் போகாமல் இருப்பதற்காக  கொல்லவும் சாகவும்கூடத் தயாராக இருப்பார்கள்." என்கிற அவர் கருத்துப்படி அவர் தன் வெற்றிக்காக தான் வெற்றி பெறவில்லை என்று அறிவிக்கவும் செய்கிறார். (அது சாவு தான். அவரது பிம்பத்தின் மரணம்.) அதாவது பிம்பத்தில் தோற்றாலும் சரி, நிஜத்தில் வெல்வதையே முக்கியம் எனக் கருதுகிறார். பெண்கள் பற்றிய ரங்கப்பரின் கருத்தும் உண்மை என உறுதிப்படுகிறது. "இந்த உலகத்தில் உள்ள பொருட்களுடன் முழுமையாகக் கட்டப்பட்டவர்கள் பெண்கள். அந்தப்பொருள் என்ன, அந்தப்பொருளை நாம் அவர்களுக்குக் கொடுக்க முடியுமா என்பது மட்டும்தான் கேள்வி." லதாவுக்கு தன் மகனின் உயிர் தான் அந்தப் பொருள். "அதை அவர்களுடைய மெல்லிய தன்மானம் புண்படாமல் கொடுக்க வேண்டும். அது ஒரு சின்ன கலை." இதுவும் உண்மையாகிறது. லதாவின் தன்மானம் கீறல்படாமல் பார்த்துக் கொள்ளும் கலை ரங்கப்பருக்குத் தெரிந்திருக்கிறது.

கதை நெடுகிலும் நமச்சிவாயத்தின் மூன்று மாத‌ மனப் போராட்டமே சொல்லப்பட்டது என்றாலும் அது மொத்தமும் ஒரு பொய்யின் மூலம் சாந்தி கொள்கிறது என்பது எத்தனை முரண்! உண்மையில் நாம் தினசரிகளில் எதிர்கொள்ளும் அத்தனை மனப் போராட்டங்களையும் இந்தக் கதை பகடி செய்கிறது. அவற்றை அபத்தம் என்றாக்கி விடுகிறது. ஆனால் அந்தப் பொய்யின் மூலம் அந்த மனச் சிக்கலிலிருந்து விடுபட்டு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு அவர் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் கௌரவமாகவும் தன் மனைவியிடம் பிரியமாகவும் இருந்திருக்கிறார். லதா உத்தேசித்தது அதையே. லதா இறக்கும் போது, அந்த வயதில் அவர் அதை எதிர்கொள்ளும் பக்குவம் பெற்றிருப்பார் என்றே தோன்றுகிறது.

நமச்சிவாயம் அப்படித் தொடர்ந்து தொந்தரவுக்குள்ளாவது தான் லதாவின் முடிவை நியாப்படுத்துகிறது. அவள் தன் கணவனைத் துல்லியமாய் உணர்ந்து வைத்திருக்கிறாள். அவள் தன் செயலைத் தெரியப்படுத்தி இருந்தால் அவன் இறந்து போயிருப்பான். அப்படிப் பார்த்தால் அவள் தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது கணவனின் உயிரா குழந்தையின் உயிரா என்பது. அவள் இரண்டையும் காக்கிறாள், தன்னை இழந்து. அன்றைய இரவில் இப்படியான அத்தனை கோணத்திலும் சிந்தித்தே தன் முடிவை எட்டி இருக்கிறாள். நமச்சிவாயத்தின் மூன்று மாத அவஸ்தையை விட இது வலியான‌து.

அந்த நிகழ்விற்குப் பின் அவளை நமச்சிவாயத்தின் பார்வையிலிருந்து ஜெயமோகன் வர்ணிக்கும் இரண்டு இடங்கள் அவரை ஒரு தேர்ந்த புனைவாசிரியர் என ஸ்தாபிக்கின்றன: "அவளுடைய உடலுக்குள் இருந்து இன்னொரு பெண் வெளி வந்து அமர்ந்திருப்பது போல.", "அப்போது மிக அழகாக இருந்தாள். எங்கிருந்தோ ஒரு தனி ஒளி அவள்மேல் விழுந்து கொண்டிருப்பது போலிருந்தது.". அவனது தர்க்க மனமும் மதிப்பீடுகளும் தாண்டி அத்தனை ஆண்டுகளாய் அவள் உடம்பை ஆண்ட ஒரு கணவனின் உள்ளுணர்வில் பொறி தட்டுவதைத் துல்லியமாய் மொழிபெயர்க்கும் வரிகள் அவை. ஆனால் அப்படி இல்லை என க்ளப்பில் தெரிய வரும் கட்டத்தில் ஏமாற்றமாய் உணர்கிறான் என்பதையும் கவனிக்க வேண்டும்.

கற்பு என்பதென்ன? எல்லோருக்கும் கற்போடு இருப்பதாகத் தெரிவது தானே! பெரும்பாலான ஆண்கள் எண்ணிக் கொண்டிருப்பது போல் பெண்கள் சாதாரணர்கள் அல்ல. மேற்பார்வைக்கு அவர்கள் அறிவற்றவர்கள் போல் தோற்றம் கொண்டிருந்தாலும் சில விஷயங்களில் தீர்க்கமான சிந்தனையும் முடிவெடுக்கும் திறனும் வாய்த்தவர்கள்.

இந்தக் கதை உண்மையில் லதா என்னும் பெண்ணாளுமையின் ராஜதந்திரம். அதாவது அவள் செய்தது சரி / தவறு என்ற விவாதத்துக்குள்ளே நான் போகவில்லை. ஆனால் ரங்கப்பருடனான அவளது ஒப்பந்தம் சாதாரண விஷயமல்ல. அதில் அவளை ஒட்டுமொத்த பெண் குலத்தின் பிரதிநிதியாகவே பார்க்கிறேன். சொல்லப் போனால் லதாவிடம் கேட்டுப் பார்த்தால் அவள் அதைச் சோரம் போனதாகவே கருத மாட்டாள் என்றே நினைக்கிறேன். அது அன்றைய தினத்தின் சிரமம் மட்டுமே.

ஏராளமான பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல் இது. அவர்கள் கையாளும் முறைகள் பெரும்பாலும் சமூகம் - குறிப்பாய் இந்தியச் சமூகம் - கொண்டிருக்கும் ஒழுக்கவியல் அளவுகோள்களுக்குள் வராது. அது குறித்த ஓர் உண்மையை தான் ஜெயமோகன் அதன் அசல் முகத்துடன் இந்தக் கதையின் வழியே முன்வைத்திருக்கிறார்.

ஆண்கள் தான் கற்பு எனும் கருத்தாக்கத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். பெண்களும் அப்படி இருக்கத்தான் விரும்புகிறார்கள். ஆனால் யதார்த்தத்தில் அது ஒரு சொகுசு தான். எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. ஒரு கட்டத்தில் பெண்களுக்கு அந்த லேபிள் மட்டுமே போதுமானது என்றாகி விடுகிறது. அதாவது கற்புக்கரசியாய் இருப்பதை விட கற்புக்கரசியாய் அறியப்படுதல். இதை ஒரு கேவலமாகச் சொல்லவில்லை. அவர்களைப் பல்லாயிரம் ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததன் விளைவான சிந்தனைப் போக்கு தான் இது. "ஒன்றை வேண்டாம் என்று சொல்ல வேண்டுமென்றால் அதைவிட பெரிய ஒன்றை அவர்கள் பெற விரும்புகிறார்கள் என்றே அர்த்தம்" என்ற ரங்கப்பரின் வார்த்தைகளை இங்கே யோசிக்கலாம். லதா அதுவரை கற்பில் மாசறு பொன் தான். ஆனால் மகனின் உயிரா கற்பா என்ற கேள்விக்கு அவள் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. லேபிளை மட்டுமேனும் தக்க வைத்துக் கொள்ளத் தீர்மானிக்கிறாள்.

லதா இரண்டு பெண் புனைவுப் பாத்திரங்களை எனக்கு நினைவூட்டினாள். ஒன்று புதுமைப்பித்தன் எழுதிய பொன்னகரம் சிறுகதையின் அம்மாளு. இன்னொன்று பெருமாள்முருகன் எழுதிய மாதொருபாகன் நாவலின் பொன்னா. முதலாவதில் தன் கணவனுக்காக கற்பை இழக்கத் துணியும் பெண். இரண்டாவதில் குழந்தைப்பேறுக்காக வரம்பு மீறத் தயாராகும் பெண்.

கதையில் எனக்குக் குறையாகப் பட்டது ஒரு விஷயம் தான். (நடை தவிர) கதைப் போக்கில் இது ஜெயமோகன் எழுதியது போலவே தோன்றவில்லை. அதை விட மோசம் இது நான் எழுதியது போல் இருந்தது. ஓ.ஹென்றி, சுஜாதா பாணியில் இறுதி வரியில் ட்விஸ்ட் வைக்கும் உத்தியை இன்னமும் நான் ரசித்துச் செய்து வருகிறேன். ஆனால் ஜெயமோகன் பொதுவாய் அப்படிச் செய்பவர் அல்ல. (விசும்பு தொகுப்பில் சில அப்படி இருக்கும்.) ஆனால் இதில் அப்படித் தான் முடித்திருக்கிறார். நமச்சிவாயம் தான் சொல்ல வந்ததை நிறுத்திய இடத்திலேயே அவர் தனக்கு உவப்பில்லாத ஒரு விஷயததைச் சொல்ல வருகிறார் எனப் புரிந்து விடுகிறது. ரங்கப்பர் சவால் விட்ட இடத்திலேயே துடியான வாசகர்கள் கதையின் முடிவை ஊகித்து விடுவார்கள். நான் இன்னும் ஒரு படி மேலே போய் லதா தப்பிக்க இப்படி ஒரு வழி இருக்கிறது என்பதையும் ஊகித்தேன். அதையே முடிவில் பார்த்த போது மெல்லிய‌ சந்தோஷமும் அதை விட மெல்லிய ஏமாற்றமும் இருக்கத்தான் செய்தது. அதனால் தான் நான் எழுதியது போல் இருந்தது என்றேன். ஆனால் கதையின் மையம் அந்த இறுதி வரி அதிர்ச்சி அல்ல; அது கதை நெடுகிலும் வரும் நமச்சிவாயத்தின் மனவோட்டங்களும், ரங்கப்பரின் வாதங்களும், லதாவின் பாத்திரப் படைப்பும் தான். அங்கே தான் ஜெயமோகன் வெற்றி பெறுகிறார்; என்னிலிருந்து வேறுபடுகிறார்.

லதாவுடனான இரவுக்குப் பின் ரங்கப்பர் உப்பரிகையில் நின்று அழுதிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. சற்றே மிரண்டு அவள் குறித்து யோசித்துக் கொண்டு இருந்திருப்பார். கதையை வாசித்து விட்டு இப்போது நான் நின்றிருப்பது போல்.

***

Comments

why I Love csk, நிச்சயம் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதையாக தான் இருந்தது. அராத்துவின் பேஸ்புக் பதிவில் கூட நான் கமெண்ட் இட்டு இருந்தேன் . கதையின் ஆன்மா கெட்டதாக அராத்து கூறியிருந்தார். எப்படி என்று கேட்டு இருந்தேன். நானும் உங்கள் மன ஓட்டத்தை போல நேற்றுஇரவு முழுக்க இந்த சிறுகதை பற்றி நினைத்திருந்தேன். லதாவின் மனவலிமை மற்றும் முடிவெடுக்கும் திறன் பற்றி, உங்களை போல எனக்கு கோர்வையாக எழுதவரவில்லை, வாழ்த்துக்கள் சிஎஸ்கே, அருமையான விமர்சனம்
ராகவேந்திரன், தம்மம்பட்டி
Unknown said…
அன்புள்ள Csk
நல்ல பதிவு. அக்கதைக்கான திறப்பாக இருந்தது . நன்றி . லதா அவ்வாறு உருமாற்றம் கொள்வதை போல பெரும்பாலும் ஆண்கல் ஒரு தருனத்திலேனும் தன் மனைவி அவ்வாறு மாறுவதை கண்டுருபார்கள் . அது சிக்கலான தருணம். பெரும்பாலும் அதை கடந்து போக கற்றுக்கொண்டு நகர்ந்து விடுபவர்களாகவே இருப்பார்கள் . காரணம் குடும்ப அமைப்பின் விதிகள். அதோடு அவை ய சேர்ந்தே அந்த பெண் தனக்கு மனைவி என்ற புரிதல். பெண்ககள் ஆண்களை அவ்வாறு தான் ஏற்றுக்கொள்கிறார்ககள். அவர்களுக்கு விரைவாக ஏற்றுக்கொள்ள சமூகம் தயார்படுத்திவிடுகிறது. ஆண்ககளுக்கு மெதுவாக நடக்கிறது. அவ்வாறு தடுமாறாத ஆண்ககள் எத்தனை பேரை காட்டிவிட முடியும் .
நண்பருடன் இக்கதை பற்றி பேசும் போது தாய்மையை வைத்து இக்கதையை அனுகவே இல்லை. உங்கள் பதிவை படித்த பின்பே அதை இவ்வாறு பார்க்கலாம் என புரிந்தது. வாசிக்கும் போது அக்குறிப்பை கவனித்திருந்தாலும் அது முன் வரவே இல்லை. தாய்மை என்ற ஒன்றை சேர்க்கும் போதே அக்கதை அதற்க்கான சரியான உயரத்திற்க்கு செல்கிறது. லதாவின் பாத்திரமும் அதன் சிக்கலும் இன்னும் துல்லியமாக வெளிப்படுகிறது. நன்றி.
Unknown said…
சிறந்த விமர்சன கட்டுரை, நன்றி
Anonymous said…
ஆனால் இக்காரணங்களைத் தாண்டி ஆம், அது அவள் பலவீனம் தான். அதுவும் பெண்களின் இயல்பே

very good... what a generalization of women's character! So u know every women of this world!!
Johnkennday said…
பெண்களில் 99% ஓடிப்போன உத்தமிகள் தான். அதை தெரியாமல் மறைப்பதில் தான் அவர்கள் சாமர்த்தியம் உள்ளது.
நல்ல அலசல். நானும் ரொம்ப யோசித்துக்கொண்டிருந்தேன். உங்களது பதிவைக் குறித்து ஜெயமோகன் தன் பக்கத்தில் எழுதியிருந்தார். உங்கள் கட்டுரையை வாசித்தப் பிறகு கதை ஒரு அனுபவமாக மனதில் தங்கிற்று. நன்றி

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்