கோடி விழிகள்


லென்ஸ். இன்றைய சூழலில் முக்கியமான + அவசியமான‌ படம். 1 மணி 50 நிமிடப் பரபரப்பான‌ திரைக்கதையினூடாக‌ சவாலான‌ ஒரு விஷயத்தை முடிந்தளவு சரியாகப் பேசி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

முதலில் இப்படம் எந்தச் சட்டகத்துக்குள் நின்று பேசுகிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ந‌ம் உடம்பு - குறிப்பாய்ப் பெண்ணுடல் - என்பது மானத்துடன் தொடர்புடையது; உடையோர் (கணவன் / மனைவி / காதலன் / காதலி / இன்ன பிற‌ நெருக்கமானோர்) தவிர்த்த பிறர் அதைப் பார்த்தல் உயிர் விடுமளவு மாபெரும் அவமானம். இந்தக் க‌ருத்தை எந்த விமர்சனமும் இன்றி எடுத்துக் கொள்கிறது படம் (ஏற்றுக் கொள்கிறது என்றும் சொல்வேன்). அதற்குள் இருந்தபடி ஒரு கதையைச் சொல்லி இருக்கிறது. எவன் பார்த்தால் என்ன, வக்கிரத்துடன் பார்ப்பவன் தானே அவமானப்பட வேண்டும் என்று படம் கேட்கவில்லை. இதை ஒரு குறையாகச் சொல்லவில்லை. படத்தின் தரப்பு என்ன என்பதைச் சொல்லி விட்டால் மேற்கொண்டு பேச ஏதுவாக இருக்கும் என்பதே அது. இன்னும் சொல்லப் போனால் இந்தியாவில் 99.99 விழுக்காடு இந்த மனநிலையுடன் இருப்பவர்கள் தாம். அதனால் படம் அவர்களை நோக்கிப் பேசுவது என்பது அவசியமானது தான்.


லென்ஸ் படம் இரண்டு விஷயங்களைப் பேசுகிறது. ஒன்று சமூக வலைதளங்களில் பரஸ்பர சம்மதத்துடன் நிகழும் அத்துமீறிய பாலியல் பரிமாற்றங்கள். அடுத்தது ஒருவரது அந்தரங்கக் கணங்களின் அசைபடத்தை அனுமதியின்றி இணையத்தில் பகிர்வது. இந்த இரண்டையும் செய்யும் ஒற்றை வில்லனைக் கொண்டு கதையைப் பின்னி இருக்கிறார்.

சமூக வலைதளங்கள் வழி அறிமுகமே இல்லாத ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொண்டு - அவர்களுக்கு மணமாகி இருந்தாலும், காதலன் / காதலி இருந்தாலும், குழந்தைகள் இருந்தாலும் - எந்த எல்லைக்கும் சென்று உரையாடிக் கொள்ளும் சாத்தியம் கடந்த பத்தாண்டுகளாகவே இருக்கிறது. இதனால் குடும்பங்கள் சிதைவது ஒருபுறம், தனி நபர் ஆளுமை சிதைவது மற்றொருபுறம். ஒட்டுமொத்தமாய் இது ஒரு சமூகத் தீங்காய் பிரம்மாண்டம் கொண்ட‌படியே இருக்கிறது. ஆண்டுதோறும் இதில் ஈடுபடுவோர் அதிகரித்தபடி தான் இருப்பார்கள். புதியவர்கள், இன்னும் புதியவர்கள், மேலும் மேலும் புதியவர்கள். இது தொடர்பாய் நான் கண்ட, கேட்ட, வாசித்த உதாரணங்களின் எண்ணிக்கை கணிசமானது.

சொல்லப் போனால் ஓரிரு ஆண்டுகள் முன்பு வரை இது எனக்கு ஆர்வத்திற்குரிய ஒரு தலைப்பு. அதற்குக் காரணம் இருக்கிறது. 2014ல் பெங்களூரில் The Times of India நாளேடு நடத்திய Literary Carnivalல் ஆங்கில நாவலாசிரியை ப்ரீத்தி ஷெனாய் Love In The Times Of Google என்ற தலைப்பில் பென்குயின் பதிப்பகத்தின் தலைமை எடிட்டரான வைஷாலி மாத்தூருடன் ஓர் உரையாடலை நிகழ்த்தினார். அப்போது வெளியாகியிருந்த அவரது நாவலான The One You Cannot Have பற்றியது அது. அதில் இன்னொரு பெண்ணுடனான கணவனின் சாட்டை மனைவி வாசித்து விடுவதாக ஒரு காட்சி வரும் என நினைவு. அதை உரையாடலினிடையே வாசித்துக் காட்டினார் ப்ரீத்தி. அது எனக்கு ஒரு மிகப் பெரிய உந்துதலாக இருந்தது. அப்போது விநாயகமுருகனின் ராஜீவ் காந்தி சாலையை பாதி வாசித்திருந்தேன் (இன்னமும் முடிக்கவில்லை.)

அது மாதிரி துறைசார் புனைவு ஒன்று எழுத ஆர்வங்கொண்டிருந்த காலகட்டம். இந்த இரண்டு விஷயங்களும் சேர்ந்து சமூக வலைதளங்களில் ஆண் - பெண் உறவை முன்வைத்து - பாலியல் அதன் பிரதான முகம் - என் முதல் நாவலைத் திட்டமிட்டேன். 'நீலப்பறவை' என அதற்குப் பெயர் கூடத் தேர்ந்திருந்தேன் (ஏனென்று புரிகிறதா!). ஆனால் அதைச் செயல் படுத்தவில்லை. இனி எழுதுவேனா என்றும் தெரியவில்லை. அன்று எழுதி இருந்தால் அது பெரிய விஷயமாகப் பேசப் பட்டிருக்கும். இன்று வெகுஜன ஊடகமான சினிமாவிலேயே லென்ஸ் போன்ற அம்மாதிரி முயற்சிகள் நடந்தேறி விட்டன.

பொதுவாய் வைக்கப்படும் வாதம் ஒன்று. அத்துமீறிய சமூக வலைதள உறவுகள் என்பவை சமூகத்தின் அளவுகோள்களின் படி அத்துமீறியவை என்றாலும் அவர்களுக்குள் அது பரஸ்பர சம்மதத்துடன் தானே நடக்கிறது, அது எப்படிக் குற்றமாகும் என்பது. அது சட்டப்படி தவறாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தர்மப்படி? அப்படிச் செய்யும் ஒரு கணவனுக்கு, தன் மனைவி அப்படிச் செய்தால் சம்மதமா என்ற கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டும். இக்கேள்விக்கு நேர்மையான பதில் அளித்தாலே இவ்வகை உறவுகளில் முக்கால்வாசி வெட்டுப்படும். ஆனால் சிலர் அதற்கும் சம்மதம் என்று சொல்வார்கள். இன்னும் சிலர் அப்படி நடந்தால் அவர்களின் குற்றவுணர்வுக்கு விடுதலையாக அமையும் எனக் கூடக் கருதுவார்கள். (இது தொடர்பான நுட்பமான வசனம் ஒன்றினைப் போகிற போக்கில் வைத்திருக்கிறார் இயக்குநர். அப்போது நிமிர்ந்தமர்ந்தேன்.)

ஒரு குழப்பமும் இது தொடர்பாய் முன்வைக்கப்படுகிறது. ஏன் இப்படி வீடியோ சாட் செய்கிறார்கள்? அதுவும் குடும்பப் பெண்கள் கூட? இதில் என்ன கிடைக்கிறது என? மனிதர்களின் இச்சை நாம் கற்பனை செய்யவியலாத பரிமாணங்களைக் கொண்டது. சிலருக்கு செக்ஸ் வீடியோக்கள் போதும், சிலருக்கு நிர்வாணம் போதும், சிலருக்கு ரகசிய நிர்வாணமாய் இருக்க வேண்டும், சிலருக்கு அந்தரங்கமான‌ தொடுகை மட்டும் போதும், சிலருக்குத் தம் கையால் எதிர்பாலினத்தின் ஆடையைக் களைவதே போதும், சிலருக்கு சிலருக்கு பயன்படுத்திய உள்ளாடைகள் போதும், சிலருக்கு தம் உறுப்பை எதிர்பாலினத்தைப் பார்க்கச் செய்தாலே போதும், சிலருக்கு அடுத்தவர் கலவியைப் பார்த்தால் போதும். இப்படிப் பலப் பல.

இன்றைய இணைய உலகில் அப்படித்தான் சிலருக்கு டெக்ஸ்ட் சாட், சிலருக்கு வாய்ஸ் சாட் (முன்பெல்லாம் - 90களில் - பத்திரிக்கைகளில் கட்டண செக்ஸ் சாட் செய்வதற்கென தொலைபேசி எண்களைப் பகிர்ந்து விளம்பரமெல்லாம் வருமே), சிலருக்கு வீடியோ சாட் போதும், இன்னும் சிலருக்கு நேரிலும் கலவி வேண்டும். இவை மிக மிக ஆபத்தற்ற வடிவங்களில் ஒன்றோ அதற்கு மேற்பட்டோ நம்மிடமும் இருக்கலாம், அது நமக்கான துணையுடன் மட்டும் இருக்கலாம். அளவு அதிகரிக்கும் போது அது வக்கிரமாக உருக்கொள்கிறது. அது அடுத்தவரை பலி வாங்கத் தொடங்குகிறது. அதனால் இதில் என்ன கிடைக்கிறது என்ற கேள்வி நம் தர்க்கத்தை நம் மனப்பாங்கை அவர்கள் மீதேற்றி யோசிக்க முனையும் செயல்.

நம்மால் உணரச் சாத்தியமற்ற ஒரு சந்தோஷம் அவர்களுக்கு அதில் கிட்டுகிறது என்பது வரைக்கும் புரிந்தால் சரி.

இம்மாதிரி சமூக வலைதள உறவுகள் என்றில்லை, நேரடி உறவுகளிலும் அன்னோன்யத்தின் அல்லது அறியாமையின் பலனாய் நிகழும் ஒரு பக்கவிளைவு அப்பொழுதுகளைப் படம் பிடிப்பதும், அதை நெருங்கியவர்களுக்குக் காண்பிப்பதும், அப்பகிர்தலின் உச்சமாய் அவற்றை இணையத்தில் ஏற்றுவதும். முன்னதை விட இது மன்னிக்க முடியாத குற்றம்.

நல்ல ஆண் தனக்கு வரும் அறிந்த / யாரோ ஒரு பெண்ணின் (அவளுக்குத் தெரியாமலே, அவள் விருப்பமும் அனுமதியும் இன்றி பகிரப்படும்) நிர்வாண / கலவிப் புகைப்படத்தை மற்றவர்க்கு அனுப்பிப் பரப்ப மாட்டான் - அது ஒரு நடிகையாகவே இருந்தாலும். இது ஓர் அடிப்படை அறம். அப்படிப் பரப்பும் ஒவ்வொரு முறையும் ஒரு பெண்ணை, அவள் குடும்பத்தைச் சிதைக்கிறோம், மோசமான முடிவை நோக்கி நம் கையால் தள்ளுகிறோம். அதே நிலை நமக்கு வர இந்தத் தொழில்நுட்பம் வேய்ந்த நாகரிக யுகத்தில் நெடுங்காலம் ஆகாது. தனி மனிதர்கள் சுயஒழுக்கத்தின் வழி இவற்றைப் பரப்பாதிருப்பதன் மூலமே இதற்கான சந்தையை மெல்ல மெல்ல ஒழிக்க முடியும். பார்க்க / பரப்ப ஆள் இல்லாத போது இதை முதலில் வெளியிடும் நபருக்கு அதற்கான மோட்டிவேஷன் இல்லாமல் போகும். அப்படியான‌ சமூகக் கூட்டு முயற்சி தான் ஒரே வழி.

நிர்வாணத்தை விற்கவென ப்ரொஃபொஷனல்கள் இருக்கையில் (படம் அதையும் பேசுகிறது) இது அனாவசியம், அநியாயம். காமம் தீர்க்க பாலியல் தொழிலாளிகளை அணுகாமல் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் பலாத்காரம் செய்வதற்குச் சமானம்.

அவள் எதற்கு அப்படி செல்ஃபியை எடுத்தாள் / புகைப்படம் எடுக்க அனுமதித்தாள் என்ற விதண்டாவாதக் கேள்வி ஒருபோதும் இப்படங்களைப் பரப்பும் உரிமையை நமக்குத் தந்து விடாது. அவள் எடுத்தது / எடுக்க அனுமதித்தது அவளது தனி மனித சுதந்திரம். அவள் மட்டும் பார்க்கவோ, நெருங்கியவர்களுக்கு மட்டும் காட்டவோ தான் அதைச் செய்தாள். நீங்களும் நானும் பார்க்க அல்ல. மீறி அறியாமையினால் / துரோகத்தால் அது கசிந்து விட்டது. அது நம்மிடம் வரும் போது அது நமக்கானதல்ல என்ற தெளிவு நமக்கு வேண்டும். அதைப் பகிரும் உரிமை நமக்கு இல்லை என்ற புரிதல் வேண்டும்.

தமிழ் மின் சஞ்சிகையின் இரண்டாம் இதழின் தலையங்கத்தில் இது பற்றிப் பேசி இருக்கிறேன். ('இணையப் பழங்குடிகள்' என்பது தலைப்பு. பழங்குடி வாழ்வியல் பற்றிப்புரிதலற்று அவர்களை அவமதிப்பதாக லீனா மணிமேகலை சாடியிருந்தார்.) 

முன்னெப்போதும் இல்லாதளவு ஒருவருடைய அந்தரங்கத்தைக் கிஞ்சித்தும் மதிக்காமல் வேடிக்கைப் பொருளெனப் பகிரங்கப்படுத்தும் ஓர் இரக்கமற்ற விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது பிரபல நடிகை ராதிகா ஆப்தேயின் செல்ஃபியோ, முகமறியாப் பெண் ராகவியின் செல்பேசி உரையாடலோ, விதிவிலக்கின்றி கணங்களில் உலக‌ச் சுற்றுக்கு விடப்படுகிறது. வாட்ஸாப், ட்விட்டர், ஃபேஸ்புக், யூட்யூப், சவுண்ட்க்ளௌட் என தொழில்நுட்பச் சாத்தியங்கள் அதிகரிக்கையில் தனிமனித வாழ்வுக்குள் எட்டிப்பார்க்கும் வேட்கையும் பெருகியபடியே இருக்கிறது.

உண்மையில் எந்தக் குற்றவுணர்வுமே இன்றி மிக இயல்பாக இந்தப் பகிரல் நடைபெறுகிறது. அனுப்புவர், பெறுபவர் எவருமே அது குறித்து ஆட்சேபனை எழுப்புவதில்லை. மௌனித்திருப்பதும் அதில் பங்கு கொள்வதற்குச் சமானமே.

இவற்றைப் பகிர்தல் அறமா என்கிற தத்துவார்த்தக் கேள்வியைக் கண்டுகொள்ளாமல் விட்டாலும் நம் குடும்பத்துப் பெண் அதில் சம்மந்தப்பட்டிருந்தாலும் இதே ஆர்வத்துடன் பகிர்வோமா என்ற நீதிக்கேள்வியை எப்படி உதாசீனம் செய்ய முடியும்? ஒரே காரண‌ம் நம் குடும்பத்துப் பெண்ணுக்கு இதுபோல் நேராது என்ற குருட்டு நம்பிக்கை தான். தவிர, அடிப்படையிலேயே நமக்கு அடுத்தவர் படுக்கையறையின் சாவித்துவாரத்தில் கண் வைக்கும் வெறி உண்டு.

அச்சு, ஒளி, இணைய ஊடகங்கள் தாம் முன்பு இதைச் செய்து கொண்டிருந்தன. இப்போது நவீன வளர்ச்சியின் பயனாய் தனிமனிதர்களே அதைக் கையிலெடுத்துக் கொண்டு விட்டார்கள். மீடியாக்கள் இப்போது இயல்பாய் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு "goes viral" என செய்திச் சாக்கு வைத்துக் கொண்டு அதற்கு வெளிச்சமிடுகிறார்கள்.

புகைப்படங்கள், உரையாடல்கள், வீடியோக்கள் எல்லாம் ஒருவரது தனிப்பட்ட‌ பாத்தியதை. அவரது முறையான அனுமதியில்லாமல் அதைப் பார்ப்பதற்கோ கேட்பதற்கோ நமக்கு உறுத்த வேண்டும். அதில்லை எனினும், அதைப் பகிர்வது சட்டத்துக்குப் புறம்பான செயல். அனுப்புபவர் மட்டுமின்றி பெறுபவருக்கும் இக்குற்றத்தில் பங்குண்டு.

நடிகை என்பது அவரது அந்தரங்கத்தை ஊடுருவ எந்தச் சலுகையையும் நமக்குக் கொடுத்து விடாது. அவர் தான் நடிக்கும் திரைப்படங்களில், விளம்பரங்களில் உடலை முன்வைப்பவராகவே இருந்தாலும் அவரது அனுமதியின்றி எடுக்கப்படும் / பகிரப்படும் விஷயங்கள் பிழையே. நாம் இளக்காரமாய்க்கருதும் நடிகையிடமே இக்கண்ணியத்துடன் நடக்க வேண்டும் எனும் போது யாரோ ஒரு சாதாரணப் பெண்ணிடம் இன்னும் பொறுப்பு கூடத்தானே வேண்டும்!

ஒரு பெண் கெட்டவளா, நல்லவளா, அவளது பின்புலம் என்ன‌ என்பதெல்லாம் இதில் பொருட்டே இல்லை. அவள் தனிமையில் ஒருவரை நம்பிச் செய்த விஷயம் துரோகத்தாலோ, கவனமின்மையாலோ வெளியே கசிந்து விட்டது. நம் எல்லோரையும் போல் தானே அவர்களும் நடந்து கொள்கிறார்கள். தொந்தரவு செய்யாமல் அதை அப்படியே அமைதியாய்க் கடந்து விடலாமே! அஃதல்லாமல் அதை வைத்துப் பொழுதுபோக்க என்ன இருக்கிறது? கலவியில் ஈடுபடும் நாய்களைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தி மகிழும் சேடிஸத்துக்கு சற்றும் குறைந்ததில்லை இது.

ஒரு ஸ்கேண்டலில் சம்மந்தப்பட்டவருக்கு நாம் செய்யும் ஆகச்சிறந்த உபகாரம் அதைப் பரப்பாமல் இருப்பதே. போலவே பெண்களும் கணவன் உள்ளிட்ட‌ யாரையும் நம்பி பிரச்சனைக்குரிய‌ எதையும் பகிராதிருப்பதே நலம். இப்போதைக்கு இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களே என்றாலும் ஆண்களும் சமமாய் அதிர்ச்சியுறும் காலம் தொலைவில் இல்லை (ஏற்கனவே ஓர் அசிஸ்டெண்ட் கமிஷனரின் டெலிஃபோன் உரையாடல் இருக்கிறது).

இணையத்தைப் பொறுத்தவரை நாம் இன்னும் பழங்குடி வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிலும் நாகரீகத்தை நோக்கி நகர முயற்சிக்க வேண்டும். ‘நான்’ என்பது ஒழுங்கானால் ‘நாம்’ என்பது தானாய்ச் சரியாகும்.


பெண்களுக்கு இதில் கற்றுக் கொள்ள ஒன்று உண்டு. கணவன், காதலன், தோழன், சமூக வலைதளச் சாட் வழி அறிமுகம் ஆன‌ மீட்பன் என எவனையும் (எவளையும்) நம்பி உங்கள் நிர்வாண, அரை நிர்வாணங்களைப் பகிராதீர். என்றேனும் அது வைரலாகி ஊரே உங்களை மனதிலிருத்திச் சுய இன்பம் செய்யும். அப்புறம் கேலி செய்யும். அதற்கு மேல் உங்கள் இஷ்டம்!

இவற்றுக்கெல்லாம் orthogonal-ஆக ஒரு பார்வை உண்டு. நிர்வாணத்தை மானத்தோடு இணைத்து அஞ்சுவதாலேயே இத்தகு விபத்துகள் அல்லது சதிகள் பேரிழப்பை உண்டாக்குகின்றன, அதனால் அதை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கடக்க சமூகம் பழக வேண்டும் என்ற பார்வை. மதிப்பிற்குரிய ராஜன்குறை இதை வலியுறுத்தி அவ்வப்போது பேசி வந்திருக்கிறார்:

(1) எனக்கு ஒரு சந்தேகம். கோபிக்காமல் யோசித்துப் பாருங்கள். ஹோட்டல்கள், துணிக்கடைகள் போன்ற இடங்களில் மறைவான இடங்களில் காமிரா வைத்து நிர்வாண உடல்களை பதிவு செய்கிறார்கள்; இப்போது nameo என்ற மென்பொருளை செல்ஃபோனில் தரவிரக்கினால் அது எக்ஸ்ரே போல செயல்பட்டு ஆடையை மட்டும் நீக்கி நிர்வாண உடலை படமெடுக்கும்/காட்டும் என்று சொல்கிறார்கள். இது போன்ற செயதிகளை பகிர்பவர்கள் பெண்களை எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறார்கள்; இதை பெரிய ஆபத்து என்கிறார்கள். ஒரு பெண்ணை இப்படி ஒருவர் படம் எடுத்தால் அவமானம் எடுத்தவருக்கு வேண்டுமானால் இருக்கலாம் - அந்த பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ என்ன அவமானம்? ஆடைகளுக்கு உள்ளே எல்லோரும் நிர்வாணமாகத்தான் இருக்கிறோம். அது வெளிப்பட்டுவிட்டால் சம்பந்தப்பட்டவருக்கு அவமானம் என்ற மனப்பான்மையை முதலில் எதிர்க்கவேண்டும். ஆடை அணிவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒருவரது நிர்வாணம் அவமானகரமானது என்பது காரணமாக இருக்கக் கூடாது. படம் எடுத்து நெட்டில் போட்டால் போடட்டும். போடுபவர்களும் பார்ப்பவர்களும் வேண்டுமானால் வெட்கப்படலாமே தவிர அந்த உடலுக்கு உரியவர்கள் வெட்கப்படக்கூடாது. குழந்தைகளை ஆடை அணீய பயிற்றுவிக்க பப்பி ஷேம் சொல்வதை வாழ்நாள் முழுவதும் நம்புவது முதிர்ச்சியின்மை இல்லையா என்ன? இணையவெளியின் நிர்வாண பித்தினால் இந்த நிர்வாணப்பயித்தயம் இன்னம் பத்தாண்டுகளில் ஒழிந்துவிடும் என்று நம்புகிறேன். அதற்கு இந்த அவமானம் குறித்த எண்ணம் முதலில் ஒழியவேண்டும்.

(2) பல்வேறு விஷயங்களில் சமூகம் முதிர்ச்சியடைந்து வருவது போல, பாலுறவு என்பது வாழ்வின் சிறு பகுதி, உணவு அருந்துவதுபோல அன்றாட தேவை கூட கிடையாது, அவ்வப்பொழுதே தேவை, நிர்வாணம், பாலுறவு எனபதெல்லாம் மறைபொருளாகவோ, மானம், மரியாதை தொடர்பானதாகவோ இருக்கவேண்டியதில்லை என்பது போன்ற புரிதல்களும் பெருகும்போது இயல்பாகவே காணொளி துணுக்குகளுக்கும், பீப் ஒலிகளுக்கும் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும். பள்ளிகளில் பாலியல் கல்வியை துவங்குவது அதற்கு ஒரு அடித்தளமாக இருக்கும். கூடவே தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது வழங்கப்படும் பாலியல் ஆலோசனைகளை தடை செய்வதுடன்,  பாலியல் மருத்துவக்கல்வி என்பது உரிய கவனத்துடன் புதிய அடிப்படைகள் கொண்டு உருவாக்கப்படவேண்டும். தொலைக்காட்சிகளில் வழங்கப்படும் முட்டாள்தனமான ஆலோசனைகளை கேட்டால் திகைப்பாக இருக்கிறது. பாலுணர்வு இயல்பாக்கம் என்பதை தகர்த்தெறியாமல் மானுட விடுதலை சாத்தியமில்லை. உடல்களுக்கிடையேயான பாலுறவற்ற அரவணைப்பினையும், ஒளிவு மறைவற்ற போக்கினையும் பரவலாக்கினாலே இது குறித்த தேவையற்ற மன அழுத்தங்கள் குறையும். இது போன்ற விஷயங்களில் வித்தியாசமாக சிந்திப்பவர்களின் குரல்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தரவேண்டும்.

படத்தில் சில புத்திசாலித்தனமான தருணங்கள் உண்டு. மயக்கத்தில் இருக்கும் பெண்ணின் மாஸ்க்கை கழற்றும் காட்சியும் அதை விவரிக்கும் இறுதிக் காட்சியும் உதாரணங்கள். கிடைக்கும் அந்தரங்களை எல்லாம் இணையத்தில் ஏற்ற முனையும் அற்பத்தனம் சுற்றம் நட்பு என என நெருங்கிய அனைவரையும் நம்மை நீங்கச் செய்யும் என்ற கருத்தைத் தான் இறுதிக் காட்சி முன்வைக்கிறது. அதுவே இதில் குற்றத்துக்கான முக்கியமான தண்டனை எனப் பார்க்கிறேன். ஒதுக்கப்படுதல்.

இரண்டாம் பாதியில் வில்லன் மேல் கேஸ் மேலும் மேலும் வலுவாக எழுதப்படுகிறது. அறிமுகமற்ற‌ பெண்களுடன் செக்ஸ் சாட் வீடியோ என்பதில் தொடங்கி அடுத்தவரின் அந்தரங்கமான வீடியோவைப் பார்த்தல் / பகிர்தல் என்று வளர்ந்து இறுதியில் அதை இணையத்தில் ஏற்றியதே அவன் தான் என முடிகிறது. இறுதிக் குற்றத்தை அவன் செய்யவில்லை என்றாலும் முதலிரண்டைச் செய்ததற்காகவே படத்தில் வழங்கப்பட்ட தண்டனை நியாயமானதே எனத் தோன்றுகிறது.

ஏஞ்சலாக நடித்த அஸ்வதி லாலின் நடிப்பு (வீடியோவில் ஒவ்வொரு தாளாகக் காட்டும் காட்சி) கவனிக்கும் படி இருந்தது. யோகனாக நடித்த ஆனந்த் சாமியும் பரவாயில்லை (டூலிப் வீடியோவை எத்தனை முறை அரவிந்த் பார்த்தான் எனப் பட்டியலிடும் காட்சி). மிசா கோஷல் படம் முழுக்க மயக்கத்திலேயே கிடக்கிறார். படத்தை இயக்கியது மட்டுமல்லாது சங்டத்துக்குரிய எதிர்மறைப் பாத்திரத்திலும் (அரவிந்த்) நடித்திருக்கிறார் ஜெயபிரகாஷ். கொஞ்சமாய் அபிஷேக் சாயல். நடிப்பில் முதிர்ச்சியின்மை ஆங்காங்கே தெரிந்தாலும் அதையெல்லாம் கவனிக்க விடாமல் திரைக்கதை தடதடக்கிறது. (சற்று முன் ஜெயபிரகாஷின் ஃபேஸ்புக் பக்கத்திற்குப் போய்ப் பார்த்தேன். சட்டென‌ 'Hi' சொல்லி சாட் செய்யத் தொடங்கி விடுவாரோ என்ற பயம் எழும்பியது. அந்த வகையில் ஓர் இயக்குநராக வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்வேன்.)

நடிகர் தேர்வு, வசன உச்சரிப்பின் போதான லிப் சிங்க் என எல்லாவற்றிலும் மலையாள வாடை தூக்கல். படத்தை இரண்டு மொழிகளிலும் எடுத்தது தான் காரணம். நானறிந்து ரகசிய வீடியோ எடுத்தல் என்ற விஷயத்தை எடுத்துப் பேசி இருக்கும் மூன்றாம் (பொருட்படுத்தத்தக்க) மலையாளப்படம் லென்ஸ். முதலில் திருஷ்யம்; பின்னே சாப்பா குரிஷு; இப்போது இது.

படத்தில் குறைகளே இல்லை என்று சொல்லவில்லை. லோபட்ஜெட் என்பது ஆங்காங்கே தெரிகிறது என்பது தொடங்கி இன்னும் நேர்த்தியான காட்சியமைப்புகளும் கூரான வசனங்களும் சமைத்திருக்க முடியும் என்பது வரை சொல்லலாம்.

எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு என்பது பொதுவாய் எதிர்பார்ப்புக்குரியது. கற்றது தமிழ், சுப்ரமணியபுரம் என அது வேறு லெவல். இப்படத்தில் முழுக்கவே இன்டோர் என்பதால் ஒளிப்பதிவின் வீச்சை உணர முடியவில்லையா எனப் புரியவில்லை. பரதேசி, காக்கா முட்டை, விசாரணையைத் தொடர்ந்து இதிலும் ஜிவி பிரகாஷ் ஏமாற்றி இருக்கிறார் என்றே சொல்வேன்.

தலைப்புக் கூட லென்ஸ் என்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. கேமெராவின் லென்ஸ் என்று சுற்றி வளைக்கிறது. கோடி கண்கள் என்பதை உணர்த்தும் ஏதேனும் சொல் / சொற்றொடர் படத்திற்குத் தலைப்பாய் இருந்திருக்கலாம்.

ஆனால் படத்தைக் கொண்டாட இவை ஏதும் தடையாக இல்லை. அதன் உள்ளடக்கம் அத்தனை வீரியமாய் மிளிர்கிறது.

இப்படம் ஒரு கண்ணாடி. சமூகத்தைப் பிரதிபலிக்கிறது. இடையில் நம்மையும். படம் பேசும் ecosystem-ல் எங்கோ நாம் பொருந்தி இருக்கிறோம். யாரோடோ சாட் செய்பவர்களாக, அல்லது அந்தரங்கத்தைப் படமெடுப்பவர்களாக, அல்லது அதை இணையத்தில் ஏற்றுபவர்களாக, அல்லது அதைப் பகிர்பவர்களாக, அல்லது அதைப் பார்ப்பவர்களாக, அல்லது இவற்றால் பாதிக்கப்படுபவர்களாக‌. யாரெனினும் படம் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. மாற வேண்டுமா என்ற மறுபரிசீலனைக்குத் தூண்டுகிறது. அது பட‌த்தின் முக்கியமான சமூகப் பங்களிப்பு. அக்கோணத்தில் சமீபத்தில் இத்தகைய படம் வேறில்லை.

தட்டத்தின் மறையத்து, ஜேக்கபின்ட சுவர்க்கராஜ்யம் படங்களை இயக்கிய, ஒரு வடக்கன் செல்ஃபி படத்தை எழுதிய வினீத் ஸ்ரீனிவாசன் இப்படத்தைப் பற்றிச் சொல்கையில் "It's relevant, it's gritty, it's honest and it haunts." என்கிறார். ஆம். இந்தப் படம் உங்களைத் துரத்தும். தொந்தரவு செய்யும். கோடி விழிகள் நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பதாய் பிரமை தட்டும்.

வெளியிலுள்ள வெகுஜனம் கண்டுகொள்ளவில்லை என்றாலும் இத்தகு படங்களைக் தூக்கி வைத்துப் பேசுவது சமூக வலைதள வழக்கு. ஆனால் சமூக வலைதளங்களில் கூட ஏன் இப்படம் பற்றி பரவலாகப் பேசப்படவில்லை என நண்பர் கேட்டார். அனேகமாய் பலரும் படம் பார்த்து திருடனுக்குத் தேள் கொட்டிய அதிர்ச்சியில் உட்கார்ந்திருப்பார்கள் என்றேன் விளையாட்டாய். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அது வெறும் விளையாட்டு மட்டும் தானா என வியக்கிறேன்.

இவ்வகைப் படங்களை ஊக்குவிக்கும் வெற்றிமாறனுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள். எப்படிச் சொல்வது? தியேட்டருக்குப் போய் காசு கொடுத்துப் பார்ப்பதன் மூலமும் அதை பற்றி பேசியோ எழுதியோ பரப்புவதன் மூலமும்.

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்