ராஜேஷ் குமாரின் இடம்


எல்லோருக்கும் வாசிப்பு என்பது ராஜேஷ் குமார் வழியாகவே தொடங்கி பிறகு தான் சீரிய(ஸ்) இலக்கியத்தின் பக்கம் திரும்பி இருக்கும், ஆனால் அதை மறந்து விட்டு ஜெயமோகன் போன்ற மதவாதிகளுடன் ஒப்பிட்டு "சில அறிவுஜீவிகள்" அவரை இழிவுபடுத்திக் கொண்டிருப்பதாக என் பெயர் குறிப்பிடாமல் அன்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் சினந்தெழுதியுள்ளார்.


நான் ஒருபோதும் என் வாசிப்புப் பரிணாம வளர்ச்சியை மறைத்தவனில்லை. குமுதத்தில் வந்த காமிக்ஸ் பக்கங்களான ப்ளாண்டி, ஃப்ளாஷ் கார்டனில் தொடங்கி, நாளிதழ்களின் சிறுவர் இணைப்புகள் (சிறுவர் மலர், தங்க மலர், லேசாய் சிறுவர் மணி), சிறுவர் இதழ்கள் (பூந்தளிர், அம்புலி மாமா), காமிக்ஸ் இதழ்கள் (ராணி காமிக்ஸ் அப்புறம் சில‌ லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ்), நாளிதழ்களின் பிற‌ இணைப்புகள் (வார மலர், குடும்ப மலர், கொஞ்சம் தினமணிக் கதிர்), மாத நாவல்கள் (மாலைமதி, கண்மணி, ராணி முத்து), ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவல்கள் (உடன் சுபா, பிகேபி), லக்ஷ்மி + ரமணிச் சந்திரன், கல்கி + சாண்டில்யன், பாலகுமாரன் + சுஜாதா என்று தான் ஏழெட்டு வயது முதல் பதின்மங்கள் வரை என் வாசிப்பு உயர்ந்தது. பிறகு குமுதம் வெளியிட்ட தீபாவளிச் சிறப்பிதழ்களின் வழி தான் முதன் முதலாக‌ நவீன இலக்கியப் பரிச்சயம்.

பித்துப் பிடித்தது போல் நான் ராஜேஷ் குமாரை மாதந் தவறாமல் தேடிப் பிடித்துப் படித்த காலம் உண்டு. இன்னமும் கூட விவேக் - ரூபலா வரும் நாவல் எனப் போட்டிருந்தால் வாங்குகிறேன் என்பதை மறுக்கவில்லை. அவர் இன்றைய தேதியில் 1,500 நாவல்கள் எழுதி இருப்பார் என நினைக்கிறேன். அதில் எப்படியும் 500 நாவல்களையாவது வாசித்திருப்பேன். அவரது நூறாவது க்ரைம் நாவல் நூலை வெகுநாள் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். குமுதம் இதழில் தொடர்கதையாக வெளியான‌ அவரது ஆயிரமாவது நாவலான 'டைனமைட் 98'ன் அத்தியாயங்களைச் சேகரித்து பைண்ட் செய்து வைத்திருந்தேன்.

என் வாசிப்புப் படியாக இருந்தவர் என்பது தாண்டி பன்னிரண்டு வயதில் எனக்கு எழுத வேண்டும் என்ற ஆசையே ராஜேஷ் குமாரின் 'எவரெஸ்ட் தொட்டு விடும் உயரம்தான்' நாவலை வாசித்துத் தான் உண்டானது. அது அவரது சுயசரிதை நூல். தான் எழுதிய முதல் கதைகள், பிரசுரத்திற்குச் செய்த முயற்சிகள், பத்திரிக்கை ஆசிரியர்களுடனான அனுபவங்கள், குடும்பத்தாரின் எதிர்வினை என்பதை எல்லாம் ஒரு சுயமுன்னேற்றப் பாணியில் அதில் சொல்லி இருப்பார். ஒரு மாதிரி நீல. பத்மநாபனின் 'தேரோடும் வீதியிலே' போன்ற உள்ளடக்கம் கொண்ட வெகுஜனப் படைப்பு அது. அதே உத்வேகத்தில் அவரது நடையை பாணியைப் பிரதியெடுத்து நான் பதின்மூன்று எழுதிய நாவல் 'ப்ரியமுடன் கொலைகாரன்'. அது இன்னும் கைப்பிரதியாகவே எஞ்சி இருக்கிறது. (அதைப் பற்றி இறுதி இரவு தொகுப்பின் முன்னுரையில் கூடக் குறிப்பிட்டிருந்தேன்.) என்றேனும் பிரசுரிக்க நேர்ந்தால் அதை ராஜேஷ் குமாருக்குத் தான் சமர்ப்பணம் செய்வேன் என்பதில் சந்தேகம் இல்லை.

அப்படி என் எழுத்துக்கான ஆரம்ப உத்வேகமாக இருந்தவர் என்ற வகையில் எப்போதும் அவர் என் நன்றிக்குரியவர். அதே விதமான நன்றியுணர்ச்சி வைரமுத்துவிடமும் எனக்குண்டு. அவர் மட்டும் குங்குமம் இதழில் என் படைப்பை முத்திரைக் கவிதையையாகத் தேர்ந்தெடுக்கவில்லை எனில் நான் தொடர்ந்து எழுதியிருக்க மாட்டேன், பரிசுத்தமான மென்பொருள் காரனாக மட்டும் வாழ்க்கையை நகர்த்தியிருப்பேன். அவ்வகையில் என் வருகையை உலகிற்கு அறிவித்தவர் வைரமுத்து.

ஆனால் அவர்களின் இலக்கிய‌ இடத்தை அளவிடுகையில் மேற்சொன்ன‌ நன்றியுணர்ச்சிகளுக்கு எல்லாம் இடமில்லை.

ராஜேஷ் குமார் குமுதம் இதழ்ப் பேட்டி ஒன்றில் ஓர் ஆடு மேய்க்கும் சிறுவனைத் தான் வாசிக்கத் தூண்டுகிறேன், சீரியஸ் இலக்கியத்தால் அதைச் செய்ய முடிந்திருக்கிறதா எனக் கேட்டு தன் இலக்கிய இடத்தை நிரூபிக்க‌ முயன்றிருப்பார் (சுமார் 20 ஆண்டுகள் முன் வெளியான பேட்டி). அவர் அப்படியான பல கீழ்த்தட்டு மனிதர்களை, வீட்டிலிருக்கும் பெண்களை வாசிக்கத் தூண்டுகிறார் என்பது உண்மையே. ஆனால் அதனால் அவர் அவர்களிடம் நிகழ்த்தும் தாக்கம் என்ன - வாசிக்கும் போதான த்ரில் உணர்வு தவிர? அது மதுப்போதை போல் ஒரு தற்காலிக வாசகக் கிளுகிளுப்பு மட்டுமே. இலக்கியத்தை விடுத்துப் பார்த்தாலும் அவரது எழுத்துக்கள் எந்தப் பிரச்சார அரசியலும் பேசுவதில்லை (கலைஞர், அண்ணா போல்).

ராஜேஷ் குமாரின் எழுத்துக்களில் இரண்டு முக்கியமான போதாமைகளைக் காண்கிறேன். ஒன்று அவரது நடை. வாசிப்புச் சுவாரஸ்யத்தின் அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும் சுஜாதா போன்ற தேர்ந்த நடையல்ல அவருடையது. அவரது செட் மாத நாவல் ஆட்களையே எடுத்துக் கொண்டாலும் பட்டுக்கோட்டை பிரபாகரின் நடை பன்மடங்கு சுவாரஸ்யம் மிகுந்தது. சுபாவுடையதும் கூட அவரை விட மேலானதே. அடுத்த‌ விஷயம் அவர் எழுத்திலிருந்து ஒரு வாசகன் பெற்றுக் கொள்ள ஏதுமில்லை. அது வாசித்த கணத்தோடு மறந்து விட வேண்டியது தான். பஸ் டிக்கெட்டை இறங்கியதும் தூர எறிவது போல்.

எனில் ராஜேஷ் குமாரின் இடம் என்பது என்ன? இலக்கியத்திலும் மொழியியலிலும் அவரது பங்களிப்பு என்ன? அவர் எழுதிக் குவித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலும் திரும்பிச் செய்வது இல்லாமல் தனித்துவம் கொண்டிருக்கின்றன. அவர் மேற்கத்திய பல்ப் எழுத்துக்களைப் பிரதி எடுத்தவர் இல்லை. அவரது கதையின் திருப்பங்கள் பெரும்பாலும் ஊகிக்க முடியாதவை. (அவை யாவும் நம்ப முடியாதவை என்பது வேறு விஷயம்.) வாசிக்க எடுத்தால் முடிக்காமல் வைக்க முடியாது என்பது போன்ற பிரமையை ஏற்படுத்த வல்லதே அவர் கதைகள். இன்றும் "சுமாரான" ஒரு பொழுதுபோக்கு வாசிப்பு தேவை என்றால் அவரை நாடலாம். அவரை மட்டுமே வாசிக்கும் எவ்வளவோ பேர் உண்டு என்பதும் சமூகத்தின் வாசிப்புப் பழக்கம் என்ற அளவில் ஒரு பங்களிப்பு தான். (ஆனால் அவர்களின் முக்கால்வாசிப் பேர் அவரைத் தாண்டி எதையும் வாசிக்க முனைய மாட்டர்.) என் போல் சிலர் அவரால் உந்தப்பட்டு எழுத வந்ததும் அவரது பங்களிப்பு தான்.

சுருங்க உரைத்தால் ராஜேஷ் குமாரின் எழுத்து இலக்கியம் அல்ல; அவருக்குத் தமிழிலக்கிய வரலாற்றில் எந்த நேரடி இடமும் இல்லை; சிலரை எழுதத் தூண்டியது என்ற மறைமுகப் பங்களிப்பும் எத்தனையோ பேரை வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்ற வெகுஜன‌ மக்களிடையேயான‌ மொழிப் பரவலாக்கப் பங்களிப்புமே அவரது முக்கியத்துவம்.

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்