இறுதி இரவு - முன்னுரை
புறக்கணிக்கப்பட்ட பிரதிகள்
என் முதல் சிறுகதையை 2001ல் எழுதிய போது என் வயது பதினாறு. விஞ்ஞானப் புனைவு. தலைப்பு 'நியூட்டனின் மூன்றாம் விதி'. அதற்கும் முன்பு 1998 வாக்கில் 'ப்ரியமுடன் கொலைகாரன்' என்ற தலைப்பில் ராஜேஷ் குமார் பாதிப்பில் நாவல் எழுதினேன். அப்போது நான் பள்ளி மாணவன். எங்கள் மேல் வீட்டில் குடியிருந்த, கல்லூரி செல்லும் பிரேமா பிந்து அக்காவிடம் படிக்கத் தந்தேன். வார இதழ்கள் தாண்டி ஓரளவு வாசிப்புப் பழக்கம் கொண்ட அவருக்கு அந்நாவல் பிடித்திருந்தது.
“கதையில் நிறையக் கொலை பண்ணி இருக்கே!” என்றார். அதில் இலக்கியத்தையும் சேர்த்துச் சொன்னாரா என்றறியேன். என் முதல் வாசகி அவரே. தீவிர பாலகுமாரன் வாசகியான என் தமிழாசிரியை தனலெட்சுமிக்கு அக்கதை அத்தனை உவப்பில்லை.
நினைவாய், கைப்பிரதியாய் எஞ்சியுள்ள அக்கதைகளை இன்னும் பிரசுரிக்கவில்லை.
பின் 2009ல்தான் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளை எழுதத் தொடங்கினேன்.
‘E=mc
பின் முதலிரண்டை முறையே பா.ராகவன், மருதன் தமிழ்பேப்பரில் வெளியிட்டனர்.
காத்திருப்புகள் ஏதுமின்றி வெளியான கதை ‘மயிரு’ தான். 2012ல் குமுதம் இதழில் ‘ஹேர் ஸ்டைல்!’ என்ற பெயரில் தளவாய் சுந்தரம் முயற்சியில் வெளியானது.
இதெல்லாம் ஐந்தாண்டுகளுக்கு முந்தைய கதை. இடைப்பட்ட காலத்தில் எனது அச்சுப் பதற்றம் வெகுவாய்க் குறைந்து விட்டது. எழுதி அதை நான் மட்டுமே வாசித்துக் கொண்டாலும் எழுத்துதான் என்ற மகத்தான புரிதல் கைகூடி விட்டது.
வெகுஜன இதழ்களுக்கான தேவை என்பது முற்றிலும் வேறு என உணர்கிறேன். அவர்கள் எதிர்நோக்கும் நட்சத்திர அந்தஸ்து எனக்கு எப்போதும் இருந்ததில்லை. அச்சு ஊடகங்களில் எனக்குப் பெரிதாய் நண்பர்களும் இல்லை. அரிதாய் அமையும் சிலரையும் தக்க வைக்கப் பிரயத்தனங்கள் செய்வதில்லை. அதனால் என் கதைகள் அங்கு அனுப்பப்பட்டாலும் அவை சிரத்தை எடுத்து வாசிக்கப்படும் சாத்தியம் குறைவு.
2014ல் ஜெயமோகன் தன் வலைதளத்தில் ‘வெண்முரசு’ எழுதத் தொடங்கியது எனக்கு ஒரு முக்கியத் திறப்பாக அமைந்தது. சமகாலத் தமிழின் முதன்மை எழுத்தாளன் தன் வாழ்வின் ஆகப்பெரும் படைப்பாகக் கருதும் ஒன்றை இணையதளத்தில் எழுதுகிறார். கிட்டத்தட்ட தன் கதைகள் அனைத்தையும் வலைமனையில் தான் வெளியிடுகிறார். அதையொட்டியே அச்சு இதழ்களைச் சார்ந்திருக்கத் தேவையில்லை என்ற ஞானம் கிட்டியது. புறக்கணிப்பவரைப் புறக்கணிக்கும் குழந்தைத்தனமான sour grapes syndrome-ஆக அதைப் பார்க்கலாம் என்றாலும் அது பிரதானமாய் ஒரு நிம்மதியை அளித்தது.
எழுதுவதைப் பற்றி மட்டும் சிந்தித்தால் போதும், வெளியிட இணையம் இருக்கிறது என்பது ஆசுவாசமாய் இருந்தது. எழுத்துக்கு கட்டுப்பாடு வைக்க வேண்டியதில்லை.
பிறகு இன்று வரை என் எந்தக் கதையையும் எந்த அச்சிதழுக்கும் அனுப்பவில்லை.
இப்படியாகத் தீர்மானித்த பின் ஒரு குறும்படத்தின் தொடர்ச்சியாய் அகல்யா-2 என்ற சிறுகதையை எழுதிப் பார்த்தேன். அதற்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. பிறகு கடந்த 10 மாதங்களில் மட்டும் ஆறு சிறுகதைகள் எழுதினேன். 2016 அவ்வகையில் இதுவரையிலான என் ஆயுட்காலத்தில் மிகுந்த படைப்பூக்க மனநிலை கொண்ட ஆண்டாக அமைந்தது என்பேன். அந்நினைப்பே உற்சாகமாய் இருக்கிறது.
முதன்மையாய் கூகுளின் ப்ளாகர்.காமிற்கு நன்றிசெலுத்தக் கடமைப்பட்டவனாகிறேன்.
நான் எழுதத் தொடங்கிய காலத்தில் - அதாவது சுமார் இருபது ஆண்டுகள் முன் - இதெல்லாம் சாத்தியமே இல்லை. எழுதிப் பத்திரிக்கைக்கு அனுப்பி வைத்து விட்டு நாட்கணக்கில், வாரக் கணக்கில், மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும். பதில் கூட சில சமயம் வராது. பத்திரிக்கை, புத்தகம் தவிர்த்து வேறெந்த வழியிலும் வாசகரை அடையவே முடியாது. அதற்கெல்லாம் வலைதளங்கள் முற்றுப் புள்ளி வைத்தன.
இதிலுள்ள குறைகளையும் நாம் மறுக்க முடியாது. இணையத்தைப் பயன்படுத்தி வாசிப்பவர்கள் மொத்த ஜனத்தொகையில் மீச்சிறு பகுதி. இன்றைய தேதிக்கு ஐந்து விழுக்காடு இருந்தால் அதிகம். எனில் இதில் எழுதுவது அவர்களை உத்தேசித்து மட்டுமே. மீதமுள்ளவர்கட்கு இதுபோல் நூலாக்கத்தின் போது தான் சென்றடையும்.
ஆனால் மற்றோரைச் சார்ந்து காத்திருப்பதற்கு இந்நிலை மேலெனத் தோன்றுகிறது.
தவிர, இது அமேஸான் கிண்டிலில் தமிழ் நூல்கள் வரத் தொடங்கி விட்ட காலம். சாதாரணர்களிடையே ஸ்மார்ட்ஃபோன்கள் புழக்கம் சஜகமாகி விட்டது. அதனால் இணையத்தின் வழி தமிழ் வாசிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாய்ப் பெருகும்.
*
இச்சிறுகதைத்தொகுதியின் தலைப்புக்கதையான ‘இறுதி இரவு’ அதன் அதிர்ச்சிக்குரிய உள்ளடக்கம் காரணமாகவும், ஜெயமோகன் தன் தளத்தில் பகிர்ந்ததன் காரணமாகவும் ஏராளமான புதிய வாசகர்களைப் பெற்றுத் தந்தது. அவ்வப்போது ‘இறுதி இரவு’ கதை எழுதியது நீங்கள் தானா? என்ற கேள்வியுடன் உரையாடலைத் துவக்குபவர்களைச் சந்திக்கிறேன். யார் யார் மூலமாகவோ அக்கதைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
பலரிடமும் நான் எதிர்கொண்ட கேள்வி அதில் சொல்லப்பட்டுள்ள சடங்கு உண்மை தானா என்பது. அதற்கான பதில் எனக்குத் தெரியாது என்பதே. தேவநேயப் பாவாணர் தன் திருக்குறள் உரையில் ‘பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் / ஏதில் பிணந்தழீஇ அற்று’ என்ற 913வது குறளை விளக்குகையில் 1792 முதல் 1823 வரை தென்னாட்டில் வாழ்ந்த பிரெஞ்சுப் பாதிரியார் அப்பர் தூபாயிசு எழுதிய 'இந்துப் பழக்க வழக்கங்களும் சடங்குகளும்' நூலிலிருந்து ஒரு மேற்கோள் காட்டுகிறார் -
“…பெண்கள் வழக்கமாகப் பூப்படையுமுன் மணஞ் செய்து வைக்கப்படுகின்றனர்; ஆயின், பூப்புக்குறிகள் வெளிப்படையாகத் தோன்றும் பருவத்தையடைந்த பெண் ஆடவனொடு கூடுமுன் இறக்க நேரின், அவள் சவவுடம்பைப் பேய்த்தன்மையான புணர்ச்சிக்குட் படுத்த வேண்டுமென்பது கண்டிப்பான குலமரபாம். இதன் பொருட்டு அப்பெண்ணின் பெற்றோர் அத்தகைய அருவருப்பான மணவகையை முற்றுவித்தற்கு இசையும் ஒரு வெங்கப் பயலைப் பணப்பரிசு கொடுத்து அமர்த்த வேண்டியுள்ளது…”
இதுவே ஆரம்பப்பொறி. அதன் மெய்த்தன்மை பற்றி எல்லாம் அக்கறைப்படவில்லை. அப்படி இருந்தால் என்ன நிகழும் என்பதை என் கற்பனையில் நிகழ்த்திப் பார்த்தேன்.
மூவர் ‘இறுதி இரவு’ கதையைக் குறும்படமாக்க அனுமதி கோரினர். அதில் இருவர் அதற்குத் திரைக்கதை அமைத்து வேலையைத் துவக்கினார்கள். இப்போது ஒருவர் அதைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அது ஓர் அடையாளமாய் ஆகிப் போய் விட்ட காரணத்தாலேயே இத்தொகுதிக்கு அதைப் பெயராக்கத் தீர்மானித்தேன்.
தவிர, முதலிரவு போலவே இறுதி இரவும் ஒருவருக்கு முக்கியமானது அல்லவா!
*
சுந்தர ராமசாமி எனக்குப் பிடித்தமான சிறுகதை எழுத்தாளர். என் எழுத்தறையில் மாட்டி வைத்திருக்கும் மூன்று எழுத்தாளர் புகைப்படங்களுள் அவருடையதும் ஒன்று. ஓர் எழுத்தாளர் மறைவுக்கு நான் மிக வருந்தியது எனில் அது அவருக்குத் தான். அப்போது கல்லூரி வாசித்துக் கொண்டிருந்தேன். சில நாட்களுக்கு அப்பாதிப்பிலிருந்து விடுபடவில்லை. (பிற்பாடு சுஜாதாவின் மறைவின் போது கூட பக்குவம் என்ற பெயரில் கொஞ்சம் மனம் சமனப்பட்டு விட்டேன் எனத் தோன்றுகிறது.) புனைவு வகைமையில் வெளியாகும் என் முதல் நூலை அவருக்கு அர்ப்பணிப்பது மகிழ்ச்சி.
என் ஆதர்சக்கவி மனுஷ்ய புத்திரன் இதைப்பதிப்பிக்கிறார். அவருக்கு என் ப்ரியங்கள். அச்சுப்பிரதியை மிக அழகாக ஆக்கி வெளியிடும் உயிர்மை குழுவினருக்கு வந்தனம்.
இவற்றில் பெரும்பாலான கதைகளுக்குப் பாராட்டுக்களை மட்டுமே எதிர்வினையாக நல்கிய ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு என் அன்பு. புகழுரைகள் கடந்த சமநிலையையே விரும்புகிறேன் என்றாலும் அதன் சொகுசை மறுப்பதற்கில்லை.
‘அரட்டைகேர்ள்’ சௌம்யா இக்கதைகளை உற்சாகமாய்ப் பரப்புரை செய்தார். நன்றி.
புனைவு எழுதினால் மட்டுமே எழுத்தாளன் என்று நம்பும் என் நெடுங்கால நண்பன் இரா. இராஜராஜனுக்கு இத்தொகுப்பு மகிழ்வளிக்கும் என்றறிவேன். என் எழுத்துக்கள் எதையும் லேசில் பாராட்டாதவனான அவனே இதில் சில கதைகளைச் சிலாகித்தான். எழுதிக் கொண்டிருக்கும் இந்த முன்னுரை வரையிலும் கூட அவன் பாதிப்பு உண்டு.
எழுத்தாளன் குடும்பத்தாருக்கு எப்போதும் எதிரியே. என்னைச் சகித்து வாழும் என் அம்மா, மனைவி, மகன்களுக்கு நித்யமாய் நன்றிக்கடன் பட்டவன். அவர்தம் ஆதரவு இல்லை எனில் இதில் ஒற்றை எழுத்தைக் கூட நான் மேற்கொண்டிருக்க முடியாது.
*
தொகுப்பை வாசித்த ஒரு படைப்பாளி “இக்கதைகள் நெடுகிலும் புத்திசாலித்தனமான அவதானிப்பும், விவரிப்பு மொழியும் இருக்கிறது. ஆனால் சிற்றிதழ் இலக்கியத்தின் தீவிரத்தன்மைக்கு சற்று குறைவாகவும், வணிக இதழ்களின் ஜனரஞ்சகத் தன்மைக்கு சற்று மேலாகவும் ஒரு நடுவாந்திரத் தன்மையில் அமைந்துள்ளன.” என்கிறார்.
‘இறுதி இரவு’ சிறுகதையை விரிவாய்ப் பிரித்து மேய்ந்து ஜெயமோகன் ஒரு கட்டுரை எழுதினார். அவர் அதில் சொன்னதன் சாரமும் இந்த இருமை நிலை தான். யுவன் சந்திரசேகருக்கு அகல்யா-2 சிறுகதையை தயக்கத்துடன் அனுப்பி வைத்த போதும் “உன் முன்னால் இரு பாதைகள் இருக்கின்றன, எது வேண்டுமென நீயே தீர்மானிக்க வேண்டும்” என்றார். ஒருவகையில் இரட்டைச்சவாரிதான் செய்து கொண்டிருக்கிறேன்!
அதனாலேயே ஒரு விநோதமான இடத்தில் இருக்கிறேன். இந்தப் பக்கம் வெகுஜன எழுத்து என்றும் ஏற்க மறுக்கிறார்கள். அந்தப் பக்கம் இலக்கிய எழுத்தாகவும் ஒப்பத் தயங்குகிறார்கள். அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இப்போதைய என் மன நிலைக்கு என்ன படைக்கத் தோன்றுகிறதோ, எதை ஆசையாய் ஆக்க முடிகிறதோ அதையே எழுதிக் கொண்டிருக்கிறேன். வலிந்து வேடந்தரித்து இந்த லேபிளையோ அந்த லேபிளையோ ஒட்டிக் கொள்ள அவசரப்படவில்லை. இதற்கு வாசகத் திரள் கணிசமாய்க் கிட்டுகிறது என இவ்விடத்திலேயே தேங்கி விடவும் எண்ணவில்லை.
அதுவாய் நிகழட்டும். என் வருங்கால அனுபவமும் வாசிப்பும் அதை நிகழ்த்தட்டும்.
இப்போது இந்தப் பதினோரு கதைகளையும் மீள்வாசித்துப் பார்க்கையில் திருப்தியாக, மகிழ்ச்சியாக உணர்கிறேன். இலக்கிய அளவுகோல்களின்படி இவற்றின் இடம் குறித்த மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் எனக்கு இது முக்கியமான தொடக்கம்.
“வலுவான சிறுகதைகளை அவர் எழுத முடியும்” என என் கதை பற்றிய விமர்சனக் கட்டுரையை முடித்திருந்தார் ஜெயமோகன். அந்நம்பிக்கையைக் காப்பாற்ற முடியும் என்ற துணிபை எனக்கு இத்தொகுப்பு நல்குகிறது. அதன் கரம் பற்றி மேலும் நடக்க விழைகிறேன். மற்றபடி, காலம் இதன் இடத்தையும் இருப்பையும் தீர்மானிக்கட்டும்.
முன்னோடிகள் விட்ட இடத்திலிருந்து அங்குலமேனும் நான் நகர்ந்திருந்தால் நல்லது!
*
சி.சரவணகார்த்திகேயன்
பெங்களூரு
டிசம்பர் 4, 2016
Comments
Thank you.
உனது மேற்கண்ட பதிவில் அச்சு இதழ்களைச் சார்ந்திராமல் வலைமனையில் பதிவிடும் வழக்கத்தை பற்றி எழுதி இருக்கிறாய்.
Blockchain கொண்டு படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை வெளியிட்டால் என்ன என்று தோன்றிற்று. இசைக் கலைஞர்கள் ஏற்கனவே இதனை உபயோகப்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். அதற்கான மின் முகவரியை மேலே கொடுத்துள்ளேன். நீ Bitcoin பற்றி முன்னொரு முறை எழுதி இருந்தாய். முற்போக்காக நீ இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பார்த்தால் என்ன என்று தோன்றுகிறது. யோசித்துப் பார்.