அல்வா கொடுப்பவன்


சுரேஷ் எனக்குக் கல்லூரிச் சினேக‌ம். கும்பகோணத்துக்காரன். நாங்கள் இருவருமே கணிப்பொறியியல் துறை. விடுதியில் கடைசி ஆண்டுகளில் அவன் எனக்குப் பக்கத்து அறை. அப்போது நாங்கள் எல்லாம் த்ரிஷா, அசின், ஜோதிகா எனப் பார்த்திருக்க அவன் மட்டும் சினேகா ரசிகன். அப்பருவத்தின் வசந்தமான சில்லறை மன‌க்குறும்புகள் போக அமைதியின் அகராதியாய் இருந்தவன். இப்போதும் பெரிய மாற்றம் இராது என்று தான் நினைக்கிறேன். படிப்பின் மீதான அக்கறையும் அதன் நீட்சியான உழைப்பும் அவனிடம் இருந்தது. பொறியியல் இறுதியாண்டு ப்ராஜெக்ட் நாங்கள் இணைந்து செய்தோம்.

அது E-Governance தொடர்புடையது. பல‌ அரசுச் சேவைகளை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தி மற்றுமொரு சேவையை அளிக்க உதவும் திட்டம். உதாரணமாய் பாஸ்போர்ட் எடுக்க ஒருவரது இருப்பிடச் சான்றும் வேண்டும் அதோடு காவல் துறைச் சான்றும் வேண்டும். இரண்டும் வெவ்வேறு துறைகள்; அதனால் வெவ்வேறு முறையில் சேமித்திருப்பார்கள். அவற்றை இணைத்து பாஸ்போர்ட் வாங்குவதை எந்தச் சிக்கலுமின்றி முடிக்க இத்திட்டம் உதவும். இன்னமும் அது நடைமுறையில் சாத்தியமாகவில்லை. சேர்ந்து செய்தோம் எனச் சொல்லிக் கொண்டாலும் அவன் பங்களிப்பு தான் அதில் கணிச‌ம். கோர்வையான சொல்வன்மையும் கொஞ்சம் தொழில்நுட்பப் புரிதலும் எனக்கிருந்த காரணத்தால் வைவா பேனலில் இருந்தவர்களை ப்ராஜெக்டில் அவனது பங்களிப்பைச் சந்தேகிக்க வைக்குமளவு பேசிப் பிழைக்க முடிந்தது.

எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் அந்த ப்ராஜெக்ட் எனக்கு எத்தனை தூரம் எனக்குத் தொழில்ரீதியாக உதவிகரமாக இருந்தது என்று உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. ஆனால் சுரேஷுக்கு நிச்சயம் இப்போது உதவியாய் இருக்கும்.

ஆம். அவன் இப்போது ஒரு வலைதளம் தொடங்கி இருக்கிறான் - www.karaikalhalwa.com. ஆன்லைனில் அல்வா விற்க!


"இன்னும் எல்லோருக்கும் அல்வா கொடுப்பதை நீ விடலையா?" என்ற கேலியுடன் நான் எதிர்கொண்டேன் என்றாலும் அது அவனளவிலேனும் முக்கியமான முயற்சி என்று புரிந்தே இருந்தேன். இந்தியாவில் இது மின் வணிகத்தின் காலம். அமேஸான் போன்ற தளங்கள் இன்று நம் தினசரிகளில் இரண்டறக் கலந்து நாளாகிறது. இத்தருணத்தில் அவன் தன் பிராந்தியத்தின் சிறப்பான தின்பண்டங்களை ஆன்லைனில் விற்கத் தொடங்கி இருப்பது வெற்றிகரமானதாகவே இருக்கும் என நம்புகிறேன். இத்தகைய முயற்சி புதிதல்ல; அல்வாகடை.காம் போன்றவை கடந்த‌ ஓரிரு ஆண்டுகளாக இயங்கித் தான் வருகின்றன. ஆனால் இன்னும் ஏதும் பெரும் வெற்றியைக் குவிக்கவில்லை. எல்லாமே சாதாரண வியாபாரத்துடன் இயங்கி வருகின்றன. கொஞ்சம் யோசித்து மெனக்கெட்டால் அந்தக் காலி இடத்தில் நம்மாள் கடை போட்டு விடலாம்.

எங்கள் கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தவர்களில் பலர் பின் ஐஐஎம்களில் படித்து விட்டு அல்லது பெரும் ஐடி நிறுவனங்களில் பணியாற்றி விட்டு தற்போது மென்பொருள்சார் சுயதொழில் தொடங்கி நடத்தி வருகிறார்கள் என்றாலும் நான் நெருங்கிப் பார்த்த நண்பன் ஒருவனும் அவ்வழியைத் தேர்ந்திருப்பதைப் பார்க்க மகிழ்வாக இருக்கிறது. (அப்போது தனித்து வியாபாரம் நடத்துவதற்குரிய‌ சாயைகள் ஏதும் அவனிடம் தென்படவில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.)

போன வாரம் நான் அவன் சிபாரிசின் பேரில் தம்ரூட் அல்வா அவன் தளத்தில் ஆர்டர் செய்தேன். (பருத்தி அல்வா தான் நான் வாங்க விரும்பினேன். அது வாரம் ஒரு முறை தான் செய்வார்களாம். அதனால் இதை வாங்கச் சொன்னான்.) அது எளிமையான மின் வணிகத் தளம் தான். எந்தப் பிரச்சனையும் இன்றி க்ரெடிட் கார்ட் பயன்படுத்தி ஆர்டர் செய்ய முடிந்தது. தளத்தில் இன்னும் சில தகவல்கள் சேர்த்துச் செறிவாக்கலாம். பயன்பாட்டு அடிப்படையிலும் மேம்படுத்த சில விஷயங்கள் தளத்தில் இருக்கின்றன. போகப் போகச் செய்யக்கூடும். ஆனால் இப்போதும் தொந்தரவாய் ஏதுமில்லை.

இன்னொரு விஷயம் இதில் விற்கும் இனிப்புகளின் பட்டியலை அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் தொடர் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க முடியும். இப்போதே அதை ஓரளவு செய்கிறான் என்றே நினைக்கிறேன். இப்போது கூட திருவையாறு அசோகா அல்வா என்று புதிதாய் ஏதோ அறிமுகம் செய்திருக்கிறான். ஏற்கனவே பீட்ரூட் அல்வா, கோதுமை அல்வா, குலாப் ஜாமூன் என இனிப்புகள் பட்டியல் ஓரளவு விரிந்தே இருக்கிறது.

ஆர்டர் செய்த இரண்டாவது நாள் ஈரடுக்கு பாலிதீன் கவருள் அடைக்கப்பட்ட அரைக் கிலோ தம்ரூட் அல்வா காற்றுப் புகாத ப்ளாஸ்டிக் பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டு அதன் மீது மேலும் அரை டஜன் ரப்பர் பேண்ட் சுற்றப்பட்ட இன்னொரு பாலீதீன் கவர் எனப் பாதுகாப்பான பார்சலாகவே வந்து சேர்ந்தது. உணவுப் பண்டங்களைத் தபாலில் விற்பதில் சிந்தாமல் சிதறாமல் அனுப்புவதே பெருஞ்சவால். (வடிவேலு ஒரு படத்தில் கொரியர் மூலம் அனுப்படும் வத்தக்குழம்புப் பார்சலின் மீது சீல் குத்தும் போது உடைந்து தெறிக்கும் காட்சியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். - "கும்பகோணத்திலிருந்து வத்தக்குழம்பு மெட்ராஸ் போகுதா?") இத்தனைக்கும் பேக்கேஜ் செலவோ தபால் செலவோ ஏதும் வாங்குவதில்லை.

கொசுறாய் கொஞ்சம் மிக்ஸரும் அனுப்பி இருந்தான். குமுதம் இதழ் இலவசமாய் லைஃப் இணைப்பு கொடுப்பது போல!

நான் வாங்கிய தம்ரூட் அல்வா நல்ல சுவை. எனக்கு மித இனிப்புப் பண்டங்களே பிடித்தமானவை. தம்ரூட் அல்வா மிக மென்மையாக, இடையிடையே லேசான நறுநறுப்புடன் (ரவையா?), மித இனிப்பாய்ச் சுவைத்தது. நாவில் வைத்தால் கரையவில்லை எனினும் வழுக்கிக் கொண்டு தொண்டையில் இறங்குகிறது. அல்வா அரைக் கிலோ இருநூற்றுச் சொச்சம் ரூபாய். பொதுவாய் திருநெல்வேலி இருட்டுக் கடை போன்றவற்றில் வாங்கும் அல்வாவோடு ஒப்பிடுகையில் இது சற்று விலை அதிகம் என்றாலும் அடையார் ஆனந்த பவன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஆனந்த் ஸ்வீட்ஸ், அகர்வால் ஸ்வீட்ஸ் போன்ற பேரங்காடிகளில் எதுவென்றாலும் கிலோ இனிப்பு 500 ரூபாயிலிருந்து தான் தொடங்குகிறது. அவ்வகையில் இது கொடுப்பதற்குகந்த விலையே. தவிர சுதந்திர தினம், கோகுலாஷ்டமி, விநாயக சதுர்த்தி எனச் சமயங்களில் தள்ளுபடியும் கொடுக்கிறான். அனைத்திற்கும் மேல் இது உங்கள் வீடு தேடி இலவசமாய், பாதுகாப்பாய், சீக்கிரமாய் வந்து சேர்கிறது.

நீங்கள் இனிப்புப் பிரியரெனில் இத்தளத்தை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். அவன் இந்த முயற்சியில் பெருவெற்றி பெற என் வாழ்த்துக்கள். (பருத்தி அல்வா போட்டால் சொல்லும் படி இதன் மூலம் அவனைக் கேட்டுக் கொள்கிறேன்.)

*

Comments

Anonymous said…
இடையிடையே லேசான நறுநறுப்புடன் (ரவையா?) ~~~ கசகசாவாக இருக்கும் ரைட்டர் !! sudha
ILANGUMARAN said…
Wavvvvvvv!! நாகூர் ஸ்விட்ஸ்...

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்