மாதொருபாகன் TRILOGY : பிரியத்தின் துன்பியல்
(மாதொருபாகன், ஆலவாயன் & அர்த்தநாரி நாவல்களை முன்வைத்து)
கற்பில் ஒழுகியதைவிட
களவில் ஒழுகியதில்
கண்ணீர் ஒழுகியது.
- மகுடேசுவரன் (காமக்கடும்புனல் தொகுப்பிலிருந்து)
வாசித்தவரையில் பெருமாள்முருகனின் நாவல்களுள் எனக்குப் பிடித்தமானது கங்கணம் தான். ஆனால் இன்று அவர் உலகப் புகழ் (?!) பெறக் காரணமானது மாதொருபாகன் என்பதாலும், எழுத்தாளர் பெருமாள் முருகன் மரித்து விட்டான் என அவரே அறிவிப்பதற்கு சற்று முன் மாதொருபாகனின் தொடர்ச்சியாய் அவரெழுதியவை அர்த்தநாரி, ஆலவாயன் என்பதாலும் அவற்றைப் பற்றிய கருத்துப் பதியத் தேர்ந்தேன்.
டிசம்பர் 2010ல் மாதொருபாகன் வெளியான உடனேயே அதை வாசித்திருந்தேன். அப்போது அவரது கங்கணம் நாவலும் பீக்கதைகள் சிறுகதைத் தொகுப்பும் காலச்சுவடு இதழ்களில் வெளியான சில படைப்புகளையும் கடந்து வந்திருந்தேன். சமகாலத் தமிழ் இலக்கியத்தில் எனக்கு மிக உவப்பான மூன்று படைப்பாளிகளுள் ஒருவராக ஆகிப் போயிருந்தார் (இப்போதும் அப்படியே!). பணி நிமித்தமும், எழுத்து வேலைகள் நிமித்தமும் என் வாசிப்பு அருகியிருந்தது என்றாலும் உடனடி வாசிப்புக்கு அதுவே காரணம்.
கங்கணம் பெருமாள்முருகனின் மாஸ்டர்பீஸ் என நான் கருதுவதால் (யோசித்துப் பார்த்தால் மயிரு என்ற என் சிறுகதையில் கங்கணம் நாவலின் வலுவான பாதிப்பு இருப்பதை மிகத் தாமதமாக இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கையில் உணர்கிறேன்.) அதனோடு மாதொருபாகனை ஒப்பிட முடியாது என்றாலும் மாதொருபாகன் நாவலும் எனக்குப் பிடித்தமானதே. பிற்பாடு ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் மெல்லினம் இதழில் (விகடன் பாணியில்) சினிமா, இலக்கியம், தொலைக்காட்சி என பல்துறைகளில் விருதுகள் தேர்ந்தெடுக்கக் கேட்ட போது சிறந்த நாவல் என மாதொருபாகனை அறிவித்திருந்தேன்.
*
பெருமாள்முருகனின் நாவல்கள் சம்பவங்களாலும் உரையாடல்களாலும் ஆனவை. அதாவது நாவலில் ஒட்டுமொத்தமாய் கதையின் நகர்ச்சி என்பது மிகக் குறைவாகவே இருக்கும், மாறாய் நாவல் எடுத்துக் கொண்ட சிக்கல் சார்ந்த சம்பவங்கள் மற்றும் உரையாடல்கள் வழி பாத்திரங்களின் மனவோட்டம் சொல்லப்படும். அது அவரது வலுவான தனித்துவம். அதனால் பெருமாள்முருகனின் ஏதேனும் ஒரு நாவலை எடுத்துக் கொண்டு அதன் கதை என்ன என யாரேனும் கேட்டால் பதிலளிப்பது சிரமமே.
போலவே நாவலின் போக்கு நேர்க்கோட்டிலும் அமையாது. ஒரு சம்பவத்தில் தொடங்கி முன் பின்னாய் பிற சம்பவங்களைச் சொல்லிச் செல்வதன் மூலம் கதை குறித்த சித்திரத்தை மெல்ல நமக்கு அளிப்பார்.
நாவலில் கதை நடக்கும் காலகட்டத்தையும் ஓரிரு வரி வசனங்களின் வழி பூடகமாகவே குறிப்பிட்டுக் கடந்து விடுவார். ஆனால் நடைபெறும் இடம், பாத்திரங்களின் சாதி மட்டும் உள்ளங்கை நெல்லிக்கனி. (அது தான் மாதொருபாகன் பிரச்சனைக்கு முழுமுதற் காரணம். அதனாலேயே மாதொருபாகன் ஒரு சர்ச்சையாக மட்டும் உருவம் கொண்டிருந்த காலகட்டத்தில் வெளியான அர்த்தநாரி, ஆலவாயன் நாவல்களின் முன்னுரையில் “அய்யா, சாமிகளே, தங்கள் சமூகத்திற்கு ஒரு விண்ணப்பம். இந்த நாவல் என்றல்ல; என் படைப்புகள், எழுத்துக்கள் எல்லாவற்றின் களமும் தமிழகத்தில் உள்ள ஊர்கள கிடையாது. ஏன் இந்த உலகத்தைப் பற்றியே நான் எழுதவில்லை. நான் எழுதுவது எல்லாம் அசுர லோகத்தைப் பற்றித்தான். என் எழுத்தில் வரும் மாந்தர்கள் எல்லாரும் அசுரர்கள். அவர்கள் எல்லாரும் அசுர சாதிப் பிரிவினர். அவர்கள் பேசுவது அசுர மொழி. இந்த லோகத்தில் வசிக்கும் யாரையாவது குறிப்பதாகவோ எந்தச் சாதியையாவது இடத்தையாவது சுட்டுவதாகவோ தோன்றினால் அது மாயை. ஆகவே தயவு செய்து மாயையிலிருந்து மீண்டு விடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என விரக்தியுடன் சொல்கிறார்.)
மாதொருபாகன், ஆலவாயன், அர்த்தநாரி நாவல்களின் கதை இக்கட்டுரையில் வெளிப்படக்கூடும். இவை சினிமா அல்ல; த்ரில்லர் நாவல் அல்ல. சீரியஸ் இலக்கியத்தில் நாவல் என்பது அதன் கதை மட்டுமல்ல என நான் திடமாக நம்புகிறேன். (குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலை எழுதி முடித்த போது சுந்தர ராமசாமியிடம் அதன் கதை என்ன என்று ஒரு நண்பர் கேட்கிறார். அதற்கு சுரா “இது நாவல் அல்லவா!” எனப் பதில் சொல்கிறார்.) அதனால் இதை spoiler ஆகக் கொள்ள முடியாது என நினைக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் பெருமாள்முருகனே ஓரளவு தன் முன்னுரைகளில் கதையைச் சொல்லி விடுகிறார். அதனால் நான் பேசும் விஷயங்களுக்கு அவசியம் என்கிற அளவில் கதையைச் சொல்லி இருக்கிறேன்.
திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாத காளி - பொன்னா என்ற தம்பதியரின் கதை தான் மாதொருபாகன். கதை 1940களில் நடைபெறுகிறது. விவசாயத்தைப் பிரதானத் தொழிலாகக் கொண்டு நாவலின் பாத்திரங்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள். குழந்தைப் பேறின்மை என்ற விஷயம் அந்தத் தம்பதியருக்கு எத்தகைய எதிர்மறை அனுபவங்களை உறவினர், சுற்றத்தார் மற்றும் ஊரார் மத்தியில் அளிக்கிறது என்பது தான் நாவலின் சாரம். எப்படி கங்கணம் திருமணமாகாத முதிர்காளை ஒருவனின் மனவியலைப் பதிவு செய்ததோ அதே போல் இந்நாவல் வாரிசு இல்லாததால் வறடன், மலடி எனப் புறம் பேசப்படும் எளிய கணவன் - மனைவியின் அகச்சிக்கல்களை விரிவாய்த் தொகுத்துக் கொள்கிறது.
காளியும் பொன்னாவும் மிக அன்னியோன்யமான தம்பதி. எப்போதும் இழைந்தபடியே இருப்பவர்கள். திருமணமாகிப் பல்லாண்டுகளுக்குப் பிறகும் இருவருமே பரஸ்பரம் மிக மயங்கிக் கிடக்கிறார்கள். குழந்தையின்மையே அவர்கள் இப்படி பின்னிப் பிணைந்து கிடக்கக் காரணம் என காளியின் தாயே கண் போடுமளவு அவர்களின் நெருக்கமும், பிரியமும் இருக்கிறது. ஒரே குறை பிள்ளையின்மை தான்.
அவ்வூரின் தேர்த் திருவிழாவின் பதினான்காம் நாள் கலாசாரத் தளைகள் உடைந்து ஆணும் பெண்ணும் மலையில், காடுகளில் கூடிக் கிடக்கும் இரவு. முப்பது வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்களும், மீசை முளைத்திடும் இளம் பருவ ஆண்களும் இதில் பெரும்பாலும் ஈடுபடுகிறார்கள். குறிப்பாய் குழந்தைப் பேறில்லாத பெண்கள் பிள்ளை வரம் வேண்டி இதில் கலந்து கொள்கிறார்கள். அதன் பலனாய் பிறக்கும் குழந்தை ‘சாமி புள்ள’ என்றறியப்படுகிறது. நீண்ட நாளாய் மகவில்லை என்பதால் பொன்னாவை இதற்கு அனுப்பித் தாய்மையடைய வைக்கும் யோசனை இரு பக்கத்து குடும்பத்தாராலும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால் காளி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. காளி சம்மதித்து விட்டான் என இரு குடும்பமும் பொய் சொல்லி அவளை பதினான்காம் நாள் இரவில் திருவிழாவுக்கு அனுப்பி வைத்து விடுகிறது. இதை அறிய வரும் காளி தூக்கு மாட்டிக் கொள்கிறான் என்பது போல் மாதொருபாகன் நாவல் முடிகிறது. "நீ தவிச்சுக் கெடக்கோனும்டி, ஏமாத்திட்டியேடி தேவ்டியா முண்ட..." என்பதே இதில் அவனது கடைசி நினைவு.
தூக்குப் போட்டதில் காளி இறந்திருந்தால் என்னவாகும் என்பது ஆலவாயன். பிழைத்திருந்தால் எப்படித் தொடர்ந்திருக்கும் என்பது அர்த்தநாரி. நானறிந்த வரை இப்படி Sliding Doors (அல்லது பெயர்த்துச் சொன்னால் 12B, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்) தனமான ஒரு நாவல் தமிழில் இது மட்டுமே.
தமிழில் வெகுஜன நாவல்களில் தொடர்ச்சி எழுதுவதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. பாகுபலி திரைப்படம் போல் போல் பெரிய கதைகளை உடைத்து பகுதியாகச் சொன்ன கல்கி, சாண்டில்யன், மேலும் சில சரித்திரக் கதாசிரியர்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் ஸ்ரீவேணுகோபாலன் நீ - நான் - நிலா நாவலுக்குத் தொடர்ச்சி எழுதினார். சுஜாதா பிரிவோம் சந்திப்போம் நாவலுக்குத் தொடர்ச்சி எழுதினார்; என் இனிய இயந்திரா நாவலுக்குத் தொடர்ச்சியாய் மீண்டும் ஜீனோ எழுதினார்; காந்தளூர் வசந்தகுமாரன் கதைக்குத் தொடர்ச்சி எழுத விரும்பினார். இலக்கியங்களிலும் தொடர்ச்சிகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஜெயகாந்தன் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்குத் தொடர்ச்சியாய் கங்கை எங்கே போகிறாள்? எழுதினார். கி.ரா. கோபல்ல கிராமம் நாவலின் தொடர்ச்சியை கோபல்லபுரத்து மக்கள் எழுதினார். ஆனால் இப்படி Conditional தொடர்ச்சி வகைமையை இதுவரை எவரும் முயற்சித்ததில்லை என நினைக்கிறேன்.
ஆசிரியரே குறிப்பிட்டிருப்பது போல் அர்த்தநாரி, ஆலவாயன் நாவல்களை வாசிக்க மாதொருபாகனை வாசித்திருக்க வேண்டியதில்லை தான். மூன்றையுமே தனித்தனி நாவல்களாக வாசிப்பது போல் தான் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப சில பகுதிகள் மூன்று நாவல்களிலுமே திரும்பவும் வருகின்றன. மூன்றையுமே ஒரு சமயத்தில் வாசிக்கப்புகும் ஒருவருக்கு அது repetition என்ற பிம்பத்தை அளிக்கும்.
புத்தக விற்பனை - அதுவும் இலக்கியப் புத்தகங்கள் - என்பது பூனைகள் விற்பனை போல் அரிதானது என்பதால் ஒன்றைப் படிக்காமல் இன்னொன்று புரியாது என்ற தயக்கத்தில் எவரும் வாங்காமல் போய் விடலாகா என்ற வியாபாரரீதி முடிவாய் இருக்கலாம் என்பதால் இதை விடுத்துக் கடக்கத் தயக்கமில்லை.
*
மாதொருபாகன் நாவல் ஒரு பூவரச மரத்தில் தொடங்கி இன்னொரு பூவரச மரத்தில் முடிவது யதேச்சை யானதல்ல என்றே நினைக்கிறேன். அதிலும் முதலாவது மரம் இரண்டாவதன் கிளையை வெட்டி வந்து நட்டு வைக்கப்பட்டதே! வழக்கமான பெருமாள்முருகன் நாவல்களை விடவும் இதன் கதை மிகச் சிறியதே. ஒரே நாளில் முடிகிறது. தேர்த் திருவிழாவுக்கு மாமனார் வீட்டுக்குச் செல்லும் காளி - பொன்னாவின் ஒரு நாள் தான் அது. அதற்கு முந்தைய சம்பவங்கள் அவர்களின் நினைவிலிருந்து மீட்டெடுத்து பிரச்சனையை விரித்துரைக்கிறார். குழந்தையின்மை என்பது ஒரு கொடுங்கனவாய் அக்குடும்பத்தையே துரத்துகிறது.
பிரச்சனை வரும் போது தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொள்வதே நெருப்புக் கோழிகளுக்கும் ஆண்களுக்கும் வழக்கம். வாரிசு இல்லை என்பது பற்றிய கேள்விகள் துளைக்கின்றன என்பதால் காளி தான் உருவாக்கிய தொண்டுபட்டியை விட்டு வெளியே வருவதில்லை. மாறாய் பொன்னா கேலியாய் அவளை நோக்கி எறியப்படும் கேள்விகளை எல்லாம் துடுக்கான பதில்களால் எதிர்கொள்கிறாள்.
இக்குறையைக் காரணம் காட்டி தான் தான் இதற்குக் காரணம் என்று பாவித்து காளிக்கு வேறு மணம் செய்து வைத்து விடுவார்களோ என அஞ்சுகிறாள் பொன்னா. ஆனால் காளி அதற்கு இடம் தருவதில்லை. போலவே காளியிடம் தான் குறை என்ற அடிப்படையில் ஊர் ஆண்கள் சிலர் பொன்னாவுக்கு வலை விரிக்கிறார்கள். அவளும் அவர்களை அண்ட விடுவதில்லை. பரஸ்பரம் அத்தனை காதல் அவர்களுக்கு.
சில ஆண்டுகளுக்கு முன்பே காளியின் தாயும் மாமியாரும் பொன்னாவை 14ம் நாள் திருவிழாவுக்கு அனுப்ப யோசனை சொன்ன போது பொன்னாவும் உனக்கு விருப்பம் எனில் போகிறேன் என்று சொன்னது அவனது மனதை அறுக்கிறது. தான் செத்தால் தான் குழந்தை பிறக்கும் எனச் சொன்னால் அதையும் செய்வாளோ என நினைத்துக் கொள்கிறான் (கடைசியில் அது தான் நடக்கிறது!). அவன் குழந்தை பெறுபவதற்காக அவளை ஒரு கணம் கூட இன்னொருவனுக்கு விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என அழுந்தச் சொல்லப்படுகிறது. அதனால் நாவலின் முடிவில் அவள் திருவிழாவுக்குப் போய் விட்டாள் எனத் தெரிந்ததும் அவனுக்குத் தற்கொலை எண்ணம் உதிப்பதை இயல்பாகவே விளங்கிக் கொள்ள முடிகிறது.
முன்னோர் வெள்ளைக்காரனிடம் ஏமாற்றிப் பத்து ரூபாய் சம்பாதித்து வாங்கிய சொத்தில் வாழும் பாவ வாழ்க்கை என்பது தொடங்கி குழந்தை பிறக்காததுக்கு பல காரணங்களை காளியும் பொன்னாவும் சுற்றத்தாரும் யோசிக்கிறார்கள். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் அவர்களின் குழந்தையின்மை அவர்களுக்கு யாராவது ஒருவரால் நினைவூட்டப்படுகிறது. அப்படி எதுவுமே நிகழவில்லை என்றாலும் அவர்களுக்குள்ளேயே அதைப் பேச வேண்டியதாகி விடுகிறது. அதைச் சரி செய்ய பல வேடிக்கைக்குரிய இரக்கத்துக்குரிய வழிகளை முயல்கிறார்கள். மலைக்கோவிலின் அத்தனை ரகசியக் கடவுள்களிடமும் முறையிடுகிறார்கள். எந்தச் சாமியும் செவி சாய்க்கவில்லை என்றதும் தான் ஆசாமி கை கொடுக்கிறான்.
பதினான்காம் திருவிழாவில் வரும் கூத்து பற்றிய வர்ணனைகளில் பொன்னாவின் மனதை மெல்லக் கலவிக்குத் தயார்படுத்தும் எத்தனங்கள் இருக்கின்றன. சொந்தத் தாயே அவளை பூ வைத்து அலங்காரம் செய்து அனுப்புகிறாள். எல்லா வகையிலும் தான் செய்வது பிழை அல்ல என நம்ப வைக்கும் சூழல் வலுத்திருக்கிறது. அதனாலேயே அவள் இச்செய்கைக்கான உறுத்தல்கள் தாண்டி இதில் இறங்குகிறாள்.
இந்து புராணங்களில் நியோகம் என்ற விஷயம் சொல்லப்படுகிறது. திருமணமாகிக் குழந்தை இல்லாத பெண்ணை இன்னோர் ஆடவன் கூடிக் கருவுறச் செய்தல். இந்தக் கலவிக்கென சில விதிமுறைகள் உண்டு: 1) அந்தப் பெண் பாலியல் இன்பத்துக்காக அன்றி குழந்தை பெறும் நோக்கிலேயே ஈடுபட வேண்டும். 2) அந்த ஆணும் உடல் சுகத்துக்காக அல்லாமல் தர்மத்திற்காகவே ஈடுபட வேண்டும். 3) பிறக்கும் குழந்தை அவள் கணவனின் குழந்தையாகவே கருதப்படும், கூடும் ஆணுடையது அல்ல. 4) அவன் அக்குழந்தையின் மீது எந்த உரிமையோ பிரியமோ கோரலாகா. 5) ஓர் ஆண் மூன்று முறை மட்டுமே இது போல் உதவ முடியும். 6) கலவியில் முன்விளையாட்டு, வாய்ப் புணர்ச்சி, ஆசனப் புணர்ச்சி போன்ற விஷயங்கள் இடம் பெறலாகா. 7) காமச் சிந்தனைகள் தவிர்க்க கலவியின் போது பெண்ணின் மேற்புறம் துணியால் மூடப்பட வேண்டும். 8) இன்பம் உணர்வதைத் தவிர்க்க கலவியின் போது உடல்களில் நெய் பூசப்பட வேண்டும்.
மகாபாரதத்தில் குந்தி பாண்டவர்களைக் கருவுறுவது இப்படித் தான். குந்தியின் மாமியார்களான அம்பிகா, அம்பாலிகா இருவரும் முறையே திருதிராஷ்டிரரையும் பாண்டுவையும் பெறுவதும் இவ்வழியில் தான். மனுஸ்மிருதியில் நியோகம் பற்றிய விளக்கம் வருகிறது. (ஆனால் அதில் தடை செய்யப்பட்ட விஷயம்.)
ஆக, மாதொருபாகன் ஏற்கனவே இந்து மதம் பேசிய, புழக்கத்தில் இருப்பதாய்ச் சொன்ன விஷயத்தையே மீட்டுருவாக்கம் செய்கிறது. ஆனால் நியோகம் என்பதற்கான விதிமுறைகளாக புராணங்கள் குறிப்பிடுகிற விஷயங்களில் ஒன்றைக்கூட பின்பற்றாமல் அதைப் பகடி செய்கிறது. அதாவது அப்படி இயந்திரம் போல் தர்மத்தின் பெயரை அல்லது கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு குழந்தைக்காகக் கலவி செய்தல் மானிடர்க்கு சாத்தியமில்லை என்ற யதார்த்தமான நேர்மையான விமர்சனமாகவே அதைப் பார்க்கிறேன்.
பெருமாள்முருகன் நாவல்களில் வழக்கமாய் பயின்று வரும் விவசாயம் பற்றிய நுண்ணிய தகவல்கள் தாண்டி, வேளாண்மையைப் பின்புலமாகக் கொண்ட இரு இளைஞர்களின் நட்பு இதில் அழகாக விவரிக்கப் படுகிறது. தங்கை பொன்னாவைக் கட்டிக் கொடுத்து மைத்துனன் உறவு ஆக்கிக் கொள்ளுமளவு காளி மற்றும் முத்துவின் நட்பு இருக்கிறது. அவர்கள் ஒன்றாய்க் குடிப்பதும், கிணற்றின் ரகசிய இடங்களில் பொழுதைக் கழிப்பதும் என அவர்கள் சினேகம் விவரிக்கப்படுகிறது. இளவயதில் இருவருமே சேர்ந்து பதினான்காம் திருவிழாவுக்குப் போயிருக்கிறார்கள். அவ்வளவு நெருக்கம் கொண்ட முத்துவே கூட காளியின் தன்னுடைமையுணர்வை விளங்கிக் கொள்ளாமல் தன் தங்கையை இரவில் அனுப்பும் திட்டத்தில் பங்கேற்கிறான். அவர்களின் கூட்டுக் குடியே கடைசியில் குடியைக் கெடுக்கிறது.
காளியின் தாயும், பொன்னாவின் பெற்றோரும் கூட அதைப் புரிந்து கொள்ளவில்லை. மானுட உணர்வுகளை விட ஊர் கேள்வி கேட்கிறதே என்பதே அவர்கள் மனதைப் போட்டு அரிக்கிறது.
வாசிப்பின்பத்தின் அடிப்படையில் மாதொருபாகனுக்கு இணையானதல்ல அதன் தொடர்ச்சியான பிந்தைய இரு நாவல்களும். படமோ எழுத்தோ எந்தவொரு தொடர்ச்சிக்கும் நேரக்கூடிய விபத்து தான் இது. முதன் முதலில் ஓர் உலகம் அறிமுகம் ஆகும் போது அது வசீகரிக்கும். அடுத்து அதே உலகத்தில் மேலும் தூரம் அழைத்துச் செல்லும் போது பழைய வசீகரம் இருப்பதில்லை. அதே தான் அர்த்தநாரி, ஆலவாயனிலும்.
ஆலவாயனில் காளி இறந்து விடுகிறான். பொன்னா சூல் கொள்கிறாள். தன் மாமியார் மாராயியுடன் வந்து விவசாயத்தைக் கவனித்துக் கொண்டு மகவை ஈன்றெடுக்கிறாள். பேறுகாலத்தில் அவள் தாயும் வந்து உடனிருக்கிறாள். ஊராருக்கு காளிக்கு உண்டான கரு தான் அது என்பதாகவே சொல்கிறார்கள். மாராயியும் பொன்னாவும் சேர்ந்து விவசாயத்தையும் எடுத்து நடத்துகிறார்கள். குழந்தையின் முகம் பதினான்காம் நாள் திருவிழாவில் பொன்னாவோடு சேர்ந்தவனின் முகத்தை நினைவூட்டுவதோடு நாவல் முடிகிறது.
அர்த்தநாரியில் காளி தூக்குப் போடுகையில் இடையே அவனது தாய் மாராயி வந்து காப்பாற்றி விடுகிறாள். தன்னை ஏமாற்றி விட்டதாக பிறந்த வீட்டுடன் தொலைவு போட்டு (தொலைவு போடுதல் என்றால் ஒரு மனிதருடன் / குடும்பத்துடம்ன் எந்த ஒட்டு உறவும் பேச்சு வார்த்தையும் இல்லை என்று சாமியின் மீது சத்தியம் செய்து பிரிந்து வருதல்) கணவன் வீடு வந்து இருந்து மாமியாய் கவனிப்பில் குழந்தை பெறுகிறாள். அவள் கர்ப்ப காலம் முழுக்க காளி அவளுடன் பேசுவதே இல்லை. பேசிய ஒரே வார்த்தை "அவுசாரி". பொன்னா விவசாயத்தை கவனிக்கிறாள். மகவீன்ற பின்னும் காளி வராததால் பொன்னா தற்கொலை செய்ய முயலுகையில் காளி அவள் கைபிடிப்பதோடு கதை முடிகிறது.
காளியின் உளவியல் இயல்பான ஓர் இந்திய ஆணின் உளவியல் தான். அவன் தன் மனைவியின் மீது மிகுந்த பிரியத்தில் இருக்கிறான். தன்னுடமை உணர்வு - தன் மனைவியின் மீது தன் வாசனை தவிர வேறந்தெ வாசமும் ஏறக்கூடாது என்ற பிடிவாதம். அவன் மற்ற ஆண்களிடமிருந்து வித்தியாசப்படும் இடம் மனைவி பற்றிய தன் எதிர்பார்ப்புக்கேற்றாற் போல் அவனும் ஏகபத்தினி விரதனாகவே இருக்கிறான்.
சிறுவயதில் இதே பதினான்காம் தான் திருவிழாவுக்கு அவன் போயிருக்கிறான் என்றாலும் பொன்னாவை மணம் புரிந்த பின் வேறொருத்தியிடம் மனம் போனதில்லை. அதனாலேயே குழந்தை இல்லை என்பதால் மறுமணம் செய்து கொள்ளச் சொல்லி வரும் பேச்சை ஒதுக்குகிறான். பொன்னா இன்னொருவனிடம் கலந்து விட்டாள் என்பது அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தன்னைப் மீறிப் போய் விட்ட கோபம். அவனால் திரும்பச் சரி செய்ய முடியாத பிழை நிகழ்ந்து விட்டதாக நினைக்கிறான். இயலாமை தரும் கழிவிரக்கம். அவளுக்கு ஆயுள் முழுக்கக் குற்றவுணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றே உடனடியாய் அவனுக்குத் தோன்றுகிறது. அதனாலேயே தற்கொலை செய்கிறான் / முயல்கிறான்.
அர்த்தநாரியில் அவன் பிழைத்துக் கொண்ட போதும் கிட்டத்தட்ட ஒரு வருடம் தான் அத்தனை பிரியம் கொண்ட மனைவியிடம் ஒரு சொல் கூடப் பேசவில்லை. அவளை ஒதுக்கியே வைத்திருக்கிறான். அவளது செயல் அவனால் ஜீரணிக்கச் சிரமமானதாய், ஏற்றுக் கொள்ள இயலாததாய், மன்னிக்க முடியாததாய் இருக்கிறது. அவன் தனக்குள் போராடுகிறான். அவளை மனதின் அடியாழத்திலிருந்து தீவிரமாய் வெறுக்கிறான். ஒரு கட்டத்தில் முடிவிலிருந்து மாறி தன் வெறுப்பு குறைந்து மனம் மாறி விடுமோ என்று கூட அஞ்சுகிறான். உண்மையில் அவனுக்கு வாழப் பிடிக்கவே இல்லை. அதுவும் அவளுடன்.
அதற்கு முந்தைய பத்தாண்டுகள் அவள் மீது காண்பித்த அத்தனை பிரியமும் அதற்கு நேர்மாறாய் மாறிப் போகிறது. உண்மையில் அந்த வெறுப்பே அந்த பிரியத்திலிருந்து கிளைத்தது தானே! அவன் கொண்டிருந்தது சாதாரணப் பிரியம் என்றால் ஏமாற்றமும் சாதரணமாய் அமைந்து, வெறுப்பும் சாதரணமாகவே இருந்திருக்கும். மாறாய் அவன் எத்தனை ஆழமாய் விரும்பினானோ ஒற்றை இரவு அத்தனை ஆழமாய் அவளை வெறுக்கத் தூண்டி விட்டது. அர்த்தநாரியின் இறுதியில் அவன் மனம் மாறி ஏற்பது கூட அவரவர் புரிதலுக்கு விடப்பட்டிருக்கிறதே ஒழிய தெளிவான விளக்கம் இல்லை.
நல்லுப்பையன் சித்தப்பா, பழநி யாத்திரையில் சந்திக்கும் மனிதர், பன்றிக்கறி விற்பவள் கணவன் என காளி சந்திக்கும் / கேள்விப்படும் விஷயங்கள் அவனுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பது தான் பெருமாள்முருகன் தரப்பு எனக் கொள்கிறேன். தவிர, பொன்னா தான் சம்மதித்ததாய் குடும்பத்தாரால் நம்ப வைக்கப்பட்டே பதினான்காம் நாள் திருவிழாவுக்குப் போனாள் என்பதையும், அந்த துரோகத்துக்காகத் தன் வீட்டோடு தொலைவு போட்டு வந்து விட்டாள் என்பதையும், அதன் பிறகு அந்த ஒரு வருடமாய் குற்றவுணர்வைச் சுமந்து கொண்டு அவனுடன் பேசிடத் தவித்திருக்கிறாள் என்பதையும் காளி அறிந்தே இருக்கிறான். அதையும் அவன் மனம் மாறி அவளை ஏற்பதற்குக் காரணமாகக் கொள்ளலாம்.
*
இரண்டு நாவல்களிலுமே எனக்கு முக்கியமாய்ப்படுவதும் நிறைய யோசிக்கச் செய்வதும் பொன்னாவின் உளவியல் தான். அவள் இளவயதில் இயல்பான இனக் கவர்ச்சிக்கு ஆட்பட்டிருந்தாலும் காளியைத் திருமணம் செய்த பின் அவனுடன் மிகப் பிரியமாய் இருக்கிறாள். குழந்தை இல்லை என்பது அவன் மீதான அன்பில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. அவள் இவ்வுலகில் மிக விரும்பி இருந்தது காளியைத் தான். குழந்தைப்பேறில்லாமையை சாதகமாக்கி பல ஆண்கள் அவளுக்கு வலை விரித்தும் எல்லோரையும் மறுதலித்துக் கடந்து வந்தவள் பொன்னா. அவளது அந்த ஓரிரவு மாற்றம் முரண்.
அந்தப் பேரன்போடு ஒப்பிடும் போது பிற்பாடு அவளது சில செயல்கள் துருத்திக் கொண்டிருக்கின்றன. அவள் தாய்மை அடைய பதினான்காம் திருவிழாவுக்குச் செல்ல கணவன் ஒப்புக் கொண்டான் என்பதை அவள் ஏற்றுக் கொள்கிறாள் என்பது முதல் உறுத்தல். முந்தைய ஆண்டுகளில் அவன் இதன் பொருட்டு சண்டையிட்டிருக்கிறான். அந்த முறை மட்டும் எப்படிச் சம்மதித்தான் என்கிற தர்க்கக்கேள்வி அவளுக்கு எழவில்லை. இத்தனைக்கும் அவளை மிகச் சாமர்த்தியசாலியாகவே சித்தரிக்கிறார் பெருமாள்முருகன்.
காளியே பிற்பாடு அர்த்தநாரி நாவலில் நினைத்துப் பார்ப்பது போல் "நானே போகச் சொல்லி இருந்தாலும் நீ வேண்டாம்னு தானே சொல்லி இருக்கனும்?" என்ற கேள்வி இயல்பாகவே எனக்கும் எழுகிறது. நீண்ட சண்டை / விவாதத்தின் பின் அவள் சம்மதித்திருந்தால் அது இயல்பாக இருக்கும். மாறாக ஒரு சொல் கூடப் பேசாமல் அவன் கண்ணசைவையே சம்மதமாகக் கொள்கிறாள் என்பது ஏற்க முடியவில்லை.
அடுத்து பதினான்காம் நாள் இரவு நடக்கும் விஷயங்கள். அவள் காளி போன்ற முகத்தைத் தவிர்க்கிறாள். அவன் நினைவு வருவதை அஞ்சுகிறாள். அது அவளது குற்றவுணர்விலிருந்து எழுவது. ஆனால் அப்படிப் பட்டவள் ஒரு புதிய ஆடவனுடன் மிக இணக்கமாகவே கூடுகிறாள். இந்தக் கலவி மாதொருபாகன், ஆலவாயன், அர்த்தநாரி மூன்று நாவல்களிலும் (அவற்றின் தேவைக்கேற்ப) சற்று வெவ்வேறு சாயைகளுடன் சொல்லப்பட்டிருக்கிறது என்றாலும் மூன்றிலும் இருக்கும் பொதுவான விஷயம் அவள் மிக இஷ்டத்துடனே அதில் ஈடுபடுகிறாள். அவனிடம் வெட்கம் கொள்கிறாள், அவன் பேச்சில் கிறங்குகிறாள், அவன் ஆக்ரமிப்பை ரசிக்கிறாள், அதில் மூழ்கித் திளைக்கிறாள் என்பது. அவள் குழந்தைப்பேறுக்காகச் செய்து கொள்ளும் ஒரு வைத்தியம் என்பதாக அதை அணுகாமல் இன்ப நிகழ்வாகவே அனுபவிக்கிறாள்.
அதைத் தனிப்பட்டு என்னால் ஏற்க முடியவில்லை. ஆனால் சற்று விலகி நின்று உணர்ச்சிகள் கடந்து தர்க்கப் பூர்வமாய்ச் சிந்தித்தால் எத்தனை பிரியம் நம் துணை மீது கொண்டிருந்தாலும் இத்தகைய சந்தர்ப்பங்களில் அதை எல்லாம் கடந்து எதிர்ப்பாலின ஈர்ப்பில் உடலின் வேட்கையே வெல்லும், அதில் மனமும் பூரணம் கொள்ளும். அது கீழ்மை அல்ல. மனித இயல்பு அது. அதை ஏற்பதே நேர்மை.
இங்கே பெருமாள்முருகன் மீதான மரியாதை கூடுகிறது. அவர் போலியாய் பொன்னா மனதளவில் தூய்மை என்றெல்லாம் சொல்ல முனையவில்லை. நிஜத்தை அப்படியே பதிகிறார். அதே நேரம் அதன் பொருட்டு ஓரிடத்தில் கூட அவளைத் தூற்றவில்லை. அவள் மானுட இனத்தின் பிரதிநிதியாகிறாள்.
மூன்றாவது ஆலவாயன், அர்த்தநாரி நாவலின் இறுதிப் பகுதிகள். இரண்டிலுமே குழந்தையின் முகச்சாயல் பதினான்காம் திருவிழாவில் சந்தித்தவனின் முகத்தை பொன்னாவுக்கு நினைவூட்டுகிறது. மறுபடி அந்த இரவை அசை போடுகிறாள். அன்று அவன் அவளை மிகப் பிடித்திருப்பதாகவும் அவனோடு வந்து விடுமாறும் அழைக்கிறான். அடுத்த வருட திருவிழாவுக்குக் குழந்தையை எடுத்து வரச் சொல்கிறான். அவன் நினைவாகவே தன் குழந்தைக்கு ஆலவாயன் / அர்த்தநாரி எனப் பெயர் சூட்டுகிறாள்.
ஆலவாயன் நாவலில் அவன் இருக்கும் ஊர் பற்றியும் சிந்திக்கிறாள். அவன் மீதான பிரியம் சுரப்பதுடன் அவனை மீண்டும் சந்திக்க விரும்பும் தொனியுடன் நாவல் முடிகிறது. அர்த்தநாரி நாவலில் காளி இருந்தும் ஓராண்டாய் தன்னை ஒதுக்கி வைத்திருப்பதும், குழந்தை பிறந்தும் பார்க்க வரவில்லை என்பதாலும் அவனைத் தேடிப் போய் அவனோடு சேர்ந்து கொள்ளலாமா என்ற எண்ணமும் வருகிறது.
ஒருபடி மேலே போய் காளிக்கு வக்கற்றுப் போனதால் தானே அவனிடம் போய்ப் பிள்ளை பெற்றேன் என்று பொருமுகிறாள். மூன்று நாவல்களிலும் அவள் காளியை மலடன் எனக் குறிப்பிட்டுத் தூற்றும் இடம் இது ஒன்று தான். காளி மீது அத்தனை பிரியம் கொண்டவளாய் பத்தாண்டுகள் வாழ்ந்தவளுக்கு அவன் இருக்கையிலேயே இன்னொருவனிடம் போகும் எண்ணம் வருகிறது என்பதையும் ஏற்க முடியவில்லை. இதையும் மனித சுயநலங்களில் ஒன்றாகவே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
ஆலவாயனில் காளி இயல்பாய் அல்லது வேறு காரணத்துக்காக இறந்திருந்தால் பொன்னா இன்னொரு மணம் பற்றி சிந்திப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இறந்தது அவள் இன்னொருவனுடன் சேர்ந்ததால். அச்சூழலில் அவள் போவாளா என்ன! அர்த்தநாரியில் காளி அவளை ஒதுக்கி வைத்திருந்ததும் வேறு பிரச்சனைகளில் இல்லை; பொன்னா இன்னொருவனுடன் சேர்ந்ததால் தான். அப்படி இருக்க காளியின் மீதான பிரியம் தாண்டி அந்த இன்னொருவனோடே போய் விட யோசிப்பாளா என்ன!
இரு சூழல்களிலுமே பொன்னாவின் குணநலன்களையும், அவளுக்கு காளி மீதான பெரும்பிரியத்தையும் கொண்டு பார்க்கையில் குற்றவுணர்ச்சியால் பீடிக்கப்படுவதே இயல்பு எனத் தோன்றுகிறது. அவள் தற்கொலை செய்ய வேண்டுமென்றோ, விரக்தியாய் மோட்டுவளை பார்த்து அமர்ந்தபடி மிச்ச காலத்தை ஓட்டி விட வேண்டும் என்றோ சொல்லவில்லை. அவள் விவசாயத்தை எடுத்துச் செய்வதும், நம்பிக்கையுடன் குழந்தை பெற்றுக் கொள்வதும் இயல்பே. ஆனால் தன்னைக் கலந்தவனோடு மீண்டும் போக யோசிப்பது தான் துருத்தலாக இருக்கிறது. தளபதி ரஜினி - பானுப்ரியா நினைவு வருகிறது.
ஆனால் இவை யாவும் உறுத்தலாய்த் தோன்ற ஆழ்மனதில் நான் குடும்ப அமைப்புள் கட்டுண்டு கிடப்பதும், கணவன் - மனைவி பரஸ்பரம் நேர்மையாய் இருக்க வேண்டும் என விரும்புவதும் காரணமாய் இருக்கலாம். இன்னொரு முக்கியக் காரணம் மூன்று நாவல்களிலுமே கண்டதன்படி காளி - பொன்னா ஓர் ஆதர்ச தம்பதியாகவே எனக்குப் படுகின்றனர். புனைவுகளில் எனக்குப் பிடித்த ஜோடி என இவர்களையே சொல்லத் தோன்றுகிறது. அதைச் சிதைக்கும் வகையிலான சம்பவங்களை நான் விரும்பாதிருக்கலாம்.
அர்த்தநாரி நாவலில் பொன்னா கர்ப்பம் தாங்கி இருந்த ஒரு வருடத்தில் காளி அவளிடம் பேசிய ஒரே சொல் ‘அவுசாரி’. அதுவும் முனகலாக அவன் உதடுகள் முணுமுணுக்க, அவனை, அவன் அசைவுகளை நன்கறிந்த பொன்னா அதைக் கண்டுகொள்கிறாள். அது அவளைச் சுக்கலாக உடைத்துப் போடுகிறது. அவன் மனதில் தான் உடல் சுகம் தேடி ஒருவனுக்கு முந்தானை விரித்து விட்டதான பிம்பம் விழுந்து விட்டதை எண்ணித் துடிக்கிறாள். அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பே கிடையாதா எனக் குமைகிறாள். ஆனால் இறுதியில் அந்தப் பெயருக்குக் காரணமானவனையே மனம் தேடுவது மகத்தான முரண் அல்லவா!
ஆலவாயன், அர்த்தநாரி இரண்டு நாவல்களிலும் பொன்னா வாயிலெடுத்து கர்ப்பம் என்று அறிய வரும் நாளைக்கு முந்தின நாள் இரவு உறக்கத்தில் காளி வந்து தன்னைக் கூடுவதாய் நினைத்துக் கொள்கிறாள் (ஆலவாயனில் அது காளியின் இறப்புக்குப் பிந்தைய சூட்சம ரூபம் என்பதான தொனியும் இருக்கிறது). அதன் பலனாகவே தான் சூல் கொள்வதாக நம்புகிறாள். அதனால் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் தந்தை காளி தான் என்பதாகவே அவள் நம்புகிறாள். அதையே ஊராருக்கும் சொல்கிறாள். காளியை நினைத்தே இன்னொருவனைக் கலந்ததாகவும் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள். இப்படி அவள் நம்புவதும், அந்த இரவில் இன்னொருவனை இணக்கமாகத் தழுவுவதும், பிற்பாடு அவனோடே செல்ல நினைப்பதுவும் பொருந்தி வரவில்லை. இந்த வெவ்வேறு சம்பவங்களை ஒரு நேர்க்கோட்டு தர்க்கத்தில் இணைக்க முடியவில்லை. அல்லது யதார்த்தம் என்பது அப்படி முரண்பட்டுத் தான் நிற்குமோ!
இரு நாவல்களிலுமே துலக்கம் பெறும் இன்னொரு பாத்திரம் காளியின் தாயான மாராயி. கங்கணம், பூக்குழி என பெருமாள்முருகன் நாவல்களில் கணவனை இழந்த பெண்ணால் வளர்க்கப்படும் நாயகர்கள் இடம் பெறுகிறார்கள். இந்த நாவல்களிலும் அப்படித்தான். ஊரார் முன் தலைகுனியக்கூடாது என்பதில் தொடங்கி தன் மகன், மருமகள் மீதான பிரியம் / முரண் வரையிலும் வெவ்வேறு நிறங்களில் வெளிப்படுகிறாள். மகனின் தற்கொலை முயற்சியை ஒட்டி “இப்படியுமா ஒருத்தன் மனைவி தனக்கு மட்டும் அவுக்கனும்னு இருப்பான்” என அங்கலாய்க்கிறாள். கணவனும் மனைவியும் அந்த உறவு தாண்டி மற்றவருடன் இணைவது (சமயங்களில் வீட்டு ஆண்களுடனே) சகஜமாக இருந்த காலகட்டம் அது என்ற பின்னணியில் அவளுக்கு காளியின் தன்னுடைமையுணர்வு மிகுந்த ஆச்சரியம் தருகிறது.
பொன்னாவின் அம்மாவும், அண்ணனும் நன்கு பதிவாகி இருக்கிறார்கள். சிறுபாத்திரங்களாய் வரும் பொன்னாவின் அண்ணியும், வெங்காயியும் கூட வாசகனின் மனதில் இடம்பெறத் தவறுவதில்லை.
மாதொருபாகனில் ஓர் அத்தியாயம் மட்டும் வந்து போகும் நல்லுப்பையன் சித்தப்பா பாத்திரம் ஆலவாயன், அர்த்தநாரியில் வரும் பகுதிகள் அனாவசிய நீளத்துடன் அமைந்திருக்கின்றன (அதுவும் ஆலவாயனில் மிக அதிகம்). இரு நாவல்களிலுமே தன் வாழ்க்கைச் சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வதன் வழி பிரதானப் பாத்திரங்களின் மனமாற்றத்துக்கு ஒரு க்ரியாஊக்கியாக இருக்கிறார் என்பது நிஜம் தான் என்றாலும் மையக் கதையிலிருந்து வெகுதூரம் விலகி வந்தது போன்ற உணர்வினைத் தவிர்க்க இயலவில்லை.
*
பெருமாள்முருகனின் நாவல்களில் பொதுவாய் விவசாய நுட்பங்களும், குறிப்பிட்ட இனக்குழுவின் பழக்க வழக்கங்களும், குறிப்பிட்ட நிலப்பகுதியின் பேச்சு வழக்கும் மிகத் தீவிரமாகப் பதிவாகும். இந்த மூன்று நாவல்களிலும் அப்படித்தான். குறிப்பாய் ஆலவாயன் நாவலில் குறிப்பாய் பொன்னா மாராயி என்ற இரு பெண்கள் தனியாய் விவசாயத்தை எடுத்து நடத்தும் பகுதிகள் அழகாகப் பதிவாகி இருக்கின்றன.
பெருமாள்முருகனின் கதைளில் இடம்பெறும் சொலவடைகளும், வட்டாரச் சொற்களும் இயல்பானவை. நானும் அப்பகுதியிலிருந்து வந்தவன் என்ற முறையில் புனைவாக்கும் போது மிக இயல்பாக அந்த மொழி வழக்கைக் கையாண்டிருப்பதைக் காண்கிறேன். அனாவசியத் திணிப்பு இல்லை, அதே சமயம் அவரது எழுத்து முழுக்கவே அப்பயன்பாடு இருக்கிறது. உரையாடல்கள் தவிர எங்கே வட்டார வழக்கு இடம்பெற வேண்டும், எங்கே தூய தமிழ் பயின்று வர வேண்டும் என்பதில் மிகக் கவனத்துடன் இருக்கிறார்.
பெருமாள்முருகன் புனைவுகளில் பொதுவாகவே காமம் பற்றிய சம்பவங்களும் பேச்சுகளும் முக்கிய இடம் வகிக்கும் (நல்ல எழுத்தாளர்கள் எல்லோருக்குமே அது தவிர்க்கவியலாது என நம்புகிறேன்). முழுக்க துன்பியல் கதைகளாக இருந்தாலும் ஆலவாயன், அர்த்தநாரியும் கூட இதற்கு விதிவிலக்கில்லை. ஊர்க்கிழவிகள் உரையாடலிலும், நல்லுப்பையன் வாயிலாகவும், மாராயி பொன்னாவின் அம்மாவுடன் பேசுகையிலும் காமம் புன்னகைத்தபடி சம்மணமிட்டு அமர்ந்து கொள்கிறது. பெண்கள் காமத்தைப் பேசிப் பேசித் தீர்க்கிறார்கள். கேலியும் கிண்டலுமாய் இருந்தாலும் சிந்தனையைத் தூண்டுகின்றன.
யோசித்துப் பார்த்தால் (கலந்தவனைத் தேடிப் போக எண்ணும் இறுதிப் பகுதி தவிர) ஆலவாயன் நாவல் ஒரு பெண்ணியப் பிரதி. கணவனை இழந்த ஒரு கர்ப்பிணிப் பெண், மகனை இழந்த பெண்ணின் ஆதரவுடன், ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் துணையுடன், அதனோடு வாழ்வு முடிந்தது என்றில்லாமல், தூற்றக் காத்திருக்கும் உறவினர், சுற்றத்தார், ஊரார் வாய்த்த சூழலில் தானே விவசாய வேலைகள் செய்து வாழ்வில் சுயமாய்க் காலூன்றி நிற்கிறாள். இனி அவள் தன் மகனையும் வளர்த்து ஆளாக்குவாள்.
ஆனால் அதே ஆலவாயன் நாவலில் வரும் ஓர் ஆணாதிக்கச் சம்பவத்தைச் சொல்ல விரும்புகிறேன். பெண் கர்ப்பமான போது கணவன் மரித்திருந்தால் அந்தப் பெண் ஊராரை அழைத்துத் தான் தன் கணவனோடு புணர்ந்து தான் அந்த கருவைச் சூல் கொண்டேன் என கடவுள் மீது சத்தியம் செய்து அறிவிக்க வேண்டும். அது ஊர் வழக்கம். வேறு வழியின்றி பொன்னா அதை ஒப்புக் கொண்டு செய்கிறாள்.
ஒரு கதையை வாசிக்கையில் அந்தப் பாத்திரமாக நம்மைப் பொருத்திக் கொண்டால் என்னவெல்லாம் செய்வோமோ, பேசுவோமோ, யோசிப்போமோ எல்லாவற்றையும் பெருமாள்முருகன் பாத்திரங்கள் செய்வதைக் கவனித்து வந்திருக்கிறேன். வித்தியாசம் புகுத்தி வாசகனுக்கு அதிர்ச்சி அளிக்கிறேன் என்பதாக இல்லாமல், இதைச் செய்வது தானே இயல்பு என்று convincing-ஆக இருக்கும். அதனால் நம் எல்லா தர்க்கக் கேள்விகளுக்கும் சரியான விளக்கமும் அதில் இருக்கும். ஒவ்வொன்றிலும் அவரே தன்னை அந்தப் பாத்திரத்தில் பொருத்திக் கொண்டு யோசிக்கிறார் என்று தான் தோன்றுகிறது.
உதாரணமாய் அர்த்தநாரி நாவலில் காளி பொன்னாவுடன் பேசுவது நின்று போக, அது அக்கம் பக்கத்தில் தெரிந்தால் கணவன் மனைவிக்குள் சண்டை என்பது தெரிந்து போகும் எனப் புரிந்து பொன்னா காளி வசிக்கும் தொண்டுப்பட்டிக்குள் குடி அமர்கிறாள். யோசித்துப் பார்த்தால் அச்சூழலைச் சந்திக்கும் ஓர் எளிய தர்க்க மனம் இதைத் தான் செய்யும். இதைச் சேர்க்காமலும் பெருமாள்முருகன் கதையை நகர்த்தியிருக்க முடியும். ஆனால் அந்தப் பாத்திரமாய் யோசிக்கும் போது ஊரார் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி இருப்பது புரிந்து அதைச் சேர்க்கிறார். இவை எல்லாமே அவரைப் பெரும் கதைசொல்லி ஆக்குகிறது.
பாலா மாதிரி ஒரு நல்ல இயக்குநர் இந்த மூன்று நாவல்களையும் இணைத்து (சாதி மற்றும் நிலவியல் பற்றிய எந்தக் குறிப்புமின்றி) ஒரு திரைப்படமாக எடுக்கலாம். ஒற்றை இரவில் நடந்த ஒரு வரம்புமீறல் தான் இந்த மூன்று நாவல்களும். என் சிபாரிசு மூன்று நாவல்களையும் - முதலில் மாதொருபாகன், பிறகு ஆலவாயன், கடைசியாய் அர்த்தநாரி என்ற வரிசையில் - ஒருவர் வாசிக்க வேண்டும் என்பதே.
பெருமாள்முருகன் எழுதிய வரிசை வேறு. மாதொருபாகன் எழுதிய போது மற்ற இரு நாவல்களையும் எழுதும் உத்தேசம் அவருக்கு இல்லை. ஆனால் அந்நாவலுக்கு வந்த எதிர்வினைகளே அவரை கதையை நீட்டித்து எழுத வைத்திருக்கின்றன. அதை முக்கியக்கூறாகப் பார்க்கிறேன். பெரும்பாலானோர் சொன்னது போல் பொன்னாவைக் கொலையோ தற்கொலையோ செய்திருக்க வேண்டும் என்பதை பெருமாள்முருகன் நிறைவேற்றவில்லை. அதுவே பிற்போக்குத்தனத்துக்கு எதிரான அவரது சிறப்பான பதில். ஆனால் அவள் செயலைக் கேள்விக்குட்படுத்த வேண்டும், அந்த உளவியலைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தான் இதில் செய்திருக்கிறார். நாமும் அந்த மறுவிசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
இன்று தனது கணவன் / மனைவியின் மீதான பிரியத்துக்குக் குறைவில்லை, ஆனாலும் பிற பெண்கள் / ஆடவருடன் மிக அந்தரங்க விஷயங்கள் பேசுவது, காட்டுவது, செய்வது பிழையில்லை என்ற மனப்பாங்கு அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களின் வளர்ச்சியினூடே குடும்பங்களில் ஆண் - பெண் உறவுச் சிக்கல்கள் / முரண்கள் மேலும் வலுப்பெற்று வரும் வேளையில் இது பற்றிய உரையாடல்களைத் திறக்க வேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன். அதன் ஒரு பகுதி தான் இம்மூன்று நாவல்களும் என்பேன்
மூன்று நாவல்களையும் வாசித்து முடித்த பின் எனக்கு பொன்னா நிறையக் கேள்விகளை விட்டுச் சென்றிருந்தாள். அவை அறம் சார்ந்த கேள்விகள் அல்ல; அன்பு என்பதற்கு எல்லை உண்டோ என்பது பற்றி குழப்பங்கள். பெருமாள்முருகனே சொல்லி இருப்பது போல் ஆலவாயனின் தொடர்ச்சியாய் அவள் தன்னோடு கலந்தவனைத் தேடிச் சந்திக்கும் சந்தர்ப்பம் அமைத்து இன்னொரு நாவல் எழுதும் சாத்தியம் இருக்கிறது. அதில் அக்கேள்விகளை அவளிடம் எழுப்பும் ஆசை உண்டு. பொன்னா அதில் இன்னும் ஜ்வலிக்க வேண்டும். பெருமாள்முருகன் ஒருவேளை செய்யாவிட்டால் நான் செய்ய விரும்புகிறேன்.
புனைவை நிஜ வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி மகிழ்வதும் இகழ்வதும் இந்தியப் பாமர மனநிலை. ஒரு நல்ல எழுத்தாளன் காலத்தின் கண்ணாடி என்பது உண்மை தான் எனினும் வரலாற்றைப் பதிவு செய்வது தான் அவன் வேலையே அன்றி அதைப் பீடத்தில் ஏற்றுவதோ போட்டு மிதிப்பதோ அவன் செய்வதில்லை. நாவல் என்பது வரலாற்று ஆவணம் அல்ல. எப்படி அது முழுப்பொய் இல்லையோ அப்படியே அதில் முழு உண்மையும் இல்லை. அதில் கற்பனை எத்தனை என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகவே இருந்து விட வேண்டும். படைப்பின் வசீகரம் அதுவே. படைப்பாளியின் சுதந்திரமும் அதுவே.
ஒருவேளை புனைவில் தகவற்பிழையோ திரித்தலோ இருந்தால் அதை ஆதாரத்துடன் மறுத்து விரிவாகப் பதிவு செய்வதே கம்பீரம். அல்லது நீதிமன்றம் போகலாம். (இலக்கியப் பரிச்சயம் கொண்ட நீதிபதிகள் கிடைப்பார்களா என்பது வேறு பிரச்சனை.) மாறாய் எழுதியவனை ஊமை ஆக்குதல் என்ன நியாயம்? விஷயம் நடந்ததா என்பது முக்கியமில்லை, ஆனால் அதை எவனும் பேசக்கூடாது என்ற முரட்டுத்தனமே அதில் இருக்கிறது. அறிவுசார் செயல்பாடுகளில் தொடர்புள்ள எவரும் அதைச் செய்ய மாட்டர்.
தமிழில் வேறவரையும் விட குறிப்பிட்ட நிலப்பகுதியையும், இனக்குழுவையும் அதிகமாகவும் அழகாகவும் எழுதி இருப்பவர் பெருமாள்முருகன் தான். உண்மையில் ஒரு சமூகம் இது போன்ற கலைஞனைக் கொண்டாடித் துதிக்க வேண்டும். நாமோ அடித்து விரட்டுகிறோம். அதற்காய் ஒரு தமிழனாய் அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கோருகிறேன். அவர் மீண்டு வந்து எழுத்துக் களமாட வேன்டும் என்பதே நல்ல வாசகராய்த் தம்மைப் பாவிக்கும் ஒவ்வொருவரின் விருப்பமாகவும் இருக்க முடியும். வருக!
| மாதொருபாகன் | நாவல் | பெருமாள்முருகன் | காலச்சுவடு பதிப்பகம் | டிசம்பர் 2010 | ரூ.140 |
| ஆலவாயன் | நாவல் | பெருமாள்முருகன் | காலச்சுவடு பதிப்பகம் | டிசம்பர் 2014 | ரூ.175 |
| அர்த்தநாரி | நாவல் | பெருமாள்முருகன் | காலச்சுவடு பதிப்பகம் | டிசம்பர் 2014 | ரூ.175 |
***
(தமிழ் - சுதந்திரம் 2015 இதழில் வெளியானது)
Comments