ஆ.க.அ.க. - முன்னுரை


நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒரு போதும் தவழ மாட்டேன்
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.

-    அப்துல் கலாம்

(முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 19 செப்டெம்பர் 2011 அன்று ஆற்றிய சிறப்புரையில் சொன்ன கவிதை.)

*

இந்திய ராக்கெட் இயல் - அதன் நீள வரலாறு மற்றும் ஆழ விஞ்ஞானம் - என்பது என் பதினைந்து ஆண்டுகாலப் பெருங்கனவு. ஓர் எழுத்தாளனாய் அல்ல; வாசகனாக.

“கலாமும் நானும் இணைந்து ஒரு புத்தகம் எழுத உத்தேசித்திருந்தோம். இந்திய ராக்கெட் இயல் பற்றித் திப்பு சுல்தான் காலத்திலிருந்து ஆரம்பித்து எழுதலாம் என்றார். ‘நான் ரெடி… நீங்க ரெடியா கலாம்?’ என்று எப்போது பார்த்தாலும் கேட்பேன். ‘இதோ வந்து விடுகிறேன்… அடுத்த மாதம் துவங்கிடலாம்யா’ என்பார்.” என சுஜாதா ‘கற்றதும் பெற்றதும்’ தொடரில் எழுதிய போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு வாசகனாய், ஒரு மாணவனாய், ஓர் இந்தியனாய் மிகுந்த உற்சாகம் கொண்டது நினைவிருக்கிறது. பிறகு அவர் மறைவதற்கு சில காலம் முன் குங்குமம் இதழ் கேள்வி - பதிலில் “அப்துல் கலாமுடன் இணைந்து நீங்கள் எழுதுவதாக இருந்த 'இந்திய ராக்கெட் இயல்' புத்தகம் எந்த நிலையில் உள்ளது?” என்ற கேள்விக்கு “கைவிடப்பட்டது.” எனப் பதிலளித்திருந்தார். அது அளவிலா ஏமாற்றத்தை அளித்தது.

2008ல் சுஜாதா அமரருள் உய்த்த பின் கலாமுடன் இணைந்து இந்திய ராக்கெட் இயல் நூலை எழுதும் ஆர்வக்கோளாறான ஓர் ஆவல் கூட எனக்குள் அரும்பியது. என் முதல் நூலான ‘சந்திரயான்’ வெளியாகி அதற்கு சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருதும் பெற்றிருந்த காலம் அது. அதன் பக்கவிளைவான அதீத தன்னம்பிக்கையில் அதற்கான சில முயற்சிகளில் இறங்கிப் பின் சாத்தியப்படாமல் போனது. சென்ற ஆண்டு கலாமும் நம்மை விட்டுப் போன பின் அந்த ஆசையைத் தூசி தட்டினேன்.


இதைத் தொடராக எழுதுவதற்கு குங்குமம் இதழ் குழுமத்தில் பேசிய போது ஒப்புதல் கிட்டியது. ‘ஆகாயம் கனவு அப்துல் கலாம்’ தொடர் இப்படித் தான் பிரசவமானது.

‘ச்சீய் பக்கங்கள்’ தொடருக்கு பின் குங்குமத்தில் இது எனக்கு இரண்டாவது தொடர். ஆனால் முதலாவதைக் காட்டிலும் அதிக பொறுப்பு வாய்ந்த உள்ளடக்கம் என்பது பயமளித்தது. ஆனால் அந்த பயமே என்னைச் சரியாய் வழி நடத்தியது எனலாம்.

19.10.2015 இதழில் தொடங்கி 25 வாரங்கள் தொடர் வெளியானது. கலாம் பிறந்த நாள் வாரத்தில் தொடர் ஆரம்பித்தது உண்மையில் மிக எதேச்சையான சங்கதி! முதல் வாரம் அட்டகாசமான முழு பக்க அறிமுகம் நல்கியதுடன் வாரா வாரம் அழகிய லே அவுட்டுடன் 7 பக்கங்கள் தொடருக்கு ஒதுக்கினார்கள். அது மிக உற்சாகமளித்தது.

தொடருக்குப் பொருத்தமான புகைப்படங்களைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தை எனக்கு அளித்தார்கள். பெரும்பாலும் உள்ளடக்கத்தில் கை வைக்காமல் தான் வெளியானது.

தொடருக்கு ‘ஃபீனிக்ஸ் கனவுகள்’ என்று தான் நான் தலைப்பு உத்தேசித்திருந்தேன். ஜனரஞ்சக ருசி சேர்க்க வேண்டி ‘ஆகாயம் கனவு அப்துல் கலாம்’ என முடிவானது. நவீன இந்திய ராக்கெட் இயலின் தொடக்க கால வரலாற்றை மட்டும் இது பேசியது.

*

நூலை அப்துல் கலாமுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். காலமான ஒருவருக்கு நான் புத்தகம் அர்ப்பணிப்பது இது இரண்டாவது முறை. (முன்பு சந்திரயான் - சுஜாதா) அவரை விட இதற்குப் பொருத்தமான வேறொருவர் இருப்பதாகத் தோன்றவில்லை.

நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேரும் போது கலாம் அங்கே பேராசிரியர். சில தினங்களிலேயே தேசத்தின் ஜனாதிபதியானார். அந்தக் காலகட்டத்தில் அவர் எனக்கு ஓர் உத்வேகச் சுனை. அவரது சுயசரிதையான 'அக்னிச் சிறகுகள்' நூலை வாசித்த பித்து. கல்லூரி விடுதி அறையில் நண்பர்கள் விஜய், ஜோதிகா படங்களை சுவற்றில் ஒட்டி வைத்திருக்க, நான் அவரது பெரிய படத்தை சுவற்றில் ஒட்டினேன். அவருடன் நடிக, நடிகையர் படங்கள் ஒட்டலாகா என சண்டைப் பிடித்திருக்கிறேன்.

கல்லூரி முடித்த பின் அப்துல் கலாமைப் போல் தேசத்திற்கு விஞ்ஞானப் பணி செய்ய வேண்டும் என்ற ஆசையில் டிஆர்டிஓவில் சயின்டிஸ்ட் ‘பி’ பணிக்குத் தேர்வானேன். ஆனால் சொந்த வாழ்வியல் அழுத்தங்களால் அதில் சேரவில்லை.

அவர் ஜனாதிபதியானதை விடவும் பேராசிரியராக அல்லது விஞ்ஞான ஆலோசகராக நீடித்திருந்தால் இன்னமும் அதிகமாய் இத்தேச வளர்ச்சிக்குப் பங்கேற்றிருக்க முடியும் என்பதென் கணிப்பு. அவ்வகையில் பின்னாண்டுகளில் அவர் மீதான என் மனப்பிம்பம் சற்றே சரிந்தது என்றாலும் ஒரு விஞ்ஞானியாக அவரது தேசப்பங்களிப்பு மகத்தானது என்ற மரியாதை எப்போதும் எனக்கு உண்டு. அதற்காக அவரது பாதம் பணிகிறேன்.

இத்தொடருக்கு வாய்ப்பளித்த குங்குமம் இதழாசிரியர் தி.முருகன் அவர்களுக்கு என் பிரத்யேக வந்தனங்கள். தொடரை வடிவமைத்த இதழ் பணியாளர்களுக்கும் இப்போது நல்முறையில் நூலாக்கம் செய்யும் சூரியன் பதிப்பக ஊழியர்களுக்கும் என் நன்றிகள்.

பாதுகாப்பு விஞ்ஞானத் தகவல் மற்றும் ஆவண மையத்தின் (Defence Scientific Information and Documentation Centre - DESIDOC) தனி நூல் பிரிவின் (Monographs Division) தலைவரான அனிதா சரவணன் தொடருக்குத் தேவையான சில நூல்களைப் பெற உதவினார்.

The Hindu இதழில் பணிபுரிந்த கோபால் ராஜ் எழுதிய ‘Reach for the Stars’ என்ற நூல் தேவைப்பட்டது. 16 ஆண்டுகள் முன் வெளியான அந்நூல் தற்போது அச்சில் இல்லை. இணையத் தேடல் வழி அவரது தொலைபேசி எண்ணே கிடைத்துப் பேச முடிந்தது. அவர் தானே தன் புத்தகத்தைப் பிரதி எடுத்து பைண்ட் செய்து அனுப்பி வைத்தார்.

தேவைப்பட்ட இன்னொரு புத்தகம் A Brief History of Rocketry in ISRO. 2012ல் வெளியான இந்நூலும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பிறகு கொல்கத்தாவில் வெளியாகும் Science and Culture இதழை நடத்தும் பேராசிரியர் எஸ்சி ராயிடம் அந்நூல் இருப்பது தெரிந்து அவரைத் தொடர்பு கொள்ள, பிரதி எடுத்து நூல் போலாக்கி அனுப்பினார்.

இவர்கள் அனைவரையும் மிக நன்றியோடு இத்தருணத்தில் எண்ணிக் கொள்கிறேன்.

இணையம் தகவல்களை வாரி வழங்கினாலும் அதைச் சரிபார்க்கவே நேரம் மிகுதி எடுத்தது. அமேஸான்.காம் தளத்தில் தேவையான இன்ன பிற நூல்கள் கிடைத்தன.

அடுத்து தொடரின் வாசகர்கள் சிலரைக் குறிப்பிட வேண்டும். நானறிந்து இத்தொடரை 25 வாரங்களும் விடாமல் வாசித்தவர் @arattaigirl சௌம்யா. தொடர்ச்சியாய்த் தன் கருத்துக்களைப் பகிர்ந்து வந்தார். குறைகள் சுட்டினார்; சந்தேகங்கள் கேட்டார்; ஆச்சரியங்கள் கொண்டார். அடிப்படையில் விஞ்ஞான மாணவியாய் இராத அவர் உற்சாகமாய் இத்தொடரை விரும்பி வாசித்தது நான் உத்தேசித்த வெகுஜனத்திரளை தொடர் நல்ல முறையில் சென்றடையும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியது.

போலவே அரசுப் பள்ளி ஆசிரியையான என் மாமியார் திருமதி ஜெயந்தி நடராஜனும் இத்தொடரைத் தொடர்ந்து வாசித்ததோடு பக்கங்கள் சேகரம் செய்து வைத்து சில முறை அவர் வகுப்பு மாணாக்கர்களுக்கு அவற்றை வாசித்துக் காண்பித்திருக்கிறார். அவர்கள் அதை ஓர் ஆர்வத்துடன் எதிர்கொண்டதாக என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

தொடர் முடிந்த பின் இரண்டு பேர் என்னிடம் அது குறித்துத் தொலைபேசியில் பேசினார்கள். இருவருமே முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள். அப்துல் கலாமுடன் 1970களில் நேரடியாய்ப் பணியாற்றியவர்கள். அதில் ஒருவர் பற்றி தொடரிலேயே நான் எழுதியிருக்கிறேன். 24வது அத்தியாயத்தில் எஸ்எல்வி-3யின் சி - அலைவரிசை செலுத்துவாங்கியை (C-Band Transponder) சென்னை விமான நிலையத்தில் நேர்ந்த விபத்தில் காப்பாற்றிய சிவகாமி நாதன் தான் அவர். இன்னொருவர் 1971ல் அப்துல் கலாமால் நேர்முகம் செய்து தேர்ந்தெடுக்கப்பட்டு தும்பாவில் இழை வலிவூட்டிய பிளாஸ்டிக் (Fiber Reinforced Plastic - FRP) தயாரிப்பில் பணியாற்றிய கே. ஜெயபிரகாஷ்.

இருவரும் ஒருமித்த குரலில் தொடர் பற்றிய நல்லபிப்பிராயத்தை வெளிப்படுத்தினர். விஞ்ஞான விஷயங்களைத் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கி இருப்பதாகச் சொன்னார்கள். தமிழ் மொழிபெயர்ப்பின் துல்லியத்தையும் சிலாகித்தார்கள். (அதற்கு ஓர் எல்லை வரை ஐரோப்பிய அகராதி - http://www.eudict.com - உதவிகரமாய் இருந்தது.)

அடுத்து எடுத்து வைக்கும் அடிகளுக்கு இவர்கள் நம்பிக்கை, உற்சாகம் தருகிறார்கள்.

*

வாசகர்களுக்கு என் தரப்பிலிருந்து ஒரு வேண்டுகோள் இருக்கிறது. இந்த நூலைப் படியுங்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம், விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டோரிடம் பரப்புங்கள். இந்தியாவில் நல்ல திறமைசாலிகள் தேசிய விஞ்ஞான ஆய்வு நிறுவனங்களில் அதிகம் பணிக்குச் சேருவதில்லை என்பது பற்றிய எனது ஆதங்கத்தை நூலின் இறுதி அத்தியாயத்தில் சுருக்கமாய்ப் பேசி இருக்கிறேன். அதை உடைப்பதே இந்நூலில் நோக்கம் என்பேன். தொழில்நுட்பத்தில் இந்தியா வல்லரசாக வேண்டும் என விரும்பும் ஒவ்வொருவரையும் இந்த நூலை வாசிக்க அழைக்கிறேன்.

*

பெங்களூரு                                 சி.சரவணகார்த்திகேயன்
24-ஏப்ரல்-2016                               c.saravanakarthikeyan@gmail.com

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்