தமிழ்: நேற்று இன்று நாளை


என் தாய்மொழியை
என் மக்கள் பாடும் பாடல்களை
நான் மறந்து போனால்
என் கண்களின், காதுகளின் பயன் என்ன?
என் வாயின் பயன் என்ன?

-    அலைடெட் நெம்டஷ்கின் (‘என் மொழி’, 1988)

தமிழர்கள் தமிழுக்குத்தரும் முக்கியத்துவம் என்ன என்பதை ஆராயப்புகும் முன் இந்தியாவில் பொதுவாய் தாய்மொழிகளின் இடம் என்ன எனப்புரிந்து கொள்வது அவசியம் எனப்படுகிறது. இந்தியா மிகக்கலவையான தேசம். மொழி அதன் முக்கிய வேறுபாட்டுக்கூறு. இங்கேயே முளைத்தெழுந்த மொழிகள் தவிர ஆதிகாலத்தொட்டு பாரததேசம் மீது நிகழ்ந்த அந்நியப்படையெடுப்புகள் புதிய மொழிகளைக் கொணர்ந்த படிதான் இருந்தன. அப்படி வந்து சேர்ந்த மொழிகளுள் முக்கியமானது ஆங்கிலம்!

ஒருவேளை ப்ரிட்டிஷ் ராஜ்யம் இருநூறு ஆண்டுகள் நீடிக்காது போயிருந்திருந்தால் இந்தியா என்ற ஒற்றை தேசம் உருவாகாதே/ நீடிக்காதே போயிருக்கக்கூடும். அந்த ஒருங்கிணைப்பை நல்கிய காரணிகளில் முக்கியமானது ஆங்கில மொழி. ஆனால் ஆங்கிலத்தின் வரவால், ஆதிக்கத்தால் நிகழ்ந்த முக்கியப் பக்கவிளைவு இந்தி தவிர்த்த பிற பிராந்திய மொழிகள் இயல்பாகவே பின்னுக்குத் தள்ளப்பட்டதுதான்.

இது இரு விதங்களில் நிகழ்ந்தது. ஒன்று அரசு வழியாக; அடுத்தது குடிமக்களின் வழியாக. இந்திய அரசியலமைப்புச்சட்டப்படி நம் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி இந்தியும் ஆங்கிலமுமே. அது போக, கூடுதலாய் தமிழ் உள்ளிட்ட 21 பிராந்திய பாஷைகள் அதிகாரப்பூர்வ மொழிகள் என அரசியலமைப்பு அங்கீகரித்துள்ளது. இதன் யதார்த்தப் பொருள் என்ன? மத்திய அரசாங்கத்தின் அனைத்து பரிவர்த்தனைகளும் இந்தி அல்லது ஆங்கிலத்திலேயே (அல்லது இரண்டிலும்) அமையும். மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் அல்லது இந்த 21 பிராந்திய மொழிகளில் ஒன்றினை/ சிலவற்றை அதிகாரப்பூர்வ மொழியாக அமல்படுத்திக்கொள்ளலாம்.

சுதந்திரத்துக்குப்பின் இன்றைய தேதி வரையிலும் இந்தியாவில் அமைந்த மத்திய அரசுகள் அனைத்துமே தொடர்ச்சியாய் இந்தியைத்தான் முன்னிறுத்தின. அதற்கே அதிக ஊக்குவிப்புகளும், அதன் வளர்ச்சிக்கே மெனக்கெடல்களும் என்றிருந்தன.

இந்தியாவில் மக்கள் பிற மாநிலங்களுக்குப் பணிநிமித்தம் குடிபெயர்வது என்பது சுதந்திரத்துக்குப்பின் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 90களின் தாராள மயமாக்கலுக்குப்பின் இது மேலும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த அன்னிய மொழிச்சூழலைக் கையாள ஒரே மார்க்கம் தாம் ஆங்கிலம் கற்றுக் கொள்வதும் தம் குழந்தைகளுக்கு ஆங்கில வழிக்கல்வியை அளிப்பதுமே என மக்கள் மனதில் பதிந்து விட்டது. (ஆரம்ப காலத்திலிருந்தே உயர்கல்வி என்பது ஆங்கில வழியில் மட்டும் தான் என்றாகி விட்டாலும் முன்பு பள்ளிக்கல்வியேனும் தமிழ் வழியில் இருந்தது.)

அதீத புலம்பெயர்தலும் அதிவேக நகரமயமாதலும் ஆதிக்க மொழியைக்கற்கவும் பேசவும் வலுவான அழுத்தம் கொடுக்கிறது, தாய்மொழி வீழ்ச்சியுறவும் சிலசமயம் அழிந்து போகவும் இது முக்கியக்காரணமாகிறது என்கிறது யுனஸ்கோ அறிக்கை.

உணவு, உடை, நிலம், பழக்க வழக்கங்கள் போன்ற மரபுசார்ந்த மற்ற விஷயங்களில் சொந்த மாநிலத்தின் மீது பிடிப்புள்ளவர்கள் கூட மொழி விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளத்தயங்குவதில்லை. மொழி என்பதுதான் மரபின் ஆணிவேர் என இவர்கள் அறிவதில்லை. அதை இழந்தால் மற்றவையும் மெல்ல விலகும் என்பதே நிதர்சனம்.

இன்று பொதுவாய் அரசுப்பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளில் பிராந்திய மொழியில் பாடம் கற்பிக்கப்பட்டுவதில்லை. நடுத்தர வர்க்கம் மற்றும் அதற்கு மேலுள்ளவர்கள் தம் குழந்தைகளை ஆங்கிலத்தில் கல்வி கற்க வைக்க முனைகின்றனர். ஏழ்மையில் உள்ளவர்களுமே பொருளாதார நிலை காரணமாக அரசுப்பள்ளிகளில் படிக்க வைக்க நேர்கிறதே ஒழிய, அவர்களுக்கும் வாய்ப்புக்கிடைத்தால் ஆங்கிலமே விருப்பம்.

இன்று இந்தியைத்தவிர்த்து பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள ஒரு சராசரி இந்தியக்குடிமகன் பள்ளி வயதில் ஆங்கிலத்தில்தான் எல்லாவற்றையும் கற்கிறான். ஏழ்மை உள்ளிட்ட பிற காரணங்களால் தாய்மொழியில் பயிலும் பிறரும் உயர்நிலைப்பள்ளி அல்லது கல்லூரியில் ஆங்கிலத்துக்கு மாறிக் கொள்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் தாய்மொழியில் பயில்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. என்சிஈஆர்டியின் அகில இந்திய பள்ளிக்கல்விக் கணக்கெடுப்புப்படி ஆரம்பப்பள்ளிகளில் 2002ல் 92.07% ஆக இருந்த தாய்மொழிக்கல்வி 2009ல் 86.62% ஆகக்குறைந்திருக்கிறது (http://www.ncert.nic.in/programmes/education_survey/pdfs/8ConciseReport.pdf).

மாறாக, கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியில் சேர்பவர்களின் எண்ணிக்கை இருமடங்காகி விட்டது என்றும் அப்படி அதிக அளவு ஆங்கில வழிக்கல்வி மாற்றம் நிகழும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று (40.6%) என கல்விக்கான மாவட்டத் தகவல் முறைமையின் புள்ளி விவரம் சொல்கிறது.       

அன்றாட வாழ்வில் தமிழின் இடத்தை உறுதி செய்ய தமிழக அரசு சில குறிப்பிடத் தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. பொதுவிடங்களில் வைக்கப்படும் பெயர்ப் பலகைகள், அரசு அலுவலகங்களில் புழங்கும் ஆவணங்கள் போன்றவை தமிழில் அல்லது தமிழிலும் இருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் பெரும்பாலும் தமிழே பயிற்று மொழி. ஆங்கிலவழி அரசுப்பள்ளிகளில் இரண்டாம் மொழி தமிழ்தான். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு அரசுத்தேர்வுகளில் தமிழை இரண்டாம் மொழிப்பாடமாக எடுத்துப் படிப்பவர்கள் மட்டுமே மாநிலத்தில் முதல் மதிப்பெண் பட்டியலில் இடம் பெறத்தகுதி பெற்றவர்கள். சில கல்லூரிப் படிப்புகளின் முழுப்பாடத்திட்டமும் தமிழில் கற்பிக்கப்படுகிறது. அதில் படித்து முடிப்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் தரப்படுகிறது.

ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறை பல்வேறு பிரிவுகளில் சிறந்த நூல்களுக்குப் பரிசு அளித்துப்பாராட்டுகிறது. இதில் தமிழ் கணிணித்துறையில் சிறந்த பங்களிப்பு செய்தோருக்கும் விருது உண்டு. அரசியல் காரணங்களுக்காகவேனும் உலகத்தமிழ் மாநாடுகள் மற்றும் செம்மொழி மாநாடு போன்றவை அவ்வப்போது நடக்கின்றன. கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்தல் என்பதைக்கூட செய்தாகி விட்டது.

ஆனாலும் தமிழின் பயன்பாடும் அதன் இடமும் கவலைக்குரியதாகவே இருக்கிறது.

மொழிக்கு எழுத்து, பேச்சு என இரு வடிவங்கள் உண்டு. எழுத்து என்பது எழுதுவது, படிப்பது என இரண்டாகப்பிரியும். இன்று தமிழ்நாட்டில் தமிழைப்பேச மட்டும் தெரிந்தவர்களே பெரும்பான்மை. அதில் பாதி பேருக்கு தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்கத்தெரிந்திருக்கும். அதில் ஒரு பகுதியினருக்கு சரளமாய்த் தமிழ் வாசிக்க முடியும். அதில் மிகக்குறைந்த சதவிகிதத்தினருக்கு தமிழை எழுதவும் தெரியும்.

அச்சிறுபான்மையினரில் எத்தனை பேருக்குப் பிழைகளின்றி தமிழ் எழுதத் தெரியும் என இறங்கினால் தமிழ் மீது உண்மை அன்பு கொண்டோருக்கு மாரடைப்பு வரும்.

ஆக, தமிழ் இன்று பெரும்பாலும் பேச்சுமொழி மட்டுமே என்பதே யதார்த்த நிலை.

தமிழை உடைந்த முறையில் மட்டும் பேசக்கூடிய, மிக மெதுவாக எழுத்துக் கூட்டி மட்டுமே தமிழை வாசிக்க முடிந்த, சுத்தமாய்த் தமிழே எழுதவே தெரிந்திடாத ஒரு பலவீனமான, ஆபத்தான தலைமுறை தமிழகத்தில் வேகமாய் உருவாகி வருகிறது.

*

ஊர்கூடித் தேரிழுப்பது போல் அரசு மட்டுமின்றி சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் ஒத்துழைத்தால் மட்டுமே தமிழகத்தில் தமிழ் பிரம்மாண்டமாகத் தழைக்கும். சமூகம் என்றால் ஊடகங்கள், நிறுவனங்கள், பொது மக்களாகிய நீங்கள், நான் எல்லோரும்.

1) குழந்தையின் முதல்மொழி


பேச்சு மொழி, எழுத்து மொழியைவிட முக்கியமானது சிந்தனை மொழி. தமிழன் தமிழில் சிந்திப்பதே சரி. அதற்கு அவன் முதலில் கற்பது தமிழாக இருக்க வேண்டும்.

குழந்தைக்கு முதலில் தமிழ்தான் கற்பிக்கப்பட வேண்டும். கர்ப்பம் தரித்திருக்கையில் கருவிலிருக்கும் சிசுவுடன் பேசும்போதும், மற்றவர்களுடன் உரையாடுகையிலும், பாடல்கள் கேட்கையிலும் தமிழையே தாய் கைகொள்ள வேண்டும். குழந்தை பிறந்த பின் ஆரம்பம் முதலே தமிழில் பேசவும் இரண்டரை வயது முதல் தமிழை வாசிக்க, எழுதக் கற்றுத்தர வேண்டும். எல்லாப்பொருட்களுக்கும், செயல்களுக்கும் தமிழ்ச் சொற்களையே சொல்லித்தர வேண்டும். தமிழில் ஓரளவு நல்ல பழக்கம் வந்த பின் தான் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளைக்கற்பிக்க வேண்டும். இந்த முறையில் இரண்டாம் மொழியைக்கற்பது மிக எளிதாகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்.

இதற்குச்செய்ய வேண்டிய முக்கிய விஷயம் குழந்தைகளை ப்ரிகேஜி அனுப்பாமல் வீட்டிலேயே தமிழ் கற்பிப்பது. அல்லது இப்படி முழுக்கத் தமிழ் கற்பிக்கும் ப்ரிகேஜி பள்ளிகள் இருந்தால் அனுப்பலாம். இரண்டரை முதல் மூன்றரை வயது வரையிலான ஓராண்டு முழுக்க இப்படித் தமிழில் கற்பித்து விட்டு, பிறகு பெற்றோர் விருப்பப்படி எல்கேஜி முதல் ஆங்கில வழிப்பள்ளிகளில் சேர்க்கலாம். அதற்கு முன் தமிழில் ஒரு நிமிடத்தில் 45-60 சொற்கள் வாசிக்குமளவு திறன்பெறல் நலமென்கிறது மொழியியல்.

2) கட்டாய இரண்டாம் மொழி


மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட பள்ளிக்கல்வி பற்றிய 2011 - 2012 ஆண்டுக்கான தகவல் அறிக்கையின்படி தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகியவை பயிற்று மொழிகளாக இருக்கின்றன (http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/statistics/SISH201112.pdf).

தமிழ் வழியில் பயிலாதோரில் தமிழைத் தாய் மொழியாய்க் கொண்டவர்களுக்கு பத்தாம் வகுப்பு வரை இரண்டாம் மொழிப்பாடமாய்த் தமிழைக் கட்டாயம் ஆக்க வேண்டும். பள்ளிகளில் அரசுப்பள்ளி மட்டுமில்லாமல், தனியார் பள்ளிகளிலும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்புகளில் தமிழை இரண்டாம் மொழியாய்த்தொடர்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகை அளிக்க வேண்டும்.

கல்லூரிகளில் (கலை, அறிவியல், வணிகம், மருத்துவம், பொறியியல் என எப்பிரிவு எனினும்) குறைந்தபட்சம் முதல் இரு செமஸ்டர்களில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோருக்கு மட்டும் தமிழைக் கட்டாயப்பாடமாக வைக்க வேண்டும் (ஆங்கிலம் இப்படி ஒரு பாடமாய் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ளது). எத்துறையாய் இருந்தாலும் அதில் தமிழில் கலைச்சொற்கள் பயில்தல், உருவாக்குதல், தமிழில் அத்துறை பற்றி எழுதுதல் குறித்த ஒரு எலக்டிவ் பாடம் சேர்க்கப்பட வேண்டும்.

3) வீட்டில் பேச்சுமொழி


அனைவரும் வீட்டில் தமிழிலேயே பேச வேண்டும். குழந்தைகளுக்கும் அவ்வாறே கற்பிக்க வேண்டும். இன்று பல நடுத்தர வர்க்கக்குடும்பங்களில் தம் பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசுவதைப்பெருமையாகக் கொள்ளும், வெளிப்படுத்தும் போக்கு இருக்கிறது. ஆங்கிலம் ஒரு மொழியறிவு என்ற எல்லை தாண்டி கௌரவச்சின்னமாக ஆக்கி விட்டிருக்கிறார்கள். முதலில் அடிப்படையான ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா ஒரு கலவையான தேசம் என்பதாலும், மேற்குலகோடு நமக்குப் பாலமான மொழி என்பதாலும் மட்டுமே ஆங்கிலத்தை இங்கே அனுமதித்து வைத்திருக்கிறோம். அதற்குரிய இடத்தை மட்டும் அதற்கு அளித்தால் போதுமானது.

ஆங்கில வழிக்கல்வி என்பதால் பல நகரத்துப்பள்ளிகளில் ஆங்கிலம்தான் பிரதான உரையாடல் மொழியாக இருக்கிறது. ஆசிரியர்- மாணவர், மாணவர்- மாணவர் என அனைத்துப்பேச்சுகளும் ஆங்கிலத்தில்தான் நடக்கிறது. தமிழில் பேசினால் அபராதத் தொகை விதிக்கும் பள்ளிகள் உண்டு. பெற்றோர்- ஆசிரியர் சந்திப்பில் வீட்டிலும் குழந்தையுடன் ஆங்கிலத்தில் பேசிப்பழகுங்கள் என்று அறிவுரை வழங்குகிறார்கள்.

பணிகளில் தங்குதடையின்றி தொடர்பு கொள்ளுமளவு பேசவும், எழுதவும், படிக்கவும் ஆங்கிலத்தை நாம் அறிந்து கொண்டால் போதுமானது. ஆங்கில வழிக்கல்வியின் மூலமாகவும், பள்ளியிலும் கல்லூரியிலும் பேச்சுமொழியாக இருப்பதன் மூலமும் (அப்படியே இல்லை என்றாலும் பிற்பாடு அலுவலகத்தில் பேசத்தொடங்குவதன் மூலமும்) போதுமான அளவு ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டு விட முடியும்.

தமிழ் வழிக்கல்வியில் பன்னிரண்டாவது வரை படித்து விட்டுப்பின் ஆங்கில வழியில் பொறியியல் படித்து விட்டு இப்போது பன்னாட்டு நிறுவனங்களில் எந்த வித மொழிப்பிரச்சனையும் இன்றி ஆங்கிலத்தில் சரளமாய்ப் பேசிப்பணிபுரியும் நண்பர்களை நான் அறிவேன். அதிகபட்சம் கல்லூரி சேரும் ஆரம்ப காலத்தில் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மாறச்சிக்கல் இருந்திருக்கும். அதைத்தாண்டி விட்டால் மற்றபடி ஒன்றும் சிரமமில்லை. என் விஷயத்திலும் முழுக்கவே ஆங்கில வழிக் கல்வி என்றாலும் நான் பள்ளி, கல்லூரிகளில் ஒருபோதும் ஆங்கிலம் பேசியவன் அல்லன். அலுவலகத்தில்தான் முதலில் ஆங்கிலம் பேச வேண்டிய தேவை வந்தது. பள்ளியில் ஆங்கில இலக்கணம் படித்திருந்தாதாலும் ஆங்கில வழிக்கல்வி என்பதாலும் அதை எதிர்கொள்வது அவ்வளவு சிரமமானதாய் இருக்கவில்லை. எல்லோருக்கும் அது முடியும் என்றே நினைக்கிறேன். அடிப்படை ஆங்கிலம் தெரிந்து இருப்பின், அம்மொழியை ஓரளவு பேசவும் எழுதவும் கற்க ஆறுமாத காலம் போதும்.

அடுத்த முறை வீட்டிலும் குழந்தையுடன் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று ஆசிரியர் அறிவுரை சொன்னால் அவர்களிடம் நேரடியாகவே முடியாது என மறுத்து விடுங்கள்.

4) வாசிப்புப்பழக்கம்


பொதுவாகவே இந்திய மனம் வாசிப்புப்பழக்கத்துக்கு எதிரானது என்பது என் துணிபு. அரிதான விதிவிலக்குகள் தவிர இந்தியாவில் விற்பனையாகும் பிராந்திய மொழி நூல்களின் எண்ணிக்கையே இதை உரத்துச்சொல்லும். நூல்களுக்குக்கூட போக வேண்டியதில்லை. நாளிதழ்கள், சஞ்சிகைகளின் விற்பனையைக் கொண்டே இதைச் சொல்லி விடலாம். இங்கே புத்தகக்காட்சி போட்டால் புத்தகங்களை விட மிளகாய் பஜ்ஜியும், பெரிய அப்பளமும், லிச்சி ஜூஸும் தான் அதிகமாய் விற்பனையாகிறது.

எந்தப்பெற்றோரும் தமிழை வாசிக்கச் சொல்லி குழந்தைகளை ஊக்குவிப்பதில்லை. வாசிப்பு என்பதே பிரதிபலன் எதிர்பார்க்கும் லௌகீக விஷயமாகி விட்டது. இந்தப் புத்தகத்தை வாசிப்பதால் குழந்தைக்கு என்ன லாபம்? என யோசிக்கின்றனர். அப்படி பலன் தரக்கூடிய நூல்கள் தமிழில் ஜோதிட நூல்களும் சமையல் குறிப்புகளும் கலவி வழிகாட்டிகளும் மட்டும்தான். அவற்றைத்தாண்டி வாசிப்பு நிகழ்வதில்லை.

குழந்தைகளிடம் தமிழ்ப்புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். அது இலக்கியம், அபுனைவு எதுவாகவும் இருக்கலாம். பழையது, புதியது என்ற வேறுபாடு வேண்டியதில்லை. தமிழில் இத்தனை அபார விஷயங்கள் இருப்பதைச் சிறுவயதிலேயே உணரும் ஒருவர் ஒருபோதும் அப்பழக்கத்தைக்கைவிட மாட்டார்.

இதனால் இரு லாபங்கள். வருகின்றன: ஒன்று குழந்தையிடம் வாசிப்புப் பழக்கத்தை உண்டாக்குகிறோம்; அடுத்து தாய் மொழியைக்குழந்தைக்கு நெருக்கமாக்குகிறோம். பிற்பாடு ஆங்கில நூல்கள் வாசிக்கும் பழக்கம் சேர்ந்தாலும் தமிழ் வாசிப்பது நிற்காது. நீண்டகாலத் தமிழ் வாசிப்புப்பழக்கம் கொண்ட ஒருவர் நிச்சயம் அந்தப்பழக்கத்தை - அதன் வழியாகத் தாய்மொழியை - அடுத்த தலைமுறைக்குக்கடத்த முயல்வார்.

குழந்தைகளிடம் வாசிப்புப்பழக்கத்தை உண்டாக்க முதலில் நாம் வாசிக்க வேண்டும். வீட்டில் நிறையப்புத்தகங்கள் வாங்க வேண்டும். இன்று ஒருவர் குடும்பத்துடன் சினிமாவுக்குப்போனால் நகர்ப்புறத்தில் குறைந்தபட்சம் ஐந்நூறு ரூபாய் செலவாகி விடுகிறது. கிராமப்புறத்திலும் எப்படியும் இருநூறு ஆகிவிடுகிறது. மாதம் ஒரு சினிமா என வைத்தாலும் அதற்கு இணையாய் புத்தகங்களுக்கும் செலவழிக்கலாம்.

அதுபோக, மாதம் ஒருமுறை குழந்தைகளை வார இறுதி நாட்களில் நூலகத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டும். குறைந்தது அரை நாள் அங்கே குழந்தைகளைத் தாய்மொழியில் புத்தகங்களை வாசிக்க வைக்க வேண்டும். இங்கே அரசாங்கமும் ஒரு வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நூலகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதன் தரத்தை உயர்த்த வேண்டும். பரிமாரிப்பை மேம்படுத்த வேண்டும். அதிக எண்ணிக்கையில் நூல்கள் வாங்கப்பட வேண்டும். புத்தகங்களை வகைமை பகுத்து சீராய்ப்பிரித்து வைக்க வேண்டும். குறிப்பாய் குழந்தைகளுக்கென வயதுவாரியாய்த் தனிப்பிரிவுகள் வைக்கலாம்.

தமிழில் மேலும் நல்ல புத்தகங்கள் எழுதப்பட வேண்டும். நல்ல புத்தகங்கள் பற்றிய தகவல்கள் மக்களுக்குக்கொண்டு செல்லப்பட வேண்டும். அரசும், ஊடகங்களும், அமைப்புகளும், தன்னார்வலர்களும் இதைச்செய்யலாம். மேலும் நிறைய தரமான மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் வெளியாக வேண்டும். தமிழன் ஓர் இலக்கியத்தை, அபுனைவை வாசிக்க ஆங்கிலத்துக்குப்போகாமல் தமிழிலேயே கிடைக்க வேண்டும்.

5) புலம்பெயர்ந்தோருக்கான கல்வி


பிற மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு தம் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பது சிரமமான வேலையாக இருக்கிறது. உதாரணமாய் நான் பெங்களூரில் வசிக்கிறேன். தமிழ் அதிகமாய்ப் புழங்கும் இங்கேயே தமிழை இரண்டாம் மொழியாய்க் கொண்ட பள்ளிகள் நான்கு மட்டுமே இருக்கின்றன. அதில் இரண்டு வசதியானோர் மட்டுமே படிக்க முடிந்த பள்ளி. ஒன்று தங்குமிடப்பள்ளி. பெங்களூர் தமிழ்ச்சங்கம் தமிழ் வகுப்புகள் நடத்தினாலும் அது சிலமாத அறிமுகக்கல்வி மட்டுமே. மொழியைச் சரியாய், சீராய்க்கற்க அது போதாது. அதைத்தவிர்த்து தமிழ் கற்க இங்கு வேறு மார்க்கங்கள் இல்லை. பெற்றோர் தாமே சொல்லித்தந்தால் தான் உண்டு. தொடர்ந்து படிநிலைக்கேற்ப பெற்றோர் தாமாக அப்படிச் சொல்லித்தருவது எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றல்ல. பள்ளியில் கற்பிப்பதற்கு அது இணையும் இல்லை.

அதனால் தமிழக அரசு ஒவ்வொரு இந்திய மாநிலத்திலும் இருக்கும் தமிழர்களின் எண்ணிக்கைக்கேற்ப தமிழ் மட்டும் கற்பிக்கும் பள்ளிகளைத்தொடங்க வேண்டும். மாலைப்பொழுதுகள், வார இறுதிகள் என இரு வகைகளில் இது நடக்க வேண்டும். அவரவர்க்குத் தோதுபடும் வகுப்புகளில் பங்கெடுத்துக் கொள்வர். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை என வழக்கமான பள்ளிப் பாடத்திட்டத்துடனே நடத்தலாம், தேர்வுகள் வைக்கலாம், முடிவுகள் அறிவிக்கலாம். ஒரே வித்தியாசம் இங்கே தமிழ் என்ற ஒரு பாடம் மட்டுமே கற்பிக்கப்படும். மாணவர்கள் வழக்கமாய்ச் செல்லும் பள்ளிக்கு மாற்று ஏற்பாடு அல்ல இது. அது போக ஒரு கூடுதல் வகுப்பு. குழந்தைகள் பள்ளிக்கு வெளியே தனிப்பட்டு இசை கற்பது போல், நடனம் கற்பது போல், யோகா கற்பது போல், க்ரிக்கெட் கற்பது போல் தமிழைக்கற்கும் முறை.

இதேபோல் பிற மாநிலங்களில் தனியார் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்படுவதையும் அனுமதிக்கலாம், ஊக்குவிக்கலாம். இன்னும் ஒருபடி மேலே போய் அந்தந்த மாநில அரசுகளுடன் பேசி இப்பள்ளிகளில் தமிழ் படிப்பவர்கள் அதுபோக, தம் முதன்மைப் பள்ளியில் இரண்டாம் மொழி என ஏதும் படிக்க வேண்டியதில்லை என விலக்குப் பெற்றத் தரலாம். பள்ளிகளில் ஒப்பந்த சேவை (Outsourcing) அடிப்படையில் தமிழ் பாடப்பள்ளியை இணைக்கலாம். அதனால் மாணவர்களின் பாடச்சுமை குறையும்.

உதாரணமாய் கர்நாடகத்தில் ஏற்கனவே தமிழ் உள்ளிட்ட சில மொழிகள் இரண்டாம் மொழியாய் பயிற்றுவிப்பதற்கு அனுமதி உண்டு. அவர்களுக்கு இந்த ஏற்பாட்டை ஏற்பதில் எந்தப்பிரச்சனையும் இருக்கப்போவதில்லை. 1) இதைப் பயன்படுத்தப் போவது தமிழைத் தாய்மொழியாய்க்கொண்டோர் மட்டுமே. 2) அவர்களும் இதே போன்ற ஏற்பாட்டை தம் மக்களுக்கு தமிழகத்தில் ஏற்படுத்த ஒப்பந்தம் செய்யலாம்.

இதே போன்ற தமிழ்ப்பாடப் பள்ளிகளை அடுத்த கட்டமாய் தமிழர்கள் அதிகமாய் வசிக்கும் வெளிநாடுகளிலும் ஆரம்பிக்கலாம். அவர்கள் கல்வி அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொள்வது சிரமம் என்றாலும் கூடுதல் கல்வியாக அளிக்கலாம்.

6) ஊடகங்களின் பொறுப்பு


ஊடகங்கள் என்பது அச்சு, தொலைக்காட்சி, வானொலி, சினிமா மற்றும் இணையம். இவை மக்களின் மனதை வலுவாய் பாதிக்கின்றன. பேச்சுமொழியாகவேனும் தமிழ் இன்று நீடித்திருக்கக்காரணம் கூட தமிழ் சினிமாதான் என்பது என் அனுமானம்.

சினிமாவில் தமிழ் தலைப்பு போன்ற ஒன்றிரண்டு தவிர இவற்றில் தமிழ்ப்பயன்பாடு குறித்து அரசு கட்டுப்படுத்த அதிகம் வாய்ப்பில்லை. அதனால் அவர்களே பொதுவாய் சில விஷயங்களைச்செய்யலாம். தமிழ் ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்கள், நிகழ்ச்சி அறிவிப்பு, சினிமா ட்ரெய்லர், டைட்டில் கார்ட், போஸ்டர்கள் (உரையாடல், காட்டப்படும் எழுத்து என) முழுக்கத் தமிழில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது.

நம் தமிழர்கள் கண்களில் தமிழ் எழுத்துக்கள் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் செவிகளில் தமிழ்ச்சொற்கள் விழுந்து கொண்டே இருக்க வேண்டும். அது ஆழ்மனதில் தமிழைப்பதிய வைக்கும். அவற்றை வாசிக்க, புரிந்து கொள்ள தமிழ் கற்பது நிகழும். சினிமா பார்த்து மட்டுமே நன்கு தமிழ் பேசக்கற்றுக் கொண்ட வேற்று மொழிக்காரர்களை அறிவேன். எனில் சொந்த மொழி மனப்பழக்கமாய்ப் பதியாதா!

சிறியதோ பெரியதோ தமிழகத்தில் விற்கப்படும் பொருட்கள் யாவிலும் மேலுறையில் பொருளின் பெயர், கலவை, செய்முறை, பிற விபரங்கள் யாவற்றையும் தமிழிலும் எழுத வேண்டும் என்று அரசு கண்டிப்பான சட்டம் ஒன்று கொண்டு வர வேண்டும்.

நம் தரப்புப்பங்களிப்பாய் வீட்டில் தமிழ் நாளேடுகள், சஞ்சிகைகள் ஆகியவற்றை வாங்கலாம். தமிழ் சேனல்கள், தமிழ்ப்பண்பலை மற்றும் தமிழ்த்திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். மற்றவை கூடாது என்பதல்ல. ஆனால் தமிழை ஒதுக்காமல் மொழியைத்தொடரவேனும் இவற்றைச்செய்யலாம். இவை யாவும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தும்.

7) செல்பேசிகளில் மொழியாக்கம்


இன்று கொஞ்சமேனும் இளைஞர்கள் மத்தியில் தமிழ் புழங்க சமூக வலைதளங்களே காரணம். அதுவும் பெரும்பாலும் ஸ்மார்ட்ஃபோன்களின் மூலமான பயன்பாடு தான்.

சட்டைப்பையில் வைக்கப்படும் செல்பேசிகள் எப்போதும் மக்களின் இதயத்துக்கு நெருக்கமானவை. அதில் தமிழ் கொஞ்சும் வாய்ப்புகள் அதிகரிக்கும் போது இயல்பாகவே அதன்வழி தமிழைப்பயன்படுத்த இளைஞர்கள் ஆர்வம் காட்டுவர்.

அரசுத்தரப்பிலிருந்து செல்பேசிகளில் தமிழ்ப்பயன்பாட்டை ஊக்குவிக்க முயற்சி எடுக்க வேண்டும். இதில் இரண்டு முக்கிய விஷயங்களைச்செய்ய வேண்டும்:

(i) தமிழ் யூனிகோட் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதால் செல்பேசிகளில் தமிழ் வாசிக்க பெரும்பாலும் எந்தச்சிக்கலும் இருப்பதில்லை. ஆனால் எழுதுவதில் உண்டு. ஏற்கனவே செல்லினம், தமிழ்விசை போன்ற ஸ்மார்ட்ஃபோன்களுக்கான தமிழ் ஒலிபெயர்ப்பு விசைப்பலகைகள் இருந்தாலும் அரசு தகுதியான ஆட்களை அமர்த்தி அவற்றைச் சீராக்கி அதிகாரப்பூர்வ விசைப்பலகைச் செயலி ஒன்றை வெளியிடலாம்.

எவ்விதக்குழப்பமும் இல்லாமல் அனைத்து தமிழ் எழுத்துக்களையும் உள்ளிட வகை செய்ய வேண்டும். உதாரணமாய் 'ஔ'கார வரிசை எழுத்துக்களைத் தமிழ்விசை செயலியில் எப்படி உள்ளிடுவது என இன்று வரை எனக்குத்தெரியாது. அதற்கு மாற்றாக 'ஒ' மற்றும் 'ள' ஆகிய இரு எழுத்துக்களைச்சேர்த்து எழுதி வருகிறேன். போலவே சிலர் 'ஸ்ரீ' என்ற எழுத்தை எப்படி உள்ளிடுவது எனத் தெரியாமல் அதை மட்டும் ஆங்கில எழுத்துக்களில் ‘Sri’ என்று எழுதுவதைப் பார்க்கிறேன். இவை யாவும் விசைப்பலகையின் போதமையால் நேரும் பிசிறுகள். இந்தப்பிரச்சனைகள் எல்லாம் சரிசெய்யப்பட்டு அதிகாரப்பூர்வ விசைப்பலகை ஒன்று கொண்டு வரப்பட வேண்டும்.

(ii) செல்பேசி மெனுக்களில் இருக்கும் பயன்பாட்டு மொழியையே ஆங்கிலத்துக்குப் பதிலாக தமிழில் கொண்டு வருவது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அந்தத் தமிழாக்கம் உறுத்தாமல், நகைச்சுவை ஆகாமல் இயல்பாக இருக்க வேண்டும். அதனால் இதையும் அரசே ஏற்று அதிகாரப்பூர்வக் கலைச்சொல்லாக்கப் பட்டியல் ஒன்று அளிக்க வேண்டும். பிறகு ஆண்டுதோறும் அது புதுப்பிக்கப்பட வேண்டும்.

பிறகு செல்ஃபோன் நிறுவனங்களுடன் (ஆப்பிள், சாம்சங், மைக்ரோமேக்ஸ் போன்று அதிகம் விற்கும் நிறுவனங்களிலிருந்து தொடங்கலாம்) தமிழ் விசைப்பலகையை அவர்களின் ஸ்மார்ட்ஃபோன்களில் முன்னிருப்பாக (default option) சேர்த்து வெளியிட அரசு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். செல்பேசி மெனுக்களை தமிழில் வைத்துக் கொள்ள முடியும் என்பதை அனைவருக்கும் சென்றடையும் முறையில் விளம்ரபம் செய்யலாம். வழக்கமாய் வெளியிடப்படும் மாதிரிகளுடன் (models) தமிழ்ப் பதிப்பு செல்பேசிகள் வெளியிடலாம். உதாரணமாய் சாம்சங் கேலக்ஸி எஸ்7 வெளியாகும் போது சாம்சங் கேலக்ஸி எஸ்7 - தமிழ் என்ற பிரத்யேக தமிழ்ப் பதிப்பு மாதிரியும் வெளியாகும். அதில் முன்னிருப்பாக தமிழ் மெனுக்கள் இருக்கும்; விசைப்பலகையும் தமிழே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இது அரசாங்க ஒப்பந்தத்தின் மூலமே சாத்தியம்.

8) இணைய எழுத்துக்கள்


விக்கிபீடியாவில் இருக்கும் தமிழ்க் கட்டுரைகளை ஆங்கிலத்துக்கு இணையாக விரிவாக்கவும் செறிவாக்கவும் வேண்டும். தற்போது இல்லாத கட்டுரைகளைப் புதிதாக எழுதிச்சேர்க்க வேண்டும். பழந்தமிழ் நூல்களை பழமை முதல் நவீனம் வரையிலான பல்வேறு உரைகளுடன் பதிவேற்ற வேண்டும். ஐந்து பேரின் உரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் திருக்குறளுக்கு ஏற்கனவே அப்படி ஒரு தளம் இருக்கிறது (http://www.thirukkural.com/). இது போல் மற்ற பழந்தமிழ் நூல்களுக்கும் கொண்டு வரப்பட வேண்டும். தமிழில் நாட்டுடமையாக்கப்பட்ட அத்தனை பேரின் நூல்களும் இலவசமாக அனைத்து வடிவிலும் இணையத்தில் ஏற்றப்பட வேண்டும்.

இணையத்தில் எளிமையாகத் தமிழ் மொழியைக் கற்பிக்கும் பாடங்களை அதிகரிக்க வேண்டும். கிட்டத்தட்ட பள்ளிப் பாடத்திட்டத்தில் வகுப்புவாரியாக இருக்கும் தமிழ் நூல்களைப் போலவே - ஆனால் ஒலி, ஒளி உள்ளிட்ட இணையச்சாத்தியங்களைப் பயன்படுத்தி மேலும் எளிமைப்படுத்தப்பட்டதாக - இப்பாடங்கள் அமைய வேண்டும். இவற்றுக்கு ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தும் செயலிகளும் (apps) வெளியிடலாம்.

இவை இரண்டும் தமிழ் இணையக் கல்விக்கழகம் (http://www.tamilvu.org/), மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத்திட்டம் (http://www.projectmadurai.org/) போன்ற அரசு / தனியார் முயற்சிகளில் ஓரளவு நடந்தேறி வருகிறது என்றாலும் மக்களைச்சென்றடையும் வகையில் இவை மேம்படுத்தப்பட வேண்டும். இந்த இணைய முயற்சிகளை அரசே முன்னின்று நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உதவலாம்.

9) தமிழ்க்கருவிகள்


ஆங்கிலத்துக்கு இணையான மொழிக்கருவிகள் தமிழில் இல்லை என்பதை எவரும் உணர முடியும். கூகுள் போன்ற தலைசிறந்த தேடுபொறியே தமிழைப் பொறுத்தவரை போதாமையுடன்தான் உள்ளது. வேற்றுமை உருபுகள், சந்தி முதலிய புணர்ச்சிகள், சுருக்கக்குறியீடுகள், இணைச்சொற்கள், ஒலிபெயர்ப்புச்சொற்கள் போன்றவற்றைப் புரிந்து கொண்டு தேடும் திறன் இன்று அதற்கில்லை. அதைச்சீர் செய்ய வேண்டும். கூகுளே அதைச்சரியாக்கும் வரை காத்திராமல் நாமே செயலிகள் மூலம் இதை ஓரளவு செய்ய முடியும். பல்கலைக்கழகங்கள் இதை முன்னெடுத்துச்செய்யலாம்.

துல்லியமான சொற்களைத்தரும் ஆங்கிலம் - தமிழ் அகராதி இல்லை. (இருப்பதில் சுமாரானது ஐரோப்பிய அகராதி http://www.eudict.com/). நல்ல தமிழ் - தமிழ் அகராதி கூட இல்லை (சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/ பரவாயில்லை). அனைத்து இயங்குதளங்களுக்கும் தோதுபடும் தமிழ் மென்பொருள் இல்லை (NHM Writer விண்டோஸில் மட்டும் தான் செயல்படும்). விதவித யூனிகோட் தமிழ் எழுத்துருக்கள் எளிதாய்க் கிடைப்பதில்லை. எழுத்துப் பிழைகளை, இலக்கணப் பிழைகளைச் சரிசெய்யும் கருவிகள் இல்லை. சொற்களின் உச்சரிப்பை வழங்கும் தளங்கள் இல்லை. இவை யாவற்றையும் அரசு செய்ய முயற்சி எடுக்க வேண்டும்.

10) சில சுயஒழுக்கங்கள்


வீடு, சங்கம் மற்றும் நிறுவனங்களில் தமிழறிந்தோருக்குத்தரும் அழைப்பிதழ்களை, சுற்றறிக்கைகளைத் தமிழிலேயே அச்சடிக்கலாம். சாத்தியமான இடங்களில் தமிழில் விண்ணப்பப் படிவம் நிரப்பலாம்; தமிழில் கையெழுத்திடலாம். வீட்டு வெளிச்சுவர், கதவு முதலிய இடங்களில் பொறிக்கும் பெயர்கள் தமிழிலிருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். தமிழறிந்தவர்கள் மட்டும் கூடுமிடங்களில் தமிழில் உரையாடலாம்.

தமிழ் தெரிந்தவர்களுக்குத் தமிழில் மின்னஞ்சல் அனுப்பலாம். ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தமிழில் எழுதலாம். குடும்ப விழாக்களில், பள்ளிகளில் நடத்தும் போட்டிகளில், நட்புப்பாராட்டல்களில் தமிழ்ப் புத்தகங்களைப் பரிசளிக்கலாம். ஆண்டுதோறும் தவறாமல் குடும்பத்துடன் புத்தகக் காட்சிக்குச்செல்லலாம். தமிழ் டிஷர்ட்கள் அணிவதும், தமிழ்ப்பொன்மொழிகளை வீட்டுச்சுவற்றில் மாட்டுவதும் கூட நல்ல முயற்சிகளே. உற்றார் உறவினர், சுற்றம் நட்புக்கு தமிழைப்பேண வேண்டியதன் அவசியத்தை, வழிமுறைகளை உரைக்கலாம்.

கேலிக்குள்ளாகிடாத அளவில் சுத்தத்தமிழில் பேசலாம். குழந்தைகளுக்கு மட்டுமின்றி நிறுவனங்களுக்கு, பொருட்களுக்கு, குழுக்களுக்குக்கூட தமிழில் பெயர் சூட்டலாம்!

*

இன்றைய போட்டிமிகு சூழலில் வாழ ஆங்கிலம் அறிவது நிச்சயம் அவசியம்தான். ஆனால் தமிழைக்கொன்று போட்டு அதன் மீதமர்ந்து ஆங்கிலம் கற்பது அறிவீனம்.

யுனஸ்கோ அறிவித்திருக்கும் அழியும் ஆபத்திலிருக்கும் 197 இந்திய மொழிகளில் தற்போது தமிழ் இல்லை (http://www.unesco.org/languages-atlas/). ஆனால் நம் அதீத ஆங்கில மோகம் தொடர்ந்தால் அதில் தமிழும் வரும் காலம் வெகுதொலைவில் இல்லை.

தமிழைக் கற்றுக் கொண்டு எல்லோரும் காவியம் படைக்கும் பாண்டித்யம் பெற வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. நாமும் வரப்போகும் நம் சந்ததிகளும் தமிழைப் பேசவும், படிக்கவும், எழுதவும் மட்டுமேனும் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்கு நாம் மேற்சொன்னது போன்ற சில எளிய நடவடிக்கைகளைத் தீவிரமாய் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. தாய்மொழிதான் கலாசாரத்தை, பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவல்ல பழம்பாலம். அதை வலுவாக்குவோம்.

***

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்