நிர்பயம் Vs நிர்மல்யம்

நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.


மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்.

இந்தியாவில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கான காரணங்களாகத் தோன்றுவனற்றை இங்கே பட்டியலிடுகிறேன்.

1. அதிக மக்கட்தொகை

இந்தியா ஒரு சிக்கலான தேசம். இதன் அதீத மக்கட்தொகை ஒருவகையில் தொந்தரவு. அரசு அவ்வளவு எளிதாய் இத்தனை பேரை அதிகாரத்தின் பேரில் தன் கட்டுப்பாட்டில் வைக்க முடியாது. இங்கே காவல் துறை என்பது முழு பாதுகாப்பை உறுதி செய்யும் அமைப்பு அல்ல. 10,000 பேருக்கு வெறும் 13 போலீஸ்காரர்கள் மட்டுமே நம் நாட்டில் இருக்கிறார்கள். இத்தனை ஜனத்திரளைக் கையாள்வது சிரமமான விஷயம். பாலியல் வல்லுறவு என்றில்லாமல் பொதுவாகவே நம் நாட்டில் குற்றங்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க மக்கட்தொகை ஒரு முக்கியக் காரணம்.

2. காவல்துறை மெத்தனம்

ஒருபுறம் போலீஸ் பொதுமக்களின் மோசமான‌ விகிதாச்சாரம் காவல் துறையின் செயல்பாட்டுக்குத் தடை என்றால் இன்னொரு புறம் அவர்களின் அலட்சியமும் திறமைக் குறைபாடுகளும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன. நிர்பயா வழக்கு ஊடக வெளிச்சம் விழுந்து நாடறிந்ததால் அத்தனை குற்றவாளிகளையும் அதிவிரைவில் கைது செய்தனர். அந்த அதிர்ஷ்டம் (?!) இங்கு பாதிக்கப்பட்ட எத்தனை பெண்டிருக்குக் கிடைக்கிறது? முக்கால்வாசி நேரம் குற்றவாளிகள் அகப்படுவதே இல்லை. அப்படியே கிடைத்தாலும் லஞ்சம் வாங்கிக் கொண்டோ, செல்வாக்குக்கு அஞ்சியோ, விசாரணையில் / ஆதாரம் திரட்டுவதில் மெத்தனமாய் இருப்பதாலோ விடுவிக்கப்பட வாய்ப்புண்டு.

3. சட்டங்களின் போதாமை

நிர்பயா சம்பவத்துக்குப் பின் பாலியல் வல்லுறவு தொடர்பான சட்டங்கள் மேலும் நுணுக்கமாக்கப்பட்டு தண்டனைகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு நல்ல முன்னேற்றம் தான். ஆனால் ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்ற சித்தாந்தத்தில் தான் இந்திய தண்டனைச் சட்டங்கள் எழுதப்பட்டிருக்கின்றன‌. சட்டத்தின் அத்தனை ஓட்டைகளையும் தாண்டி வலுவான ஆதாரங்கள் மூலம் ஒருவேளை தண்டனை தீர்பானாலும் ஆயிரம் அப்பீல்கள் செய்து ஒரு குற்றவாளி தப்பிக்க முடியும். குறைந்தபட்சம் ஆண்டுக்கணக்கில் காலந்தாழ்த்த முடியும். ஏற்கனவே மரண தண்டனைகள் மிக அரிதாகவே வழங்கப்படுகின்றன. இதில் மரண தண்டனை ஒழிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். மைனர் என்றால் எவ்வளவு மோசமான குற்றம் என்றாலும் விடுவிக்கிறோம். பெரிய மக்கட்தொகை கொண்ட நாட்டில் தண்டனை பயத்தின் மூலமே மக்களை ஒழுக்கமாய் நடக்க வைக்க முடியும். இங்கு அது இல்லை.

4. புகார் அளிக்காமை

பாலியல் குற்றம் நடந்தாலும் வெளியே சொல்ல அவமானப்பட்டும், குற்றவாளியால் மிரட்டிய‌ பயத்தினாலும், போலீஸ் / கேஸ் போன்றவற்றுக்கு அஞ்சியும், எதிர்கால நலன் கருதியும், குடும்பம் பாழாகும் என்றெண்ணியும் பெரும்பாலான பெண்கள் அதை வெளியே சொல்வதில்லை. சொன்னால் தானே காரணம் என்றும் சொல்லப்படுவோம் என்பதாலும்.

5. கலாசாரத் தளைகள்

இந்தியக் கலாசாரம் என்பது விதிகளால் ஆனது. அது பற்றி நாம் பெருமை பேச நிறைய இருந்தாலும் அது இன்றைய நடைமுறையில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தி வைத்திருப்பதை மறுப்பதற்கில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பது அதில் முக்கியமான ஒன்று. முதலில் ஆண் தனக்குப் பிடித்த‌ ஒரே ஒரு பெண்ணைத் தேர்ந்து மணம் செய்ய வேண்டும். பிறகு ஆயுள் முழுக்க அந்த இருவருக்குள் மட்டுமே பரஸ்பரம் காமத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இன்றைய உலக மயமாக்கப்பட்ட அவசர உலகில் ஆணும் பெண்ணும் பல்வேறு சூழல்களில் ஒன்றிணைந்து பழக வேண்டிய சூழலில் இந்தக் கட்டுப்பாடைப் பேணுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. அவ்வேளையில் வலுக்காட்டாயமாய் கலாசாரத்தைப் பின்பற்ற வேண்டி இருப்ப‌வன் பொறியில் சிக்கிக் கொண்டதாகவே உணர்கிறான். அதிலிருந்து விடுபட விரும்புகிறான்.

6. திருமணக் காத்திருப்பு

இங்கே ஆண் கலவி பெறத் திருமணம் செய்வது தான் சமூகம் ஏற்றுக் கொண்ட வழி. (அது இல்லாமல் காமம் வேண்டும் எனில் பணம் செலவழிக்க வேண்டும். அல்லது காதல் செய்ய வேண்டும். அதுவும் இல்லை எனில் திறமையாய்க் கள்ள உறவில் ஈடுபட வேண்டும். இவை எல்லா தேசங்களிலும் உள்ளது தான் என்றாலும் இங்கே சமூகம் அங்கீகாரம் இல்லை. செய்வதும் சுலபமில்லை.) ஆண் வயதுக்கு வந்த பின் மணவழிக் கலவி பெற தலைகீழாய் நிற்க வேண்டி இருக்கிறது. அவன் ஓரளவேனும் படிக்க வேண்டும், வேலைக்குப் போக வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும். இதெல்லாம் நிகழ்ந்தால் தான் கல்யாணம், அப்புறம் கலவி. 25 முதல் 30 வயதின் போது தான் இங்கே ஆண் தன் முதல் கலவியைக் கொள்ள முடிகிறது. அதற்கு 10-15 ஆண்டுகள் முன்பே அவன் உடல் அதற்குத் தயாராகி ஏங்கத் துவங்கி விடுகிறது.

 7. பெண்களின் ஆர்வமின்மை

இந்தியாவில் மட்டும் தான் இப்படி ஒரு வினோத விஷயம் இருக்கும் எனக் கருதுகிறேன். மணமான பின்பும் ஆண்களுக்கு சரிவரக் காமம் கிடைப்பதில்லை. குழந்தை பெறும் வரையே இந்தியப் பெண்களுக்கு காமத்தில் தொடர்ச்சியாய் ஆர்வம் இருப்பதாய் நினைக்கிறேன். பிறகு (முப்பதுகளில்) அது படிப்படியாயக் குறைந்து ஒரு கட்டத்தில் (நாற்பதுகளில்) முழுக்க நின்று போகிறது. பிறகு விரும்பினாலும் இடுப்பு வலி, எடை அதிகரிப்பு, மாதவிலக்கு நிற்பது, கருப்பைப் பிரச்சனைகள் என அவர்களின் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. மாறாக ஆணுக்கு கிட்டத்தட்ட தினம் கலவி வேண்டும். அதுவும் ஆயுள் முழுக்க வேண்டும். இது ஆளுக்கு ஆள் வேறுபடும் என்றாலும் ஆண் தன் வாழ்நாள் முழுக்க கூடவோ குறையவோ காமத்தை வியந்து தேடியபடியே இருப்பவன் (இயலாமை போன்ற விதிவிலக்கு தவிர‌). இந்த வித்தியாசம் ஆணுக்கு காமம் தொடர்பான ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. கிழவர்கள் பாலியல் சில்மிஷம் செய்வது ஓர் உதாரணம்.

8. மேற்கத்திய நாகரிகம்

இந்தியச் சமூகம் வேகமாக மேற்கு மயமாகி வருகிறது. ஐடி துறை இம்மாற்றத்தில் கணிசமான பங்கு வகிக்கிறது. பெண்களின் உடைகள் குறைகின்றன. ஏராளமாய் உடல் காட்சிப் பொருளாகிறது. தங்களை அதீதமாய் அழகுபடுத்திக் கொள்கிறார்கள், அலங்காரம் செய்கிறார்கள். சுற்றுப்புறத்தின் கவனமீர்க்கும் வகையில் சப்தமாய்ப் பேசுகிறார்கள், வெடித்துச் சிரிக்கிறார்கள். அவர்கள் புகை பிடிக்கிறார்கள், மது அருந்துகிறார்கள். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட‌ ஆண் நண்பர்களுடன் அதிகப்படியாய் ஈஷிக் கொள்கிறார்கள். சமயங்களில் பொதுவிடத்தை மதியாது சிலபல‌ முத்தங்கள், சில்லறைச் சில்மிஷங்கள். இரவு நேரங்களில் அதே கோலத்தில் வெளியே உலவுகிறார்கள். போதுமான பாதுகாப்பின்றி தனியே பயணிக்கிறார்கள். இதை எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த ஓர் உலகம் வெகு அருகே இருக்கிறது. ஏற்கனவே பாலியல் வறட்சியில் இருக்கும் அவர்களை இவை தூண்டுகின்றன‌. சந்தர்ப்பத்திற்குக் காத்திருக்கிறார்கள்.

9. ஆணாதிக்க மனப்பான்மை

பெண் என்பவள் ஆணுக்குக் கீழே தான், பெண் என்பவள் காம இயந்திரம், சமையல் செய்து போடுவதும், பிள்ளை பெற்றுப் போடுவது தான் அவள் வாழ்வதன் பயன், அவள் வெறும் உடல், அவள் ஒரு துவாரம் என்பதே பெரும்பான்மை ஆண்க‌ள் ப்ரக்ஞைப்பூர்வமாகவோ ஆழ்மனதிலோ கொண்டிருக்கும் எண்ணம். அதனால் பெண்ணைப் பாலியல் ரீதியாகவே சிறு வயது முதலே பார்த்துப் பழகுகின்றனர் ஆண்கள். இரு பாலினரையும் பிரித்து வளர்ப்பதும் முறையான‌ பாலியல் கல்வி இல்லாதிருப்பதும் இந்நிலையை மேலும் மோசமாக்குகிறது. பெண் என்பவள் ஒரு பண்டம், அந்த ரகசியத்தைத் திறந்து நுகர்வதே அவளுடனான ஒரே தொடர்புப் புள்ளி என்றாகிறது. அவள் உடலை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனப் பதிந்து போகிறது. அவள் இரவில் வெளியே சுற்றினாலோ, அரைகுறை ஆடை அணிந்தாலோ, கணவன் அல்லாத‌ ஓர் ஆடவனுடன் இருந்தாலோ ஆணாதிக்கம் சீண்டி விடப்பட்டு அவளுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமெனத் துடிப்பெழுகிறது. இன்னொரு பக்கம் ஆண்களால் அடிக்கப்படும் பெண்களைக் கண்டு கணிசமானோரின் பால்யம் கழிகிறது. அது சொந்த வீட்டிலும் இருக்கலாம், தெருவில் வேடிக்கை பார்த்ததாய் இருக்கலாம், அல்லது கிராமத்தில் நடந்ததாய் இருக்கலாம். அதைப் பார்த்துப் பார்த்து வளர்கையில் பெண்ணை உடல் ரீதியாய்த் துன்புறுத்துவதும் வலுக்கட்டாயமாய் அபகரிப்பதும் இயல்பான விஷயம் என்றே நினைக்கிறார்கள். பெண் மீது மதிப்போ பிரியமோ இன்றி போகப் பொருளாகவே தெரிகிறாள்.

10. திரைப்படம், ஊடகங்கள்

இந்தியத் திரைப்படங்கள் தொடர்ந்து பெண்களை காமத்திற்கான கச்சாப் பொருளாகவே சித்தரிக்கின்றன. தொலைக்காட்சி உள்ளிட்ட பிற காட்சி ஊடகங்களும் இணையதளங்களும் அச்சு ஊடகங்களும் விதிவிலக்கன்று. இன்று ஓர் இளைஞனின் பெரும்பாலான சிந்தனையையும் சம்பாஷணையையும் சினிமாவே ஆக்ரமித்திருக்கிறது. அதில் காட்டப்படும் பல்வேறு விஷயங்கள் அவனை நேரடியாய்ப் பாதிக்கின்றன. உவப்பான‌ உடலமைப்பு கொண்ட‌, மிக ஆபாசமாய் உடையணிந்த‌, அழகிய இளம் வெண்சரும யுவதிகள் குறித்த ஏக்கத்தை அவன் பார்க்கும் சினிமாக்கள் பன்மடங்கு கிளறி விடுகின்றன. ஸ்கர்ட்டின் உயரம் கொண்டும், டாப்ஸின் இறக்கம் கொண்டும் பெண் காமத்துக்கு மசிவாளா எனக் கணக்கிடுகிறான்.

11. பொருளாதார நிலை

ஏழைகள் அல்லது சேரிகளில் வாழ்வோர் மட்டும் தான் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது இல்லை தான். ஆனால் காமத்துக்கென காசு செலவழிக்க முடியாத சூழல் அல்லது செலவிட முடிந்த தொகைக்கு விருப்பமான‌ தோற்றம் கொண்ட பெண் கிட்டாத‌ நிலை தன் வலிமையைப் பிரயோகித்து அபகரித்துக் கொள்வதில் முடிய நிறைய வாய்ப்புண்டு. இன்னொரு பக்கம் நிரந்தர வேலையோ வருமானம் இல்லாத நிலையில் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையும் அதன் நீட்சியாய் குற்றத்தின் விளைவுகள் பற்றிய‌ அலட்சியமும் பயமின்மையும் சேர்ந்து கொள்கிறது. குற்றம் செய்யாமல் இருந்தால் மட்டும் நம் எதிர்காலம் என்ன ஒளிமயமாகவா இருக்கப் போகிறது என ஆழ்மனதில் எண்ணம் விழுகிறது.

12. அதீத மதுநுகர்வு

இந்தியர்கள் மிதமிஞ்சிக் குடிப்பவர்கள். அப்படிக் குடித்து விட்டு தன்னிலை மறந்து எச்செயலிலும் ஈடுபடக்கூடியவர்கள். ஆழ்மனதில் பாலியல் வறுமை தேங்கிக் கிடக்கையில் அளவுக்கு அதிகமாய் மதுவருந்தும் போது சட்ட திட்டங்கள், கலாசாரம், அறம் எல்லாம் கரைந்து போய் பெண்ணை போகம் செய்யும் வன்முறை மனப்பான்மைக்கு ஆளாகிறார்கள்.

13. விழிப்புணர்வின்மை

வீட்டில் பத்திரமாய் இருக்கவும், பாதுகாப்பாய் வெளியே போய் வரவும் பெண்களுக்கு நாம் கற்றுத் தருவதில்லை. எங்கே எச்சரிக்கை அடைய வேண்டும், எதற்குப் புகார் செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றிய விரிவான‌ திறந்த உரையாடல் நடப்பதில்லை. அது பற்றிய அலட்சியமும் தயக்கமும் நம்மிடையே ஒருசேர இருக்கிறது. குறைந்த பட்ச தற்காப்புக்கான உபகரணமோ பயிற்சியோ, எதிர்கொள்ளும் தந்திரமோ வலுவோ தைரியமோ இன்றியே பெண்கள் வளர்கிறார்கள். பாலியல் வல்லுறவு என்பது எங்கோ யாருக்கோ நடக்கும் மூன்றாம் பக்கச் செய்தி என்பதே நம் எண்ணம்.

14. மனசாட்சியின்மை 

சராசரி இந்திய மனப்பான்மை என்று ஒன்றுண்டு. பொதுவாய் நாம் அத்தனை நல்லவர்கள் அல்ல. வாய்ப்புக் கிடைத்தால் குற்றம் செய்யத் தயாராய் இருப்பவர்கள். எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்று நினைப்பவர்கள். அறம் என்பதை ஒத்திப் போட்டவர்கள். இருநூறு ஆண்டு கால அடிமைப்பட்ட‌ வாழ்க்கையோ, அதற்கு முந்தைய ஆயிரமாண்டு மனுதர்ம அடக்குமுறைகளோ காரணமாய் இருக்கலாம். ஆனால் நாம் பொதுவாய் அடுத்தவருக்கு நேரும் துன்பம் குறித்து சுரணை குறைந்தவர்கள் நாம். நமக்கு நல்லது எனில் அடுத்தவர் பற்றிய கவலை இன்றி அதைச் செய்யத் தயாராகி விடுவோம்.

*

இதெல்லாம் ஏதுமில்லாமல் சுவாரஸ்யத்திற்காக‌ இக்குற்றத்தில் ஈடுபடும் சைக்கோக்களைத் தவிர்த்துப் பார்த்தால் பல காரணங்களினால் நிலவும் பாலியல் வறட்சியும் பாலியல் குற்றவாளிகள் சரியாகத் தண்டிக்கப்படாத சூழலும் இந்திய உளவியலுமே பாலியல் குற்றங்கள் நிகழ்வதற்குப் பிரதானக் காரணிகள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த ரேப்பிஸ்ட் என்பவன் யாரோ அல்ல. நம்மில் ஒருவன். தினசரி நம்முடன் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் ஒருவன்.

இவர்களை க்ரிமினல்கள் என்று ஒருமையாய் முத்திரை குத்த‌வும் முடியாது. அப்படிச் செய்தால் 90 விழுக்காடு வயது வந்த‌ இந்திய ஆண்களை இவ்வகையில் சேர்க்க வேண்டி இருக்கும். கொலையோ கொள்ளையோ இவர்கள் செய்யாமல் இருக்கலாம். ஆனால் பாலியல் குற்றங்களுக்கு வாய்ப்புண்டு. எதன் பொருட்டு மட்டும் ரிஸ்க் எடுக்கலாம் என்ற கணக்கீடு தான். தவிர‌, மற்றவற்றில் தப்பித்தல் சுலபம் அன்று. பெரும்பாலான பாலியல் சுரண்டல்களை இவர்களே செய்கிறார்கள். 

எல்லாச் சூழலும் சாதகமாய் அமைந்தால் அவன் குற்றத்தில் ஈடுபடுவான். இன்னும் சொல்லப் போனால் குற்றத்தில் ஈடுபடுவதற்கு ஒரு மணி நேரம் முன் அப்படி ஒரு கொடூரக் குற்றத்தை அவர்கள் செய்யக்கூடியவர்கள் என்று யாரேனும் அவர்களிடம் சொல்லி இருந்தால் அதை நம்பாமல் வெடித்துச் சிரித்திருப்பர். உண்மையில் இது மிக ஆபத்தான நிலை.

இது தான் பின்புலம். இந்த இடத்தில் நாம் கொஞ்சம் பாதுகாப்பாய் இருந்து கொள்வது நலம் என்றே தோன்றுகிறது. இதில் எந்த அவமானமும் இல்லை. வீம்பு பிடிக்க வேண்டியதில்லை. "அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்" என்று வள்ளுவர் சொல்லி இருப்பதைப் பின்பற்றலாம். பயத்தைத் துறந்த நிர்பயத்தை விட கறைபடாத நிர்மல்யம் தான் முக்கியமானது. (இதில் கறை என்று குறிப்பது கற்பு இழப்பு என்ற கருத்தில் அல்ல. நாம் விரும்பாது நம்மில் படும் கீறலும் கறை தானே!)

உதாரணமாய் நாம் வெளியே கிளம்புகையில் வீட்டைத் திறந்து போட்டு விட்டுப் போவதில்லை. பல தாழ்பாள், பூட்டுகள் பயன்படுத்திப் பூட்டிச் செல்கிறோம். அங்கே நான் என் வீட்டை எப்படி வேண்டுமானாலும் விட்டுப் போவேன், அரசு தான் என் வீட்டைப் பாதுகாக்க வேண்டும், என்னை வீட்டைப் பூட்டு என்று சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்லை என்று யாரும் முட்டாள்தனமாய் நியாயம் பேசிக் கொண்டிருப்பதில்லை. சத்தமின்றி வேண்டியதைச் செய்து கிளம்புகிறோம். காரணம் திருடர்கள் உண்டென்பது தெரியும். காவல் துறை இருந்தாலும் அதைத் தாண்டி நாம் பூட்டத் தவறுவதில்லை.

ஆனால் பாலியல் குற்றங்களில் மட்டும் இதை எல்லாம் மதிக்காமல் நான் நிர்வாணமாய் சாலையில் நட‌ந்தாலும் என்னைப் புணர உனக்கு உரிமை இல்லை எனக் கொதிக்கிறோம். இங்கும் அப்படித் தானே? நான் வீட்டைத் திறந்து போட்டுப் போனாலும் என் வீட்டில் களவாட எவனுக்கும் உரிமை இல்லை என்று சொல்ல வேண்டியது தானே?

இவ்விஷயத்தில் சுயபாதுகாப்பு என்பது பெண்ணடிமைத்தனமாக, கௌரவக் குறைச்சலாகப் போய் விட்டது இன்று.

இந்தியாவின் இத்தகைய புற, அகச் சூழல்களின் அடிப்படையில் நான் என் அன்னைக்கோ, சகோதரிக்கோ, மனைவிக்கோ, மகளுக்கோ, சினேகிதிக்கோ, சக‌ ஊழியைக்கோ, பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கோ, உறவுக்காரப் பெண்ணுக்கோ ஒன்றை மட்டுமே சொல்வேன்: நாடு கெட்டுக் கிடக்கிறது, நீங்கள் கூடுதல் பொறுப்புடனும் ஜாக்கிரதையுடனும் நடந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அணியும் உடை, பொதுவிட நடவடிக்கை, வெளியே சுற்றும் நேரம் ஆகியவற்றில் கவனத்துடன் இருப்பது உசிதம். இதில் ஆணாதிக்கம் ஏதுமில்லை. வீட்டைப் பூட்டிச் செல்லும் அதே பொறுப்புணர்வுடன் சொல்கிறேன். பாலியல் குற்றங்களுக்கான காரணிகளில் நம் கட்டுப்பாட்டில் உள்ள‌வற்றைச் சீர்செய்யும் முயற்சியே இது.

அடுத்து குழந்தையை, கிழவியைப் பாலியல் வன்முறை செய்பவன் எல்லாம் ஆடையைப் பார்த்தா செய்கிறான் எனக் கேட்பார்கள். இக்கேள்வியில் முரட்டுத்தனமான எதிர்ப்பு மட்டும் தான் இருக்கிறது. புரிதலை நோக்கிய முதிர்ச்சியே இல்லை. சொல்ல வருவது அதுவே அல்ல. கவர்ச்சி உடை அணியும் அத்தனை பேரும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதில்லை. பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் அத்தனை பேரும் கவர்ச்சி உடை அணிந்திருப்பதுமில்லை.

ஆனால் இரண்டுக்கும் நுண்ணிய தொடர்பு இருக்கிறது. மேலே சொன்னது போல் இந்திய ஆண்களில் பெரும்பாலானோர் பாலியல் வறட்சியில் தான் இருக்கின்றனர். அப்படிச் சூழலில் அவன் முன் அரைகுறை ஆடையில் நீங்கள் நடமாடும் போது மேலும் அவன் வெறியைத் தூண்டியதாகிறது. அவன் அதை மீறித் தன்னைக் கட்டுப்படுத்திக் கடக்கலாம். அல்லது வீடு போய் சுய இன்பம் செய்து தூங்கலாம். அல்லது சூழல் சாதகமெனில் அவன் உங்களிடம் தவறாய் நடக்கலாம்.

அப்படிச் சூழல் இல்லை எனில் சூழல் சரியாய் அமையும் வேறிடம் போய் இப்படி அரைகுறை ஆடை இல்லாமல் சாதாரணமாய் இருக்கும் பெண்ணிடமும் தவறாய் நடக்கலாம். ஆனால் உங்கள் உடையானது அவன் நடவடிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதன் விளைவு மிகச் சிறியதாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ இருக்கலாம்.

இதே தான் பொதுவிடத்தில் தழுவுதல், முத்தமிடுதல் உள்ளிட்ட பாலியல் சேஷ்டைகள் செய்வதாலும் நிகழ்கிறது. அடுத்து வெளியே திரியும் நேரம். போதுமான பாதுகாப்பின்றி இரவு நேரத்தில் சுற்றும் போது அவர்களுக்கு நாமே வாய்ப்புத் தருகிறோம். நீங்கள் உங்கள் கணவருடனே கூட இரவு நேரத்தில் சென்றாலும் இதே பிரச்சனை உண்டு.

சுதந்திர தேசத்தில் ஒரு பெண் தன் இஷ்டப்படி சுற்ற உரிமை இல்லையா என ஆவேசமாய் உரை ஆற்றலாம். கைத்தட்டல் விழும். ஆனால் உண்மை வேறு. உரிமை உண்டு உங்களுக்கு. ஆனால் பாதுகாப்பு இல்லை. காந்தி விரும்பியது போல் இத்தேசம் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லை எனத் தலைக்குனிவுடன் ஒப்புக் கொள்ள வேண்டியது தான்.

பாதுகாப்பைப் பணயம் வைத்து அப்படி அற்பச் சந்தோஷமும் உரிமை கோரும் வீம்பும் தேவையா என்பதே கேள்வி.

இது எவ்வகையிலுமே பெண் சுதந்திரத்தைப் பறிப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கல்வி, வேலை, சம்பாத்தியம், சிந்தனை, இன்ன பிற ஆர்வங்கள், வீட்டிற்குள்ளான சந்தோஷங்கள் எதுவுமே மாறவில்லை. வெளியுலகில் மட்டும் வினோதமான‌ இந்தியச் சூழலை மதித்து எல்லோர் நன்மைக்காகவும் சற்று விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கிற‌து.

கால் ட்ரவுசர் ஆபாசமா, லெக்கிங்ஸ் கவர்ச்சியா என்று கேள்விக்கெல்லாம் பதில் it depends என்பதே. நீங்கள் புழங்கும் சூழல் பொறுத்து அதை நீங்கள் தான் நிதானத்துடன் தீர்மானிக்க வேண்டும். கோபத்தை விட பாதுகாப்பே முக்கியம்.

பொதுவான அளவுகோல் நான்கு பேர் உங்கள் மீது பாலியல் பார்வை வீசுவது நிகழ்கிறதெனில் அங்கே ஆபத்துச் சூழல் இருக்கிறது என்றே பொருள். அதைத் தவிர்க்கலாம். நான் சுடிதார் போட்டுப் போனால் கூட அப்படித் தான் பார்க்கிறார்கள் எனில் அது முற்றிலும் வேறு விவாதத்துக்குரிய‌ தலைப்பு. எல்லா எல்லைகளிலும் மனிதர்கள் உண்டு. இங்கே நாம் தவிர்க்க முனைவது obvious விஷயங்களை. பூட்டுப் போட்டாலும் உடைத்துத் திருடத் தான் செய்வர். ஆனால் அதற்காக வீட்டைப் பூட்டாமல் போகிறோமா என்ன?  அரசாங்கத்தை, நீதித்துறையைச் சாடுவது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் நம்மால் தவிர்க்க‌ முடிகிற விஷயங்களை நிரந்தரத் தீர்வு ஏற்படும் வரை இப்போதைக்கேனும் நாம் தவிர்க்கலாம் தானே!

அப்படி ஒரு நிலை ஏற்படும் வரை நாங்கள் எங்கள் இஷ்டப்படி தான் இருப்போம், அதுவே எங்கள் சுதந்திரம், உரிமை என்று சொல்வதும் கூட ஒருவகையில் சமூகப் பொறுப்பின்மை என்றே சொல்வேன். தன் செயல்களால் மறைமுகமாக‌ வேறெந்தப் பெண்ணும் பாதிப்புறாமல் தடுக்கும் பொறுப்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கத் தானே செய்கிறது!

ஆக, நான் சொல்ல வருவது எளிமையான விஷயம். காவலும் நீதியும் நாட்டில் அவ்வளவு கடுமையாய் இல்லாத போது எல்லோருக்குமே குளிர் விடத் தான் செய்யும். இச்சூழலில் பாலியல் வறட்சியில் அலையும் ஓர் ஆண் ஜனத்திரளிடம் பெண்ணுரிமை பேசுவதை விட தற்காத்துக் கொள்தலே சமயோசிதமான ஓர் அணுகுமுறையாக இருக்க முடியும்.

நீண்ட கால அடிப்படையில் சட்டங்களை வலுவாக்குவதும், முறையான பாலியல் கல்வியை சிறு வயதிலிருந்தே அளிப்பதும் இதற்குத் தீர்வாகலாம். அதுவரை சற்று நாகரிக வளர்ச்சியை ஒத்திப் போடுங்கள் என்பதே கோரிக்கை. வல்லுறவில் சிதைக்கப்பட்ட உடல்களின் மீது நடந்து தான் பெண்ணியத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதில்லை.

இப்படிச் சொல்வதற்காக என்னை ஆணாதிக்கவாதி எனத் தூற்றப் போகிறவர்கள் தம் வியாபாரத்தைத் தொடங்கலாம்!

***

Comments

You have put in a lot of thought and written this post. Thought provoking post. Personal safety must be the priority for women in India. Thats the practical approach and most fathers wont want their daughters to be put at risk
Unknown said…
Best article I've read thus far on the subject. I wish this message was in english as it would reach a wider sphere of people. .
மிக சிறந்த கட்டுரை. நீங்கள் சொல்வது போல ஏதோ ஒரு பெண் கவர்ச்சியாக உடை அணிந்து அதனால் தூண்டப்பட்ட ஆண் வேறொரு (சூழல் சரியாக) அமையும் இடத்தில் காமத்தை தீர்த்துக்கொள்கிறான் என்பது சரிதான் எனினும், சினிமாவை என்ன செய்வது? பெருநகரம் தாண்டி சின்ன ஊர்களில் சாதாரணமாக பெண்கள் கவர்ச்சியாக ஆடை அணிவதில்லை. ஆனால், இந்திய சமூகத்தில் மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தும் சினிமாக்காரர்கள், கவர்ச்சி/ஆபாசம் விஷயத்தில் துளி கூட பொறுப்பு ஏற்கப்போவதில்லை. அவர்கள் வாதம், ஏன் யூ-ட்யூபில் இல்லாததா என்பார்கள். (என் வரையில், யூ-ட்யூப் யாவருக்கும் சென்று சேருவதில்லை.)
மேலும், இளைஞர்களின் உடையும் சினிமாவால் இன்ஃப்ளூயன்ஸ் ஆகிறது என்பது மறுப்பதற்கில்லை. கட்டுரையில் நீங்கள் இதையும் சுட்டியிருக்கலாம்.
மற்றப்படி சிறந்த ஆய்வு. வாழ்த்துகள்.
தனி நபருக்கான பாதுகாப்போடு சேர்த்து, சினிமா காரர்களின் சோஷியல் ரெஸ்பான்ஸிபிளிட்டி பற்றியும் சுட்டியிருக்கலாம். (போன கமெண்ட்டில் சொல்ல வந்தது) :-)
@விக்னேஸ்வரி

கட்டுரைக்கென conscious-ஆகவே ஒரு scope வரையறுத்துக் கொண்டேன். அரசு, நீதித்துறை, சினிமா, சமூகம், கலாசாரம் என குறைபட்டிருக்கும் வெளி விஷயங்களை மாற்றுவதை / மாறுவதைப் பேசாமல் தனி மனிதர்கள் தம்மில் என்னன்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பது பற்றி மட்டும் பேச வேண்டும் என. அது தான். மற்றபடி காரணங்கலின் பட்டியலில் சில விடுபடல்கள் இருக்கலாம். சரி செய்யலாமா என மறுவாசிப்பில் பார்க்கிறேன். கருத்துக்கு நன்றி.
@விக்னேஸ்வரி

கட்டுரைக்கென conscious-ஆகவே ஒரு scope வரையறுத்துக் கொண்டேன். அரசு, நீதித்துறை, சினிமா, சமூகம், கலாசாரம் என குறைபட்டிருக்கும் வெளி விஷயங்களை மாற்றுவதை / மாறுவதைப் பேசாமல் தனி மனிதர்கள் தம்மில் என்னன்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பது பற்றி மட்டும் பேச வேண்டும் என. அது தான். மற்றபடி காரணங்கலின் பட்டியலில் சில விடுபடல்கள் இருக்கலாம். சரி செய்யலாமா என மறுவாசிப்பில் பார்க்கிறேன். கருத்துக்கு நன்றி.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்