ஃபீனிக்ஸ் கனவுகள்

கலாமும் நானும் இணைந்து ஒரு புத்தகம் எழுத உத்தேசித்திருந்தோம். இந்திய ராக்கெட் இயல் பற்றித் திப்புசுல்தான் காலத்திலிருந்து ஆரம்பித்து எழுதலாம் என்றார். ‘நான் ரெடி… நீங்க ரெடியா கலாம்?’ என்று எப்போது பார்த்தாலும் கேட்பேன். ‘இதோ வந்து விடுகிறேன்… அடுத்த மாதம் துவங்கிடலாம்யா’ என்பார். இப்போது அவர் ஓய்வெடுத்த பின் அந்தப் புத்தகத்தை எழுதிவிடுவார் என்று எண்ணுகிறேன், இந்திய அரசும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அரிமா ரோட்டரி சங்கங்களும் பள்ளிகளும் சமூக அமைப்புகளும் அவரை விட்டு வைத்தால்!

- சுஜாதா (கற்றதும் பெற்றதும், 2003)

கேள்வி: அப்துல் கலாமுடன் இணைந்து நீங்கள் எழுதுவதாக இருந்த 'இந்திய ராக்கெட் இயல்' புத்தகம் எந்த நிலையில் உள்ளது? பதில்: கைவிடப்பட்டது.

- சுஜாதா பதில்கள் (குங்குமம், 2008)


இந்திய ராக்கெட் இயல் பற்றி அப்துல் கலாமுடன் இணைந்து நூல் எழுதப் போவதாக சுஜாதா குறிப்பிட்ட போது ஒரு வாசகனாய், ஒரு மாணவனாய், ஓர் இந்தியனாய் மிகுந்த உற்சாகம் கொண்டது நினைவிருக்கிறது. பிறகு அந்த நூல் கைவிடப்பட்டது என்று தெரிந்த போது அளவிலா ஏமாற்றம் கொண்டதும். சுஜாதா மறைந்த ஓரிரு ஆண்டுகளில் அப்துல் கலாமுடன் இணைந்து இந்திய ராக்கெட் இயல் நூலை எழுதும் ஆர்வக்கோளாறான ஓர் ஆவல் எனக்குள் அரும்பியது.

என் முதல் நூலான சந்திரயான் எழுதி வெளியாகி அதற்கு சிறந்த நூலுக்கான தமிழக‌ அரசின் விருதும் பெற்றிருந்த காலம் அது. அதன் பக்க விளைவான அதீத தன்ன‌ம்பிக்கையில் அதற்கான சில முயற்சிகளில் இறங்கிப் பின் சாத்தியப்படாமல் போனது. இப்போது அப்துல் கலாமும் நம்மை விட்டுப் போன பின் அந்த ஆசையைத் தூசி தட்டி எழுதப் புகுந்திருக்கிறேன்.

ச்சீய் பக்கங்களுக்குப் பின் குங்குமம் இதழில் இது எனக்கு இரண்டாவது தொடர். ஆனால் முதலாவதைக் காட்டிலும் அதிக பொறுப்பு இருப்பதை உணர்கிறேன். அது பயமளிக்கிறது. அந்த பயமே என்னைச் சரியாய் வழிநடத்தும் என நம்புகிறேன்.

தொடருக்கு ஃபீனிக்ஸ் கனவுகள் என்று தான் நான் தலைப்பு அளித்திருந்தேன். அதை விட சற்றே வெகுஜன நெருக்கமான தலைப்பு வைக்க வேண்டி தற்போது ஆகாயம் கனவு அப்துல் கலாம் என்பது முடிவாகி இருக்கிறது. சென்ற திங்களன்று வெளியான 19.10.2015 தேதியிட்ட இதழில் (அட்டைப்படத்தில் நயன்தாரா) இத்தொடர் வெற்றிகரமாய் ஏவப்பட்டிருக்கிறது.

கலாம் பிறந்த நாள் வாரத்தில் தொடர் ஆரம்பிக்க வேண்டும் எனத் திட்டமிடவில்லை. அதுவே நிகழ்ந்தது. மிக எதேச்சை! தொடருக்கு 7 பக்கங்கள் ஒதுக்கியதுடன் அட்டகாசமான முழு பக்க அறிமுகம் நல்கிய குங்குமம் குழுவினருக்கு நன்றி!

தொழில்நுட்பத்தில் இந்தியா வல்லரசாக‌ வேண்டும் என விரும்பும் ஒவ்வொருவரையும் இதை வாசிக்க அழைக்கிறேன்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்