ஹரிதாவும் கீதனும்

ஒன்றரை ஆண்டுகள் முன் நான் முன்பு பணியாற்றிய அலுவலக நண்பர் crowd funding மூலம் அவரது கல்லூரி நண்பர் ஒரு படமெடுத்திருப்பதாகச் சொல்லி அதன் ப்ரிவ்யூவுக்கு அழைப்பு விடுத்தார் (அவரும் பணம் போட்டிருந்தார்). அந்தப் படம் குறையொன்றுமில்லை. அது பற்றிய என் கருத்துக்களை இயக்குநருக்கு (ந‌ண்பரின் மூலம்) தெரியப்படுத்தி இருந்தேன்.

பிறகு பல  காரணங்களால் படம் தாமதமாகி நான் வேலையும் மாறி விட்டேன். சென்ற அக்டோபரில் படம் வெளியாகி இருக்கிறது. அது இப்போது தான் என் கவனத்துக்கு வந்தது. அப்போது எழுதிய அந்த‌ விமர்சனத்தை இங்கு பகிர்கிறேன்.

*

முதலில் படத்தின் லைன். கிராம‌ங்களின் (குறிப்பாய் விவசாயிகளின்) spending potential-ஐ வெளிக்கொணர முயற்சிக்கும் ஒரு கார்ப்பரேட் இளைஞனின் கதை. ஊடுபாவாய் அவனது பிடிவாத‌, அலட்சிய‌ attitude-ம், அதனால் பாதிப்படையும் அவன் சொந்த வாழ்க்கையும் காட்டப்படுகிறது. இது தான்  குறையொன்றுமில்லை படம் பற்றிய‌ என் புரிதல்.


படத்தின் மையச்சரடான விஷயம் ஒரு மேலோட்டமான பொருளாதார சங்கதி பற்றியது. ஆனால் இந்த அளவிலான‌ மேலோட்டமான பொருளாதாரம் கூட தமிழில் எனக்குத் தெரிந்து எந்தப் படத்திலும் சொல்லப்பட்டதில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். பொருளாதாரம் என்றில்லை, அரசுத் துறைகள் (ஷங்கர் படங்கள்), சட்டம், காவல், ராணுவம், மருத்துவம், தீவிரவாதம், ரவுடியிஸம், தாதாயிஸம் தவிர எந்த ஒரு துறைசார் விஷயமும் தமிழ் சினிமாவில் பேசப்படுவதில்லை. ஜில்லுனு ஒரு காதல் படத்தில் ஆட்டொமொபைல் துறையின் டிசைனிங் பற்றிய‌ மெல்லிய வரைபடம் சில காட்சிகளில் கிடைக்கும். அவ்வளவு தான். இந்தச்சூழலில் கார்த்திக் ரவி தன் திரைக்கதையின் முதுகெலும்பாகவே பொருளாதாரத்தைத் தொட்டிருப்பது வரவேற்புக்குரிய விஷயம் தான்.

ஆனால் அந்த பொருளாதார விஷயம் சரியாக சொல்லப்படாமல் half-baked ஆக இருக்கிறது. அதாவது ஒருமுனையில்  முழுக்க தீவிரமாகச் சொன்னால் டாக்குமெண்டரித் தன்மை வந்துவிடக்கூடாது என்பதாலும் மறுமுனையில் முழுக்க ஜனரஞ்சகமாகச் சொன்னால் சீரியஸ்னெஸ் இல்லாத மசாலா சினிமா ஆகிவிடும் என்பதாலும் இடைப்பட்ட ஒரு கலவையைச் சொல்ல முயற்சித்ததே இதற்குக் காரணம் எனத் தோன்றுகிறது. அதாவது பொருளாதாரம் தெரிந்தவர்களுக்கு உங்களுடையதில் அந்த ஒன்லைன் தவிர புதிய செய்திகள் விவாதங்கள் ஏதுமில்லை. பாமரனுக்கு அந்த லைன் சரியாகப் புரியும்படி போய்ச் சேரவில்லை. To be precise, "it's not simplified; but diluted".

இங்கே அஷுதோஷ் கோவரிக்கரின் Swades படத்தை இணைத்துப் பார்க்கலாம். அதுவும் கிராமங்களின் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தும் இடையே காதல் இணைந்த கதை தான். அது பாக்ஸ் ஆஃபீஸில் தோல்வி என்ற போதிலும் கலாப்பூர்வமாக அபாரமான படம். அதில் மேல்தட்டு கீழ்தட்டு மக்களுக்கும் கெனெக்ட் செய்து கொள்ள விஷயங்கள் இருந்தன. கொஞ்சம் திரைக்கதையை திருத்திச் சரி செய்திருந்தால் அது போன்ற ஒரு கல்ட் மூவியாக மாறியிருக்கக் கூறிய சாத்தியங்கள் உள்ள லைன் தான் இது (அமீர் கான் கூட தன் பேனரில் ரீமேக் செய்திருக்கக்கூடும்!).

நான் சொல்ல வ‌ருவதை இன்னும் கொஞ்சம் drill-down செய்து பார்க்கலாம். படத்தின் முக்கியமான திருப்புமுனை கிருஷ்ணாவின் அலுவலகத்தில் அவன் கிராமத்து ப்ரொஜெக்ட்டை எதிர்த்தவர்கள் அனைவரும் கன்வின்ஸ் ஆகும் காட்சியே. ஆனால் அது எந்த வகையிலும் ஜஸ்ட்டிஃபை செய்யப்படவில்லை. எதிர்ப்பவர்கள் முக்கியக் காரணமாகச் சொல்வது ஒரு தொழில் நடத்துமளவு கிராமத்தில் இருப்பவர்களுக்கு திறமை போதாது என்பதும், கிராமத்தவர்கள் சூப்பர் மார்க்கெட்டில் வது பொருள் வாங்க மாட்டார்கள் என்பதும் தான். ஆனால் கிராம மக்கள் பணம் கிடைத்தால் செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள் எனப் பேட்டிகளின் மூலம் காட்டுவது எப்படி எதிர்ப்பவர்களை கிருஷ்ணாவின் ப்ரொஜெட்டுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்க வைக்கும்? அதில் ஆசை மட்டும் தான் காட்டப்ப‌டுகிறது. அவர்கள் செய்து காட்டுவார்கள் என்பது நிரூபிக்கப்படவே இல்லை. முதல்வன் பேட்டி போல வந்திருக்க வேண்டிய வலுவான காட்சி. ஆனால் அப்படி நிகழாமல் தடுமாறுகிறது.  இது முக்கியக் குறை. இது போல் ஆங்காங்கே. அது திரைக்கதையைப் பலவீனமாக்குகிறது.

அடுத்து முக்கியமானது படத்தின் உச்ச தருணங்கள் என எதுவுமே இல்லை. எல்லா நல்ல படங்களிலும் மறப்பதற்கரிய காட்சி ஒன்றேனும் இருக்கும். எல்லா ஓடும் படங்களிலும் கைதட்டல் பெறும் காட்சி ஒன்றேனும் இருக்கும். இந்த இர‌ண்டுமே இப்படத்தில் இல்லை. சுருங்கச் சொன்னால் படம் ஏற்ற இறக்கங்கள், எதிர்பாராத சம்பவங்கள், ஏதுமின்றி மிக flat-ஆக நகர்கிறது. சலனமற்ற நதிப்படுகையில் என்ன சுவாரஸ்யம்? நீர் சுழித்தோடும் வெள்ளப்பெருக்கே interesting! அந்த மொத்த இர‌ண்டரை மணி நேரத்திலும் அந்த அர‌ங்கில் நான் ஒரு காட்சிக்குக் கூட‌ கைத்தட்டு கேட்கவில்லை (விதிவிலக்காய் கைதட்டியவர்கள் அவர‌வருக்கு தெரிந்தவர்கள் நடித்த போர்ஷன், இசையமைத்த இடம் வரும் போது செய்தார்கள். அது அன்பு தான்; ரசனை அல்ல). சில இடங்களில் சிரித்தார்கள் என ஒப்புக்கொள்கிறேன்.

அப்புறம் கிருஷ்ணா சந்தியாவின் சின்ன வயசு ப்ளாஷ் பேக் எதற்கு? அது எந்த வகையிலும் படத்தைப் புரிந்து கொள்ள உதவவில்லை. எனில் தமிழ் சினிமாவில் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் அவர்கள் ஏன் அப்ப‌டி என்றால் சிறுவயதிலிருந்தே இப்படி எனச் சொல்லாமே? அதெல்லாம் இல்லாமலே அவர்களின் கேரக்டர்ககளை நிறுவ முடியும். (டேவிட்டின் குழந்தைப் பருவத்தில் என்ன நடந்தது என பில்லா-3 படம் வந்தால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்!).

ஓர் எழுத்தாளனாக வசனத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பேன். சரண், ராதாமோகன், கரு.பழனியப்பன் போன்ற இயக்குநர்களின் படம் சற்று முன்பின் இருந்தாலும் அருமையான வசன‌ங்களுக்காகவே படம் பார்த்திருக்கிறேன். உங்கள் படத்தில் மிகச்சில இடங்களில் வசன‌ங்கள் புன்னகைக்க வைத்தாலும் பொதுவாக ஆவரேஜ் வசனங்கள் தாம். காட்சி ஊடகத்திற்கு வசனம் ரெண்டாம் பட்சம் தான் என்றாலும் pleasant-ஆன அது உணர்விற்கு தேவைப்படும்.

படத்தின் பலம் என நான் நினைப்பது கிருஷ்ணா - சந்தியா இடையிலான காதல் காட்சிகள் தாம். மிக அழகாக அவை வந்திருக்கின்றன. இரண்டாம் பாதியில் கொஞ்சம் இதுவும் தொய்வடைந்தாலும் முதல் பாதியின் காதல் காட்சிகள் இப்படத்தை ஏன் பார்க்க வேண்டு என்பதற்கான பதிலாக இருக்கின்றன. ட்ரெய்ன் காட்சிகள், ஹரிதா கீதனின் வீடு வரும் காட்சி, பரிசலுக்காகக் காத்திருக்கும் காட்சி, கப்பாவில் சந்திக்கும் காட்சி போன்றவை உதாரணங்கள்.

கார்த்திக், நீங்கள் ஒரு ரொமான்ஸ் படமே எடுத்திருக்கலாம்.


அடுத்து படத்தில் எனக்கு மிகப்பிடித்திருந்தது பெர்ஃபாமன்ஸ்கள். முக்கியமாய் சந்தியாவாய் வரும் அந்தப் பெண் ஹரிதா அவ்வளவு நேர்த்தியாக நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி அழகிலும் மனதை அப்படியே அள்ளிப் போகிறார். தவிர, அவரது காஸ்ட்யூம், பாவனை முதற்கொண்டு எல்லாம் ஒரு அழகியலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கீதனும் promising-ஆகத் தெரிகிறார். எந்த இடத்திலும் உறுத்தவே இல்லை. முதல் படத்தில் இது பெரிய விஷயம்.

படம் குறைவான பட்ஜெட்டில் நண்பர்களின் முயற்சியில் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கேள்வியுற்றேன். அதனால் டெக்னிக்கல் சமாச்சாரங்களை அவ்வளவாய்க் கேள்விக்குட்படுத்த வேண்டாம் என்ற போதிலும் என்னைப் பொறுத்தவரை ஒளிப்பதிவு என்பது ஒரு படத்துக்கு மிக உயிர்நாடி என நினைக்கிறேன். அதனால் அதைப் பற்றிப் பேச விரும்புகிறேன். காதல் படம் ஓர் உதாரணம். மிக நன்றாக ஒளிப்பதியப்பட்ட குறைந்த பட்ஜெட் படம் அது.

புதிய நடிகர்கள், புதிய டெக்னீஷியன்கள் எல்லாவறையும் தாண்டி ஒரு படத்தின் ஒளிப்பதிவே அதை உயர்த்திக் காட்ட வ‌ல்லது என்ப‌து என் நம்பிக்கை. இந்தப் படத்தின் ஒளிப்பதிவு சில இடங்களில் நன்றாக வந்திருந்தாலும் (கீதன் வீட்டில் பவர் கட்டாக்கும் சீன்) பல இடங்களில் ஒரு டிவி சீரியல் அல்லது ஒரு நாளைய இயக்குநர் குறும்படம் பார்க்கும் உணர்வை அளிக்கிறது (கிருஷ்ணாவின் கிராமத்து நண்பன் அறிமுகமாகும் சீன்). என்வரையில் அது மிகப்பெரிய let-down.

பாடல்கள் நான் நேரடியாகப் படத்தில் ஒருமுறை கேட்டதுடன் சரி. சில‌ நன்றாக வந்திருக்கின்றன. பின்னணி இசை கொஞ்சம் சங்கடம் தான். படத்தின் நீளம் அதிகமாக இருந்ததாக உடன் வந்த நண்பர் சொன்னார். எனக்கும் அது சரி என்றே தோன்றுகிறது. அதாவது நீங்கள் சொல்லி இருக்கும் கண்டென்டுக்கு இது அநாவசிய நீளம். "இங்கே வா!" எனபதை ஒரு நிமிடம் இழுத்துச் சொன்னால் நன்றாக இருக்குமா? கஷ்டப்பட்டு எடுத்தோம், பணம் செலவழித்து எடுத்தோம் என்பதை எல்லாம் மறந்து விட்டு தியேட்டருக்கு வரும் ஒரு சாதாரணன் பார்வையில் அவனது இன்றைய மூடைக் கணக்கில் கொண்டு எடிட்டிங் செய்து படத்தைச் சுருக்கினால் படம் ஓடும் சாத்தியமுண்டு எனத் தோன்றுகிறது (மேலே சொன்ன சிறுவயதுக் காட்சிகள் ஓர் உதாரணம்). அடுத்தது ட்ரெய்லர். இது போன்ற புதியவர்களின் படங்களுக்கு அது தான் பார்வையாளனை தியேட்டர் வரவழைக்கும் ஒரே விஷயம். ஆனால் உங்கள் ட்ரெய்லரைப் பார்த்த போது எனக்கு படம் பார்க்கும் ஆர்வமே ஏற்படவில்லை.  மிக அமெச்சூராகத் தோன்றியது. அதைச் சரி செய்ய வேண்டும்.

ப்ளஸ்: ரொமான்ஸ் காட்சிகள், ஹரிதா, கீதன், லைன்

மைனஸ்: திரைக்கதை, சில இடங்களின் ஒளிப்பதிவு

வெர்டிக்ட்: சுமாரான படம்.

படத்தின் பாஸிட்டிவ்களை ஒரு வரியில் கடந்து விட்டு அதை பற்றிய எதிர்மறைக் கருத்துக்களையே இந்த விமர்சனம் முழுக்கச் சொல்லி இருக்கிறேன் என discouraging-ஆக நினைக்க வேண்டாம். இப்படத்திற்காக உங்களைப் பாராட்ட நிறையப் பேர் இருப்பார்கள். ஆனால் மறைக்காமல் குறைகளைச் சொல்ல இருக்கும் கொஞ்சம் பேரில் ஒருவனாக இருக்கவே விரும்புகிறேன். உண்மையாக மனதில் படுவதைப் பகிர்வதை விட சிறந்த உதவி வேறென்ன இருந்து விட முடியும்? உங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சினிமாவுக்குமே அது தான் நல்லது எனத் தோன்றுகிறது. என்னை அழைத்ததற்கு நான் செய்யும் நியாயமும் அது தான். உங்களிடம் potential இருப்பதாகத் தோன்றுவ‌தால் தான் இவ்வளவு மெனக்கெட்டு விளக்கமாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். Hope you understand!

அடுத்த படம் இன்னும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள், மிஸ்டர் கார்த்திக் ரவி!

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்