ச்சீய்

இந்த 2014 ஆண்டில் அவ்வப்போது சில கட்டுரைகள் தவிர தனி நூல் முயற்சியாய் நான் ஏதும் எழுதவில்லை. சொந்த வாழ்வின் அழுத்தங்களும் புதிய பணிக்கு மாறி இருப்பதும் இதற்கு முக்கியக் காரணங்கள். எழுத‌ ஒப்புக் கொண்ட என் மனதிற்குகந்த ஒரு ப்ரொஜெக்ட்டையும் எழுத முடியவில்லை. பதிப்பிக்கத் தயாராய் மூன்று தொகுப்பு நூல்கள் கையில் இருந்த போதும் பதிப்பிக்க ஆள் இல்லை. தமிழ் வாசிப்புச் சூழல் அப்படி. அதனாலேயே பதிப்பகங்கள் தயங்குகின்றன.


இந்நிலையில் தான் வரும் 2015 சென்னைப் புத்தகக் காட்சிக்கு என் பங்களிப்பாய் வருகிறது வெட்கம் விட்டுப் பேசலாம். வெளியீடு சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ். 2012 - 2013 ஆண்டுகளில் குங்குமம் இதழில் 25 வாரங்கள் வெளியான ச்சீய் பக்கங்கள் தொடரின் தொகுப்பு தான் இது. (நூலுக்கென புதிதாய் எழுதிச் சேர்த்த ஒரு சிறப்பு அத்தியாயமும் உண்டு.)

புத்தகத்திற்கு (தொடருக்கே கூட) நான் தீர்மானித்த தலைப்பு ச்சீய் என்பது தான். ஆனால் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் இதர நூல் தலைப்புகளின் ஸ்டைலில் இதைத் தீர்மானித்திருக்கிறார்கள். இத்தலைப்பு எளிமையாய், பொருத்தமானதாய் இருக்கிறது. பெயரில் என்ன இருக்கிறது! சமரசத்தின் பலனாய் புத்தகம் நிறைய பேரைச் சென்றடைந்தால் சந்தோஷமே!

*

இந்தப் புத்தகம் தொடர்பாய் நான் மூன்று பேருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி என்று சொல்வதை விட அதற்கு ஒரு படி மேல் என்று சொல்ல வேண்டும். இவர்களில் யார் இல்லை என்றாலும் இன்று இப்புத்தகம் இல்லை.

முதலாவது ‘ஆல்தோட்ட பூபதி’ @thoatta ஜெகன். ச்சீய் பக்கங்கள் தொடருக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் அவர் தான். அப்போது அவர் குங்குமம் இதழில் நயம்படப் பேசு தொடரை எழுதி வந்தார். என் மீதான நம்பிக்கையிலோ, அன்பினாலோ அவராகவே என்னிடம் நீங்கள் ஏன் ஒரு வெகுஜன இதழில் தொடர் எழுதக்கூடாது? எனக் கேட்டார். அட, நான் என்ன‌ங்க‌ வேண்டாம் என்றா சொல்கிறேன், செய்த‌ முயற்சிகள் ஏதும் பயனில்லை என்பதைச் சொன்னேன். நாம் குங்குமம் இதழில் முயற்சிக்கலாம் என்று சில ஆலோசனைகள் சொல்லி தொடருக்கான ஐடியாக்கள் பற்றி யோசிக்கச் சொன்னார். குங்குமம் ஆசிரியரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அப்படி உருவானது தான் ச்சீய் பக்கங்கள் தொடர். அதோடு தொடர் வெளியாக ஆரம்பித்த பிறகு அவ்வப்போது தன் கருத்துக்களையும் மற்றவர்களின் எதிர்வினைகளையும் பகிர்ந்து வந்தார்.

என் வரையில் இது பேருதவி. நான் networking-ல் அவ்வளவு சமர்த்தன் அல்லன். பதிப்பகம், இதழியல் ஆகிய ஊடகத் துறைகளில் எனக்கு செல்வாக்கு கிடையாது. சில முயற்சிகள் தவிர நானாகப் போய் வாய்ப்புகள் கேட்க பெரும்பாலும் தயங்கியே வந்திருக்கிறேன். இந்தப் பின்புலத்தில் யோசிக்கும் போது அவர் இல்லை என்றால் இந்த வாசல் எனக்கு ஒருபோதும் திறந்திருக்காது என்பதை உணர்கிறேன். எழுத்து வகைமையில் (genre) ஜெகனுடையதும் என்னுடையதும் முற்றிலும் வெவ்வேறு பாதைகள் எனினும் வாய்ப்புகளின் அடிப்படையில் நான் அவருக்கோ அவர் எனக்கோ என்றுமே போட்டி தான். அது அவருக்கும் நன்கு தெரியும். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அவர் இந்த உதவியைச் செய்தார்.

"உங்களை விட பெரிய ஆள் ஆகிவிடுவான் என தெரிந்தும் நீங்கள் செய்வதற்கு பேர்தான் உதவி. மற்றது பிச்சை." என்ற அராத்துவின் ட்வீட்டை நினைத்துக் கொள்கிறேன். ஜெகன் எனக்கு செய்தது அசலான உதவி. அவருக்கு என் அன்பும் நன்றியும் மரியாதையும். அதற்கான சிறு அடையாளமாய் இந்தப் புத்தகத்தை அவருக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.

அடுத்தது குங்குமம் இதழின் ஆசிரியர் தி.முருகன். ஜெகன் அவர் பற்றி ஒருமுறை இப்படிச் சொன்னார்: "நீங்கள் புதிய விஷயம் என நினைத்துக் கொண்டு அவரிடம் எதைப் பற்றிப் பேசினாலும் அது குறித்து நீங்கள் அறியாத ஒரு தகவலைச் சொல்வார்". ஓவர்ஹைப்பா இருக்கே என மனதில் நினைத்துக் கொண்டேன். ஆனால் அவருடன் தொடர் குறித்துப் பேச ஆரம்பித்த பின்பு தான் ஜெகன் சொன்னது மிகை இல்லை என்பது புரிந்தது. நிஜமாகவே அத்தனை updated-ஆக தன்னை வைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு முதன்மை இதழின் ஆசிரியராய் இருப்பதன் கம்பீரம் அது என எண்ணிக் கொண்டேன்.

ஒரு விஷயம் பற்றி விளக்க அதிகம் மெனக்கெட வேண்டி இருக்கவில்லை. இது தான் தலைப்பு எழுதலாமா கூடாதா என்பது வரை மட்டும் தான் பேச வேண்டி இருந்தது. ஓர் எல்லைக்குட்பட்டு உள்ளடக்கத்தில் எனக்கான சுதந்திரத்தைக் கொடுத்திருந்தார். தொடருக்கான படங்களும், லேஅவுட்டும் ஒவ்வொரு வாரமும் மிகச் சிறப்பாக அமைந்தன. தொடர் தொடர்பான அவரது நற்கருத்தாகவே அதை எடுத்துக் கொள்கிறேன். பெரும்பாலான வாரங்களின் வாசகர் கடிதங்களில் ச்சீய் பக்கங்கள் தொடர்பானவை இடம் பெற்றன. எதிர்வினைகளைப் பொதுமைப்படுத்திச் சொல்லி திசை காட்டினார்.

என் தொடர் வெளியாகத் தொடங்கிய பின்பு தான் குங்குமம் இதழையே முழுக்க கவனிக்கத் தொடங்கினேன். பழைய குங்குமம் இதழின் மீதிருக்கும் hardcore மசாலா இமேஜை உடைக்க தொடர்ந்து பல புதுமையான உள்ளடக்கங்களை முயற்சித்தபடியே இருக்கிறார் தி.முருகன் என்பது புரிந்தது. இப்படிப் பொதுவில் பேசத் தயங்கும் விஷயங்கள் பற்றிய ஒரு தொடர் எழுதும் பொறுப்பை ஒரு fresher-க்கு கொடுக்க முடிவெடுத்தது கூட அப்படிப்பட்ட ஒரு முயற்சியாகவே பார்க்கிறேன். தமிழின் டாப் 3 வார இதழ்களில் ஒன்றில் தொடர் எழுதும் வாய்ப்பு என்பது எனக்கு கிடைத்த மிகப் பெரிய ப்ரேக். லட்ச‌க்கணக்கான வாசகர்களை ஒரே வீச்சில் என் எழுத்து சென்றடைய ஒரு திறப்பு. அவருக்கு என் நன்றிகள்.

கடைசியாய் சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் எடிட்டர் ஆர்.முத்துக்குமார். இத்தொடரை நூலாக்க சில பதிப்பகங்களை அணுகி அவர்கள் மறுத்து விட்ட நிலையில் இதை எடுத்துக் கொண்டவர். இதன் நூலாக்கத்தில் அவர் காட்டிய அக்கறை முக்கியமானது. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனித்தனியே புகைப்படங்கள், நூலின் சிறப்பான வடிவமைப்பு எனப் பல விஷயங்களைக் குறிப்பிட முடியும். இப்பதிவின் முதல் பத்தியில் இவ்வாண்டு நான் எழுத முடியாது போய் விட்டதாய்க் குறிப்பிட்டிருப்பது சிக்ஸ்த் சென்ஸுக்கான நூலைத் தான். அதையும் மீறி சுணக்கம் காட்டாமல் இந்த‌ நூலைப் புத்தகக் காட்சிக்குத் தயார் செய்து கொண்டு வந்து விட்டார். குற்றவுணர்ச்சியின் கூடிய நன்றியை அவருக்குப் பதிகின்றேன்.

*

நூல் இன்னும் கைக்குக் கிடைக்கவில்லை. விற்பனைக்குக் கிடைக்க ஆரம்பத்ததும் வாங்கும் முறைகளைப் பகிர்கிறேன்.


இது எனக்கு ஆறாவது புத்தகம். யோசித்துப் பார்த்தால் இந்த ஆறு புத்தகங்களில் நான் அதிகம் உழைக்க நேர்ந்தது இந்தப் புத்தகத்துக்குத் தான். தொடர் எழுதும் போது ஒவ்வொரு வார சனி, ஞாயிறு விடுமுறையையும் தின்று செரித்தபடி தான் போஷாக்காய் வெளியானது. இன்று இணையம் தகவல் தேடலைச் சுலபமாக்கி விட்டது என்றாலும் முரண்பாடுகளைச் சரி பார்த்து 1000 சொற்களுக்குள் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் சுவாரஸ்யமாய்ப் பேச‌ வேண்டிய சவால் இருந்தது. முடிந்த அளவு அதைச் செய்திருப்பதாகவே நம்புகிறேன். முழுத்தொகுப்பாய்ப் பார்க்கையில் நிறைவாகவே இருக்கிறது.

எங்கள் அப்பார்ட்மெண்ட்டில் ஓர் ஆன்ட்டி ச்சீய் பக்கங்களின் தொடர் வாசகி. மூன்று பெண்களுக்குத் தாய் அவர். எனது மாமியாருட‌ன் பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியைகள் படித்தார்கள். ட்விட்டரில் சில பெண்கள் படித்தார்கள். இன்னும் சில 'டீசன்ட்' ஆண்களும். என் அம்மா என்னைத் திட்டிக் கொண்டே விடாமல் வாசித்தார். அது போல‌ எளியவர்கள் தான் இந்த நூலின் வாசகர்கள். தெரிந்து கொள்ளக்கூடாது என்று எந்தவொரு விஷயமும் உலகில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் எந்த ஒரு விஷயமும் தெரியாது என்று சொல்வதில் திருப்தியும் நிம்மதியும் பெருமையும் அடையவே கூடாது.

அந்தரங்கத்தை அசிங்கமெனப் பாவித்து ச்சீய் என எத்தனை நாள் சொல்லிக் கொண்டிருப்பது? வெட்கம் விட்டுப் பேசலாம்.

Comments

வாழ்த்துக்கள், மச்சி!
வாழ்த்துகள் சார்.
Youknowmee said…
வாழ்த்துக்கள் சார்.. உங்கள் வெற்றிகள் மென்மேலும் தொடர வாசகனின் வாழ்த்துக்கள்...
Sri said…
இனிய நல்வாழ்த்துகள். மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
Unknown said…
மனமார்ந்த வாழ்த்துக்கள் ரைட்டர், இனி வாய்ப்புகள் தேடிவர வேண்டும் என்பதையும் வேண்டிக்கொண்டு புத்தகம் வர ஐ அம் வெய்டிங் :))
Sankar said…
> ஆனால் செக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் இதர நூல்

செக்ஸ்த் ;) ?

நெனப்பெல்லாம் அங்கேயே இருக்கா ;-)
Thameem.M said…
வாழ்த்துக்கள் ரைட்டர் சார், புத்தக கண்காட்சியில் சந்திப்போம்:)
@Sankar P
Actually, I corrected it few hours before your comment! Are you using some feed which is not giving real-time content?
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
Sankar said…
> Actually, I corrected it few hours before your comment! Are you using some feed which is not giving real-time content?

Yes. I use a RSS/Atom reader and it showed the old content. May be some bug in the publish interface of blogger.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்