+1 4 -1


ஒரு கவிதை வார்த்தைகள்

தானியங்கி தாலாட்டு பாடும்
எந்திரத் தொட்டிலில்
மிதந்தபடி
கனவில் எழுதப்படும் கவிதையில்
இவன் வேண்டிக்கொள்கிறான்
விடாமல் தலைகோதும்
எந்திரக் கை வேண்டும் என.

- நந்தாகுமாரன்

*

நந்தாகுமாரனை எனக்கு அவரது வலைப்பூவின் வழி தெரியும். பெரும்பாலும் கவிதைகள். ஐந்தாண்டுகளுக்கு முன் எனக்குப் பிடித்த வலைப்பூக்களின் ஒரு நீட்டிக்கப்பட்ட பட்டியலை இட்ட போது அதில் அவரது தளமும் இருந்தது. விஞ்ஞானத்தைக் குழைத்துக் கவிதை சமைப்பவர் என்ற எளிமையான புரிதல் அப்போது இருந்த நினைவு.


உயிர்மை வெளியிட்டிருக்கும் நந்தாகுமாரனின் முதல் கவிதைத் தொகுதி மைனஸ் ஒன். சென்ற ஆண்டு கிட்டத்தட்ட இதே காலத்தில் அவர் தன் நூலை எனக்கு அனுப்பி வைக்க விலாசம் கேட்டிருந்தார். நான் அதை வாங்கி விட்டு, பின் வீடு, அலுவலகம், எழுத்து என முத்தரப்பு பணிப்பளு மிகுதியால் அந்த நூலைப் படித்தும் விமர்சனம் ஏதும் எழுதவியலாது போனது. அது சங்கடமாகவே இருந்தது. இன்று மீண்டும் கண்ணில் பட்ட அந்நூலை விடாப்பிடியாய் மறுவாசிப்பு செய்து இதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.

முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். இத்தொகுப்பில் இருக்கும் 89 கவிதைகளில் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கை எனக்குப் புரியவில்லை. அதற்கு என் கவிதை வாசிப்புப் பயிற்சியின் போதாமையும் காரணமாய் இருக்கக்கூடும். அவை போக மீதமிருக்கும் சில கவிதைகள் பற்றிய கருத்துக்களை மட்டும் இங்கே சுருங்கப் பதிகிறேன்.

பிரதானமாய் எனக்குப் பிடித்தவை இத்தொகுப்பில் இருக்கும் குறுங்கவிதைகள் தாம். உதாரணமாய்: ஹைக்கூ - தொகுதி 1 & 2, நட்சத்திரங்கள் - தொகுதி 1 & 2, Statement - 1, 2 & 3,  பக்கம் 37ல் உள்ள தலைப்பற்ற கவிதை, கனவு பூமியும் Neuron Networக்கும், தலைப்பிடப்படாதவை, பிரம்மாண்டம், 4°C, நிலா நகரும் பாதை,  மீண்டும் தவளை, சாக்கடை என்பதும் நீர்நிலை, வேண்டத்தகாதவன், நகரும் காலம், செய்யாத பாவம், உறக்க விதி,  கண்ணீர் கவிதை, ஒரு கவிதை வார்த்தைகள் (கவிதை - 1 மட்டும்). இவை போக, நாயைப் போல் குரைக்கும் இருட்டு என்ற கவிதையையே கூட இருள் குறித்த 7 சிறுகவிதைகளின் தொகுப்பாகவே பார்க்கிறேன். புதிய மௌனம், ஏழாவது விழிப்பு - 2 ஆகியவையும் கூட அப்படியே. இவற்றில் இருக்கும் தனித்துவமான சொற்செட்டும், stylish-ஆன கட்டுக்கோப்பும் வசீகரிக்கின்றன.

பிடித்த மற்ற கவிதைகள்: Digital மௌனம், காதலின் Genetics (முதல் பத்தி மட்டும்), விரிந்த சிறகுகள், இது, கலைக்கப்படும் அமைதி, கவிதைத் தொகுதி, ரசிகன், என் டைரி உன் டைரி, முன்செல்லும் காமத்தின் முகம்,  நகரம், அணுவினுக்கணுவாய்,  2001 - ஒரு காதல் கவிதை, 2002 - ரெண்டாம் காதல் கவிதை, Whiskey with நந்தா,  உறுமும் பொழுதுகளின் சர்ரியலிசம், காதல் = காமம் = x = ?, ஒளி எரித்த திரை, திட்டவட்டமாக, நாற்பட்டகம், ரயிலாட்டம், டிராகுலாவின் காதலி - 1, ஒரு நாள் கூத்து.

மழை பற்றிய மூன்று கவிதைகளும் (மழை கேட்டல், மழை பார்த்தல் & மழை: ஒரு மறுபார்வை) அபாரமானவை. மற்ற கவிதைகளிலிருந்து இவை விலகியும் நிற்கின்றன.

கவிதையை ஆன்மப்பூர்வமாக அல்லாமல் craft-ஆகவே பெரும்பாலும் அணுகுகிறார் நந்தாகுமாரன். இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் இரண்டு வேறுபட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. முதல் பாதியில் 1998 முதல் 2001 வரையிலான ஆண்டுகளில் எழுதியவை (அதிலும் முரண் என்னவெனில் இலக்கிய ஏடான கணையாழியிலும் எழுதி இருக்கிறார், அதற்கு நேர் எதிராய் பல்சுவை நாவலிலும் எழுதி இருக்கிறார்). இரண்டாம் பாதியில் 2008 முதல் 2012 வரை எழுதிய கவிதைகள். இடைப்பட்ட சப்த ஆண்டுகளில் அவர் எழுதவே இல்லை போலிருக்கிறது. ஆனால் இந்த இரண்டு காலகட்டங்களில் எழுதப்பட்ட கவிதைகளுக்கு இடையேயும் கூரான வித்தியாசம் தென்படுகிறது. மொழியின் இறுக்கம் தளர்ந்திருக்கிறது, மாறாய் சொற்செறிவு புகுந்திருக்கிறது. ஆனால் கவிதைகளின் பாடுபொருள் விஸ்தாரம் பெறவில்லை.

நந்தாகுமாரன் தன் கவிதைகளில் பல experiments செய்கிறார். அவை எல்லாமும் வென்றனவா என்பது வேறு விஷயம். ஆனால் செய்வதற்கு ஆள் இருப்பதே குறிப்பிடத் தகுந்த விஷயம் தான். வைரமுத்து போல் வெறும் வார்த்தை அளவில் ஊறுகாய் போல் விஞ்ஞானத்தைப் பயன்படுத்தாது, அல்லாது சில நிஜமான விஞ்ஞானக் கவிதைகள் எழுதி இருக்கிறார். தன் கவிதைகள் பற்றி அவர் எழுதியிருக்கும் சில கேள்வி பதில்கள் சுவாரஸ்யமானவை: http://nundhaa.blogspot.in/2014/04/blog-post.html

அவரே பகடி செய்திருப்பது போல் ஒரு User Friendly கவிதை அளவு இறங்காவிட்டாலும் அடுத்ததாக ஒரு Reader Friendly தொகுதியைக் கொணரக் கோருகிறேன்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்