நவீன தமிழ் சினிமாவின் பிதாமகன்

ஆழம் ‍- மார்ச் 2014 இதழில் எனது பாலு மகேந்திரா அஞ்சலி கட்டுரை வெளியாகியுள்ளது:

***

“A film is never really good unless the camera is an eye in the head of a poet.”
-    Akira Kurosawa, Japanese film director

கடந்த ஃபிப்ரவரி 13ம் தேதி பாலு மகேந்திரா இறந்த‌ போது அவருடனான நேரடி அனுபவங்களை முன்வைத்து மின், அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் பரவலாக‌ அஞ்சலிக் குறிப்புகள் வந்தன‌. இது பற்றிய ஒரு ட்விட்டர் கமெண்ட்: “என்னைத் தவிர எல்லோரும் பாலு மகேந்திராவை சந்திச்சிருக்காங்க போல!”

உண்மையில் பாலு மகேந்திரா என்ற மனிதர் தன் தனிப்பட்ட வாழ்வில் எந்த உயர்வு தாழ்வும் பாராட்டாமல் தன்னை நெருங்க விரும்பிய அத்தனை பேரையும் அனுமதித்து மிக எளிமையாக வாழ்ந்திருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.

இவ்வளவு பேர் அழுவதைப் பார்க்கும் போது சினிமாவில் இருந்த போதும் அதன் கொடுங்கரங்கள் தீண்டாது நல்லவராக வாழ்ந்து போயிருக்கிறார் என்பது புரிகிறது.

நான் அவருடன் பழகியவன் இல்லை; அவரைச் சந்திக்கும் பேறும் பெற்றவன் இல்லை. ஒரு தேர்ந்த தீவிர‌ சினிமா பார்வையாளனாக பாலு மகேந்திரா என்ற இயக்குநர் தன் திரைப்படங்கள் வழி என்னில் ஏற்படுத்திய சலனங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு இந்த சிறிய‌ அஞ்சலிக் குறிப்பை எழுத விழைகிறேன்.


1950களில் ஏதோ ஒரு வருடம். பதின்மங்களின் துவக்கத்தில் திரிந்திருந்த‌ ஓர் இலங்கைத் தமிழ்ச் சிறுவன் அப்போது பிரபல பிரிட்டிஷ் இயக்குநர் டேவிட் லீன் இயக்கிக் கொண்டிருந்த‌ The Bridge on the River Kwai திரைப்படத்தின் ஷூட்டிங்கைப் பார்க்கிறான். புதிதாய் ருதுவான ஓர் யுவதியைப் போல் அவனை அது அதீதமாய் வசீகரிக்கிறது. அது ஒரு மாபெரும் சகாப்தத்திற்கான மௌனமான‌ ஆதிவிதை.

அந்தச் சிறுவன் பாலு மகேந்திரா!

லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றாலும் சினிமா மீதிருந்த காதலால் புனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார் பாலு மகேந்திரா. டைரக்ஷன் துறை கிடைக்காததால் ஒளிப்பதிவுத்துறையில் சேர்ந்தாலும் அதில் கோல்ட் மெடலிஸ்ட்.

திரைப்படக் கல்லூரியில் அவர் பணியாற்றிய ஒரு குறும்படத்தைப் பார்த்து விட்டு பிரபல மலையாள இயக்குநர் ராமு கரியத் 1971ல் தனது நெல்லு படத்தில் அவரை ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அதற்கு கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது கிடைத்தது. அடுத்த‌ ஐந்தாண்டுகளுக்கு பல மலையாளப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். தெலுங்கு படங்களுக்கும் பிற்பாடு ஒளிப்பதிவு செய்தார்.

தமிழிலும் சில படங்கள் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார் (முள்ளும் மலரும், எச்சில் இரவுகள், உறங்காத நினைவுகள்). சுமார் 30 படங்களுக்கு ஒளிப்பதிவு மட்டும் செய்திருக்கிறார். எழுபது மற்றும் எண்பதுகளில் இந்தியாவின் மிகச் சிறந்த, மிகப் பிரபல‌மான‌ ஒளிப்பதிவாளர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் அவர்.

1977ல் கமல்ஹாசன் நடித்த கோகிலா என்ற கன்னடப் படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். பிறகு 1978ல் மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தில் ஒளிப்பதிவு செய்ததுடன் திரைக்கதை மற்றும் இயக்கத்தை மேற்பார்வை செய்தார். பிறகு தான் 1979ல் தன் முதல் தமிழ்ப் படமான அழியாத கோலங்கள்-ஐ இயக்கினார்.

எண்துகளின் துவக்கத்தில் அவர் இயக்கிய மூடுபனி மற்றும் மூன்றாம் பிறை இரண்டும் பெருவெற்றிப் படங்கள். அதே நேரம் தமிழ் சினிமாவின் முக்கியமான மைல்கல் படங்கள். மூன்றாம் பிறை க்ளைமேக்ஸ் இப்போதும் பேசப்படுகிறது. கமல்ஹாசன் அப்படத்தில் நடித்ததற்காக தன் முதல் தேசிய விருதைப் பெற்றார்.

பிற்பாடு தனக்கு மசாலா சினிமாவும் எடுக்கத் தெரியும் என நிரூபிக்க நீங்கள் கேட்டவை, உன் கண்ணில் நீர் வழிந்தால் (ரஜினிகாந்த்) ஆகிய படங்களை எடுத்தார். அவை வெற்றி பெற்றாலும் பாலு மகேந்திரா அதைத் தொடரவில்லை.

80களின் பிற்பகுதி தான் அவரது உச்சபட்ச படைப்பாளுமை வெளிப்பட்ட காலம். வீடு, சந்தியாராகம் என்ற மாஸ்டர்பீஸ்களை அப்போது தான் உருவாக்கினார். நல்ல படைப்புகளை எடுத்து கதை நேரம் என்ற டிவி சீரியல்கள் இயக்கினார்.

1993ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சதிலீலாவதி தான் அவருக்கு கடைசி வணிக ரீதியான வெற்றிப்படம். பிறகு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரைத் தோல்வி முகத்துடனேயே வைத்திருந்தது தமிழ்ச் சமூகம். அவர் படங்கள் குறைந்ததற்கு அதுவும் ஒரு காரணம். சென்ற ஆண்டு வெளியான‌ அவரது கடைசிப் படமான தலைமுறைகள் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெருநகர மல்ட்டிப்ளெக்ஸ்களில் மட்டும் வெளியிடப்பட்டது.

கருப்பு வெள்ளை (கோகிலா), கலர் (மூன்றாம் பிறை) இரண்டு வித படங்களின் ஒளிப்பதிவிலும் தேசிய விருது வாங்கியவர் பாலு ம‌கேந்திரா. 36 வருடங்களாக படம் இயக்கிக் கொண்டிருந்தாலும் 22 படங்கள் மட்டுமே இயக்கி இருக்கிறார். சமரசம் செய்து கொள்ள வர வேண்டி இருக்குமோ என்ற அச்சம் அவருக்குள் தொடர்ந்து இருந்ததாலேயே மிகத் தேர்ந்தெடுத்து மட்டுமே படங்கள் செய்தார்.

*

திரைமொழியில் 1970களின் பிற்பகுதியில் நவீனத்துவத்தை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தவர்கள் மூவ‌ர்: பாரதிராஜா, பாலு மகேந்திரா மற்றும் மகேந்திரன். அவர்களில் நவீன தமிழ் சினிமாவின் பிதாமகனாக உச்சம் பெற்றுத் திகழ்பவர் பாலு மகேந்திரா. தேசிய விருது வேட்டையைத் தமிழில் துவக்கி வைத்தவர்.

அவருக்கு மேற்கத்திய சினிமாவின் மீது மிகுந்த பிடித்தம் இருந்தது. அவரது பல ப‌டங்களின் மூலக்கதை அல்லது காட்சிகள் ஹாலிவுட் திரைப்படங்களிலிருந்து எடுத்தாளப்பட்டவை. ஆனால் அவர் ஒருபோதும் தன் தனித்துவத்தை தன் திரைப்படங்களில் இழந்தார் இல்லை. பிற்பாடு மணிரத்னம், கமல்ஹாசன் போன்றோருக்கு இந்த‌ விஷயத்தில் பாலு மகேந்திரா தான் முன்னோடி.

அழகியலும் கவித்துவமும் ததும்ப தம் படங்களின் ஒளிப்பதிவை அமைத்தார்.

பாலு மகேந்திரா படங்களின் முக்கியக்கூறு அவற்றில் வெளிப்பட்ட பாலியல். உறுத்தாத ஆனால் உண்மையான காமம் அது. எனக்கு பாலு மகேந்திரா என்றதும் அவரது வண்ண வண்ண பூக்கள் படத்தில் மௌனிகா பிரசாந்த்தை ஈர்க்க தன் ஜாக்கெட்டுள் சுருட்டிய பேட்டர் செருகி வைத்து அதை உருப்பெருக்கிக் காட்ட முயற்சிக்கும் காட்சி தான் முதலில் நினைவு வருகிறது. ஆணைக் கவர முயலும் ஒரு பெண்ணின் மனதை எவ்வளவு நுட்பமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்!

தன் முதல் இரண்டு படங்கள் தவிர (அவற்றிற்கு சலீல் சௌத்ரி) இறுதி வரை தன் படங்களுக்கு இளையராஜாவையே இசையமைப்பாளராக வைத்திருந்தார் பாலு மகேந்திரா (சந்தியா ராகம்-ல் பாடல் இல்லை என்பதால் எல்.வைத்தியநாதன் இசையமைத்தார்). இளையராஜா இசையமைப்பதை நிறுத்தினால் தானும் படம் இயக்குவதை நிறுத்திக் கொள்வேன் என்று கூட ஒருமுறை சொல்லி இருக்கிறார். அவ்வளவு தூரம் அவரது படங்களின் உயிராக இளையராஜாவின் இசை இருந்தது.

முகிழ்த்து முன்னுக்கு வந்து கொண்டிருந்த இளைஞர்களை வைத்துப் படங்கள் செய்தார் பாலு மகேந்திரா. கமல்ஹாசன், பிரதாப் போர்த்தன் முதல் பிரசாந்த், அரவிந்த்சாமி, தனுஷ் வரை இது நடந்தது. வலிமையான பெண் பாத்திரங்கள் கொண்டவை பாலு மகேந்திராவின் படங்கள். ஷோபா, அர்ச்சனா, வினோதினி, மௌனிகா போன்ற திறமையான நடிகைக‌ள் அவரால் வார்க்கப்பட்டவர்களே!

தலைமுறைகள் படத்தில் தானே நடிக்கவும் செய்தார் (அதில் இறந்து போவார்).

மற்ற சினிமாக்காரர்களிடம் இருந்து மாறுபட்ட இடம் அவர் இலக்கியத்தோடு நல்ல பரிச்சயம் கொண்டிருந்தார். ஒரு வாசகராகவே தன்னை முன்வைத்தார். அதன் சாறு அவரது படங்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. தன் சுயசரிதையை எழுத விரும்பினார். அதன் ஒரு துளியாக ஒரு வலைப்பதிவு (http://filmmakerbalumahendra.blogspot.in/) துவங்கி தன் அனுபவங்களை எழுதி வந்தார்.

அன்பையும் காதலையுமே அவரது படங்கள் தொடர்ந்து தீவிரமாகப் பேசின.

*

ஒரு வகையில் அவர் தமிழ் சினிமாவின் சுஜாதா. எழுத வருபவர்களுக்கு எப்படி சுஜாதாவின் பாதிப்பு எப்படி இருக்குமோ அதே போல் சினிமாக்காரர்களுக்கு அவர்.

கடந்த 20 வருடங்களாக திரைப்படங்கள் இயக்குவதைக் குறைத்துக் கொண்டாலும் அவர் தமிழ் சினிமாவுக்கு விதைகள் போட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்த பாலா, வெற்றிமாறன், ராம் போன்றவர்கள் அற்புதமான பல சினிமாக்களைத் தமிழுக்குக் கொடுத்தார்கள். 2009ம் ஆண்டு பாலு மகேந்திரா சினிமாப் பட்டறை என்ற திரைப்பட நிறுவனத்தை உருவாக்கி இளைஞர்களுக்கு திரைப்படப் பயிற்சி அளித்து வந்தார். அறிவுமதி, ந.முத்துக்குமார், சுகா என அவரிடமிருந்து வந்த எழுத்துக்காரர்களும் உண்டு. அவர் ஒரு கலை ஆலமரம்.

சத்யஜித் ரேயிடம் ஒளிப்பதிவாளராக இருந்த‌ சுப்ரதா மித்ரா பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவுத் திறமை கண்டு அவருக்குப் பரிசளித்த கேமெரா வ்யூஃபைண்டரை தன் மாணவன் பாலாவுக்குக் கொடுத்தார். பாலா அதை அமீருக்குக் கொடுத்தார். அமீர் அதை சசிக்குமாருக்குக் கொடுத்தார். இன்னும் பல சினிமா குரு - சிஷ்ய தலைமுறைகளுக்கு அந்த வ்யூஃபைண்டர் தன் பிரயாணத்தை மேற்கொள்ளும்.

*

சர்ச்சைகள் பூத்ததாகவே இருந்தது அவரது தனி வாழ்வு. அகிலா என்ற மனைவி இருக்கும் போதே தன் படங்களில் நாயகியாக நடித்த ஷோபாவைத் திருமணம் செய்து கொண்டார். ஓரிரு வருடங்களில் ஷோபா தற்கொலை செய்து கொண்டார். பத்தாண்டுகளுக்குப் பிறகு மௌனிகாவை மணம் செய்தார். ஆனால் எதையுமே அவர் மறைக்கவும் இல்லை, அப்பெண்களுக்கு அவப்பெயர் தேடித் தரவுமில்லை.

பெருங்கலைஞன் என்று மிகச் சிலரை மட்டும் தான் கூசாமல் மனதார‌ அழைக்க முடிகிறது. கம்பீரமாக‌ உரத்துச் சொல்லலாம்: பாலு மகேந்திரா பெருங்கலைஞன்.

இயற்கையை அரைத்தூற்றிய செல்லுலாய்ட் ஓவியங்கள், ஆன்மாவைத் திருடிப் போகும் இசைத்துணுக்குகள், சட்டை மட்டும் அணிந்த அழகான நாயகிகள் இவை எல்லாம் இனி சாத்தியமில்லை தான். ஆனால் நூற்றாண்டுகளுக்கு வைத்து ரசிக்கவும் கற்கவும் பல படங்களை விட்டுச் சென்றிருக்கிறார் பாலு மகேந்திரா.

எல்லாவற்றுக்கும் நன்றி ஐயா!

***

Comments

Shangaran said…

உங்களின் சில/பலகருத்துக்க‌ளோடு ஒத்துப்போக இயாலாவிட்டாலும்
தாங்களின் கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பதுண்டு.

தகவல் நுணுக்கம், அது ஏற்படுத்தும் நம்பகத்தன்மை, நறுக்கு தெரித்தாற்போல் ஆங்காங்கே (கச்சிதமாய்) கையாளப்படிருக்கும் உவமை, இவைதாம் உமது எழுத்து
வசிகரமென்பேன்.

நல்ல பதிவு.
~சங்கர்
Unknown said…
அழகியலும் கவித்துவமும் ததும்ப தம் படங்களின் ஒளிப்பதிவை அமைத்தார்
Naren's said…
such a bland write up without any integrity

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்