நீதியின் அழுகுரல்

ஆழம் ‍- ஃபிப்ரவரி 2014 இதழில் குல்பர்க் சொஸைட்டி எரிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்த என் கட்டுரை வெளியாகியுள்ளது.

***

Injustice anywhere is a threat to justice everywhere.” - Martin Luther King, Jr.

2014 லோக்சபா தேர்தலில் பிஜேபியின் பிரதமர் வேட்பாளரான குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சம்மந்தப்பட்ட முக்கியமான தீர்ப்பு ஒன்று கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானது. 2002 குஜராத் கலவரத்துடன் தொடர்புடையது அது.

2002 குஜராத் கலவரங்கள் மதச்சார்பற்ற இந்தியாவின் உச்சபட்ச கறுப்பு நிகழ்வு.

27 ஃபிப்ரவரி 2002 அன்று அயோத்தியிருந்து திரும்பிக் கொண்டிருந்த கரசேகவர்கள் அடங்கிய சமர்பதி எக்ஸ்ப்ரஸ் ரயிலின் பெட்டி கோத்ரா ரயில் நிலையத்தின் அருகே வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் இறந்தனர். இது முஸ்லிம்கள் செய்ததாகக் கருதப்படுகிறது. இச்சம்பவமே கலவரங்களுக்கான உடனடித்தூண்டல்.

ஃபிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரையிலான 3 நாட்கள் குஜராத் முழுக்கப் பரவலாக போலீஸ் உள்ளிட்ட அரசு இயந்திரங்களின் மறைமுக ஆதரவுடன் பெரும்பான்மை இந்துக்கள் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்ட மோசமான வன்முறைகளின் தொகுப்பே “2002 குஜராத் கலவரங்கள்” எனப்படுகிறது. இதைத் தொடர்ந்து 3 மாதங்கள் வரை குஜராத்தில் கலவரம் நீடித்தது. இதில் சுமார் 2,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள்; 254 இந்துக்கள் இறந்தனர்.

இந்தக் கலவரங்களில் ஒன்று தான் தற்போது தீர்ப்பு வெளியாகி இருக்கும் குல்பர்க் சொஸைட்டி கலவரம். உண்மையில் இது என்ன? சற்றே திரும்பிப் பார்க்கலாம்.

*

அஹமதாபாத்தின் சமன்புராவில் உள்ளது குல்பர்க் சொசைட்டி. 29 பங்களாக்கள்; 10 அடுக்குமாடிக் குடியிருப்புகள். அங்கே 40க்கும் மேற்பட்ட முஸ்லிம் நடுத்தர வர்க்க குடும்பங்களும், உயர்குடிக் குடும்பங்களும் இருந்தன. பெரும்பாலும் வியாபாரிகள்.

முன்னாள் எம்பியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான இஷான் ஜாஃப்ரி அங்கே தான் வசித்து வந்தார். நேர்மையையும் மதச்சார்பின்மையையும் பின்பற்றியவர். அவரது அரசியல் எதிரிகளாலேயே மிக உயர்வான இடத்தில் மதிக்கப்பட்டவர்.

கலவரத்தில் ஈடுபட்ட இந்து மத வெறியர்கள் இஷான் ஜாஃப்ரி மீது நெடுநாளைய அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். அதற்கு இந்தக் கலவரத்தைச் சாக்காக வைத்து திட்டமிட்டுப் பழி வாங்கி இருக்கிறார்கள்.

28 ஃபிப்ரவரி அன்று சுமார் 15,000 பேர் கொண்ட கும்பல் அந்தப் பகுதியை சூழ்ந்து கொண்டது. முதலில் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன. ஓரளவு இது கலவரக்காரர்களைக் கலைத்தது. ஆனால் நிலைமை பதற்றமாகவே நீடித்தது.

இந்த இடைவெளியில் பக்கத்திலிருந்த முஸ்லிம் சேரியிலும் கலவரக்காரர்கள் தாக்கியதால் அங்கிருந்த முஸ்லிம்கள் குல்பர்க் சொஸைட்டிக்கு இடம் மாறினர். ஜாஃப்ரி மாதிரி செல்வாக்கு மிக்க ஆசாமியின் அருகில் இருக்கும் போது தமக்கு ஆபத்து ஏற்படாது என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் அவரை நம்பி வந்தனர்.

அதற்கேற்றாற் போல் ஓர் உயர் போலீஸ் அதிகாரி ஜாஃப்ரியைச் சந்தித்து போலீஸ் பாதுகப்பு அளிப்பதாக உறுதி அளித்தார். ஆனால் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. ஜாஃப்ரி தானே போலீஸ் உயர் அதிகாரிகளிடமும் நேரடியாக முதல்வர் நரேந்திர மோடியிடமும் பேசினார். டெல்லிக்குப் பேசி பாதுகப்பு கேட்டார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. நண்பகல் வாக்கில் நிலைமை மேலும் மோசமாக அங்கே இருந்த போலீஸாரும் மெல்ல நகரத் தொடங்கினர்.

இது போக முதல்வர் நரேந்திர மோடி, தலைமைச் செயலர், டிஜிபி, போலீஸ் கமிஷனர் எல்லோரிடனும் பேசி ஜாஃப்ரிக்கு பாதுகப்பு கோரினார் முன்னார் குஜராத் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான அமர்சிங் சௌத்ரி. ஆனால் மாநில அரசு அவரது கோரிக்கையையும் காதில் வாங்கவில்லை.

மதியம் 2 மணிக்கு கலவரக் கும்பல் “ஜெய் ராம்” என்ற கோஷத்துடன் சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு காலனிக்குள் நுழைந்தது. நேராக ஜாஃப்ரியின் பங்களாவுக்கு அவர்கள் விரைந்தனர். அவர்களுக்குத் தாங்கள் அங்கு எனென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எந்த சந்தேகமும் இருக்கவில்லை.

இஷான் ஜாஃப்ரியின் வீட்டுப் பெண்களை மானபங்கம் செய்தனர். அவர்களை விட்டு விடும் படி கலவரக்காரர்களைக் கெஞ்சினார் ஜாஃப்ரி. ஆனால் அதற்கு எந்தப் பலனும் இல்லை. பதிலாக 73 வயது முதியவரான அவர் நிர்வாணப் படுத்தப்பட்டு குல்பர்க் சொஸைட்டி தெருவில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இஷான் ஜாஃப்ரி “ஜெய் ஸ்ரீராம்” என்று சொல்ல அவர்களால் நிர்பந்திக்கப்பட்டார். கடைசி வரை அதற்கு மறுத்து விட, அவர் தலை துண்டிக்கப்பட்டு நெருப்பில் வீசப்பட்டார். இதற்கு பிறகு அவரது வீட்டுக்குத் திரும்பி இரண்டு சிறுவர்கள் உட்பட அவரது ஒட்டுமொத்தக் குடும்பமும் உயிருடன் தீ வைத்துக் கொளுத்தினர்.

சற்று நேரத்தில் அந்த சொசைட்டியில் இருந்த அனைத்து வீடுகளுக்கும் நெருப்பு வைக்கப்பட்டது. அரசு கணக்குப்படி 69 பேர் இறந்தனர். 18 வீடுகள் எரிக்கப்பட்டன.

இஷான் ஜாஃப்ரி நினைத்திருந்தால் முன்னமே போலீஸ் மற்றும் ஆதரவாளர்கள் உதவியுடன் அந்த இடத்தை விட்டுத் தப்பி இருக்க முடியும். ஆனால் அவர் தன்னை நம்பி அங்கே இருந்தவர்களுக்காக அங்கே இருந்து உயிரை விட்டார்.

பிற்பாடு குல்பர்க் சொஸைட்டிக்கு யாருமே மறுபடி வசிக்கத் திரும்பவில்லை.

*

கலவரம் குறித்து அளித்த பேட்டி ஒன்றில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலவரங்களில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது காட்டுமிராண்டித்தனம் என்றார். ஆனால் ஜாஃப்ரியின் வீடு எரியூட்டப்படும் முன் அவர் வீட்டிலிருந்து கும்பலை நோக்கி துப்பாக்கியில் சுட்டிருக்கிறார்கள் என அக்கொலையை நியாயப்படுத்தினார்.

பின் வந்த நான்காண்டுகளின் போலீஸ் விசாரணையில் பேருக்கு சில கைதுகள் தவிர பெரிய நடவடிக்கைகள் ஏதும் முக்கியப் புள்ளிகள் மீது எடுக்கப்படவில்லை.

2006ல் இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி குஜராத் முதல்வர் மோடி மற்றும் இன்னும் சில அமைச்சர்கள், கட்சிக்காரர்கள் மீது குஜராத் கலவரங்களில் பங்கு பெற்றதற்காக எஃப்ஐஆர் போடப்படவில்லை எனப் புகார் அளித்தார்.

2007ல் அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குப் போட்டார். ஆனால் உயர்நீதிமன்றமோ அதை நிராகரித்து மேஜிஸ்ட்ரேட் கோர்ட் போகும் படி அவரை அறிவுறுத்தியது. அதனால் அவர் உச்சநீதி மன்றத்தை அணுகினார்.

ஏப்ரல் 2009ல் உச்சநீதிமன்றம் தன்னிடம் சமர்பிக்கப்பட்ட குஜராத் 2002 கலவரங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமர்த்தியது. முன்னாள் சிபிஐ இயக்குரை ஆர்.கே.ராகவன் இதற்கு தலைமை வகித்தார்.

மார்ச் 2010ல் நரேந்திர மோடிக்கு குஜராத் கலவரங்கள் தொடர்பாய் அவர் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு சிறப்புப் புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியது. அதற்கு அவர் நேரில் ஆஜராகி பதில் அளித்தார்.

ஏப்ரல் 2010ல் சமூக ஆர்வலர் தீஸ்டா சேடல்வாட் கலவரத்தின் போது குஜராத் டிஜிபி பிசி பாண்டே சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கூடுதல் கமிஷனர் எம்கே டாண்டனுடன் தொலைபேசிய ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த ஆர்.பி. ஸ்ரீகுமார் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன்பு அளித்த வாக்குமூலத்தில் குல்பர்க் சம்பவத்தில் வேண்டுமென்றே போலீஸ்காரர்கள் கை கட்டி வேடிக்கை பார்த்தனர் எனக் குற்றம் சாட்டினார். சம்பவங்களை நேரில் பார்த்த ரூபா மோடி, இம்தியாஸ் பதான் என்ற இரு சாட்சிகளையும் அவர் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன்பு ஆஜர்படுத்தினார்.

தெஹல்கா இதழும் தன் ரகசியப் புலனாய்வில் குல்பர்க் சொஸைட்டியில் கலவரத்தில் கலந்து கொண்டவர்களின் வாக்குமூலங்களை வெளியிட்டது.

மார்ச் 2010ல் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் ஆர்.கே. ஷா இந்த வழக்கிலிருந்து விலகிக் கொண்டர். சிறப்புப் புலனாய்வுக்குழு அரசிடம் மென்மையாக நடந்து கொள்கிறது. சாட்சிகளிடம் கடுமையாக நடந்து கொண்டு அவர்களை பயமுறுத்தி, மனரீதியாக பலவீனப்படுத்துகிறது, இது புலனாய்வைப் பாதிக்கிறது எனக் காரணம் சொன்னார்.

*

ஃபிப்ரவரி 2012ல் சிறப்புப் புலனாய்வுக்குழு தன் இறுதி அறிக்கையை குஜராத் மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் சமர்ப்பித்தது. கோத்ரா சம்பவத்துக்கு பழி தீர்க்க மூர்க்கத்துடன் குழுமியிருந்த வன்முறைக்கும்பலை ஜாஃப்ரி மேலும் கோபப்படுத்தி தூண்டியதாலேயே உயிரை இழக்க நேரிட்டது என அந்த அறிக்கை சொல்லியது.

வாக்குமூலம் அளித்த 22 பேர் உண்மையில் சம்பவம் நடந்த இடங்களில் இல்லை, ஆனால் தீஸ்டா சேடல்வாட் உள்ளிட்ட அரசு சாரா நிறுவனங்கள் போலியான கலவர சம்பவங்களை கற்பனையில் உருவாக்கி சாட்சிகளுக்குச் சொல்லிக் கொடுத்துப் பொய் சொல்ல வைத்திருக்கின்றனர் என்றது அவ்வறிக்கை.

மோடிக்கு கலவரங்களில் எந்தப் பங்கும் இல்லை, அவர் அப்பழுக்கற்றவர் என்றும் அது அறிவித்தது. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைகளில் பல சாட்சிகள் மழுப்பப்பட்டிருக்கின்றன, மறைக்கப்பட்டிருக்கின்றன எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதை எதிர்த்து ஸாகியா ஜாஃப்ரி மேல் முறையீடு செய்தார்.

டிசம்பர் 2013ல் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஏற்று நரேந்திர மோடி உள்ளிட்ட 58 அரசியல்வாதிகளை இந்த வழக்கில் குற்றமற்றவர்கள் என விடுவித்தது மெட்ரோபாலிடன் நீதிமன்றம். மேஜிஸ்ட்ரேட் பிஜே ஞானத்ரா தன் 440 பக்கத் தீர்ப்பில் மோடிக்கு எதிராய் போதுமான நம்பகமான சாட்சிகள் இல்லை என்கிறார். கலவரத்தை அடக்கவும் அமைதியை உருவாக்கவும் போதுமான நடவடிக்கைகளை மோடியின் அரசு மேற்கொண்டதாக அது சொல்கிறது. ஐபிஎஸ் அதிகாரிகளான சஞ்சீவ் பட் மற்றும் ஸ்ரீகுமார் ஆகியோரது அரசுக்கு எதிரான வாக்குமூலங்கள் நம்பத்தகுந்ததாக இல்லை என்றும் அது குறிப்பிடுகிறது.

மோடி உள்ளிட்ட பிஜேபி கட்சிக்காரர்கள் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடுகிறார்கள்.

*

தீர்ப்பு வந்தவுடனே நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற வாசகமான “வாய்மையே வெல்லும்” என எழுதினார். பிறகு இத்தீர்ப்பு குறித்து தன் வலைதளத்தில் எழுதிய நரேந்திர மோடி முதல் முறையாக குஜராத் கலவரங்கள் குறித்த தன் கருத்துக்களை வெளிப்படையாகப் பதிவு செய்தார்:

“சோகம், வலி, வருத்தம், துக்கம், துயரம், துன்பம், என வெறும் சொற்களைக் கொண்டு இந்த மனிதத்தன்மையற்ற செயல் ஒருவரின் மனதில் எற்படுத்தும் வெறுமையை வர்ணிக்க இயலாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் இது போன்ற சமயங்களில் தங்கள் வலியையும் வருத்தத்தையும் பகிரவியலாமல் தனிமையில் துன்புற வேண்டி இருக்கும். அது போன்ற கொடூரமான துரதிர்ஷ்ட தினங்கள் எந்த மனிதனின், சமூகத்தின், தேசத்தின் வாழ்விலும் வரவே கூடாது. என் அன்புக்குரிய சொந்த குஜராத்தி சகோதர சகோதரிகளின் மரணத்துக்கும் துயரத்துக்கும் நான் தான் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டேன். உங்களை சுக்குநூறாக்கிய ஒரு சம்பவத்துக்கு நீங்களே காரணம் என்று சொல்லப்பட்டால் அதனால் உள்ளுக்குள் ஏற்படும் பாதிப்பையும் அதிர்ச்சியையும் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? நாட்டில் நடந்த எந்த முந்தைய கலவரங்களை விடவும் குஜராத் அரசு இந்தக் கலவரங்களுக்கு மிகத் துரிதமாகவும் திறமையாகவும் எதிர்வினையாற்றியது.”

அதில் கலவரங்களை “முட்டாள்தனமான செயல்” எனக் குறிப்பிட்டாலும் 2001 குஜராத் பூகம்பத்தையும் 2002 குஜராத் கலவரத்தையும் ஒப்பிட்டிருந்தார். இந்த நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி தான் விடுவிக்கப்பட்டதாகவும், அமைதியாகவும் உணர்வதாகச் சொல்லி “உண்மை வெல்வதே இயற்கையின் நியதி” என்றார்.

ஸாகியா ஜாஃப்ரி நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என அறிவித்திருக்கிறார். நியாயம் கிடைக்கக் காத்திருக்கின்றன குல்பர்க் சொஸைட்டியின் எரிந்த வீடுகள்!

***

Comments

Anonymous said…
எட்டாயிரம் சீக்கியர்களை கொன்ற ஒரு லட்சம் தமிழர்களை கொன்ற காங்கிரசு பற்றி இது மாதிரியான பத்திகள் எழுதவே படப்போவதில்லை.காரணம் காங்கிரசு மதசார்பற்ற கட்சி.அதாவது இசுலாமியன் மீது கைவைக்காத வரை (வேறு எந்த இன மக்களை கொன்றோழித்தாலும்) கண்டுகொள்ளாமல் இருப்பதே இன்றைய மதசார்பின்மை.ஞாநி முதல் நீ வரை அதைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள்...எங்களுக்கும் காமெடி வேண்டாமா!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்