ஐ லவ் யூ மிஷ்கின்!


"மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்."

- பரிசுத்த வேதாகமம் [புதிய ஏற்பாடு - யோவான் : அதிகாரம் 10 வசனம் 12]

*

எல்லாத் திரைப்படங்களும் ஒரே நோக்குடையவை அல்ல‌. சில சினிமாக்கள் கண்களுக்கு; சில சினிமாக்கள் காதுகளுக்கு; சில சினிமாக்கள் கைகளுக்கு; சில சினிமாக்கள் கால்களுக்கு; சில சினிமாக்கள் குறிகளுக்கு. அரிதாய் சில சினிமாக்கள் மனதிற்கானவை. இந்த வருடம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான திரைப்படங்கள் அவ்வகையில் வெளிவந்திருக்கின்றன.

பாலாவின் பரதேசி, ராமின் தங்க மீன்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.


 தமிழ் சினிமாவின் மகத்தான தனித்துவம் மிஷ்கின். சித்திரம் பேசுதடி (2006), அஞ்சாதே (2008), நந்தலாலா (2010), யுத்தம் செய் (2011), முகமூடி (2012) படங்களுக்குப் பிறகு மிஷ்கின் இயக்கி இருக்கும் ஆறாவது படம் நாயும் ஆட்டுக்குட்டியும்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் திரைப்படம். வில்லன், பழிவாங்கல் என‌ எல்லாம் கொண்ட கொஞ்சம் cinematic கதை தான். ஆனால் அனாவசிய deviationகள் இல்லாமல் நேர்க்கோட்டில் பயணித்து துல்லியமாக முடிவுறும் திரைக்கதை. முதன் முதலாக மஞ்சள் புடவை, குத்துப் பாட்டு, ஹீரோயின் போன்ற வழக்கமான சமரசங்கள் ஏதுமில்லாமல்  மிஷ்கின் முயன்றிருக்கும் த்ரில்லர். சொந்தத் தயாரிப்பு என்பதால் இச்சுதந்திரம் சாத்தியமாகி உள்ளது.

ஒருவகையில் மிஷ்கினின் அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மூன்றையும் Dark Crime Trilogy எனலாம்.

இந்த மூன்று படங்களுமே ஒரே மாதிரி moodல் அமைந்தவை. எல்லாமே குற்றப் பின்னணி. அதன் நீட்சியான தேடல்கள், துரத்தல்கள், மரித்தல்கள். இருள், இருள் எல்லாமே இருள். இருண்மையிலிருந்து முகிழ்க்கும் குற்றங்கள். அவற்றின் பின்னே உருண்டோடத் தயாராய் நிற்கும் கண்ணீர். இவற்றின் சந்திக்கத் தயங்கும் மனோரஞ்சிதமே மிஷ்கின் படங்கள்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் பேச வேண்டியிருப்பது இரண்டே விஷயங்கள் தாம். ஒன்று மிஷ்கின் தீட்டி இருக்கும் மாயத் திரைக்கதை; மற்றது இளையராஜா மீட்டி இருக்கும் மந்திர இசை. ஒன்று அதன் உயிர்; மற்றது அதன் ஆன்மா.

ஓர் இரவு; ஒரு காடு. ஓர் ஓநாய்; சில‌ ஆட்டுக்குட்டிகள். ஒரு கரடி; சில புலிகள். என்ன நடக்கிறது என்பது தான் கதை.

பட்டு கத்தரித்தாற் போன்ற கச்சிதமான திரைக்கதை. ஒவ்வொரு காட்சியும் சுவார‌ஸ்யம் குழைத்துக் கொண்டு அடுத்த காட்சியை நோக்கி விநாடி முள்ளாய் வேகம் தெறிக்கிறது. மிக முக்கியமாய் கதையின் போக்கில் எந்தப் பகுதியையுமே முன் அனுமானிக்க முடிவதில்லை. திரைக்கதையை அவ்வளவு நெருக்கமாய் நேர்த்தியாய் நெய்திருக்கிறார் மிஷ்கின்.

பண்டைய கிரேக்கத்தின் ஈஸாப் நீதிக்கதைகளில் வரும் 155வது கதை (Perry Index) ஓநாயும் ஆட்டுக்குட்டியும். ஓநாய்க்கு கடும் பசி. வழியில் சந்திக்கும் ஆட்டுக்குட்டியை அது கொன்று தின்ன விரும்புகிறது. பழி பாவம் வராமலும் மனசாட்சி உறுத்தாமலும் அதைச் செய்ய ஆட்டுக்குட்டியின் மீது இல்லாத பொல்லாத பொய்க்குற்றங்கள் எல்லாம் சுமத்தி அதைக் கொல்கிறது ஓநாய். கிட்டதட்ட இதே லைன் தான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திலும். ஆனால் சற்று வேறு perspective.

ஓநாயோ ஆட்டுக்குட்டியோ எப்போதும் அதுவாகவே இருப்பதில்லை. சூழல் பொறுத்து ஓநாய் ஆட்டுக்குட்டியாகவும் ஆட்டுக்குட்டி ஓநாயாகவும் திரிகின்றன. ஒட்டுமொத்தமாய்ப் பார்த்தால் மனிதர்களின் கூட்டு புத்தியான‌ சமூகம் தான் இங்கு ஓநாய்; ஒவ்வொரு தனி மனிதனுமே ஒரு சந்தர்ப்பத்தில் அதனிடம் ஆட்டுக்குட்டியாய் சிக்கிக் கொள்கிறான். சமூகத்திற்கு அந்த அப்பாவியைத் தண்டிக்க காரணம் தேவை, பொய்யோ நிஜமோ காரணம் போதும் திருப்தி அடைய.

படத்திலும் உல்ஃப், சந்துரு இரண்டு பாத்திரங்களுமே அப்படித்தான். ஓநாயாகவும் ஆட்டுக்குட்டியாகவும் மாறி மாறி அவதரிக்கின்றனர். மிஷ்கின் அதை மிகத் துல்லியமாக நம்மை உணர வைக்கிறார். முக்கியமாய் சந்துரு ஓநாயாய் மாறும் தருணம் தனக்கான நியாயங்களை தானே உருவாக்கிக் கொள்கிறான். அவனுக்கு உல்ஃபையும் கெட்டவனாகக் காட்ட‌ வேண்டும், தானும் பாதிக்கப்பட்டவன் என்ற பிம்பம் வேண்டும். அவனிடம் யாரும் காரணம் கேட்பதில்லை. ஆனாலும் அவன் மனசாட்சிக்கு அவனே காரணம் சொல்பவன் போல் தான் செய்யும் தவறுகளுக்கு (கார்த்தியைக் கொல்வதாக மிரட்டுவது) நியாயம் கற்பிக்கிறான். தரிசனம் மிகுந்த‌ வலுவான‌ தத்துவார்த்த காட்சித் துண்டு அது.

வழக்கம் போல் மிஷ்கினின் குறியீடுகள் படத்தில் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன. ஃபோனில் டாக்டரின் instructions கேட்டு சந்துரு ஆபரேஷன் செய்த காட்சிக்குப் பின் சிலந்தி வலை பின்னி முடித்த‌ காட்சி ஓர் உதாரணம். அந்த டாக்டர் உதவ முடிவெடுக்கும் சூழல் ஓர் இழவு நிகழ்வு என்பது அவர் மனம் convince ஆவதை விளக்கம் தேவையின்றிக் காட்டி விடுகிறது. திரைக்கதையில் இது போல் ஆங்காங்கே கவிதை செருகி வைத்திருக்கிறார். அசுர உழைப்பு; தேவ கணங்கள்.

சொல்லப் போனால் அவர் படத்தின் இருள் கூட குறியீடு தான். நோய்க்கூறு மனநிலைகள் செயல்படும் gloomy darkness!


இசை என் அப்பன், ஞான பண்டிதன் இளையராஜா. முன்னணி இசை என்று மிஷ்கின் குறிப்பிடுவது மிகையே அல்ல. படத்தில் திரைக்கதை, நடிகர்கள், தொழில்நுட்பம் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு இசை தான் முன்னே நிற்கிறது. முழுக்க முழுக்க ராஜா ராஜ்யம். படம் விட்டு வெளிவருகையில் ஓர் இரவு முழுக்க இளையராஜாவின் இசையோடு அமிழ்ந்து கிடந்து எழுந்தது போன்ற பிரமையும் பிரம்மிப்பும் ஒருசேர‌ ஏற்படுகிறது. ராஜா! என்ன மனுஷய்யா நீர்?

சேஸிங் காட்சிகளில் வரும் Growl, த்ரில்லான காட்சிகளில் வரும் Grim reaper, க்ரிமேட்ரியில் மிஷ்கின் கதை சொல்லும் போது வரும் A fairy tale, ஓநாயிலிருந்து ஆட்டுக்குட்டி எட்டிப் பார்க்கும் போது வரும் Firefly, க்ளைமேக்ஸில் வரும் Redemption, படத்தின் தீம் ம்யூஸிக்காய் வியாபித்திருக்கும் Compassion எல்லாமே மிகச் செறிவான இசைக்கோர்வைகள்.

எல்லாவற்றுக்கும் மேலாய் Somebody loves us all. அது இளையராஜா தன்னைப் பற்றித் தானே போட்டுக் கொண்டது போல!

நந்தலாலா, ஹே ராம், விருமாண்டி, பிதாமகன், ரமணா போன்ற ராஜாவின் உச்சமான பின்னணி இசைப் பங்களிப்புகள் கொண்ட படங்களுடன் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தையும் வைக்கலாம். பின்னணி இசையமைப்புக்கு ஒரு பாடம் இப்படம் என்று சொல்வது cliché என்றாலும் வேறு வழியில்லை. அது தான் நிஜம். BGMக்கான‌ தேசிய விருது reserved.

மிஷ்கின், ஸ்ரீ இருவரும் தான் படத்தின் பிரதான பாத்திரங்கள். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் ஓநாயும் ஆட்டுக்குடியும் கதை சொல்லும் போதும், ஸ்ரீ ஆபரேஷன் செய்யும் போதும் காட்டும் முக பாவங்கள் அற்புதங்கள். இசை விமர்சகர் ஷாஜியும் ஒரு பாத்திரம் ஏற்று ஓரளவு நன்றாகவே செய்திருக்கிறார். வில்லன் மட்டும் கொஞ்சம் ப்ளாஸ்டிக். சிறுபாத்திரங்களில் வருபவர்கள் (திருநங்கை, நீலிமா, கார்த்தி, அம்மா) கூட சிறப்பாகவே பங்களித்திருக்கிறார்கள்.

தான் ஓநாய் என்பதைப் புலப்படுத்த பல காட்சிகளில் மிஷ்கின் ஓநாயின் உடல்மொழியை குரலைப் பிரதி எடுக்கிறார். க்ளைமேக்ஸில் பேஸ்மெண்ட்டில் கார்த்தியையும் அம்மாவையும் காப்பாற்ற அலைக்கழியும் காட்சி ஓர் உதாரணம்.

யார் ஒளிப்பதிவு செய்தாலும் மிஷ்கின் படங்களில் மிஷ்கின் தான் ஒளிப்பதிவு எனத் தோன்றும். மகேஷ் முத்துஸ்வாமி, சத்யாவுக்கு அடுத்து இப்படத்தில் பாலாஜி வி. ரங்கா. கேமெரா ஆங்கிள்களில் மிஷ்கின் ஒரு தமிழ் ராம் கோபால் வர்மா. ஆனால் அவரை விட சற்றே sensible-ஆன கோணங்கள். ஒலிப்பதிவும் படத்தொகுப்பும் கலையமைப்பும் கூட கச்சிதம்.

மிஷ்கின் படத்தை இயக்கியிருக்கிறார், எழுதியிருக்கிறார், நடித்திருக்கிறார், எல்லாவற்றுக்கும் மேல் தயாரிப்பும் அவரே. A composition without compromise. மிஷ்கினை வணங்குகிறேன். சமரசமே இல்லாமல் தன் பாணியில் இன்னும் பல படங்கள் இயக்கி இந்தியாவின் சிறந்த இயக்குநராய் மிளிர வாழ்த்துகிறேன். ராம், மிஷ்கின் போன்றவர்கள் திரைப் போராளிகள்.

இப்படத்திற்கு ரீலீஸ் தள்ளிப் போய் இப்போதும் மிகக் குறைவான மிகச் சுமாரான திரையரங்குகளில் மட்டுமே வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல் சுரணையே இல்லாம‌ல் பல்லிளித்துக் கொண்டிருக்கிறோம். வாழ்க தமிழ்; வளர்க தமிழர்கள்.

ஸ்டார்ட் ஆகாத பைக்கை உதைத்து முயற்சிக்கும் நேரம் முழுக்க‌ துப்பாக்கிக்கு பயந்து சல்யூட் அடித்து நிற்கும் வயதான கான்ஸ்டபிளை ஸ்டார்ட் ஆனதும் சுட்டுக் கிளம்புவான் வில்லன். அவருக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை!

இதுவரையிலான தமிழ் சினிமா சரித்திரத்தில் ஆகச்சிறந்த த்ரில்லர் படம் இதுதான். நந்தலாலாவுக்கு அடுத்தபடி மிஷ்கின் அளித்திருக்கும் மிகச் சிறந்த திரை அனுபவம் இதுவே. சமகால தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இயக்குநர் மிஷ்கின் தான்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - இளைய‌ராஜாவின் ஆனந்த தாண்டவம்; மிஷ்கினின் ருத்ர தாண்டவம். Must must must watch!

*

Comments

நீங்கள் ஒரு ரைட்டர் என்பதை நிரூபித்திருக்கிரீர். உங்கள் பேனாவால் இன்னும் தமிழ் அழகுருகிறது. திரைப்படம் பற்றிய பார்வை அருமை. மிஷ்கின் மிகசிறந்த ஆளுமை கொண்ட இயக்குனர் ஐயமேதுமில்லை. படம் இன்னும் பார்க்கவில்லை. நம்பிக்கையோடு இருக்கிறேன் பார்க்க.
Nat Sriram said…
சிஎஸ்கே..ராயல் சல்யூட். என்ன எழுத்துய்யா உமக்கு?
Anonymous said…
// இதுவரையிலான தமிழ் சினிமா சரித்திரத்தில் ஆகச்சிறந்த த்ரில்லர் படம் இதுதான். // மிஷ்கின் படத்தில் நகைச்சுவை சிறப்பாக இல்லாதிருந்தாலும் இதுபோன்ற ரசிகர்களின் அதீத முடிவுகள் அந்தக் குறையைத் தீர்க்கிறது.
Anonymous said…
//வாழ்க தமிழ்; வளர்க தமிழர்கள்.// இதுதானே நம்மகிட்ட இருக்கிற வினோதமானப் போக்கு. வாழ்க.வளர்க. தமிழிணைய மேதா விமர்சகர்கள்.
/இதுவரையிலான தமிழ் சினிமா சரித்திரத்தில் ஆகச்சிறந்த த்ரில்லர் படம் இதுதான்/ இந்த வரியை தவிர ஒட்டுமொத்த பதிவுக்கும் ஒத்து போகிறேன். ஆகச்சிறந்த மிஷ்கின் படைப்பு அஞ்சாதே என்பது எந்த மிஷ்கின் ரசிகனாலும் மறுக்க முடியாத ஒன்று. வணிக கோட்பாடுகளின் அழுத்தத்தால் பாடல்கள் இணைக்கப்பட்ட படமென்பதால் அதை முழுமையல்லாத படைப்பு அல்ல என மறுதலிக்க முடியாது. ஓநாய், ஆட்டுக்குகுட்டி, கரடி, புலி போன்ற அழகியல் அமைப்பு அஞ்சாதேவில் கிடையாது. அந்த அமைப்புதான் ஆகச்சிறந்த திரில்லர் என்று எழுத உந்தி இருக்க வேண்டும். கடைசியாக அஞ்சாதேவின் மற்றுமொரு பெருமை. ஒரே ஒரு டூயட்டை நீக்கிவிட்டு மற்ற இரண்டு பாடல்களையும் தம்மிடத்தே கொண்டாலும் அஞ்சாதேவில் செயற்கைத்தனம் சற்றும் இருக்காது.
Unknown said…
மிகவும் நேர்மையான சிறப்பான விமர்சனம்.
Unknown said…
மிகவும் சிறப்பான நேர்மையான விமர்சனம்.நன்றி.
Kaarthik said…
Agreed with each and evrey line except /இதுவரையிலான தமிழ் சினிமா சரித்திரத்தில் ஆகச்சிறந்த த்ரில்லர் படம் இதுதான்/ It's one of the best thriller movies.

I second Natarajan. IMO Mysskin's best is Anjathey. I liked the BG Score of K in Yudham Sei esp in thrilling sequences more than OAK

Sree was terrific in the operation sequence. His eyes are his assets.
Unknown said…
ஐ லவ் யூ மிஷ்கின்! வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.
Unknown said…
சிஎஸ்கே - மிகச்சரியான விமரிசனம்.
ஐ லவ் யூ மிஷ்கின்! வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.
இசையராஜா பித்தன் said…
இசையராஜாவை சரியாக பயன்படுத்தி கொண்டமைக்காகவே மிச்கினுக்கு ஒரு சல்யூட் சிங்கத்துக்கு தயிர் சாதமே போட்டு வீணடித்து வந்த நிலையில் சிங்கத்துக்கு(ராஜா) ஆட்டுக்கறி படைத்துலாளர் மிஸ்கின்..சிங்கமும் பட்டையை கிளப்பி இருக்கிறது..இனி ராஜா இது போன்ற அற்புத படங்களாக தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும் என்பது என் எண்ணம் ...

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்