களிபத்துப்பரணி

வண்ணத்துப்பூச்சியே
உன் இறகுகளை விரிக்கும் போது
என்ன கனவு காண்கிறாய்...


இது ஒரு ஜப்பானிய ஹைக்கூ (மொழிபெயர்ப்பு: மிஷ்கின்). இந்தக் கவிதை அநிச்சையாய் அரட்டைகேர்ளிடம் அழைத்துச் செல்கின்றது. ஒரு கலர்ஃபுல்லான பட்டர்ஃப்ளையின் கனவு அவரது ட்வீட்கள் போலத்தான் இருக்கும் எனத்தோன்றுகிறது.

அரட்டைகேர்ள் (@arattaigirl) என்பது கோவையைச் சேர்ந்த பிரபல‌ பெண் ட்வீட்டரான சௌம்யா. இன்று அவர் பத்தாயிரம் ஃபாலோயர்களை ட்விட்டரில் கடந்திருக்கிறார். இந்த பிரம்மாண்ட மைல் கல்லின் அருகே நின்றபடி அவர் கடந்து வந்த எழுத்துப் பாதையைத் திரும்பிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம் - உடன் அவருக்கென‌ சில goodகளும் குட்டுகளும்.


முதலில் ஒரு சின்ன கணக்கு பார்க்க‌லாம்: கிட்டதட்ட இரண்டே கால் வருடங்கள் - கொஞ்சம் துல்லியம் கூட்டினால் 818 நாட்கள் - இந்தக் கால வரையறையில் இன்றைய அவசர உலகில், தமிழ் வாசிப்புச் சூழலில் ஒருவர் அதிகபட்சம் எத்தனை பேரை தன் எழுத்தால் வசீகரிக்க முடியும் என நினைக்கிறீர்கள்? அதுவும் எந்தப் பிரபலப் பின்புலமும் இல்லாமல் எந்த ஊடக பக்க‌பலமும் இல்லாமல் ஒரு சமூக வலைதளத்தில் மட்டும் எழுதி - 1000 பேர்? 2000 பேர்? 3000 பேர்? அட, 5000 பேர்?

சௌம்யா அனாயசமாய் 10,000 பேரை ஈர்த்து வைத்திருக்கிறார்! தமிழ் ட்வீட்டர்களில் இரண்டாவதாய் அதிக ஃபாலோயர் கொண்டவர்; 10,000 ஃபாலோயர்கள் கொண்ட ஒரே தமிழ் பெண் ட்வீட்டர்; மிக வேகமாய் 10,000 ஃபாலோயர்கள் பெற்றவர்.

பெண் என்பதன் கவர்ச்சி இந்த எண்ணிக்கைக்கு ஒரு காரணம் எனினும் ஆரம்பத்தில் இதற்காக‌ வரும் ஒரு ஃபாலோவரை தயவு தாட்சண்யமின்றி விடாது தன்னிடம் ஈர்த்துத் தக்க வைத்துக் கொள்வது அவரது எழுத்தின் உள்ளடக்கம் தான். அந்த வகையில் இந்த எண்ணிக்கையை ஊதிப் பெரிதாக்கப்பட்ட ஒன்றாகக் கொள்ளாமல் நிஜமானதாகவே கொள்ள வேண்டும்.

*

இன்று சமூக வலைதளங்களில் குறிப்பிடத்தக்க தமிழ் படைப்புகள் வெளியாகின்றன. இணையத்தில் எழுதப் புகுவோரில் பெரும்பாலானோர் வலைப்பூ என்பதை விடுத்து சமூக வலைதளங்களில் தான் எழுத விரும்புகிறார்கள். இங்கு இருக்கும் பிரம்மாண்ட ஜனத்திரளும், கிடைக்கும் உடனடி எதிர்வினையும் இதன் முக்கியக் காரணிகள். பொதுவாய் ஃபேஸ்புக்கில் கவிதை, கட்டுரை, பத்தி எழுதப்படுகின்றன. ட்விட்டரில் சுவாரஸ்யமான ஒற்றை வரிகள் (பேயோன் சொல்லாட்சியில் - துண்டிலக்கியம்). நல்ல‌ ட்வீட் என வகைப்படுத்தப்படக் கூடியவை கவித்துவம் இழைந்ததாய், தத்துவம் உயிர்த்ததாய், அங்கதம் செறிந்ததாய் இருக்கின்றன. குறும்புடைத்த குறும்படைப்புகள். சிரிப்பும் சிந்தனையும் இவற்றின் ஆதார குணம்.

ட்விட்டரில் எழுதப்படுவனவற்றை இன்றைய நிலையில் நேரடி இலக்கியம் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் இலக்கியத்துக்குள் நுழைய இது ஓர் அருமையான நுழைவாயில். மொழியாளுமையை வலுப்படுத்திக் கொள்ளவும், சிந்தனை முறையை வளப்படுத்திக் கொள்ளவும் இது ஒரு சுதந்திரமான‌ பயிற்சிப் பட்டறை. அவ்வகையில் இங்கு எழுதுபவர்களில் இருந்து தான் வருங்கால எழுத்தாளர்கள் உருவாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

பேயோன், தோட்டா, கார்க்கி, அராத்து போன்றோர் ஏற்கனவே அச்சு, காட்சி ஊடகங்களில் கால் பதித்திருக்கின்றனர்.

இந்த அடிப்படையில் தான் சௌம்யாவின் ட்வீட்களின் வழி லேசாய்க் கசிந்திருக்கும் அவரது எழுத்தாளுமையை ஆராய முற்படுகிறேன். உள்ளடக்கம் தாண்டி சொற்கோர்வை மற்றும் சொல்முறையில் கூட கவனத்துக்குரியது இவர் எழுத்து.

*

சௌம்யாவின் நல்ல தனி ட்வீட்களுள் பெரும்பாலானவற்றை பத்து வகைமைகளுக்குள் சுலபமாய் அடைக்கலாம்: 1. ரொமான்ஸ் ட்வீட்கள் 2. குழந்தைத்தன ட்வீட்கள் 3. புத்திசாலித்தன ட்வீட்கள் 4. சிந்தனை ட்வீட்கள் 5. பெண்மை ட்வீட்கள் 6. கவித்துவ ட்வீட்கள் 7. யதார்த்த ட்வீட்கள் 8. அங்கத ட்வீட்கள் 9. கருத்து ட்வீட்கள் 10. சொல் விளையாட்டு.
புதுக்கவிதையில் பெண்ணின் காதல் அவளது மொழியில் சரியாய்ப் பதிவு செய்யப்படவே இல்லை என்பேன் (அந்தக் குறை தீர்க்கவே தேவதை புராணம் முயற்சித்தேன்). இந்தப் பின்னணியில் தான் முக்கியத்துவம் பெறுகின்றன‌ இவரது ரொமான்ஸ் ட்வீட்கள். மிக இயல்பாக மிகச் சுவாரஸ்யமாக மிக உயிர்ப்புடன் காதலை சொல்லிச் செல்கிறார். (உதா: ஜன்னல் அருகே அமர்ந்திருந்தும்.... உன்னுடனான பேருந்து பயணத்தில் வேடிக்கை பார்க்க வெளியே எதுவுமில்லை).

ஒரு குழந்தையின் பார்வையில் இவ்வுலகைப் பார்த்து அதன் அபத்தத்தைக் கேலி செய்கிறார் (உதா: முதலெழுத்தாய் 'ஃ' இருந்திருக்கலாம்... குழந்தைகளுக்கு வெகு சுலபம்:-)). ஒரு வெண்மனதின் மலர்ச்சியாக‌ தீவிரம் கொள்கின்றன இவை.

புத்திசாலித்தன ட்வீட்கள் சௌம்யாவின் ப்ராண்ட் (எந்த விளக்கமும் தேவையின்றி ஒருசோறு பதம் மட்டும் தருகிறேன் - புரியும்படி எழுதப்படாத எழுத்துக்கள் புரியும்படி இன்னுமொரு முறை:-)). கணிசமாய் இந்த வகையில் எழுதி இருக்கிறார்.

சிந்தனையைத் தூண்டும் விதமான ட்வீட்களையும் நிறைய எழுதி இருக்கிறார். அதாவது படித்துக் கடந்த பின்பும் நம்மை விடாது யோசிக்க வைப்பவை, நேரடியாய் மனதைப் பாதிப்பவை. (உதா: தேட யாருமில்லாதவர்கள் தொலைவதில்லை!).

பெண்மை ட்வீட்கள் எனச் சொல்வது பெண்ணிய எழுத்தன்று. பெண்ணாக இருப்பதனாலேயே அனுபவிக்கும், பெண்ணால் மட்டுமே எழுதப்படக்கூடிய, பெண்மையின் சாயை பொங்கும் எழுத்து. அதிலும் அவ்வப்போது எழுதியிருக்கிறார் (உதா: குளியலை போன்ற சிறந்த அழகுக்குறிப்பு எதுவுமில்லை!, பெட்ஷீட் துவைக்கும் போது கோபமா இருக்கறது நல்லது:-)).

கவித்துவ ட்வீட்கள் என்று குறிப்பிடுவது பெரும்பாலும் நடையில், சிலசமயம் உள்ளடக்கத்தில் கவிதையை ஒத்ததாய் அமைந்து விடும் ட்வீட்கள் (உதா: அடர்வனத்திலும் போராடி உட்புகும் ஒளிக்கீற்றும்... அதைத்தேடியே வளைந்து வளரும் சிறுசெடியுமாய்.... காதல், ஏதாவது எழுதலாமென யோசித்தபடி செடிகள் சூழ் தோட்டத்தில் வந்தமர்ந்தபின் எழுதியே ஆக வேண்டுமா என யோ(ர)சிக்க வைக்கிறது ஆங்கோர் அணில்!). பல கவிதைகளை இப்படி ட்வீட்களாக வீணடித்திருக்கிறார்!

யதார்த்த ட்வீட்கள் என்பது தினசரிகளின் யாதார்த்ததை அதன் தீவிரத்துடன் பதிவு செய்யும் எழுத்து. மிகைப்படுத்தாத இயல்பின் ஆழம் இவற்றில் புழங்கும். (உதா: இரண்டாவதாகவும் தோற்கும்போது லேசாய் வெற்றி புளித்து விடுகிறது).

ஒரு விஷயத்தை அங்கதத்துடன் முன்வைக்கும் ட்வீட்கள் நிறைய எழுதி இருக்கிறார் சௌம்யா (உதா: முடிவெடுக்க பெண்கள் எடுத்துக் கொள்ளும் அவகாசத்திற்கு... 'வீட்டுக்காரர்கிட்ட கேட்டு சொல்றேன்' என்று பெயரிட்டிருக்கிறார்கள்).

ஒரு நடப்பு அல்லது படைப்பு குறித்த தன் கருத்துக்களை ரசனையாக அவ்வப்போது பதிந்து வந்திருக்கிறார் சௌம்யா. இவற்றில் தென்படும் நேர்மை மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது (உதா: ரகுமான் இசை காலத்தின் கட்டாயம்... தவிர்க்க முடியாது! ராஜா இசை காலத்தை வென்றது... அழிக்க முடியாதது! - ட்விட்டரில் மிகப் பிரபல அக்கப்போரான ராஜா - ரஹ்மான் சண்டையில் இந்தக் கருத்தே இதுவரையிலுமான மிகத் துல்லியமான பதிவாகத் தோன்றுகிறது).

சொல் விளையாட்டு பொதுவாய் ட்விட்டரில் பலரும் செய்வது தான். சொற்களை உடைத்தோ, சேர்த்தோ, திரித்தோ அல்லது அப்படியேவோ முற்றிலும் மாறுபட்ட வேறு பொருள் ஒன்றுடன் தொடர்புபடுத்தி எழுதுவது இதன் அடிப்படை (உதா: எதையும் 'அதிகாரமாக' சொன்னால்தான் மக்கள் கேட்டுக்கொள்வார்கள் என்பது வள்ளுவருக்கு தெரிந்திருக்கிறது).

மற்றவர்கள் கவனிக்கத் தவறிய அல்லது உதாசீனம் செய்த விஷயங்களை மிக அழகாக ட்வீட்டுபொருள் ஆக்கியுள்ளார். கந்தல் ஆடையும், சடை விழுந்த தலைமுடியும், அழுக்கு மூட்டையுடனும் வருபவனை கண்டதும் விரட்ட வேண்டுமென நாய்க்கும் கற்றுக் கொடுத்தது யார்? - இந்த வரி மனதில் எழுப்பும் தத்துவார்த்தமான கேள்விகளின் ஆழம் அளப்பரியது.

சினிமாப் பாடல்களின் தாக்கம் ஆங்காங்கே தெரிகிறது. அவரது மொழி பாட்டுக்கும் உரைநடைக்கும் இடைப்பட்டதாய் அமைந்திருக்கிறது. சற்று பிறழ்ந்தால் கவிதையாகி விடக்கூடிய ஆபத்துடனே பல ட்வீட்கள் புன்னகைக்கின்றன. 

*

பொதுவாக ட்விட்டரில் இவரது செயல்பாடுகள் pleasant-ஆகவே இருக்கின்றன. அவர் பெண்ணா என்ற சந்தேகம் கிளம்பிய போதும், இன்ன பிற அசர்ந்தப்பங்களின் போதும் "சரிங்க!" எனக் கண்ணியமாய்க் கடந்திருக்கிறார். அனாவசிய விவாதம் எதிலும் பட்டுக்கொள்ளாமல், அதே சமயம் அவசியமான விஷயங்களுக்கு பொறுமையாக பொறுப்பாக‌ பதிலிறுக்கிறார்; நியாயமான எதிர்வினைகளைப் பொருட்படுத்துகிறார். மற்றபடி, ரஜினி ரசிகை என்பதைத் தவிர பெரிய புகார் ஏதுமில்லை.

குறைகளே இல்லையா எனக் கேட்டால் நிறைய இருக்கின்றன. ஒரு ட்வீட் பற்றி அந்த ட்வீட்டிலேயே பேசும் recursive ட்வீட்கள் போதும் போதும் என்கிற அளவுக்கு போட்டுத் தள்ளி இருக்கிறார். ஒன்றிரண்டு அழகு தாம். ஆனால் overdose ஆகி விட்டது. அப்புறம் நிறைய ட்வீட்கள் மறுபடி மறுபடி போட்டிருக்கிறார் (#மீள்). நல்ல‌ இசையை ரிப்பீட் செய்தால் இளையராஜாவையே கேலி செய்யும் காலத்தில் இது நிச்சயம் ஒரு குறை தான். பெரும்பாலும் அவசியமே இல்லாமல் டைரக்ட் ரீட்வீட் செய்யாமல் மென்ஷன் RT செய்திருக்கிறார். அதை எப்போதும் எதிர்ப்பவன் நான். பெண் என்பதாலோ என்னவோ ஸ்மைலிகளின் அதீதப் பயன்பாடும் துருத்தி நிற்கிறது. தற்போது அனாவசிய உரையாடல்களே சுத்தமாய் இல்லை என்றாலும் ஆரம்ப காலத்தில் பெயருக்கேற்றாற் போல் நிறைய‌ அரட்டை அடித்திருக்கிறார். தலைவர்களின் ஸ்டேட்மெண்ட்கள், நடப்புச் செய்திகள் ஆகியவற்றுக்கு கமெண்ட் போடுவது என்ற சமூக வலைதளங்களின் தொன்று தொட்டு வரும் கெட்ட பழக்கத்தை நிறையவே கொண்டிருந்திருக்கிறார். நல்லவேளை, பிற்பாடு தடம் மாறி விட்டார். குட்மார்னிங் ட்வீட்கள், புரட்சிகர ட்வீட்கள், #tag ட்வீட்கள் போன்ற ஒவ்வாமைகளுடனும் பழக்கம் இருந்திருக்கிறது. எழுத்துப்பிழை, இலக்கணப்பிழைகளுக்கு இன்னமும் எழுத்தில் அடைக்கலம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார். அஞ்சலி என்கிற நடிகையை தன் முகமாக முன்வைப்பதிலும் உறுத்தல் உண்டு. அது சராசரிகளின் சந்துஷ்டியன்றோ!

இது போல் சிற்சில. ஆனால் இந்தக் குறைகளை எல்லாம் தாண்டி, கேள்விகளின்றி நிறைகளே மனதை நிறைக்கிறது.

*

யோசித்து பார்த்தால் சௌம்யாவின் எழுத்தில் ஆரம்ப கால‌ கனிமொழியின் சாயல் தெரிகிறது (குறிப்பாய் கருவறை வாசனை கவிதைத்தொகுப்பு). இங்கே பெண் கவிஞர் என்றாலே கடுமையான சொற்களைச் சுமந்து கொண்டு பாலியல் சுதந்திரக் கவிதை எழுத வேண்டும் என்பது போன்ற தோற்றமே இருக்கிறது. மாற்றாய் உள்ளே வந்தவர் கனிமொழி. இப்போது அவரும் திசை மாறிப் போய் விட்டார். ஆங்காங்கே இணையத்தில் சில பெண்கள் அது போல் எழுதினாலும் தொடர்ச்சியான தீவிரமான பங்களிப்புகள் ஏதுமில்லை. அந்த இடம் காலியாய்த் தான் இருக்கிறது. சிரத்தை எடுத்து  சௌம்யா இலக்கியம் முயன்றால் அங்கே நாற்காலி போட்டமரலாம். எத்தனை காலம் தான் ட்விட்டரில் உழல்வது?

வலைபாயுதே, வலைப்பேச்சு எல்லாம் தாண்டி வேறொரு சௌம்யாவை அச்சு ஊடகம் பார்க்கட்டும். வாழ்த்துக்கள்!

******

பின்னிணைப்பு 1:

ஓராண்டுக்கு முன் சமூகவலைதளங்களில் பிரபலங்கள் பற்றி ஆழம் இதழில் நான் எழுதிய கட்டுரைக்காக (கலைஞர் முதல் வலைஞர் வரை) ட்விட்டரால் பிரபலம் ஆனவர் என்ற அடிப்படையில் சௌம்யாவிடம் எடுத்த ஒரு மினி பேட்டி:

ட்விட்டரில் இருக்கும் அனுபவம் குறித்து சொல்லுங்கள்?

ட்விட்டருக்கு வந்த பின்பு தான் எனக்கும் சுமாராக எழுத வரும் என்பதைப் புரிந்து கொண்டேன். எழுத்து தான் முக்கியமான அக அனுபவம். புற அனுபவம் என்றால் ஸ்மார்ட்ஃபோன் அல்லாத சாதாரண நோக்கியா 2730 மொபைல் ஃபோனை மட்டும் பயன்படுத்தி இதுவரையிலும் ட்வீட்கள் போட்டு வந்திருப்பதைச் சொல்லலாம்.

இதனால் கிடைத்திருக்கும் புகழை எப்படி உணர்கிறீர்கள்?

நிறைய சந்தோஷமும், அதை விட நிறைய பயமாகவும். பயம் என்று சொல்வது புகழ் தந்திருக்கும் எதிர்பார்ப்பையும் அதனால் வந்திருக்கும் பொறுப்புணர்வையும்.

சமூகவலைதளங்களினால் சமூக நன்மை ஏதும் உண்டா?

நன்மை, தீமை இரண்டும் உண்டு. நன்மை என்றால் நம் கருத்துகள் துரிதமாக மற்றவரைச் சென்றடைந்து விடுகின்றன; அதற்கான எதிர்வினைகளும் நம்மை அதே வேகத்தில் வந்தடைகின்றன. தீமை என்றால் சமூக வலைதளம் நம்மை அடிமைப்படுத்தி விடுகிறது. காலவிரயம் கண்கூடு எனினும் மீளமுடிவதில்லை.

*******

பின்னிணைப்பு 2:

எனக்குப் பிடித்த அவரது 100 ட்வீட்கள் (இது சிறந்த 100 ட்வீட்கள் அல்ல; என் கண்ணில் பட்டவற்றில் பிடித்தவை):
 1. மழையையும், வானையும், மேகங்களையும் ரசித்துக் கொண்டிருக்கலாம் பசிக்கும் வரை!
 2. ஜோக் அடிக்குமளவு இல்லாவிடினும் அடித்த ஜோக்கிற்கு சிரிக்குமளவேனும் நகைச்சுவை உணர்ச்சி தேவை
 3. உண்ணும் உணவை விட ஊட்டும் உணவில் கலோரிகள் அதிகம்தான் #இன்னும் ஒரே ஒரு வாய்....
 4. மண்ணின் வாசனை மழையில் மறைந்திருக்கிறது!
 5. முதுகில் குத்த முயல்பவருக்கு நாம் யதேச்சையாக சட்டென திரும்பி விடுவதே போதுமான தண்டனையாகி விடுகிறது
 6. ஒளிந்து விளையாடிய நாட்களில் கதவுக்கு பின்னோ, கட்டிலின் கீழோ எங்கோ மறந்து வைத்துவிட்டேன் என் குழந்தைத்தனத்தை!
 7. வியந்து பாராட்ட நல்ல மனசு மட்டுமல்ல... கொஞ்சம் அறியாமையும் தேவை!
 8. ச்சே... காலையில் எல்லாச் சாலைகளும் அலுவலகம் நோக்கியே செல்கின்றன
 9. ஆண்கள் குடிக்கிறார்கள்! பெண்கள் அழுகிறார்கள்!! #போதை
 10. கற்பனைக் குதிரையை தட்டிவிடுவதொரு சிரமமா? கட்டிப்போடத்தான் கையாலாவதில்லை
 11. அழுவது கவன ஈர்ப்பு!
 12. 'எனக்கு எதிரியாக ஒரு தகுதி வேண்டும்' என்பவர்களை பார்த்து கிண்டலாய் சிரித்தால் போதும்... நாம் தகுதி பெற!
 13. கருத்து சுதந்திரம் என்பதில்... எந்தக் கருத்துமே இல்லாமல் இருப்பதும் அடங்குகிறது
 14. அளவுக்கு மீறினால் எல்லாமே நஞ்சு தான். சரி... அளவு எது என்பதுதான் ஆகச்சிறந்த குழப்பம்
 15. எதிர்த்து பேசினா 'சின்னபுள்ள மாதிரியா பேசற?'னு திட்டு. வேலை செய்யாட்டி 'இதுகூட தெரியாதா நீ என்ன இன்னும் சின்னப்புள்ளயா' ...
 16. பாத்துகிட்டே இருக்கணும்னு நினைக்கறது காதல்! பாத்துக்கணும்னு நினைக்கறது பாசம்!!
 17. ஆணுக்கு ஆணாதிக்கம், பெண்ணுக்கு பெண்ணியம், குழந்தைகளுக்கு பிடிவாதம்:-)
 18. மன்னிப்புக் கேட்க தகுதி... தவறிழைப்பதுதான்!
 19. முத்தத்தின் மேலான ஆசை தானே 'இச்'சை!
 20. திரும்பி வருகையில் தூரம் குறைந்து விடுகிறது #பயணம்
 21. உன் பெயர் கொண்ட எழுத்துக்கள் மட்டும் என் விசைப்பலகையில் அழிந்து அழிந்து என்னுள் பதிந்து கொண்டது
 22. முற்றுப்புள்ளியை திரும்பத்திரும்ப வைக்காதீர்கள்... அது தொடரும்...
 23. தூக்கம்னு ஒண்ணு இல்லாமலே இருந்திருந்தா நாமெல்லாம் சாவுக்கு ஏங்கிட்டு இருந்திருப்போம்.
 24. குழந்தைகள் திரும்ப வாங்கி விடக்கூடிய பொருட்களையே போட்டு உடைக்கின்றன.. பெரியவர்களைப் போல மனங்களை அல்ல!
 25. பயங்கர'வாதம்'  #விவாதம்
 26. கேட்காமலே வரம் தந்து விடுகிறது சாத்தான்
 27. எந்தப்'பாலா'யினும் பாத்திரம் சரியில்லாவிடின் திரிந்து விடும் #ஆணோ பெண்ணோ
 28. போதையில் 'விடுமுறை' யை சேர்த்தினாலும் முறைதான்
 29. பசியை விடக் கொடுமையானது சாப்டியா னு கேட்க நமக்குனு ஒரு குரல் இல்லாம இருக்கறதுதான்
 30. ஃபோன் ஸ்விட்ச் ஆஃபா கூட இருக்கலாம்... என்கேஜ்டா மட்டும் இருக்கவே கூடாது #உளவியல்
 31. 'குழந்தையாகவே இருந்திருக்கலாம்' என்று முதன் முதலில் தோன்றியபோதும் குழந்தையாகத்தான் இருந்திருக்கிறேன்
 32. வாழ்க்கை ஒரு நாடகம்தான். ஒரு 'ஸ்டேஜ்'ல நடிக்க கத்துக்கறோம்.
 33. ஒப்பீடு பிடிப்பதில்லை... ஒப்பீட்டில் நம்மை உயர்த்தாதவரை!
 34. நவீன யுகத்தில் புத்திர சோகமென்பது வெளிநாட்டில் பணிபுரியும் புத்திரர்களைப் பற்றியதாகத்தான் இருக்கும்
 35. சிரிக்கும் போது அழகாய் இருப்பவர்கள் பெண்கள்! அழும்போதும் அழகாய் இருப்பவர்கள் குழந்தைகள்!!
 36. உயிரெழுத்துக்கள் எழுதிப் பழகையில் அதிகம் சிரமப்பட்டது 'இ'வளுக்காகவும், இந்த 'ஒ'ருவனுக்காகவும் தான்:-)
 37. செத்தப்பறமும் முடியும், நகமும் சில நாள் வளருமாம். பேய்ங்க ஏன் நீளக்கூந்தலோடும் கூர்நகத்தோடும் அலையுதுகனு இப்ப புரியுது
 38. இவ்ளோ இனிப்பான மிட்டாய் கொடுத்துட்டு காசை வாங்கி என்ன பண்ணுவார் பாவம்னு கடைக்காரரை பரிதாபப்பட்டதென் குழந்தைப்பருவம்
 39. கொஞ்சம் அவமானம்தான் எனினும் அழுகை மகத்தான ஆறுதல்தான்.
 40. நீ மோதிரமாய் இறுகப் பற்றி இருக்கிறாய்... நான் கொலுசாய் நெகிழ்ந்து போகிறேன்!
 41. பாவமன்னிப்பை கண்டுபிடித்தவர்கள் மன்னிக்க முடியாத பாவத்தை செய்து விட்டனர்!
 42. ஏதொன்றிலும் தீவிரம் புரியாமல் சிரித்து வைக்க ஆண்களாலும், நகைச்சுவை புரியாமல் அழுது விட பெண்களாலும் முடிகிறது.
 43. பிடரிமயிர் சிலிர்க்க கம்பீரகனைப்பில் போர்க்களம்கண்ட புரவிகளை கற்பனையில் காணும்போதெல்லாம் பிருத்விராஜனும் உடன்வருகிறான்
 44. இந்த கவிதைகளையெல்லாம் தள்ளி வைத்து விட்டு கொஞ்சம் காதலித்து பார்த்தால்தான் என்ன?
 45. ஆண்களில் இரண்டு வகை 1. காதலை நம்புபவர்கள் - காதலிக்கப்படும்வரை 2. காதலை நம்பாதவர்கள் - காதலிக்கப்படும்வரை.
 46. வரிசையில் கடைசியாக நின்று கொண்டிருப்பவருக்கு முடிவெடுத்தல் வெகு சுலபம்.
 47. உட்சபட்ச சுதந்திரம்... எதற்காவது அடிமைப்படுத்தி விடுகிறது
 48. தன்னை விட தாழ்ந்திருந்தாலும்..... முதலாமிடத்தில் இருப்பவனுக்கு இரண்டமிடத்தில் இருப்பவன்தான் 'சிம்மசொப்பனம்'
 49. உண்மைக்காதல் எதுவும் திருமணத்தில் 'முடியாது'!
 50. ஆணின் பலம் -பெண்! பலவீனம் - பெண்கள்!!
 51. மிகப்பிடித்தமான ஒன்று குறைவின்றி கிடைக்கும்போது(ம்) விலகுவதே... கட்டுப்பாடு!
 52. அளக்கவியலா நிறையென கனக்கிறது மனக்குறை!
 53. புன்னகையை யாருக்கும் தரலாம். ஆனால் நம் அழுகையை தகுதியற்றவர்களுக்கு ஒருபோதும் தரத் தேவையில்லை.
 54. இந்த 'நினைவு'ப்பரிசை யாரோ கொடுத்தார்களே...!
 55. கேள்வி கேட்க கேட்கத்தான் அறிவு வளரும் என்பதை அறிந்து கொள்ளும் வரை....  குழந்தைகள் கேள்விகள் கேட்கிறார்கள்
 56. ரொம்ப உயரத்திலிருந்து விழுந்தா பல்லிக்கு அடிபட்டிடும் #பல்லி விழும் பலன்
 57. 1.என்னை ஏன் படைத்தாய்? 2.உன்னை ஏன் படைக்கலை #கடவுள்கிட்ட கேக்க வேண்டிய கேள்விகள்
 58. பசித்தால் குழந்தைகள் அழுகின்றனர்! ஆண்கள் கோபப்படுகின்றனர்!! பெண்கள் சமைக்கின்றனர்!!!
 59. எப்பொழுது முட்டாளாக இருக்க வேண்டுமென்பதையும் அறிந்திருக்கிறான் புத்திசாலி
 60. பிரச்சனைகளை சிலர் தைரியமாகவும், சிலர் புன்னகையுடனும், சிலர் கண்டுகொள்ளாதது போலவும் எப்படியோ கையாண்டுவிடுகின்றனர்
 61. காதல் திரண்டு வரும்போது நட்பு உடைவது போல்.....
 62. கொஞ்சம் முட்டாள்தனம்தான் நேசம் எனும் சொர்க்கம். புத்திசாலியாக நரகத்தில் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம்??
 63. இந்த :) ஸ்மைலிக்கு மூக்கில்லை. இந்த :-) ஸ்மைலிக்கு காதில்லை #நீதி: சிரிக்க மூக்கும் காதும் தேவையில்லை.
 64. அடுத்தவருக்கு மனசாட்சியாய் இருப்பது எளிதாய் இருக்கிறது
 65. ராஜா ட்யூனை அலாரமா வெச்சா அதன் பெயர் தாலாட்டு
 66. உண்மையில் காதலன்/ காதலி பெயர் பாஸ்வேர்டை விட 'user'name ஆக இருப்பதுதானே பொருத்தம்?
 67. வெட்கங்கெட்டவன் ஸ்மைலி கண்டுபிடிச்சவன். வெட்கப்பட ஸ்மைலியே இல்லை
 68. மொட்டை மாடியளவுக்கு ப்ரியமான தனியறை எந்த வீட்டிலும் இருப்பதாய் தெரியவில்லை
 69. தம்பதியரிடையே இன்பங்கள் இதழிலிருந்தும்... துன்பங்கள் நாவிலிருந்தும் துவங்குகின்றன!
 70. விலகியிருப்பதை விடவா தூண்டி விடப் போகிறது நெருக்கம்?
 71. துக்கம் மறக்க இயலாமல் குடிப்பவர்கள்.... பின் குடியை மறக்க இயலாமல் துக்கப்படுவார்கள்
 72. குடி! பழக்கம் வேண்டாம்!!
 73. புகழ்ச்சியை பெண்களும், இகழ்ச்சியை ஆண்களும் எளிதில் உண்மையென நம்பி விடுகின்றனர்
 74. ஆகச்சிறந்த பொய்... உன்னிடம் சொல்லும் 'bye'!
 75. பிறரைக் சிராய்த்து விடக்கூடிய என் பிசிறுகளை களையும் முயற்சியில்... காயப்பட்டு விடுகிறதென் கம்பீரம்
 76. தாழ்வுமனப்பான்மை என்பது புகழ்ச்சியை எதிர் கொள்ளும் போதும் வந்து தொலைக்கிறது.
 77. வயதானவர்களுக்கு பேசிக்கொண்டிருப்பதுதான் ஆகாரமே....
 78. இருட்டறையும், சுற்றிலும் ரத்தமும்,  அதிர்ந்து துடிக்கும் அசௌகர்ய வீடாக இருக்கும் இதயத்தில் குடியிருப்பதாக சொல்வதை நினைத்துப் பாருங்கள்!!?
 79. நாம் செய்தது சரியா தவறா என்கிற சந்தேகம் வரும்போதே தெரிந்து விடுகிறது.... சரியா தவறா என்று!
 80. இடறி விழுந்தேன்! எரிகிறது சிராய்ப்புகள் அல்ல, சிரிப்புகள்!!
 81. நிதம் நின் முடி அடர் மார்பில் உறங்கி அந்த ரோமக்காட்டில் பூத்த என் ஜிமிக்கி அச்சுப்பூவை ரசிக்க வேண்டும்
 82. கல்யாணப் பெண்ணுக்கான அலங்காரங்களில் மிக முக்கியமானது(வர்) #மணமகன்
 83. கடந்த பின்பே உணரப்படுகின்றன உன்னத தருணங்கள்!
 84. நட்பிற்கு குறையாமல் வாரி வழங்குமளவு என் கோபம்.... எப்பொழுதும் செல்வச்செழிப்புடன் இருந்ததேயில்லை!
 85. தவறுக்கு 'வருந்துகிறேன்' என்னுமளவு 'திருந்துகிறேன்' என்று யாரும் பொய் சொல்வதில்லை
 86. இறைவனிடம் கையேந்துங்கள்! 'அவனில்லை' என்று (கூட) சொல்லுவதில்லை!!
 87. மூளை பெண் தான். இடைவிடாமல் ஏதையாவது பேசிக் கொண்டே இருக்கிறது.
 88. திருமணத்திற்கு முன் நகைச்சுவையுணர்வு அதிகமுள்ள பெண், திருமணத்திற்கு நகைச்சுமை அதிகமுள்ள பெண் #சில ஆண்களின் விருப்பம்
 89. சமாதானத்திற்கான பாதையை அழகுபடுத்தி வைத்தபின்புதான் உன்னுடனான சண்டை பயணத்தை ஆரம்பிக்கிறேன் எப்பொழுதும்
 90. முரட்டு மிருகத்தையும், அழகிய பூவையும், சிசுவையும், பிணத்தையும் சமமாய் தழுவும் காற்றுபோல அனைத்தையும் கடந்து செல்கிறது வாழ்க்கை.
 91. பேசுவதற்கு மொழியையும், வாழ்வதற்கு இசையையும் கண்டறிந்தான் மனிதன்
 92. எதையோ கிறுக்கி விட்டு உன்னிடம் எப்படி இருக்கிறது கவிதை என்கிறேன்..... ஒரு புன்னகை செய்கிறாய்...! இனி இதற்கொன்று எழுதவேண்டும் நான்.
 93. நேற்று உன்னுடன் இருந்தபோது, இதை விட இனிய தருணம் எதுவுமில்லை என்றே நம்பினேன்... அதை பொய்யாக்கினாய் இன்று!
 94. நம் ப்ரியங்கள் பெருகி பெருகி பேராறாய் ஓடிக்கொண்டிருக்கிறது... மறுகரையில் நீ!
 95. பெண்ணின் தவறுகளை நேர்மையாக விமர்சிக்கும் ஆணையும், பெண்ணின் திறமைகளை நேர்மையாக பாராட்டும் பெண்ணையும் காண்பது அரிது
 96. உன்னை நினைக்கும் போதெல்லாம் ஏமாற்றாமல்.... இதழில் மெல்லிய புன்னகையாகவோ, விழியில் ஒரு துளி நீராகவோ உடனே வந்து விடுகிறாய்.
 97. வெற்றி என்பது நமக்கு மிக சமீபமாகத்தான் இருக்கிறது. தன்னம்பிக்கையுடன் கை குலுக்க நாம்தான் தயங்கி நிற்கிறோம்.
 98. மூளை தன் புத்திசாலித்தனத்தை, அதன் முட்டாள்தனங்களை நியாயப்படுத்தவே பயன்படுத்துகிறது.
 99. வல்லூறுகளின் பார்வையிலிருந்து தப்பி பிழைத்து வளர்ந்து கறிக்கடையின் கயிற்றில் சதையாய் தொங்குகிறது கோழிக்குஞ்சொன்று!
 100. நெருங்கிய உறவுகளிடையே கடைபிடிக்கப்படும் இடைவெளியே உறவை நெருக்கத்துடன் வைத்திருக்கிறது
*******

Comments

யம்மாடி...! மலைக்க வைக்கிறது... சௌம்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

நன்றிகள்...
VIBHU said…
நான் டவிட்டருக்கு வந்த புதிதில் என் முகத்தில் அறைந்து வரவேற்றது இந்த பெண்தான்,அன்றிலிருத்து நான் வியந்து கவனிக்கும்ஆளுமை
இவர்.இவர் இருக்க வேண்டிய இடமே வேறு.
வாழ வாழ்த்துக்கள்.
Karthi said…
100 ட்வீட் படித்து முடிப்பதற்க்குள் திகட்டிவிடுகிறது.
சௌம்யாவிற்கு வாழ்த்துகள். இந்தப் பதிவை வாசித்தபின் அவரை ஃபாலோ செய்கிறேன்.
chinnapiyan said…
அருமை நன்றாக மெனக்கெட்டு சொல்லியுள்ளீர்கள்.கடந்த மூன்று வருடங்களாக, நேரிடையாகவோ, புகைப்படங்கள் மூலமாகவோ பார்க்காத பெண் கீச்சர்களை பெண்ணாக ஏற்றுக்கொண்டதில்லை. அதிலும் அப்பப்ப அரட்டை ஒரு பேக் ஐடி என்றும் கார்கி, பரிசல் மற்றும் பலரின் இன்னொரு ஐடி என்றும் , ஒரு சிலர் அது ஒரு கூட்டு முயற்சி என்றும் வதந்திகள் உலா வருவதை கண்டு வந்துள்ளேன். இருந்தாலும் Hats off to @Arattaigirl . நான் உண்மையில் வியக்கிறேன். பாராட்டுகள் வாழ்த்துக்கள். உங்களுக்கும்தான் :)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்