நிசப்தத்தின் பேரோசை

ஆழம் - ஜூலை 2013 இதழில் ஜியா கான் தற்கொலை குறித்த என் கட்டுரை வெளியாகியுள்ளது. அதன் முழு வடிவம் இது.

*******

“தற்கொலை என்பது உச்சகட்ட கோழைத்தனம் தான்; ஆனால் அதைச் செய்து கொள்ள உட்சபட்ச துணிச்சல் தேவை.” 
– ட்விட்டரில் @arattaigirl சௌம்யா

இந்தியத் திரையுலகில் உடனடித் துணிச்சல் போர்த்திய, உள்ளே கோழைத்தனம் மண்டிய பெண்டிர் மிகுதி. அதனால் நடிகைகள் தற்கொலை செய்வது தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போல் வழமையான வருடாந்திர நிகழ்வாகி விட்டது. நீளும் இப்பட்டியலின் மிகச்சமீபத்திய இணைப்பு இந்திப்பட நடிகை ஜியா கான்.


கடந்த ஜூன் 2ம் தேதி இரவு 11:45 மணியளவில் மும்பையின் ஜுஹூவிலிருக்கும் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் 25 வயதான ஜியா கான்.

ஏன்? பார்க்கலாம்.

ந‌ஃபீஸா கான் என்ற இயற்பெயர் கொண்ட ஜியா கான் நியூயார்க்கில் பிறந்தவர். லண்டனில் வளர்ந்தவர். நல்ல வசதியான முஸ்லிம் குடும்பம். அம்மா ராபியா கான் முன்னாள் இந்தி நடிகை. அந்தப் பிறவித் தொடர்பிலும் தன் 6வது வயதில் ராம் கோபால் வர்மாவின் ரங்கீலா படம் பார்த்த பாதிப்பிலும் ஜியாவை சினிமா சுண்டி இழுத்தது. இத்தனைக்கும் பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவி அவர்.

மணிரத்னம் இயக்கிய உயிரே... படத்தில் முதன் முதலாக சிறுவயது மனீஷா கொய்ராலாவாக ஒரு சிறுகதாபாத்திரத்தில் நடித்தார். பின் தன் 16வது வயதில் பாப் ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். கிட்டதட்ட இதே காலகட்டத்தில் முகேஷ் பட்டின் Tumsa Nahin Dekha படத்தில் நாயகியாக பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டார்.

பின் லண்டனில் நாடகம் மற்றும் திரைப்பட நடிப்பு பயின்று கொண்டிருந்தரை தன் Nishabd படத்தில் ஜியாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் ராம் கோபால் வர்மா. படிப்பைப் பாதியில் விடுத்து பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் ஜியா. முதல் படத்திலேயே அமிதாப் பச்சனுடன் ஜோடி. 18 வயதுப் பெண் தன் தந்தை வயதிலிருக்கும் 60 வயது ஆசாமியுடன் காதல் கொள்ளும் சிக்கலான கதைக்களம். தன் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை அள்ளிக் கொண்டார் ஜியா. சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

பின் முருகதாஸ் இயக்கிய கஜினி இந்தி ரீமேக்கில் இங்கு நயன்தாரா நடித்த பாத்திரத்தை செய்தார் ஜியா. இதற்கும் நேர்மறை விமர்சனங்களையே பெற்றார். பிறகு அக்ஷய் குமாருடன் Housefull படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம். இரண்டுமே மிகப்பெரிய வசூல் சாதனையை செய்த படங்கள். இடையில் Chance Pe Dance படத்தில் ஷூட்டிங் கலந்து கொண்ட பின் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமில்லை என்று விலக்கப்பட்டார். அதற்குப் பிறகு மூன்றாண்டுகள் சும்மா வீட்டில் இருந்தார். சரியான திரைப்பட வாய்ப்புகள் அமையவில்லை. அது தான் முதல் பிரச்சனை.

பின் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக சூரஜ் பஞ்ச்சோலி என்ற இளம் நடிகருடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அந்த உறவு சுமூகமாக இல்லை. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகுந்த அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்.

சில மாதங்கள் முன் கோவாவிற்குச் சென்ற போது இருவருக்குமிடையே நடந்த சண்டையில் நாடியை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

ஒரு முறை அபார்ஷனும் நடந்திருக்கிறது. பிறகும் உறவு தொடர்ந்திருக்கிறது. சம்பவத்திற்கு முந்தைய தின இரவு இருவரும் ஒன்றாகவே கழித்திருக்கின்றனர். அடுத்த நாள் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. ஜியா தன்னை சந்திக்க வந்த போது பார்க்க மறுத்து திருப்பி அனுப்பி இருக்கிறார் சூரஜ். கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஜியா அன்றிரவே தூக்கில் தொங்கி விட்டார்.

முதல்கட்ட விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல்கள் இவை. சூரஜை போலீஸ் கஸ்டடிக்கு எடுத்து விசாரித்து வருகிறார்கள். அவருக்கு தண்டனை கிடைக்குமா என்பது பற்றியெல்லாம் கிசுகிசு பத்திரிக்கைகள் பார்த்துக் கொள்ளட்டும். நமக்கு இந்தத் தற்கொலைக்குப் பின்னிருந்து செயல்பட்ட உளவியல் தான் முக்கியம்.

*

Fashion, Heroine, Dirty Picture ஆகிய படங்கள் ஃபேஷன் உலகம் மற்றும் பாலிவுட்டில் பெண்கள் சந்திக்கும் சிக்கல்களைப் பதிவு செய்துள்ளன. எந்தவொரு நடிகையின் கதையை எடுத்தாலும் இப்படங்களுடன் பொருந்தக் கூடியதாகவே இருக்கிறது.

இந்தியத் திரையுலகில் பெரும்பாலான நடிகைகளின் சொந்த வாழ்க்கை என்பது பரிதாபத்துக்குரியதாகவே இருக்கிறது. தம் வாழ்க்கையின் பிற்பகுதியில் ஏதேனும் பணக்காரத் தொழிலதிபரை அல்லது வெளிநாட்டு இந்தியரை மணந்து செட்டில் ஆனாலும் அதற்கு முன்பான இளமை வாழ்க்கை நிலையற்றதாகவே இருக்கிறது.

வாய்ப்புக்காக பாலியல்ரீதியாக சுரண்டப்படுதல், குடும்பத்தாரால் பொருளாதார ரீதியாக ஏமாற்றப்படுதல், காதல் தோல்வி, காதலருடன்/ கணவருடன் விரிசல், திருமணம் என்ற அங்கீகாரம் அற்று சேர்ந்து வாழ நேர்தல், ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள், அவற்றில் ஏமாற்றம் ஏற்படுதல், விவாகரத்து, அரசியல்வாதிகள் / பெரும்பணக்காரர்கள் / அண்டர்க்ரவுண்ட் தாதாக்களுடன் ஒத்துப் போக நேர்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுதல், மிக வக்கிரமான கிசுகிசுக்கள் அல்லது ஆபாச வீடியோக்கள் வெளியாவது, தனிமையில் வாழ்தல் என ஏதோ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரச்சனையினால் சொந்த வாழ்க்கை பாதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் இவர்கள் அனைவருமே தற்கொலை செய்து கொள்வதில்லையே! ஏன்?

எல்லோருக்கும் ஒரே மனஅமைப்பு இருப்பதில்லை, பலவீனமான மனமுடையோர் தற்கொலை செய்கிறார்கள் என்று மேலோட்டமாக காரணம் சொன்னாலும் அதைத் தாண்டிய முக்கிய விஷயம் இருக்கிறது. அது அந்த நடிகையின் கெரியர் க்ராஃப்.

சினிமாத் துறையில் அவரது வெற்றி / தோல்வி. சினிமாவில் வெற்றிகள் குவிந்து கொண்டிருக்கும் பொழுதுகளில் வாழ்க்கையின் பிரச்சனைகள் கண்ணில் படுவதே இல்லை. பட்டாலும் ஒத்திப் போடப்படுகிறது. அந்த வெற்றி ஸ்தானம் ஆட்டம் காணும் போது தான் மெல்ல சொந்தச் சிக்கல்கள் பூதாகரமாகி மனசை அரிக்க ஆரம்பிக்கிறது. தொழில் வாழ்க்கையிலும் ஒதுக்கப்பட்டு விட்டோம், சொந்த வாழ்க்கையிலும் ஒன்றுமில்லாமல் போய்விட்டோம் என்ற கழிவிரக்கம் சூழ்ந்து கொள்ள, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதன் ஓர் உச்சத் தெறிப்பில் அவசரமாகத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை செய்த நடிகைகள் பெரும்பாலும் தொழில் தேய்ந்து போனவர்கள். உச்சத்திலிருக்கும் எந்த நடிகையும் தற்கொலையில் இறங்குவதில்லை (ஒரே விதிவிலக்கு ஷோபா).

ஜியா கான் இந்தச் சட்டகத்துள் கச்சிதமாகப் பொருந்துகிறார். பாலிவுட்டின் மூன்று பெரிய ஸ்டார்களுடன் நடித்தும் அவற்றில் இரண்டு மிகப்பெரிய ஹிட் என்றாலும் மற்றொன்றில் ஜியாவின் நடிப்புக்கு விமர்சகர்களின் பாராட்டு குவிந்தது என்ற போதிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தப் பட வாய்ப்புகளுமே அவருக்கு அமையவில்லை. அவர் வீட்டில் சும்மா இருக்கவில்லை, ஃபேஷன் நிகழ்வுகள், பிஸுனஸ் விழாக்கள் போன்றவற்றில் தொடர்ச்சியாகக் கலந்து கொண்டிருந்தார், போதுமான பணம் வந்து கொண்டிருந்தது என்று தற்போது ஜியாவின் அம்மா சொன்னாலும் அதெல்லாம் யானைப்பசிக்கு சோளப்பொரி போலத்தான்.

ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகை, பணத்திலும் புகழிலும் குளித்தவர், சமூகத்தில் மிக உயர்ஸ்தானத்தில் இருந்தவர், இன்று லோக்கல் ஜவுளிக்கடைத் திறப்பு விழாவில் கலந்து கொள்வதில் என்ன பெரிய திருப்தி இருந்து விட முடியும்? அதே நிலை தான் ஜியாவுக்கும். தன்னை அறிமுகப்படுத்திய ராம் கோபால் வர்மாவிடமே இதைச் சொல்லிப் புலம்பி வாய்ப்புக் கேட்டிருக்கிறார். அப்போதைக்கு அவரிடம் பொருத்தமான ரோல்கள் இல்லை என்பதால் உதவ முடியவில்லை என்பதைக் தற்போது குற்றவுணர்வுடன் குறிப்பிடுகிறார் வர்மா.

தன் தொழிலில் ஜியா நொறுங்கிக் கொண்டிருந்த சமயம் தான் சூரஜ் பஞ்ச்சோலி அறிமுகமாகிறார். அவர்களின் காதல் சரியானதாக அமைந்திருந்தால் ஜியாவின் மனநிலையை மீட்டெடுக்க அதுவே போதுமானதாய் இருந்திருக்கும். சினிமாவை விடுத்து வேறு துறையிலோ அல்லது வீட்டைக் கவனிக்கும் சராசரிக் குடும்பப் பெண்ணாகவோ கூட தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்க முடியும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக காதலும் சரியாக அமையவில்லை ஜியாவுக்கு. சூரஜ் அவரை விட இரண்டு வயது இளையவர். அந்த முதிர்ச்சியின்மை அவர்களின் உறவில் வெளிப்பட்டிருக்கும். அடுத்தது, ஒரு வருடம் முன்பு அவர்கள் காதல் அரும்பிய பொழுது படங்கள் இல்லாது இருந்தாலும் ஜியா இந்தியா முழுக்கத் தெரிந்த ஒரு பிரபல நடிகை. ஆனால் சூரஜ் ஒரு நட்சத்திர தம்பதியின் (ஆதித்யா பஞ்ச்சோலி - ஸரீனா வஹாப்) மகன் என்பதைத் தாண்டி வேறொன்றுமில்லை

இப்போது சல்மான் கானின் சொந்தத் தயாரிப்பில் அறிமுகமாக இருக்கிறார் சூரஜ். ஜியா அலுத்து விட்டார். இன்று அவரது இடம் கிட்டதட்ட ஒன்றுமே இல்லை. அபாரமான எதிர்காலம் கண்முன்னால் வரக்காத்திருக்கும் போது ஃபீல்ட் அவுட் ஆன ஜியா கானை, அதிலும் தன்னை விட மூத்தவரை திருமணம் செய்ய எப்படி மனம் வரும்? அதன் காரணமாக சூரஜ் ஜியாவிடம் விலகத் தொடக்கி இருப்பார்.

தற்கொலை செய்து கொண்ட அன்று ஜியா சூரஜுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் கூட தனக்கு சில தென்னிந்திய படங்கள் கமிட்டாகி இருப்பதாக சொல்கிறார். தான் இன்னும் ரிட்டயர் ஆகவில்லை என்று சூரஜிடம் நிரூபிக்கும் நிலையிலேயே ஜியா இருந்திருக்கிறார். ஆனால் சூரஜ் அதை நிராகரித்து அவருக்கு கள்ளிச்செடி வைத்த ப்ரேக்கப் பொக்கே அனுப்பி இருக்கிறார். அது தான் ஜியாவின் ப்ரேக்கிங் பாயிண்ட்.

மனதில் அடக்கி வைத்திருந்த அத்தனையும் சட்டென்று வெடித்துக் கிளம்ப, உடனடி நிவாரணமாக மரணத்தை சட்டென்று தேர்ந்தெடுத்துக் கொண்டார். அழுத்தத்தில் உடைந்து விட்ட அழகான கண்ணாடி பொம்மை ஜியா கான்.

இந்திய பீனல் கோட் 306ன் படி தற்கொலைக்குத் தூண்டுவது தண்டனைக்குரிய குற்றம். ஆனால் 2010ல் சுப்ரீம் கோர்ட் அளித்த ஒரு தீர்ப்பு இறப்பதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்ற அளவு திட்டமிட்டு ஒருவரைக் கார்னர் செய்தால் மட்டுமே அது தற்கொலைக்குத் தூண்டியதாகக் கருதப்படும் என்கிறது. மரண வாக்குமூலத்தில் சூரஜ் தன்னை கற்பழித்தார், மனதாலும் உடலாலும் டார்ச்சர் செய்தார் என்றெல்லாம் ஜியா குறிப்பிட்டிருந்தாலும் அவை யாவும் நிரூபிக்கப்பட வேண்டும். கேஸ் போகிற திசையைப் பார்த்தால் சூரஜ் தப்பித்துக் கொள்வார் என்றே தோன்றுகிறது. ஒருவேளை பாலிவுட்டிற்கான அவரது கனவு அறிமுகம் பாதிப்படையக்கூடும், குறைந்தபட்சம் தாமதம் அடையும். மற்றபடி ஜியா மனஅழுத்தம் தாங்க முடியாமல் தற்கொலை செய்தார் என்றே முடிவாகும்.

2002ல் தமிழ் நடிகை மோனல் தற்கொலை செய்த போது விஜய்காந்த், சரத்குமார் என அப்போது நடிகர் சங்கத் தலைமைப்பொறுப்பில் இருந்தவர்கள் நடிகைகளுக்கு மனநல கவுன்சிலிங் செய்யப்படும் என அறிவித்தார்கள். அப்போது நடிகை குஷ்பு தெரிவித்த கருத்து முக்கியமானது - நடிகர்களுக்கும் சேர்த்தே மனநல கவுன்சிலிங் செய்யப்பட வேண்டும் எனச் சொன்னார். யோசித்துப் பார்த்தால் அது மிகச்சரியே.

தற்கொலை செய்து கொள்வது நடிகைகள் என்றாலும் அதற்கு காரணம் ஆண்களே!

ஜியாவின் கதையில் கவுன்சிலிங் சூரஜுக்குத் தான் தேவைப்பட்டிருக்கும். அவர் சரியாக நடந்து கொண்டிருந்தால் ஜியா இந்த முடிவுக்குப் போயிருக்க மாட்டார். அவர் காதலை உணர்வுப்பூர்வமாக அல்லாமல் லாபநஷ்டக் கணக்காகப் பாவித்து, ஜியாவைத் துரத்தி அனுப்பினார். அந்த வக்கிரம் தான் ஜியாவுக்கு எமனானது.

ஏமாற்றங்களின் பேரோசையில் அதிர்ந்த ஜியாவின் ஆத்மா நிசப்தமாகட்டும்.

***

தற்கொலை செய்து கொண்ட சில இந்திய நடிகைகள்:
  • கல்பனா (1979) - 36 வயதில் நடக்கவிருந்த திருமணம் ரத்தானதால் மோதிரத்திலிருந்த வைரத்தை விழுங்கி தற்கொலை செய்து செய்தார்.
  • ஷோபா (1980) - 17 வயதில் பாலு மகேந்திராவை திருமணம் செய்த பின் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
  • ‘ஃபடாஃபட்’ ஜெயலட்சுமி (1980) - 22 வயதில் எம்ஜிஆர் உறவினருடனானகாதல் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றத்தில் தற்கொலை செய்தார்.
  • ‘சில்க்’ ஸ்மிதா (1996) - 35 வயதில் பணச்சிக்கல், காதல் தோல்வி, அதீதகுடி போன்றவை காரணமாக விஷம் அருந்தித் தற்கொலை செய்து கொண்டார்.
  • ‘கோழி கூவுது’ விஜி (2000) - 34 வயதில் மணம் செய்வதாக வாக்களித்து விட்டு இயக்குநர் ஏஆர் ரமேஷ் ஏமாற்றியதால் தற்கொலை செய்தார்.
  • மோனல் (2002) - 21 வயதில் ப்ரசன்னா என்ற நடன இயக்குனருடன் ஏற்பட்ட காதல் முறிவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • ந‌ஃபீஸா ஜோசப் (2004) - 26 வயதில் கணவர் விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்து கொண்டதால் தூக்கிட்டுத் தற்கொலை செய்தார்.
  • மயூரி (2005) - 22 வயதில் திருமணத்துக்குப் பிந்தைய வரதட்சணைக் கொடுமை காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
  • குல்ஜீத் ரந்தவா (2006) - 30 வயதில் வாழ்க்கை அழுத்தங்கள் தாளவில்லை என்றெழுதி வைத்து விட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
  • விவேகா பாபாஜி (2010) - 37 வயதில் காதல் தோல்வி, தொழில் தோல்வி, பணச்சிக்கல் காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
*******

Comments

Unknown said…
Very detailed! Truly speaking shobha is very close to my heart! As u said the only exception - whose career was at the peak when she died,yet decided to kill herself due to the pressure and guilty consciousness!
You make me visualize your writing writer! Thats your success i presume!
Good one

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்